செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

 

சைவ சித்தாந்த சிந்தனைகள்  - இறைவனும் ஆன்மாவும்

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

  திருவருட் பயன் பாடல் எண் 54

ஊன் உயிரால் வாழும் ஒருமைந்தே,ஊனொடு உயிர்

தான் உணர்வோடு ஒன்றாம் தாம்

     உடம்போடு உயிர் சேர்ந்து ஒன்றாகி இருக்கிறது.உடம்பும் உயிரும் பொருளால் இரண்டு ஆயினும் இரண்டு என்ற தன்மை தோன்றாதபடி உயிர் உடம்போடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது.  உடம்போடு கூடிய உயிர் அறிவு வடிவான திருவருளோடு ஒன்ற பட்டு நிற்கிறது. இவ்வாறு திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போல் என்றால் உடம்பும் உயிரும் காெண்டுள்ள ஒற்றுமையைப் போல்போன்றதாகும்.

  உடம்பில் கலந்துள்ள உயிர்  தன் இருப்பை சிறிதும் புலப்படுத்தாது,உடம்பு ஒன்றே உள்ளது என்பது போல் அதனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அது போலவே திருவருள் உயிராேடு நீக்கமின்றி எப்போதும்கலந்திருப்பினும், தன் இருப்பை புலப்படுத்தாது உயிர் ஒன்றே உள்ளத என்னும் படியாக ஒற்றுமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இரு பொருள்களுக்கிடையே இரண்டன் தன்மை தெரியாதவாறு அவை இயைந்து நிற்கும் ஒற்றுமைத் தொடர்பு அத்துவிதம் என்றும் அத்துவித சம்பந்தம் என்றும் சொல்லப்படும்

  அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று (துவிதம் 2) என்றால் அத்துவிதம் 2 அன்று என்று பொருள்படும், என ேவற்றுமை படாமையை குறித்து நிற்கும்

ேவற்றுமைபடாமையாவது இது சிவப்பகுதி, இது ஆன்மா பகுதி என பிரித்தறிய வாராத நிலை எனவே ஒற்றிற்று நிற்றல் எனப்பெறப்படும்

  தன்மையால் இரண்டாதல், வேற்றுமையால் / கலப்பால் ஒன்றாதல் ஒற்றமை.இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும், தன்மையால் வேறாயும்நிற்றல். 

  உயிர் செலுத்தவே உடம்பு செயல்படுகிறதே தவிர, உடம்புக்கு என்று தனியே ெசயல் இல்ைல ஏனெனில் உடம்பு சடப்பொருள். அது போல திிருவருள் செலுத்தவே உயிர் செயல்படுகிறதேயன்றி, திருவருள் துணை இன்றி உயிருக்கு தனிச் செயல் சுதந்திரம் இல்லை. 

  திருவருள் தன்னுடன் எப்போதும் பிரிப்பின்றி கலந்திருக்கிறது என்பதையும், அதனுடைய துணை தன் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாதது என்பதையும்உயிர் உணர வேண்டும்என்பது இப்பாடலின் கருத்தாகும். மொத்தத்தில் உடலை உயிர் இயக்குகிறது, உயிரை திருவருள் இயக்குகிறது, திருவருள் துணையினால் தான் உயிர்களுக்கு கட்டு நிலையில் ( கேவல நிலை / பிறப்பு நிலையில்)  பொது இயல்பும், முத்தி நிலையில் தன் இயல்பும் விளங்குகின்றது. 

உயிர் அறிவதற்கு திருவருள் துணை வேண்டு்ம்

 கண்ணானது காணும் தன்மை உண்டு இருப்பினும் கண் காண ஒளி (ெவளிச்சம்) வேண்டும் அவ்வாறு ஒளி இல்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.

  உயிர் உடன் நின்று செலுத்துவதால் தான் கண் ஒரு பொருளைக் காண முடிகிறது. ஆனாலும் கண்ணுக்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவினால் தான் கண் காணமுடியும். ஒளி இல்லையென்றால் உயிர் உடனின்றும் கண் காண இயலாது/ முடியாது.

 கண் போல் உயிர். உயிர் உடன் நின்று செலுத்துவே கண் காணுமே அன்றி தானாக காணாது. உயிரின் அறிவு விளங்குவதற்காக திருவருள் கருவி கரணங்களை கூட்டு விக்கிறது. அதோடு மட்டுமன்றி கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே நின்று திருவருள் ஒளி செலுத்துகிறது. அவ்வாறு திருவருள் ஒளி செலுத்தாவிட்டால் உயிர் அறிய இயலாது. 

திருச்சிற்றம்பலம்


சனி, 25 பிப்ரவரி, 2023

சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி

 சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி



 இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்கள் இன்பத்திலும துன்பத்திலும் மாறிமாறி  உழன்று வருவதால் இவ்வுலக வாழ்வு குறை உடையது என்பதை எலலாச்சமயங்களும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவ்வுலக வாழ்வின் கட்டிலிருந்து விடுபட்டு நீங்கிப் பேரின்ப வாழ°வேனும் வீடுபேற்றை உயிர்கள் எய்த வேண்டும் என்னும் பொதுமைக் கொள்கையில் எல்லா சமயங்களும் ஒன்றுபடுகின்றன.

  ஒவ்வொரு சமயமும் அதன் கொள்கைகளை விளக்கி அவற்றை உள்ளவாறு உணர்தலே ஞானம் என்றும், அந்த ஞானத்தை அடைவிக்கும் செயல்களே தவம் என்றும் அத்தகைய தவத்தை மேற்கொண்டால் தான் வீடுபேறு அல்லது முத்தி அடைய முடியும் என்றும் கூறுகின்றன. அம்முத்திநிலை எத்தகைய தன்மையுடையது என்று விளக்குவதில தான் சமயங்கள் வேறுபடுகின்றன.

   இங்ஙனம் பல்வகையிலும் ேவறுபட்ட கொள்கைகளை உடைய சமயங்கள் கூறுகின்ற முத்தி நிலைகளை கூறி, அவற்றின் மேம்பட்ட சைவ சித்தாந்தத்தின் முத்தி நிலைக் கொள்கையே சிறந்தது என்று சிவப்பிரகாசம் எடுத்துக்காட்டுகிறது.

  மக்களிடத்துத் துய்க்கும் இன்பமே முத்தி என்பது உலகாயதர் கொள்கை, உருவம் முதலிய ஐந்து கந்தகங்களும் கெடுவதே முத்தி என்பது நான்கு வகை பெளத்தர்கள் கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரின் கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிராபகர சமத்தின் கொள்கை, ஆணவ மலம் முற்றும் அழிந்து போவதே முத்தி என்பது அகச்சமயமான பேதவாதம் கூறும். இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும் என்பது சிவசமய வாதிகளின் கொள்கை, ஆன்மா என்ற ஒன்றே அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரமியவாதத்தின் கொள்கை. உயிர் பசு கரணம் கொட்டுச் சிவ கரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயமான சிவ சங்கிராந்த வாதிகளின் கொள்கை, உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல கிடக்கும் நிலையே முத்தி என்பது பாடாணவாதத்தின் கொள்கை. இவ்வாறு பத்து வகையாக சொல்லப்பட்ட முத்திகள் குற்றமுடையன.

