வெள்ளி, 9 ஏப்ரல், 2021

பரம்பொருள் ஒன்றே

 பரம்பொருள் ஒன்றே



மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்”  என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.


பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே”  என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.


இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில் சிவன், அம்பாள், முருகன், விநாயகன், திருமால், கண்ணன், இராமர், இலக்குமி, சரசுவதி, குபேரன், காளி, மாரியம்மா, முனியாண்டி, துர்க்கை, ஐயப்பன், மதுரை வீரன், நாகம்மாள், அனுமான், சங்கிலிகருப்பன், சாய்பாபா, சிரிடி பாபா என்று எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.


ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.


மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால்தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப்படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.


சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய குமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.


இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

சனி, 3 ஏப்ரல், 2021

திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்

 திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்



சைவத்தின் பொது நூல் வேதம், சிறப்பு நூல் ஆகமம் என்படும். முழுமுதற் கடவுள் சிவபெருமானார். திருமுறைகள் தமிழ் வேதம்என போற்றப்படுகின்றன. சிவனாரின் திருவருளை முழுமையாகப் பெற்ற திருவருட் செல்வர்களால்  சிவபெருமான் உள்நின்று உணர்த்தி பாடப்பெற்ற தெய்வத்திருநூல்களேதிருமுறைகளாக வகுக்கப் பட்டன, திருமுறைகள்  தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பிரபஞ்சம் , திருத்தொண்டத்தொகை என பனிரெண்டாகும்.

  ஆலயங்களிலும் வீடுகளிலும், சைவ திருச்சபைகளிலும் கடவுள் வழிபாட்டின் போது

பாடப்படுவது இத்திருமுறைப் பாடல்களே. இத்தோத்திரப்பாடல்கள் பிரணவமயமானவை இவற்றுடன்வேறு பாடல்களை சேர்த்து பாடக்கூடாது. அவ்வாறு சேர்த்து பாடினால் சிவநிந்தனையாகும். அவ் அருட்பாக்கள்மட்டுமே கடவுள் சன்னதியில் ஓதத் தகுந்தவையாகும்.இத்திருமுறைபாடல்கள்  பாடத் தொடங்கும் முன்னும் பாடி முடிந்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓத வேண்டும்.

  தேவாரம்,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தொண்டர் புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் முறையாகும்.

  இத்திருமுறை பாடல்களை இறைவனை நினைந்து, மனமுருகி, மனம் மொழி மெய்யால் கண்ணீர் மல்க கசிந்து ஓதுவார் நன்னெறக்கு இட்டுச் செல்லப்படுவார் என்பது  அருளாளர்களின் முடிபு.

  பரம் பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தி துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு பற்றி போற்றுதல் செய்பவன வாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும், பக்தியையும், தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும், மந்திரம், மருந்து, தந்திரம் எனமூன்றுமாய் விளங்கி தீரா நோய் தீர்த்தருளும் தன்மையனவாகும் இத்திருமுறை பாடல்கள்

  இறைவன் ஒருவனே அவனே சிவன் , அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றுமில்லை. அப்பெருமான் திருஅருள் சக்தியுடன்இணைந்து ஒரு பொருளாகவே  உள்ளான். உயிர்களிடத்தும் அளப்பெரும் கருணை கொண்டவன், உயிர்கள் ஈடேற்றின் பொருட்டுஐந்தொழிகள் செய்கிறான். அப்பெருமானின் மறைமொழி ( மந்திரம் ) திருவைந்தெழுத்தாகும். சிவ சின்னங்கள், திருநீறு, உத்திராட்சம், அப்பெருமானிடம்சேர்ப்பிக்கும் நால்வகை நன்னெறிகள் சரியை, கிரியை, யோகம் ஞானம்என்பனவாகும். இதனை தெளிவாக உணர்த்துவன திருமுறைகளே.

  இறைவன் அங்கெங்கெனதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும், ஆலயத்திலும், குருவினத்திலும், சிவனடியார்களிடத்திலும் தயிரில் நெய்போல வெளிப் பட்டு காணப்படுகிறான்.

