வெள்ளி, 13 அக்டோபர், 2023

 நவராத்திரி 


பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி -  அப்பர் சுவாமிகள்

சிவபெருமான் இலிங்கமாகவும், உமாதேவியார் பீடமாகவும் உள்ளார் என்பது இதனாற் பெறப்படும்.இதனாற், சிவலிங்கவழிபாடென்பது தனித்த ஈசுவர வழிபாடும் அல்ல.தனித்த சத்தி வழிபாடும் அல்ல.சிவசத்தி வழிபாடென்பது பெறப்படும்.இங்ஙனம் சிவலிங்க வழிபாடு, சிவசத்தி வழிபாடாகவே விளங்குகின்றது.

சத்தி பின்னமிலான் எங்கள் பிரான்"  என்னும் சித்தாந்தப்பிரமாணமும் இதனை நன்கு புலப்படுத்தும்.சத்தியென்றும் சிவனென்றும் பின்னமோ அபின்னமோ என்னில், பின்னமிலான் - வேறாயிருக்கிறவனல்லன்  எங்கள் கடவுள் என்பது,உமாபதி சிவாச்சாரியரின் திருவருட்பயன் நூலினால் உணர்த்தப்படுகின்றது.

 சிவனெனும் ஓசை அல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே - அப்பர் சுவாமிகள்

 சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்  - அப்பர் சுவாமிகள்

உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன்  என்கின்றார் அப்பர் சுவாமிகள்.மேலும், ஒருநாமம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாரின் செம்மேனிக்கு, நம்மனோர் கடைந்தேறுவதற்காய் கடவுள் கொண்ட பெயர் சிவன் என்பதை, சிவன் என்பது பதிவாக்கியம் என்பதை அப்பர் சுவாமிகள் உணர்த்துகின்றார்.

இதில், "சி" என்பது சர்வேசுவரனையும் "வ" என்பது உமாதேவியாரையும் குறிக்கும். இவை சிந்தாந்த நூற்களில் இனிதே விளங்கும்.சிவபெருமான் என்னும்போதே, உமாதேவியாரைத் தனித்துக்கூறவேண்டிய தேவையில்லாதுபோகும் அருமையை "சிவ" என்னும் நாமத்தால் தெளியலாம்.

மேலும், சிவபெருமானுடைய மேனியை அருள் உடம்பு என்றே கூறுகின்றோம்.ஏனையோர் உடம்புகள் போன்று பௌதீக உடம்பன்று. அருட்திருமேனி என்பதால், சிவபெருமானுடைய அருளே அவரது மேனியாகும்.சிவபெருமானின் அருளையே உமாதேவியார் என்பதால், சிவபெருமானின் மேனியை தனித்து வழிபடினும், அது சத்தி வழிபாட்டினை நீக்கிய வழிபாடென்று கூறமுடியாது. இதனாற்றான், பண்டைய சிவாலயங்களில் சத்திகென்று தனிப்பிரகாரம் இல்லை.சத்திகென்ற தனிப்பிரகாரம் பிற்காலத்தையது. தனியே சத்தியை மட்டும் வழிபடுவோர் உருவாகியதால், அவர்களின் தாக்கத்தால் , சிவலிங்கவழிபாடு சிவசத்தி வழிபாடென்ற தெளிவு மங்கி விளைந்ததுவே  தனியான சத்திக்குரிய பிரகாரங்களாகும்.

இவ்வாறு பிரிக்கமுடியாத, பின்னப்படுத்தமுடியாத, சிவபெருமானுக்கும் சத்திக்கு முள்ள சம்பந்தத்தினை தாதான்மிய சம்பந்தம் என்று சைவசித்தாந்ததிற் சொல்லப்படும். 

ஒன்றாய்,உடனாய,வேறாய் விளங்கும் சுத்தாத்துவித சம்பந்தம் என்பது சிவபெருமானுக்கும் உயிர்களுக்குமானது.

அப்படியானால் சிவபெருமானுக்கும் சத்திக்கும் உள்ள தாதான்மிய சம்பந்தம் என்பது என்ன? என்று யோசிக்கலாம். இதனை இலகுவாக விளக்குவதென்றால்,

சூரியனும் சூரிய ஒளியும்போல்  என்று விளக்கலாம்.