   ஆணவம், கனமம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடு கூடி, சிவ பரம்பாெருளோடு பேரின்பத்தை எய்துவே சித்தாந்தத்தின் முத்தி கொள்கையாகும். இதுவே முத்தி பற்றிய சிறந்த கொள்கையாகும்.

   மும் மலங்களோடு அவற்றின் விளைவுகளாகக் கூறபட்ட ஏனைய காரியங்களோடு பொருந்துவதனால் ஆன்மா தனக்கென ஒரு செயல் இன்றி பாசத்தினால் ஈர்க்கப்பட்டு பாச மயமாய நிற்கும். ஆன்மா மேற்கொள்ளும் இடையறாத உண்மை ஞான யோகங்களின் முன் இம் மும் பமலங்களின் குண பேதங்கள் தீ முன்னர் பஞ்சத் துய்ப் போலும்ஆகும். இந்நிலையே திரி மலம் அகலும் நிலை ஆகும். இவ்வாறு திரி மலமும் அகன்ற நிலையில் ஆன்மா அருளோடுங் கூடின இடமே முத்தியாகும். அதாவது ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்து சிவனுடைய அருட் சத்தியினடமாகச சென்று பெற வேண்டும். இது பற்றிய திருவாசகம் சிவபுராணம் அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று கூறும். 

  பிறவி பிணயை தருவதாகிய வினைப் போகங்கள் அறவே அழியுமாறு அவச் செயலை போக்கும் தவச் செயல்களை மேற்கொண்டு அருட் சத்தியைவழியிடமாகக் கொண்டு சிவமாம் பேற்றை சார்ந்து சிவபோகமாகிய முத்தி பேற்றை அடைவர் இதுவே அருள்சேர் முத்தி என்பதாகும்

 ஆன்மா பாசத்தில் அழுந்திருக்கும் நிலை கட்டு நிலை, பதியில் அழுந்திருக்கும் நிலை வீட்டு நிலை அல்லது முத்தி நிலை எனப்படும். கட்டு நிலையில் பாசமே தானாய் நின்ற ஆன்மா முத்திநிலையில் பாசத்திற்கு செல்லாது பதியே தானாய்  நிற்கும். அதாவது வீட்டு நிலையில் ஆன்மா திரிமலம் ஆகிய பாசத்தினின்று அகன்று திருவருள் பெற்று, அறிபவனாகிய தன்னையும், தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றே அறிந்து அதனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே சித்தாந்த முத்தி நிலையாகும். இம்முத்தி நிலையே இவ்வுலகத்திற்கு மீண்டும் வாராத நிலை என்றும் இன்பத்தில் இருக்கும் நிலை எல்லாப் பேறுகளிலும் மேலான பேறு பெற்ற நிலையாகும். 

சித்தாந்த முத்தயே நன் முத்தி ஏனைய முத்தி யெல்லாம் முத்தியல்ல என்பதனை சிவஞான சித்தியாரும் கூறுகிறது. சிவனது திருவருளே திருவடியாக சொல்லப் படுமாதலால் அடிசேர் முத்தி என்று சித்தியார் கூறுகிறது. 

  நண்ணரிய சிவாந்த ஞான வடிவமாகி

  அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்  என்று திருநாவுக்கரசர் சிவத்துவம் பெற்றதை சேக்கிழார் பெருமான் அருளிச் செய்வர். எனவே நம் சிவகாம தோத்திர சாஸ்திரங்கள் புராணங்கள் அனைத்தும் சைவ சித்தாந்த முத்திப்பேறே முத்தி பேறு என்பதை அறியலாம்,.

  இங்ங்னம் முப்பொருள்கான பதி, பசு பாசம் பற்றிய இருப்பையும், அவைகளின் இலக்கணங்களையும் சிவப்பிரகாசம் விரிவாக விளக்கி காட்டுகிறது. ஆன்மா அடையும் கேவல, சகல நிலைகளையும் பின் திரிமலம் அறுத்து ஞானம் பெற்று இறைவன் திருவடி அடையும் சுத்தநிலையையும் அவத்தைகள் மூலமாக எடுத்துரைக்கிறது, எனவே சைவ சித்தாந்த முத்தியே ஞான முத்தி சிவனருள் முத்தி

திருச்சிற்றம்பலம்

நன்றி உமாபதியாரின் சிவப்பிரகாசம்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

மந்திரங்கள்

 மந்திரங்கள் 



மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக்கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். உதாரணமாக ‘நமசிவாய’ என்ற ஒரு சக்திவாய்ந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வோமேயானால் அந்தச் சொல்லின் பொருளைச் சிந்திக்க வேண்டும். ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருளையுடையது நமசிவாய என்ற சொல். சாதாரண குழந்தை கூடப் புரிந்து கொள்ளக் கூடிய ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற இரண்டு சொற்கள் எப்படி சக்தி வாய்ந்த மந்திரமாக மாறின என்பதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள், பெரியவர்கள், ஞானிகள், தபசிகள், ரிஷிகள் முதலானவர்கள் நிறைமொழி பேசுபவர்களாக இருந்தார்கள். தொல்காப்பியனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மந்திரங்களைப் பற்றி ஆராய்ந்து மிகச் சிறந்த கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். ‘நிறைமொழி மாந்தர்’ என்று இந்தப் பெரியவர்களுக்குப் பெயர் வைக்கிறார். நிறைமொழி மாந்தர்கள் என்றால் என்ன? நாம் பேசுகின்ற குறைமொழிகளையே எடுத்துக்கொண்டு, அந்தக் குறைமொழிகளை நிறைமொழிகளாக மாற்றுகின்ற பேராற்றல் வாய்ந்தவர்கள் அவர்கள். அப்படியானால் இந்த ஆற்றல் எங்கே இருக்கிறது? இந்தச் சொற்களிலா? இல்லை.

சாதாரண சொற்களைத்தான் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அந்தச் சொற்களை எடுத்துக்கொண்டு அவர்கள் அவற்றைத் தம்முடைய ஆற்றல் காரணமாக, தம்முடைய சக்தி முழுவதையும் அந்தச் சொற்களில் ஏற்றி, ‘இவை மந்திரங்களாக ஆகக்கடவன்’ என்று ஆணையிடுவதன் மூலம் அவற்றை மந்திரங்களாக மாற்றுகிறார்கள். இதனைத்தான் தொல்காப்பியனார் ‘நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி’ என்று சொல்கிறார். இந்த ஆணையிடுதல் என்பது, குறைமொழியாக உள்ள எழுத்துக்கோவைகள், சொற்கோவைகளை, சக்தி பெற்ற மந்திரங்களாக மாற்றுவதுதான். அப்படியானால் இந்தச் சொற்கள் எப்படி இந்த ஆற்றலைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். எல்லாச் சொற்களுக்கும் எழுத்துகளுக்கும் Frequencies என்று சொல்லப்படுகிற அதிர்வுகள் உண்டு. இந்த அதிர்வுகள் ஒலி சக்திகளாகும். இந்த அதிர்வுகளை எல்லா எழுத்துகளும், சொற்களும்  பெற்றிருந்தாலும் எந்த அதிர்வுகளோடு எந்த அதிர்வுகளைச் சேர்த்தால் அவை பயன்படும் என்பதை ஆராய்ந்த அவர்கள் அறிந்திருந்தார்கள். 