  பக்தி இயக்கமானது ஆன்மீக அடிப்படையில் மனித வாழ்க்கையை தூய்மைப்படுத்தி வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வித்து, மனித பிறவி எடுத்ததன்  சீரிய நோக்கமாகிய 

கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கு உறுதுணையாக அமைகின்றது.பக்தி இயக்கத்தை வளர்க்கும் சாதனமாக திருமுறைகள் விளங்குகின்றன.

  திருமுறைகளை பாராயணம் செய்தல் நம் அன்றாட வாழ்க்கை பழக்கமாக கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக.

 திருசிற்றம்பலம்



வெள்ளி, 2 ஏப்ரல், 2021

இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்

 இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்



அன்பே சிவம் என்பது பலரும் அறிந்த ஒன்று. அன்புறு சிந்தையராகி அடியவர்கள் இறைவனுக்கு நண்புறுவர் என்பார் திருஞானசம்பந்தர். சீர்மிகு செந்தமிழர் இறைக்கொள்கையான  சித்தாந்த சைவம் விதிமுறைகளை வகுத்து வைத்துக் கொண்டுப் பெருமானை வழிபடுவதனைக் காட்டிலும் அன்பு வழி நின்று வழிபடுவதையே சிறந்தது என்று குறிப்பிடுகின்றது. ஒரே நேரத்தில் ஒரே வகையில் வழிபடும் ஒரு செயல்முறை என்று அல்லாமல் அவர் அவர் விரும்பும் அவர் அவருக்கு முடிந்த எளிய, சைவ சமயத்திற்கு ஏற்ற முறையில், இறைவனை வழிபடலாம் என்ற சுதந்திரத்தினைச் சித்தாந்த சைவம் சைவர்கட்கு வழங்கியுள்ளது. இறைவழிபாடு என்பது உயிர் இறைவனிடத்தில் ஓர் உறவினை ஏற்படுத்திக்கொள்ளச் செய்துகொள்கின்ற முயற்சி என்பதனைச் சித்தாந்த சைவம் தெளிவுறுத்துகின்றது. எனவே உயிர்களின் அகப்புற ஆற்றலுக்கு ஏற்ப தத்தம் வழிபாடுகளை அமைத்துக் கொள்வதனைச் சித்தாந்த சைவம் தடுப்பதில்லை. இப்பூவுலகில் அன்பு நெறியில் வாழ்ந்து, இறைவனை இவ்வுலகிலேயே கண்டு அவன் திருவடிக்கு ஆளான அருளாளர்களின் வாழ்வியல் நெறிகளை பரிந்துரையாகப் பின்பற்றுதற்குச் சித்தாந்த சைவம் முன் வைக்கின்றது. சைவ சமயத்தில் உள்ள நடைமுறை உண்மையை உணராதவர்களே சைவ சமயத்தில் ஒழுங்கு இல்லையென்றும் வழிபாடுகள் ஒருமுகப் படுத்தப்படவில்லை என்றும் அறியாமல் குறிப்பிடுவர்.


இறைவனின் திருவருளைப் பெற்ற, அன்பு நெறியான சிவநெறி என்னும் செந்நெறியில் வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்வியல் முறைமையைச் சித்தாந்த சைவம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று வகுத்துத் தெளிவுறுத்துகிறது. அடியார்கள் வாழ்ந்து காட்டிய இந்நான்கு நெறிகளில் எது நமக்குப் பின்பற்றுவதற்கு முடியுமோ அதனைத் தெரிவு செய்து கொண்டு இறைவனை வழிபட்டு அன்பு பாராட்டலாம் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. திருநாளைப் போவார் என்பார் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் திருக்குளத்தில் தங்களைத் தூய்மை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருவுள்ளத்தோடு திருக்குளம் வெட்டுவதையும் பெருமானுக்குப் பூசனையின் போது இசைக்கருவிகள் முழக்கத்திற்குத் தோற்கருவிகளைச் செய்து கொடுப்பதையும் தமது வழிபாடாகக் கொண்டார். அவர் சார்ந்திருந்த குமுகாயம் அவரைக் குலத்தில் தாழ்ந்தவர் என்று விலக்கி வைத்திருப்பினும் மேற்குலத்தார் என்போர் நலமுற அன்புவழியில் நின்று தமக்குத் தெரிந்த தொழிலையே வழிபாடாகக் கொண்டு சிவப் பணிகள் செய்தார். பெருமானின் திருவருளுக்கு ஆளானார். முருக நாயனார் என்பார் தாம் அறிந்த, தன்னால் இயன்ற, பெருமானுக்கு வழிபாட்டிற்கு மலர்பறித்துக் கொடுத்தல் எனும் திருச்செயலையே வழிபாடாகக் கொண்டு பெருமானிடத்தில் அன்பினை வளர்த்துப் பெருவாழ்வு பெற்றார்.