சூரிய ஒளிச்சத்தியில் வெப்பசத்தி உண்டு.வெளிச்சம் தரும் ஒளிச்சத்தி உண்டு.  இவையே, தாவரங்களின் ஒளித்தொகுப்பு முதல் உலகத்தின் ஐம்பூதத்து தொழிபடு சத்தியாக உருமாறி, மின்சார சத்தியாக வெளிபட்டு, ஏனைய சத்திகளாக திரிபுகளடைந்து உலக இயக்கமாய் விளங்கியவாறுள்ளது.  உலகத்திற் உயிர்கள் வாழ்வதற்குரிய சூழல், சூரியனின் இருப்பினாலும் சூரிய ஒளியின் விளைவினாலுமே உருவாக்கப்படுகின்றது. 

அதுபோல், சிவபெருமான் உலக கர்த்தாவாகவும், அவரது அருள் உமாதேவியாராகவும் விளங்குகின்றது என்பதுவே சைவசமயக்கொள்கை.  அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் முடிக்கும் 

சிவபெருமானால் முடியாத காரியங்கள் சிலவுண்டு.அவற்றிலொன்று அவரின் அருளை நிறுத்துதல். அவர் அருளமாட்டாதவர் என்றால், முத்திபெற்ற ஆன்மாக்கள் மீண்டும் பிறத்தலை அடையும். அதுபோல், ஆன்மாக்கள் சிவபெருமானை அடையவேண்டிய தேவையும் இல்லாதுபோகும்.அரசன் சிம்மாசனத்தில் இருக்கும்வரைதான், மக்கள் அவனைக் கொண்டாடுவர். ஆக, பனிக்கட்டிக்கு குளிர் என்பது எங்ஙனம் இயற்கை குணமோ, நெருப்புக்கு சூடு என்பது எங்ஙனம் இயற்கைக் குணமோ, அங்ஙனம் சிவபெருமானுக்கு அருளல் என்பது இயற்கைக் குணம். இராட்சதம், தாமசம், சாத்வீகம் முதலிய குணங்களற்ற நிர்குணனாகிய சிவபெருமானின் இயற்கை இயல்பு (குணம்) அருளலாகும்.

அருள்(உமாதேவியார்) இல்லாவிட்டால் சிவபெருமானை அனுபவிக்கும் வாய்ப்பு உயிர்களுக்கு இல்லை. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது இதன் பொருட்டேயாகும்.  இன்பத்தாலும் துன்பத்தாலும் தாக்கப்படாத ஆன்மாவில் திருவருள் பதியும்.அங்ஙனம் திருவருள் பதிவதாலேயே, அந்த ஆன்மா சிவபெருமானை அனுபவிக்கும்(முத்தி) வாய்ப்பினைப் பெறும். அம்மாதான் அப்பாவினை இனங்காட்டுவர். அதுவே உலக வழக்கு. சூரிய ஒளியாலேயே சூரியனின் இருப்பு நமக்கு விளக்கமுறுகின்றது. அதுபோல், உமாதேவியாராலேயே(திருவருள்) சிவபெருமானை நாம் அனுபவிக்கலாம். இதனாலேயே, திருஞானசம்பந்தப் பெருமானும்  " தோடுடைய செவியன்" என்று பாடினார். தோடு பெண்கள் தம் காதுகளில் அணிவது. குழையே ஆண்கள் தம்காதுகளில் அணிவது. சிவபெருமானைப்பாடும்போது,குழையுடைய செவியனென்று பாடாது; தோடுடைய செவியன் என்று பாடியமையால் திருஞானசம்பந்தப்பெருமான் முதலிற் அனுபவித்தது சிவபெருமானின் இடப்பாகமாகிய உமாதேவியரின் பாகத்தையேயாகும்.இன்னும் விளக்கமாகச் சொன்னால், தமக்கு ஞானப்பால் தந்து , வலிய வந்து ஆட்கொண்ட சிவபெருமானின் அருளல் சிறப்பினையே திருஞானசம்பந்தப் பெருமான் நினைந்துருகித் தம்தேவாரத்தை ஓதியருளத் தொடங்கினார்.

"தமிழ் இந்துக்களின்" என்று ஆர்ப்பரித்தவாறு  வெளிவரும் பல்வேறு இதழ்களும் எழுத்தூடகங்களும் கலப்பட கருத்துக்களையே சுமந்துவருவதால்,சிவபெருமானின் அருளல் சிறப்பைக் கொண்டாடும் ஒன்பது திருநாட்களே இந்த நவராத்திரி விரதம் என்பதை சைவசமயத்தார் நன்கு விளங்கிநிற்றல் அவசியம்.

பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி -  அப்பர் சுவாமிகள்