அப்படி அறிந்திருந்த காரணத்தினாலேதான் இந்தப் பல்வேறு எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் பல்வேறு அதிர்வுகளை ஒன்று சேர்த்த புதியதொரு ஆற்றலை அவை பெறுமாறு செய்கின்றார்கள். அப்படி ஆற்றலைப் பெறுமாறு அவற்றைச் செய்துவிட்ட பிறகு அவை மந்திரங்களாக மாறிவிடுகின்றன. பல சமயங்களில் அக்ஷரங்கள் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களுக்குப் பொருளே இருப்பதில்லை. ஐம், ஹ்ரீம், க்லீம் என்ற பீஜ அக்ஷரங்கள் எவ்விதமான பொருளையும் தருவதில்லை. பொருளில்லாமல் சொற்கள் உண்டா என்று சிந்திக்க வேண்டும். பொருளில்லாமலும் சொற்கள் இருக்கலாம். ஆனால், அவை குறைமொழி மாந்தர்களால் பேசப்படும்போது அர்த்தமற்ற ஒலிக்கூட்டங்களாக மாறிவிடுகின்றன. ஆனால், நிறைமொழி மாந்தர்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட அதிர்வுகளை ஒன்று சேர்க்க வேண்டுமென்று நினைக்கும்பொழுது அந்த அதிர்வுகளையுடைய எழுத்துகளை ஒன்று சேர்க்கின்றார்கள். அப்படி ஒன்று சேர்த்தபிறகு - ஹ்ரீம் என்ற மந்திரத்தை உண்டாக்கிவிட்ட பிறகு அது அன்னையின் பூரண சக்தியைப் பெற்ற மந்திரமாக இருக்கிறதே தவிர அதற்குமேல் பொருள் ஒன்றும் அதற்குத் தேவையில்லை.

இந்த ஆற்றலைப் பெற்ற அந்த மந்திரங்களை ஓயாமல் திருப்பித் திருப்பிச் சொல்கின்றவர்கள், ஜபிக்கின்றவர்கள் இந்த ஆற்றலைத் தம்முள் பெற்று விடுகின்றார்கள். ஆகவே பரம கருணையுடையவர்களாகிய நம் முன்னோர்கள் தம்முடைய பேராற்றலை இந்த ஒலிக்கூட்டங்களில் செலுத்தி, செல்லுமாறு ஆணையிட்டு பிறகு அவற்றை நமக்குத் தந்திருக்கிறார்கள். அவற்றைத்தான் மந்திரங்கள் என்று சொல்லுகிறோம். இந்த மந்திரங்களை தொல்காப்பியனார் ‘மறைமொழி’ என்று சொல்லுகிறார். ஏன் மறைமொழி என்று சொல்ல வேண்டும்? சாதாரணமாகப் பார்க்கும்போது அவற்றிலுள்ள ஆற்றல் நமக்குத் தெரிவதேயில்லை. ‘ஹ்ரீம்’ என்ற சொல்லை யாரும் உச்சரிக்கலாம். ஆனால், அதன் உள்ளே இருக்கின்ற ஆற்றலை நாம் புரிந்து கொள்வதேயில்லை. ஆகையினால்தான் அது மறைமொழி. அப்படியானால் மறைமொழி என்றால் அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய தகுதியை, சக்தியைப் பெற வேண்டும், அப்பொழுது அந்த மந்திரங்கள் பேராற்றல் பெற்றவையாக நமக்குத் தெரியும். இப்படிப்பட்ட சொற்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் மந்திரங்களைக் காண்கிறார்கள். 

இப்படிக் கண்ட மந்திரங்களை அவர்கள் சொற்கோவைகளாக, அதிர்வுகளின் கோவைகளாக வெளிப்படுத்தி எங்கெங்கே எவ்வப்போது தேவையோ அங்கங்கே பயன்படுத்திக் கொள்ளுமாறு நமக்கு வழங்கியிருக்கிறார்கள். திருக்கோயில்களின் அடிப்படைத் தத்துவமும் இதுதான். கோயில்களில் கருங்கல்லினாலே செய்யப்பெற்ற விக்கிரகங்கள் கருவறையில் பதிக்கப் பெறுகின்றன. அவை சாதாரணக் கல்லினாலே செய்யப்பட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே அந்த விக்கிரகங்களைப் பதிப்பதற்கு முன்னால் அவற்றுக்குரிய சக்கரங்கள் எழுதி அவற்றின் அடியிலே வைத்து மேலே விக்கிரகங்களைப் பதித்து விடுகிறார்கள். நம் முன்னோர்கள் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு சக்கரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது செப்புத் தகடுதான். அதில் அந்த அந்த மூர்த்திக்குரிய கோணங்களை எழுதி, கோணங்களுக்குள் அவ்வவற்றுக்குரிய சில எழுத்துகளை எழுதியபின் அவை சக்தி வாய்ந்த சக்கரங்களாக மாறிவிடுகின்றன. 

இந்தச் சக்கரங்களை அடியில் வைத்து மேலே விக்கிரகங்கள் பதிக்கப்படும்போது அந்த விக்கிரகங்கள் சக்தி பெறுகின்றன. அந்தச் சக்தி முழுமை பெற்று விளங்குவதற்காகத்தான் குடமுழுக்கு - கும்பாபிஷேகம் என்று செய்கிறார்கள். குடமுழுக்கு செய்யும்போது யாகசாலை அமைத்து, அதில் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு கடம் அதாவது, குடம் வைத்து பூஜிக்கிறார்கள். கடம் என்பது சாதாரணமாக உலோகத்திலே செய்யப்பட்ட பாத்திரம்தான். அதன் புறத்தே முப்புரி நூலினால் சுற்றி, உள்ளே நீரை நிரப்பி மேலே மாவிைல, தர்ப்பை, தேங்காய் வைத்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து ஜபம் செய்வார்கள். குறிப்பிட்ட மூர்த்திக்குரிய மந்திரங்களை, ஆசார்யனாக இருக்கிறவன் எதிரே இருந்த ஐந்து நாள் அல்லது ஏழு நாள் அல்லது மூன்று நாள் என்ற முறையில் குறிப்பிட்ட ஆவர்த்திகள் மந்திர ஜபம் செய்வார்கள். இதனால் கடத்திலுள்ள நீர் சக்தி வாய்ந்த அந்த மூர்த்திக்குரிய எல்லா ஆற்றலையும் பெற்றதாக ஆகிவிடுகிறது. 