துணி வெளுக்கும் தொழிலைச் செய்த திருக்குறிப்புத் தொண்டர் என்பார் நடமாடும் இறைவனாகக் கருதிய அடியார்களுக்கு அன்போடு துணி வெளுத்துக் கொடுப்பதனைத் தன் சிவப்பணியாக எண்ணினார். அவரால் இயன்ற, தனக்கு நன்கு தெரிந்த அச்செயலையே தமது வழிபாடாக, தமது உயிர்க்கொள்கையாக எல்லா சூழலிலும் செய்து வந்தார். தம்முடைய அத்தொண்டிற்குத் தடை ஏற்பட்டபோது தமது உயிரையும் விடத்துணிந்தார். அவருக்குப் பெருமான் அவர் துணி வெளுக்கும் பாறையிலேயே வெளிபட்டு அருளினான்.


தங்களுக்குத் தெரிந்த, தங்களால் இயன்ற, அடியாருக்கு உடை, உணவு அளித்தல், திருக்கோயில் கூட்டுதல், கழுவுதல், திருமுறைகள் ஓதுதல், உழவாரப் பணி செய்தல், பெருமானின் திருமஞ்சனத்திற்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்தல், ஆலயத்தில் விளக்கேற்றுதல், குங்கிலியம் புகைத்தல், திருக்குளத்தில் தூர்வாறுதல், தீவத்தி ஏந்துதல், பல்லக்குச் சுமத்தல், உறைபாகச் சமய சின்னங்களை அணிதல், திருவைந்து எழுத்தினை மறவாது கூறுதல் போன்ற செயல்களைச் செய்து இறைவனின் அன்பிற்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டார்கள். சீலம் எனும் தொண்டு நெறிக்கு உட்பட்ட மேற்கூறிய செயல்களைத் தெரிவு செய்து கொண்டு அதிலே உறைப்பாய் நின்று இறைவனை அடைந்தார்கள்.


இறைவனுக்குரிய பூசனை முறைகளைக் கற்றுணர்ந்த திருநீலநக்கர் எனும் அடியார் இறைவனை அழகு செய்து பூசனை செய்து வழிபட்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம், திருவமுது திருமுறைப்பாடல்கள் தூபதீபம் என்று தமக்குத் தெரிந்த பூசனை முறையால் இறைவனுக்கு வழிபாடு இயற்றி அவ்விறைவனை அகத்தில் இருத்தியும் மகிழ்ந்தார். கண்ணப்பர் எனும் வேடர் தமக்குத் தெரிந்த முறையில் இறைவனுக்குத் திருமஞ்சனமும் திருவமுதும் மலரும் இட்டுத் தமது அன்பின் பெருக்கால் தமது கண்ணையும் பிடுங்கி அப்பி, நோன்பு எனும் நெறியால் பெருமானின் வலப்பக்கத்தில் நிற்கும் பேற்றினைப் பெற்றார். செறிவு முயற்சிகளில் சிறந்து விளங்கிய பெருமிழலைக் குறும்பர் என்பாரும் பூசலார் என்பாரும் அன்றாட வாழ்வில் விட வேண்டுவனவற்றை விடுத்தும் செய்ய வேண்டுவனவற்றைத் தவறாது செய்தும் ஒழுக்கச் சீலராகளாக ஐம்புலன்களையும் மனத்தையும் மூச்சுப் பயிற்சிகளின் வழியும் ஆசனங்கள் வழியும் அடக்கிப் பெருமானை உள்ளத்தில் கண்டும் உள்ளத்தில் கோயில் எழுப்பியும் தங்களால் இயன்ற செறிவு நெறியின் வழி இறைவனைச் சிக்கெனப் பிடித்தார்கள்.


கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிவுற்று அதில் அழுந்தி இருத்தல் என்பதில் கைத்தேர்ந்த கணநாதர் என்பார் திருமுறைகளை ஓதியும் பிறருக்கு ஓதுவித்தும் அதை உணர்ந்தும் பெருமானின் திருவருளில் அறிவு நெறி வழி திளைத்திருந்தார். அவர் அவர், அடியார் பெருமக்கள் நமக்குக் காட்டிய, நம்மால் இயன்ற ஒரு வழியைத் தெரிவு செய்து கொண்டு முயன்றால் அம்முறை வழியே இறைவன் வந்து அருளுவான் என்பதனை, “அப்பனை நந்தியை ஆரா அமுதினை, ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை, எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால், அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.


அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய நந்தி எனும் சிவபெருமானை, இறவா வாழ்வினை அளிக்கும் அமுதினைப் போன்றவனை, ஒப்பிலாத பிழைபொறுத்து அருளும் வள்ளலை, உலகம் அழிந்து ஒடுங்கும் காலத்து அழிவின்றி நின்று மீண்டும் உலகினைத் தோற்றுவிக்கும் முதல்வனை, அவன்பால் அன்புமேலிடச் செய்யும் நான்கு நெறிகளில் எந்நெறியினால் ஆயினும் தொழுங்கள். தொழுதால் அந்த வழியின் வகையாலேயே அச்சிவபெருமானும் வந்து அருள்புரிவான் என்கின்றார் திருமூல நாயனார்.


அவர் அதைச் செய்கிறார், இவர் இதைச் செய்கிறார் என்று எண்ணி மயங்கி வெறுமனே காலத்தைக் கழிக்காமல், நம்மால் இயன்ற, செயல்படுத்த முடிந்த, சைவ சித்தாந்த கொள்கைக்கு மாறுபடாத, எளிய முறைகளைத் தெரிவு செய்து கொண்டு அந்நெறியிலேயே உறைபாய் நின்று வழிபடுவோமாக! பெருமானின் திருவருளைப் பெறுவோமாக!


இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

 






ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படும் நம் ஆத்தடி பிள்ளையார் கோயிலின் சிறப்பு அமுசங்களை சற்று சிந்திப்போம்.

 1) ஒரு கோயில் சிறப்பு அடைய வேண்டுமானால் அது ஆதிகாலத்து நாம் அறியாப் பருவத்தில் தோன்றியிருக்க வேண்டும் ஆனாலும் அதன் பின் அதன் வளர்ச்சி கண்டு பரிகார தெய்வங்களின் வளர்ச்சி பெற்று பெருமை பெறலாம். அதன்படிதான் இங்கு விநாயகர் கோயில் கட்டும் முன்னேயே ஆத்தடியில் தோன்றி அனாதி காலம் தொட்டு அருள்பாலித்து வருகிறார் என்பது ஒரு சிறப்பு

2. ஒரு கோயில் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்றவாறு சிறப்பு (அதாவது நாம் வணங்கும் தெய்வம் )சிறப்பு பெயர் பெற்று நமக்கு விசேடமாக காட்சி அளிப்பது இதனால் இவர் இராஜகணபதி என்ற சிறப்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

3) தலம் என்ற வருசையில் இத்தலம் புகழ் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரமாகிய சுந்தரபாண்டியத்தில் அமைந்தபடியால் தல வரிசையில் சிவபெருமானாரே அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்து அருள் செய்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது அதன் சிறப்பு

  மேலும் தலம் என்ற வரிசையில் அங்குள்ள தல விரிச்சம் முக்கியத்துவம் பெறும் அந்த வகையில் இங்கு வெகு சிறப்பு பெற்றது இக்கோயிலின் தல விரிச்சம் வன்னி மரமாகும். வன்னி மரத்தடி விநாயகர் என்றேலே மனம் இறை இச்சை தன்னாலேயே ேதான்றும் இக்கோயிலில் வன்னி மரத்தடியில் விநாயகரும் கைலாய நாதரும் அமர்ந்து அருள் செய்வது சிறப்பிலும் சிறப்பு

4) தீர்த்தம் என்ற வரிசையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி வைப்பாறு நதியுடன் இருக்கண்குடியில் கலந்து கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியாம் அர்ச்சுனா நதியின் ஆற்றங்கரையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார், எனவே இக்கோயில் மூர்த்தி, தலம். தீர்த்தம் என்ற அடிப்படையில் ஆகம விிதிப்படி அமைந்த கோயில் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பு பெறுகிறது.

5, ஓர் ஆன்மா தன் உடலை விட்டு பிரிந்து (பிறப்பு இறப்பு மனித உடலுக்குத்தான் ஆன்மாவிற்கு பிறப்பும் இறப்பும் கிடையாது  அது என்றும் உள்ள நித்திய பொருள் வினைப்பயனை முடித்து சிவமுக்தி பெறவேண்டும்அதுவரை அவ் ஆன்மா மறுபடியும் வேறு உடலில் தோன்று பிறக்கும்)  ஒன்று சிவமுத்தி பெறவோ அல்லது தன் வினைப்பயனால் அடுத்த பிறப்பிற்கு உட்படுவதற்கு அந்த ஆன்மா கடைதேற அதற்கான சிறப்பு வழிபாடுகள் செய்யும் இடம் ஒன்று புண்ணிய நதியாக இருக்க வேண்டும் அல்லது சமுத்திரமாகவோ அல்லது கடலாகவோ இருக்க வேண்டும் உதாரணத்திற்கு இராமேஸ்வரம், காவேரி ஆறு ,அல்லது புனித நதிகள் சங்கமிக்கும் இடம் இவ்விடங்களில் தான் புனி நீர் கொண்டு அபிசேகம் செய்ய எடுத்துச் செல்வார்கள் அதன்படி பார்த்தாலும் இக்கோயில் அமைந்துள்ள அர்ச்சுனா நதிக்கரையில் தான் இங்கு(நம் ஊர்மக்கள்) இவ்விடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே இவ்விடத்திலுள்ள கோயில் இராமேஸ்வரம் காவேரிக்கரைகள் உள்ள கோயில்களுக்கு ஈடாக உள்ளதை நாம் அறியலாம்,ேமலும் நாம் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு தூய உடம்புடன் முதல்தரிசனம் செய்யும் கோயில் தெய்வம் விநாயகர்தான் எனவேதான்ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் விநாயகர் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார் அவ் வரிசையில் அவ்வாறே அமைந்த கோயில் ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை அதற்காக அதன் சிறப்பில்லாது போய்விடுமா?

6) ஓர் ஆத்மா உடலை வி்ட்டு சென்ற பின் அவ் ஆன்மா தனக்கு ஓர் உடம்பு கிடைக்கவோ அல்லது முக்தி பேறு அடையவோ தவித்துக்கொண்டிருக்கும் அப்போது அவ் ஆன்மா சிறப்பு பெற அவ் ஆன்மாவின் வழித்தோன்றல்கள் செய்யும் கரும (ஈமக்கிரியை) காரியங்கள் செய்யும் இடமும் அவர்கள் (ஆன்மாக்கள் ) முக்தி பேறு அடைய மோட்ச தீபம் ஏற்றும் கோயில் இக்கோயில் தான் ( மோட்ச தீபம் ஏற்றும் கோயில் சிவலாயங்களில் சிதம்பரம் தான் எனவே இக்கோயில் சிதம்பரத்திற்கு ஈடான மோட்ச தீபம்ஏற்றி வழிபடும் கோயிலானதால் இதற்கு தனி சிிறப்பு உண்டு.

7) நம் ஊர் கிராமத்து தெய்வமான அருள்மிகு மாரியம்மன் சித்திரை மாதத்தில் 9நாட்கள் கொண்டாடும் தெய்வம் முதல் நாள் அம்மன் எழுந்தருளச் செய்யப்படும் இடம் இக்கோயில் முன் உள்ள மாரியம்மன் பீடத்தில்தான், மேலும் அவ்வாறு எழுந்தருளச் செய்யும் போது நம் ஊர் பெரியகோயில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பர், மாமுண்டி கருப்பர் ஆகியோர் மருளாடிகளால் எழுந்தருளி அருள் வாக்கு கொடுத்து அம்மனை வரவழைக்க செய்யும் இடமும் இக்கோயில்தான்

8) நம் ஊர் சாலிய சமுதாயத்தினரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் வைகாசி திங்களில் கொண்டாடும் போது இரண்டாம் நாளான புதன் கிழமையில் அம்மனையும், அம்மனோடு வரும் சுமார் 500 முளைப்பாரி அம்மனும் கரைக்கும் இடமும் இதுதான். எனவே நம் ஊர் கிராம தேவதைகள் திரியோதன சக்தியாக (மறைமுகமாக ) இங்கு ஆட்சி செய்யும் இடம் இக்கோயில்தான்