அந்த கடத்திலுள்ள நீரை குடமுழுக்கு அன்று கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்திக்கும், அந்த மூலமூர்த்தி அமர்ந்திருக்கும் கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் செய்வார்கள். அதன்பிறகு அந்த மூர்த்தியை யார் சென்று வணங்கினாலும் தன் அருள் சக்தியை அவர்களுக்கும் வழங்குகின்ற ஆற்றலை அந்த விக்கிரகம் பெற்று விடுகிறது. இதுபோல இருக்கின்ற ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டுமேயானால் - கார்களிலுள்ள பாட்டரி என்று சொல்கிறார்களே அவற்றை கொஞ்சம் மனத்தில் வாங்கிக்கொண்டு பார்க்க வேண்டும். உலோகத் தகடுகள், ஆசிட், தண்ணீர் இரண்டும் கலந்த கலவையிலே அமுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமுக்கி வைத்துவிட்டால் ஆற்றலைப் பெற்று விடுகிறதா? நிச்சயமாக இல்லை. இந்த பாட்டரியை டெட் பாட்டரி என்று சொல்வார்கள். எவ்விதமான ஆற்றலும் இல்லாத பாட்டரியாக இருக்கிறது. அதை மின்சாரத்தில்் வைத்து 40 மணி நேரம் மின்சாரத்தை அதில் ஏற்றிய பிறகு இந்த பாட்டரி முழு சக்தி வாய்ந்ததாக ஆகிவிடுகிறது. பிறகு அதன்மீது கையை வைத்தால் நிச்சயமாக மின்சாரம் பாய்ந்து ஊறு விளைவிக்கும்.

அதுபோலத்தான் கருங்கல்லினாலான சாதாரண விக்கிரகங்களாக இருந்த உருவங்கள், குடமுழுக்கு செய்யப்படும்போது, கடங்களில் இருந்த தண்ணீரை அவற்றின் மீது ஊற்றிய பிறகு முழு சக்தி வாய்ந்த தெய்வப் படிமங்களாக மாறிவிடுகின்றன. இன்னும் சில கோயில்களைப் பொறுத்தமட்டில் இந்த ஆற்றல் நாளுக்குநாள் வளரவேண்டுமென்ற பரம கருணையினாலே புலிப்பாணி, போகர் போன்ற சித்தர்கள் அந்தத் திருக்கோயில்களிலேயே இருந்து தங்களுடைய ஆற்றலை அந்த விக்கிரகங்களுக்கு ஏற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான் ஆயிரக்கணக்கான வருஷங்களானாலும், கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டாலும் அந்த ஆற்றல் குறையாமல் இருந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆக கும்பாபிஷேகம் செய்வது என்பது சாதாரணமாக கருங்கல்லிலே செய்யப்பட்ட படிமத்திற்கு ஆற்றலை வழங்கி அந்த ஆற்றலை மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதுதான் அடிப்படை நோக்கமாகும்.

கோபுரங்கள் இருக்கின்றன. கோபுரத்தின் மீது கலசங்கள் இருக்கின்றன. இந்தக் கலசங்களுக்குள்ளும் பலவகையான பொருட்களையிட்டு நிரப்பி, கலசங்களை கோபுரத்தின் மீது பதித்துவிடுகிறார்கள். இந்தக் கலசங்களோடு கூடிய கோபுரம் ஸ்தூல வடிவமாக இறைவனைக் குறிக்கிற ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆக ஸ்தூல வடிவமாக இருக்கிற கோபுரங்களுக்கும், உள்ளே சூக்ஷ்ம வடிவமாக இருக்கின்ற விக்கிரகங்களுக்கும் ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் குடமுழுக்கு விழாவின் அடிப்படை நோக்கமாகும். இந்தக் கோயில்களிலுள்ள படிமங்கள் நாளாவட்டத்தில் தங்களுடைய ஆற்றலை இழக்க முடியுமா என்றால் ஓரளவு இழக்கவும் கூடும். அது எப்படி என்றால் இந்தக் கோயிலுக்கு வருகிற ஆயிரக்கணக்கானவர்கள், பதினாயிரக்கணக்கானவர்கள் எத்தனையோ வகையான மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள், எண்ணப் போராட்டங்கள் முதலிய பாபங்கள் நிறைந்து உள்ளே செல்வதால் நாளாவட்டத்தில் விக்கிரகங்களின் ஆற்றல் ஓரளவு குறையவும் கூடும். அதற்காகத்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார்கள். 



பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது என்பது ஸ்தூல, சூக்ஷ்ம வடிவங்களுக்கு ஆற்றலை மறுபடியும் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் என அறிந்துகொள்ளல் வேண்டும். ஆக திருக்கோயில்கள் குடமுழுக்கு அன்று முழு ஆற்றலைப் பெற்று விடுகின்றன. ஸ்தூலமாக இருக்கிற கோபுரமும், சூக்ஷ்மமாக இருக்கிற விக்கிரகங்களும் ஆற்றலைப் பெறுவதற்குரிய நாள்தான் குடமுழுக்கு நாளாகும். பலமுறை ஜபிக்கப்பட்ட மந்திரங்கள் தங்கள் ஆற்றலை நீரின் மூலம் விக்கிரகங்களுக்கு ஏற்றுகின்றன என அறிந்துகொள்ள வேண்டும். நிறைமொழி மாந்தர்களால் உண்டுபண்ணப்பட்ட மந்திரங்களை தனியே வீட்டில் இருந்து ஜபித்தாலும், கோயில்களுக்குச் சென்று ஜபித்தாலும் அதன் ஆற்றலைப் பெற முடியும். சாதாரணமாக மக்கள் இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட மனத்துடன் ஜபிக்க வேண்டுமென்று சொல்லுவார்கள். இது எல்லோருக்கும் இயலாத காரியம். ஒருமுகப்பட்ட மனத்துடன் ஜபிக்கும்போது அவை நிறைந்த ஆற்றலைத் தருகின்றன. பல சமயங்களில் ஒருமுகப்பட்ட மனத்துடன் ஜபிக்காவிட்டாலும் அவை பலன் தராமல் போவதில்லை. 

காரணம் ஒலி அதிர்வுகள் மந்திரங்களை ஜபிக்கிறபோது உண்டாவதால், வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் அந்த அதிர்வுகளின் பலன் இருந்தே தீரும். மந்திரங்களை ஓயாமல் சொல்வதன்மூலம் இந்த ஒலி அதிர்வுகளினால் ஏற்படுகின்ற பயனைப் பெறுகின்றோம். சிலசமயங்களில் மந்திரங்களை முழுவதுமாக உச்சரிக்கின்ற நிலை மாறி நம்மையும் அறியாமல் குறைவு, நிறைகள் ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்பட்டாலும் பலன் குறைவதில்லை என அறிந்துகொள்ள வேண்டும். அறிந்தோ அறியாமலோ மின்சாரத்தில் கைவைத்தால் எப்படி நமக்கு அதிர்ச்சியைத் தருகின்றதோ அதுபோல இந்த மந்திரங்களை அறிந்து கூறினாலும், அறியாமல் கூறினாலும் அந்த ஒலி அதிர்வுகள் நமக்கு ஆற்றலைத்தரத்தான் செய்கின்றன. செப்புத் தகட்டிலே சக்தி வாய்ந்த சக்கரங்களாக அமைவதும், கடத்திலே உள்ள நீரை சக்தி வாய்ந்ததாக மாற்றுவதும் ஓயாமல் தன்னை ஜபிக்கின்றவர்களுக்குத் தன் முழுசக்தியைத் தருவதும் ஆக விளங்குவது மந்திரங்களாகும்.இவை நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும் மறைமொழியாம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.



திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

xசித்தாந்தம் பயின்ற அடியார்களுக்கு சித்தாந்த ரத்தினம் என்ற சிறப்பு விருது

 குரு மகா சந்நிதானம் தரிசனம் செய்து அருளாசி பெற்று மகிழ்ந்த தருணம்.





கடந்த 20/01/23 வெள்ளியன்று திருஆடுதுறை ஆதினத்தின் சித்தாந்தம் பயின்ற அடியார்களுக்கு சித்தாந்த ரத்தினம் என்ற சிறப்பு விருது


சித்தாந்த ரத்தினம் விருது வழங்கும் விழா நாள் 21,1,23
இவ்வாண்டுக்கான இராஜபாளையம் சைவ சமய சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் மூலம் பயின்ற 2020-22 ம் ஆண்டு பயின்ற பயிற்சியாளர்களுக்கு திருக்கைலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அவர்கள் வழங்கிய "சித்தாந்த ரத்தினம் சான்றிதழ் "வழங்கிய நிகழ்வு நாள் 21.01.23
All reactions:
Saravanan Visan, Sundaramoorthy S and 2 others


பாறையில் விதை விதைத்தால் ..... பலன் உண்டோ? (சிறுதெய்வ வழிபாடு)

 பாறையில் விதை விதைத்தால் ..... பலன் உண்டோ? (சிறுதெய்வ வழிபாடு)


  செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

  பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ

 அத்தன் என்று அரியோடு பிரமனும்

 துத்தியஞ்செய நின்றநற் சோதியே ............தி,மு,5 பதி, பொது


   ( மனப்பாறைப்பட்டு =பாறைபோான்ற கல்மனம் உடையவர்கட்கு,  அத்தன் = தலைவன்., துத்தியம் செய = போற்றித்துதித்தல், தேஎன்று = பெருந்தெய்வம் என்று)


  செத்துச் செத்து பிறக்கும் சிறுதேவதைகளையே கடவுள் (முழுமுதற் பொருள்) என்று எண்ணி பக்தி செய்யும் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு முழுமுதற் பொருள் சிவபெருமானார் என்று திருமாலோடு, பரமனும் துதித்து போற்றுவது பொருந்துமோ?

  கடவுள் நிலை உணர்ந்து அமமயமான அருளாளர்கள் முழுமுதற் பொருள் / பெருந் தெய்வத்திற்கும், செத்துச் செத்துப் பிறக்கும் சிறு தேவதைகட்கும் இலக்கணம் கூறியுள்ளார்கள்.

  செத்து செத்து பிறப்பவை யாவும் சிறு தெய்வங்களாகும். அவை பிறக்கும் இறக்கும் மேல் வினையும் செய்யும்,வேதனைப்படும்,

  பிறப்பும் இறப்பும் / முதலும் முடிவும் இல்லாததது தான் பெருந்தெய்வம் அதுவே முழுமுதற்கடவுள்

  தோற்றம் உண்டானால் இறப்பும் நேர்ந்தே தீரும். பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு. தோற்றம் உடையவையெயல்லாம் பிறந்து, குழந்தையாய் வளரும் இவைகட்கு பிள்ளைத்தமிழ் உண்டு.  ஆனால் சிவபெருமானார் பிறந்திருந்தால் தானே குழந்தையாய் இருந்திருப்பார் அதனலாேயே அவருக்கு பிள்ளைத்தமிழ் ஏதும் கிடையாது. திருநாவுக்கரசர் திருவாரூர் திருத்தாணடகத்தில் தி,மு 6ல் சிவபெருமானார் பிறாவதவர் என்பதை பாடி யுள்ளதைக் காணலாம். "பாலனாய் வளர்ந்திலாப் பான்மையான் " என்கிறார்.

   ஒரு ஊருக்கு ஒரு தலைவன்,ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியர் ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர், ஒரு நாட்டிற்கு ஒரு அரசன் அல்லது பிரதமர், இதைப்போல அகில் உலகங்களையும் ஆளக்கூடிய கடவுளும் ஒருவரே. அவரைத்தான் சிவபெருமான் என்கிறோம். இவரே முழுமுதற்கடவுள்.

  மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், ரிசிகள், திருமால், பிரம்மா, கிரகங்கள், தேவேந்திரன் சூரியன், சந்திரன் மற்றமுள்ள எல்லா தெய்வங்களும் தேவதைகளும் சிவபெருமானாரைத்தானே தொழுகின்றன, ஆனால் இப்பெருமான் தொழக்கூடியவர் எவரும் இல்லையே என்பதை மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் கூறியுள்ளார.

 " என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்

  தன்னால் தொழப்படுவார் இல்லை தானே "   திருமந்திரம் (தி,மு10)


 " சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

   அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,,,  திருமந்திரம்


  பிரமனும் மாலும் மேலைமுடியோடு பாதம்

  அறியாமை நின்ற பெரியோன்      ....  திரு,மு, 4/14/02

 ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்

 எம்பெருமான் திருவடியே எண்ணினல்லா ....... அப்பர் அடிகள்


 ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

  ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே    ...... 05/100/03


  அவனை ஒழிய அமரரும் இல்லை

  அவனன்றி ெசய்யும் அருந்தவம் இல்லை

  அவனன்றி மூவரல் ஆவது ஒன்றில்லை

  அவனன்றி ஊர்புகுமாறு அறியேனே......  திருமந்திரம் 


 சிவபெருமானை அன்றி வேறு பெருந்தெய்வம் உலகில் இல்லை. முத்திக்கடவுள் என்று இவருக்கு ஒர் பெயரும் உண்டு. இவரைத்தவிர ேவறு யாராலும் பிறப்பை அறுக்க முடியாது என்கிறார் திருமூலர்.

  இவரை வழிபடுவதால் நாம் அடையும் பலன்கள்

 1. இம்மண்ணில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்

 2. சிவனுலகு அடைந்து இன்பமாய் வாழ்வர்.

 3. மனச்சோர்வு அடையார்.

  4. பசியால் வருத்தப்பட மாட்டார்கள்

  5. நோயால் வருந்த மாட்டார்கள்.

     இந்த உண்மைகள் எல்லாம் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு  சொன்னால் கேட்க மாட்டார்கள் என்கிறார் அப்பர் அடிகள்.