9) முன்னோரு காலத்தில் மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு அடியார் அல்லது சித்தர் இக்கோயிலில் நீண்ட நாள் தங்கியிருந்து இங்கு சமாதி அடைந்ததாக வாய்வழி செய்திகளாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அடக்கம் செய்த இடம் இக்கோயில் அருகில்தான் அமைந்திருந்தது யாவரும் அறிவர் எனவே இவர் சித்தராக இருந்து சமாதி ஆகியிருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அவ்வாறானால் பிரசித்தி பெற்ற தலங்களில் சித்தர்களின் சமாதி இருப்பதை நமக்கு இங்கு உறுதிபடுத்துகிறது. எனவே இவ்வகையிலும் இக்கோயில் சிறப்பு பெறுகிறது.

10.தெய் வழிபாட்டிற்கு சிவ முக்திக்கும் நம் பகுதி இறை தெய்வமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் நம் ஊரின் வடக்கு திக்கில் அமைந்தபடியால் எல்லோராலும்வடக்கு திக்கு நோக்கியே வழிபாடு செய்வது முக்கியமானதாலும் நம் இஸ்ட தெய்வமான நம்ஆத்தடி விநாயகரும் கைலாய நாதரும் வடக்கு திக்கில் அமர்ந்து நம் ஊருக்கு அருள்பாலித்து வருகிறார்கள் எனவே இக்கோயில் வடக்கு திசையில் அமைந்தது இவ்வூருக்கு கிடைத்த சிறப்பு

நம் ஊரில் சிவதலம் முதன்முதலில் சுந்தரமூர்த்தியின் பிரதிநிதியாக கைலாய நாதராக இங்கு எழுந்தருளி அவர் முன் தினமும்காலை மாலை மணிவாசகர் அருளிய சிவபுராணம் ஒரு தடவையாவது மனம் மொழி மெய்யால் உணர்ந்து பாடி வர அவ் ஆன்மாவிற்கு வீடு பேறும் கடைசி காலத்தில் மரண அவஸ்தை நீங்கி எளிய இறப்புடன் முக்தி பேறும், வாழும் போது எல்லாச் செல்வங்களும் நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும், தந்து குரு லிஙக, சங்கம பக்தியும் சிவஞானமும் மென்மேலும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம்.

 தற்போது இக்கோயிலில் பிரதி மாதமும் அமாவாசை பூசையும், பெளர்ணமி தோறும் அருள்மிகு மாரியம்மன் பீடத்தில் அம்மனுக்கும் மூலவர்மற்றும் கைலாய நாதருக்கும், மற்றும் சங்கடகர சதுர்த்தி தினத்தில் மூலவர் இராஜகணபதிக்கும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அடியார்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழிபாடு தமிழிலேயே அவர்ரவர்கள் இறைவனை போற்றி பாடி மலர் வில்வம் மற்றும் வன்னிமர இலைகளால் அரச்சனை செய்து சிறப்பு பெறலாம், இதன் மூலம் தான்ஒரு ஆன்மா மனம் மொழி மெய்யால் இறை வழிபாடு செய்ய முடியும்  இவ்வாய்ப்பு இவ் ஆலயத்தில் மட்டுமே உண்டு அவரரவர்கள் செய்தமாக கட்டிய கோயில்களில் கூடசெய்ய முடியாத செயல் இதுதான் எனவே இக்கோயிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் விரும்பி வந்து அபிசேக ஆராதனையிலும் அர்ச்சனையிலும் ஒன்றி பக்தி நெறியில் பங்கு பெற்று அருள் பெற்று உய்ய வேண்டுகிறோம்.

  இக்கோயிலில் வழிபாடு செய்ய விரும்பும் அடியார்களுக்கு "அவன் அருள் இருந்தால் தான் இது கிடைக்கும் எனவே அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி வளம் பெறுவோம். தற்போது இக்கோயிலின் உட்பிரகாரத்தில் மலர் செடிகள் வைத்து பூத்துக் குலுங்கி வளம் சேர்த்து மனத்திற்கு ரம்மியமான சூழலில் கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.இதுவும் சிறப்பிற்கு ஒர் எடுத்துக்காட்டே

திருச்சிற்றம்பலம்