  பஞ்சு மென்மையானது அதனை தண்ணீரில் போட்டால் ஈர்த்துக் கொள்ளும் , கல்லை தண்ணீரில் போட்டால நீரை ஈர்க்காது. அதைப் போல கல்போன்ற மனம் உடையவர்களுக்கு உண்மைகள் புகா.

 பாறையில் விதை விதைத்தால் முளைக்காது. கல்மனம் உடையவர்கள் மனத்தில் சிவ பெருமானரை பற்றி மேற் கூறிய உயர்ந்த உண்மைகள் நிற்காது. இவர்கள் செத்து செத்து பிறக்கும் சிறு தெய்வங்களையே வழிபடுபவர்கள் என்கிறார் நாவரசர் அப்பர் அடிகள்.

திருச்சிற்றம்பலம்

(நன்றி தமிழ் வேதம்)


பண்டார சாத்திரங் காட்டும் தச காரியம்


 பண்டார சாத்திரங் காட்டும் தச காரியம்

  சிவபுண்ணியங்களாகிய சரியை, கிரியை, யோகங்களை முற்றவித்தால் அவற்றின் பயனாக இருவினை ஒப்பு, மலபரிபாகம் நிகழ்ந்து, சக்திநிபாதம் உண்டாகும். சக்தி நிபாதம் ஏற்படும் போது அது காணும் திரோதன சக்தியாய் விளங்கிவந்த சிவ சக்தி அந் நிலையினின்று நீங்கி கருணை நிறைந்த அருட் சத்தியாக விளங்கும்.

   சிவாகம அறிஞர்கள் பொருள்களை பதி, பசு, பாசம் என்று மூன்றாக சொல்வார்கள்.  அவற்றினுள் பசுவாகிய ஆன்மா பாசத்தையோ, அல்லது பதியையோ சார்ந்து விளங்குமே அன்றி தன்மயமாக தனித்து விளங்கும் திறன்அற்றது. ஆன்மாவானது பாசத்தை சார்ந்த போது பாசமாகவும், பதியை சார்ந்தபோது பதியாகவும், விளங்கினாலும், பாசத்தை சார்ந்தபோது அந்த பாசமாகிய ஆணவ மலத்தால் மறைப்புண்டு நுணுகி கிடக்கும். பதி அருளால் மாயையின் சார்பற்று வினைக்கீடாய் பிறவிகளில் செல்லும். இத்துன்பத்தினின்றும் நீங்கும் பொருட்டு பதிக்கு கீழான கதி என்று மதிக்கத்தக்க அவத்தைகளை பத்தாக (தச காரியம் ) கூறப்படுகிறது.

 இந்த பத்து அவத்தை (படிநிலை) யே தசகாரியம் என்படும். தச (பத்து) காரியம் (நிலை) அந்த தச காரியங்களாவன;

  1.தத்துவ ரூபம், 2, தத்துவ தரிசனம், 3. தத்துவ சுத்தி

 4. ஆன்ம ரூபம், 5. ஆன்ம தரிசனம்,  6. ஆன்ம சுத்தி

 7. சிவரூபம்,  8. சிவ தரிசனம், 9. சிவயோகம், 10. சிவபோகம் என்பன

    பாசக் கருவியாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் பகுத்தறிந்து தனித்தனியே அவற்றின் தொழிலை அறிதல் - தத்துவ ரூபம்,

   ஆராய்ந்தால் அத்தத்துவங்களுக்கு ஒரு செயலும் இல்லை என உணர்தல் /  தத்துதரிசனம்

   அறிவுடைய ஆன்மா இவற்றின் இயலாமையையும் உணர்ந்து, தத்துவங்களில் பற்றற்று  நிற்றல் -  தத்துவ சுத்தி

  மலவலிகுன்றி ஆன்மா தன்னறிவாய் விளங்கி, முப்பொருள் உண்டென தோன்றும் நலையே - ஆன்ம ரூபம்

  திருவருள் விளக்கம் பெறுவதே தன்னறிவு என ஆன்மாவாகிய உன்னை உள்ளவாறு அறிதல் - ஆன்ம தரிசனம்.

  திருவருளை நினைந்து அதுவே எப்போதும்துணை நின்று காட்டுவது என தெளிந்து அருளில் அழுந்துதல்  - ஆன்ம சுத்தி

  ஆன்மா மூன்று விதமான ஞானங்களுள் ஆராய்ந்து மேலானதாக விளங்கும் சிவஞானத்தை உணர்ந்து நிற்றல் - சிவரூபம்

  சிவஞானத்தை உணர்ந்த அதன் வாயிலாக சிவமாகிய தன்னை ஆன்மாவுக்கு காட்டி நிற்றல் - சிவ தரிசனம்

  அவ்வான்மா மல வாதனையால் விளையும் பேத ஞானம் (திரிபுர உணர்வு) காணாதவாறு தன்னையே உணர்த்தி நிற்றல் - சிவயோகம்,

  சிவபோகத்தினை சிவம் காட்டும் உபகாரம், காணும்உபகாரம் எனும் இரண்டும் செய்து விளைவித்து நிற்றல் - சிவபோகம்.

 ( ஆன்மாவின் கண்போல காட்சியை காட்டி, அக்கண்ணோடு உடன  இயந்து காண்பது போல)

  ஞான ஒளிமயமான ஞாதிருவே திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த ஆசாரிய மூர்த்தி  உபதேசித்து அருளிய இப் பத்து அவத்தைகளையும் ஆன்மா தெளிவாக அறிந்து கொள்ளல்

  இவ்வாறு தசகாரியங்களையும் பயின்று மெய் பொருளாகிய சிவத்தினை பெற்றோர் இப்பிறப்பிலேயே பரமுத்தி அடைந்திடுவர். சாதனைகளில் நின்று வருவோர் உடல் பிரியும் காலத்தி்ல் முக்தி எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; தட்சினாமூர்த்தி தேசிகர் அருளிய தசகாரியம் பாடல் 4- 10

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

பாவங்கள் தீர ......... நல்வினைகள் செய்தல்.

 பாவங்கள் தீர ......... நல்வினைகள் செய்தல்.






நாம் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை செய்திருந்தாலும் அவற்றை தவறு என உணர்ந்து அவற்றிலிருந்து உய்வடையும் பொருட்டு நல்வினைகளை செய்தால், இனிமேல் தீவினைகள் நம்மை பாதிக்காமலிருக்க செய்யவேண்டிய பணிகள் பற்றி சற்று சிந்திப்போம்.

 1, சிவாலய திருப்பணி செய்தல்;  சிவபெருமானார் எழுந்தருளியுள்ளசிவாலங்களைப் புதுப்பித்தல், மிக மேலான நல்வினை- புண்ணியச் செயல் ஆகும். பூசையில்லாமல் விடப்பட்டதும், சிதலமடைந்துமான சிவலாயங்களைத் திருப்பணி செய்து, பூசைகள் நடைபெற வழிவகுத்து கொடுத்தல் தலையாய நல்வினையாகும். இதனை வலியுறுத்திய 11ம் திருமுறை பாடல் வரிகள்

 காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்ல வண்ணம்

 பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டு

பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீீர் 

  வணீர் எளிதோ மருதப்பிரான்கழல் மேவுதற்கே  ,,, பட்டிணத்தடிகள் 

   சிவபெருமானுடைய திருவருளை பெறுவதற்கு கீழ் காணும் ஐந்து நல்வினைகளை- புண்ணிய செயல்ளை செய்ய வேண்டும் என்கிறார் கடவுள் நிலையறிந்த பட்டிணத்தடிகள்

  1. திருஐந்தெழுத்தை / சிவாயநம / ஓதுதல்

 2, சிவலாய திருப்பணிகளைச் ெசய்தல்

 3. சிவபெருமானுடைய திருப்புகழைப்பேசி மகிழ°தல்

 4, உருத்திராக்கம் அணிந்து கொள்ளல்

 5, உடலில் திருவெண்ணீறுஅணிந்து மகிழ்தல்

2, சிவாலயத்தை தூய்மை செய்தல்

    சிவாலயங்களை பெருக்குதல், மெழுகிடல், தேவையற்ற மரம் செடிகளை காெடிகளைட அகற்றி தூய்மை செய்தல்.அன்று மலர்ந்த மலர்களை கொய்து மலை கட்டுதல், புகழ்ந்து பாடதல், தலையால் வணங்குதல், இதனை கூறும் பாடல்

   நிலைபெறுமாறு எண்ணுதியேல்நெஞ்சே நீவா

  நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்

  புலர்வதன்முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு

 பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி

  தலையாரக் கும்பிட்டு கூத்துமாடி

சங்கரா சயபோற்றி போற்றியென்றும்

 அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்

 ஆரூரா என்றென்றே அலறா நில்லே  ...... அப்படிரடிகள் தேவாரம் 6ம்திருமுறை

3, மலர் தொண்டு செய்தல்

    மேலே உள்ள பாட்டில் கண்டவாறு அனுதினமும் அன்று மலர்ந்த பூக்களை பறித்து மாலை ஆக்கி சமர்பித்தல்

4, இறை நாமத்தை சிந்தித்தல்

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர்

  காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்  என்றார் திருஞானசம்பந்தர்

 நானேயாே தவம் செய்தேன் சிவா நம எனப் பெற்றேன்   என்றார் மணிவாசகர்

  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே ..4ம் திருமுறையில் அப்பர் அடிகள்

    நம்முடைய தீவினைகளை நீக்கி நல்வினை பெருகுவதற்கு இறைவருடைய திரு நாமத்தை சிந்தித்தல் / செபித்தல்/ அவசியமாகும். இதற்கென பெருஞ்செலவு செய்ய வேண்டியதில்லை. எளிய வழியும் இது எனலாம்.

 5, சிவாலங்கள் யாத்திரை செய்தல்

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அங்குள்ள மூர்த்தியினை நேரில் வணங்கி வழிபாட்டால்  சிவஆகமங்களில் கூறிய மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற வாறு சிவ தரிசனம் செய்து வினைகளை நீக்கி புண்ணியம் பெறலாம்

 6, சிவாலயத்ததில் விளக்கேற்றுதல்

  நமிநந்தி அடிகள், கலிய நாயனா் , கணம்புல்லர் ஆகியோர் சிவாலயத்தில் தொடர்ந்து விளக்கேற்றி நற்பேறு பெற்றதை பெரியபுராணத்தால் அறியலாம். விளக்கேற்றலுடன் இறைவனுக்க நறும் புகையிட்டும் கலய நாயனார் போல் தொண்டு செய்து புண்ணியங்களை பெறலாம்.,

 7, திருமுறைகளை பாராயணம் செய்தல், மிகச் சிறந்த புண்ணிய செயல்களில் இதுவும் ஒன்று, தேவாரப்பதியங்களில் கூறிய வார்த்தைகள் சொற்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளாக போற்றப்படுகின்றன, அதுவே அவனைப்போற்றும் அருச்சனை எனவே அருச்சனையே பாட்டே ஆகும் என்றார் சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமான், இதனால் நம்முடைய பழைய வினைகள் யாவும் இல்லாது ஒழியும் என்கிறார் சம்பந்தர் பெருமான்

  ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

  திருநெறிய தமிழ்வல்லர் தொல்வினை தீர்தல் எளிதாமே,   சம்பந்தர்

 8. அடியார் தொண்டு செய்தல்

   சிவபெருமானை இடைவிடாது மனத்தி் நினைந்து வாழும் சிவனடியார்களை "நடமாடக் கோயில் " என்றார் திரமூலர், இத்தகையவர்களுக்கு தொண்டு செய்தாலும் அவரை வணங்குதலும் இறைவருக்கு செய்த தொண்டாகும். இக்கருத்தினை கூறும் புராணமே திருத்தொண்டர் புராணமான ெபரியபுராணம்.

 9. சான்றோர்களுடன் இணங்கியிருத்தல்

  புலன்களை வென்ற சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நெறியை கடைப்பிடித்தும் அவர்களிடமிருந்து வேதங்கள் புராணங்கள் சாஸ்திர நூல்களின் கருத்து கேட்டல் தெளிதல் சிந்தித்தல் நிட்டை கூடல் பலன் கிடைக்கும்.

  தானம் தர்மங்கள் செய்தல்

 ஒருவரிடம் தேவைக்கு மேல் செல்வத்தை இறைவர் அளிப்பதன்காரணம் ஏழைக்ட்கு உதவுவதற்குத்தான் இப்படி உதவினால் இறைவர் மேலும் மேலும் செல்வத்தை அளிப்பார் என்கிறார் அப்பர் அடிகள்

  இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

  கரப்பவர்தங்கட் கெல்லாம் கடும் நரகங்கள் வைத்தார்,  என்கிறார் திருவையாற்று பதிகத்தில்

  மேலும் திருமூலர் " யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி " என்கிறார்

  கொடுத்து பழகிவிட்டால் பிறர் பொருள் மீது ஆசை வராது. ஆசைதான் பாவத்தின் மூல விதை இது அழிய இதுவே வழி

  பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி என்னும் தொடரை மனத்தில் வைத்து, உலகிற்கு நலம் தரும் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்து வரவேண்டும், மறந்தும் உயிர்கட்கு தீமையை செய்தல் கூடாது,

  செல்வம் உள்ளவர்கள் மறைக்காமல் திருப்பணிகளையும், தொழுவார்க்கு வேண்டிய வசதிகளையும்,அடியார் சேவையும், ஏழைக்களுக்கு உதவுவதும் செய்யவேண்டும். இதில் கூறப்பட்டுள்ள நல்வினைகளை அன்றாடம் செய்து பாவங்களிலிருந்து விடுபட்டு இன்பமாய் வாழலாம். தேவை மன உறுதிதான், இனிவரும் பிறவிக்கும் காரணமாய் அமைந்து மேலான நிலையை அடைய உதவுபவை இப்புண்ணியச் செயல்கள்.

 திருச்சிற்றம்பலம்



வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இறைவனின் வடிவ பன்னிரு திருமுறைகள்

 இறைவனின் வடிவமாகவும் இறைவனின் சொல்லாட்சியாகவும் போற்றப்படும்



பன்னிரு திருமுறைகள் சித்தாந்த சைவகளின் வேதம் ஆகும். இதனை

திருத்தோணிமிசை மேவினார்கள்
தங்கள் திருமுன்பு தாழ்ந்துஎழுந்து நின்று
தமிழ் வேதம்பாடினார் தாளம் பெற்றார் ... என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் வாக்கு
சைவர்களுக்கே உரித்தான திருநீற்றின் பெருமை,திருவைந்தெழுத்தின் அருமையை பன்னிரு திருமுறைகளில் காணலாம்.வினைப்பயன் ஆகிய விதியின் கோரப் பிடியிலிருந்தும் நலக்கோள்களின் தாக்கத்திலிருந்தும் எப்படி விடுபடுவது என்பதைத் திருமுறை தெளிவுறுத்துகிறது.
தகைமலி தண்டமிழ் கொண்டிவை ஏத்தச்
சாரகிலா வினை தானே, திமு,1,பதி, திருப்பாசிலாச்சிரம் சம்பந்தர் தேவாரம்
உடைய தமிழ் பத்தும்உணர்வார் அவர்கள்
தொல்வினைகள் ஓல்கும் உடனே 3ம் திருமுறை
தொழுது நமனும் தன் தூதுவர்க்கு சொல்லும்
.............. பழுதிலா பக்தர்களைக்கண்டால் , பணிந்து போமின்கள் " நக்கீர தேவர்
திருமுறை தமிழர்களின் தனிச் சொத்து, அதனைப் பேணி போற்றி பயன் கொள்ள வேண்டுவது நமது கடமை.
திருமுறை சைவர்களின் வேதம்
இறைவன் கல்லாலின் புடை அமர்ந்து அருளிச் செய்த வேதங்கள் " எழுதாக்கிளவி" எனப்படும், அவற்றின் நுண்பொருளை அருளாளர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றின் பொருளை சகல வர்க்கத்து ஆன்மாக்கள் ஆகிய நாமும் அறியும் பொருட்டு அருளாளர்களாகிய சமயக்குரவர்கள் இப்பூவிலகில் அவதரிக்கச் செய்து,அவர்கள் வாயிலாக அவற்றை "எழுதுமறை" களாக இறைவன் அருளிச் செய்துள்ளான்.
எனவே திருமுறைப்பாடல்கள் அனைத்தும் இறைவன் வாக்கே ஆகும். சிவபெருமான் திருமுறை ஆசிரியர்களை அதிட்டித்து நின்று அவற்றை அருளிச் செய்திருப்பதால் அவை அருள் வாக்கு எனப்பெறுகின்றன. இவ்வுண்மையை சம்பந்த பெருமான் தன் தேவாரப்பதிக பாடல்களில் " எனதுரை தனதுரை " என்று அருள் வாக்காக அவர் பதிவு செய்துள்ளார்.
வேதங்கள் அனைத்தும் பிரணவத்துள் அடங்கும் அவ்வாறே நமது பன்னிரு திருமுறையின் முதற் பாடல் " தோடு" என்னும் சொல்லுடன் தொடங்கி , இறுதிப்பாடலி்ல் உலகெலாம் என்னும் சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து "ஓ " ம், உலகெலாம் என்பதில் உள்ள ஈற்றெழுத்து "ம்" ஆகும் ஆக ஓம் என்னும் பிரணவ மந்திர தோற்றத்தில் பன்னிரு திருமுறைகளும் ஆரம்பமாகி சைவர்களின் வேதமாக பயன்படகிறது. இதனையே சம்பந்த பெருமான் " மந்திர நல் மாமறை" என்ற வாக்காக அவர் பதிகத்தில் பதிவு செய்துள்ளார்.
திருமுறை இறைவனின் வடிவம்
இறைவன் மந்திர வடிவமாகவும் உள்ளான். திருமுறையில் உள்ள ஒவ்வெ ாரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையை திருமுறை கண்ட புராணத்தில்
" மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார் என்கிறார் உமாபதி சிவம்
திருக்கோயில்களில் உள்ள கற்படிமங்களிலும், செப்புப்படிமங்களிலும், மந்திர நியாசத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான். திருமுறைகளை படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். எனவே திருமுறை பாடல்களால் இறந்தவர்களையும் உயர்ப்பிக்கும் தன்னமை கொண்டது என்று அருளாளர்கள் நிரூபித்துள்ளார்கள்
திருக்கோயில்களில் அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் முதலிய அருச்சனைகள் நடைபெறுகின்றன. இத்தகு அருச்சனைக்குரிய மந்திரங்கள் சிவாகமங்களில் இடம்பெறவில்லை என்பதும், அவை வடமொழி வேதங்களிலிருந்து தொகுப்பட்டவை என்பதும் சிவாகம பண்டிதர்களின் ஒப்ப முடித்த கருத்தாகும்.
சிவன் கோயில்களில் திருமுறைப் பாடல்களை விண்ணப்பிப்பதே அருச்சனை ஆகும். அருச்சனை என்ற வட சொல்க்கு பொருள் வழிபாடு என்பதே ஆகும்.
இதனையே இறைவன்சுந்தரரிடம் அருளிய வாக்காக சேக்கிழாரும் குறிப்பிடுகிறார்.
"அர்ச்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக" என்பதால் அறியலாம்.
திருமுறைகளின் பெருமைகள்
திருமுறைப்படாலில் உள்ள சொற்கள் சிவபெருமான் திருவாக்குகளே ஆகும்.எனவே அவை இறந்தாரையும் எழுப்பும் தகைமை வாய்ந்தன, ஊழ்வினையை மாற்றும் பெற்றிமை பெற்றுள்ளன,வீடுபேற்றை வழங்கும்திறன் திருமுறைகள் கொண்டவை.
சிவச் சின்னங்களான திருநீறு உத்திராட்சம் திருமந்திரம் மந்திரமாகவும் மருந்தாகவும் பயன்பாட்டில் உள்ளவனவாகும்
திருமுறைகளில் உள்ள சொற்கள் அடைத்த கதவை திறக்கவும், மூடவும், பின் ஏட்டினை ஆற்றில் எதிர்க்கும் சக்தியும் அனலி் எரியாத தன்மையினையும், அதன் மந்திிர சொற்கள் நோயினை விரட்ட மருந்தாகவும், வினை நீக்கத்திற்கு பரிகாரமாகவும், வீடுபேற்றுக்கு வழிகாட்டும் துணைவனாகவும் விளங்குகின்றன.கொடியவர்களும், கொலைகார்களும் கூடத் திருமுறை ஓதினால் நல்லவர்களாக மாறுவது திண்ணம். சிவ சம்பந்தத்தை தருவது திருமுறையின் அருமை பெருமைகளுக்கு அளவேஇல்லை.
திருச்சிற்றம்பலம்