வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நலம் தரும் நவராத்திரி விழா!


 
கில உலகத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றும் ஒப்பற்ற விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'நவம்' என்ற சொல்லுக்கு ஒன்பது என்று அர்த்தம். பெரும்பாலான கோவில்களில் இந்த ஒன்பது நவகிரகங்கள் அருள்பாளிக்கும். இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். இவையும் இந்த நன்நாளில் சிறப்பு பெருகின்றன. 
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும். ஆனால் இந்த ஆண்டு ஒன்பது நாட்களோடு இன்னும் இரண்டு நாட்கள் சேர்ந்து நவராத்திரியை சிறப்பாக்குகிறது. ஆம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படவிருக்கிறது. 
நவராத்திரி நாட்களில், ஒவ்வொரு நாட்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக, பெண் குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும். குழந்தைகள் முதல் மூதாட்டி வரையான பெண்களை அம்பாளாகவே கண்டு வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பத்து நாட்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விழாவாக நவராத்திரி இருப்பதால், வீட்டை அழகுபட அலங்கரிக்க வேண்டும். பலவித பொம்மைகளால் கொலு அமைத்து, விரதம் இருந்து, வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்களுக்கு தகுந்த உபசரிப்பு செய்து, அவர்களை மகிழ்விக்கிறோம். இதனால், முப்பெருந்தேவியரும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள் என்றும், அவர்களின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை.  
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.
அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள். 
ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள்,  திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது  விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் தாத்பரியம்

திருச்சிற் ற மபலம் 

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!

ஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர். 
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். 
அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். 
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. 
மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். 
மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 
1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 
2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 
3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 
4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 
5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 
6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 
7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 
8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 
9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 
10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 
11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 
12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 
13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 
14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 
15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள் (theni Anandham SK)


சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்   (theni Anandham SK)







ஏழுர் சாலியர் சமுதாயத்தில் அவதரித்த ஸ்ரீவி. போத்தீஸ் நிறுவனத்திற்கு அடித்தபடியில் ஜவுளித்துறையில் வெற்றிகண்டவர்கள் தேனி ஆனந்தம் என்ற ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு, எஸ்கே என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஜி. நடராஜன் அவர்களும் மற்றும் அதன் பங்குதாரர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் ஆகிய எம் மண்ணின் மைந்தர்களானவர்கள் தான் சிகரம் தொட்ட நம் மண்ணின் மைந்தர்கள்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி தாலுகா, சுந்தரபாண்டியத்தை சிறப்பு செய்யும் திரு நடராஜன் அவர்கள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தாலும், இளவயதிலேயே வேளாண்மையிலும், வணிகத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என கொண்டு எத் தொழிலையும் சிறப்புடன் நடத்தும் பாங்கு அவருக்கு உண்டு, கல்வியிலும் எம். காம் படித்து அரசு வேலை வாய்ப்பிற்கு செல்லாமல் வணித்தில் நாட்டம் கொண்டு அவர்களுடைய மளிகைக்கடை, சுந்தரமகாலிங்கம் எண்டர்பிரைசஸ் என்ற உரக்கடை மற்றும் கற்பகம் டெக்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவத்தினை அவர்களின் கூட்டுக் குடும்பத்துடன் சிறப்புடன் நடத்தி வெற்றிபெற்ற அனுபவம் கொண்டவர். எத்தொழில் செய்தாலும் அதில் ஒரு முத்திரை பதிக்கும் திறன் கொண்டவர் எஸ்கே. அவர்கள். உரக்கடை நடத்தும் போதும் சரி ஜவுளி வியாபாரத்திலும் சரி வாடிக்கையாளர்களை கவரும் மனப்பாங்கு அவருடைய தனி சிறப்பு, உரக்கடையில் வேளாண்மருந்து, உரம் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடை திருப்தியே தனது திருப்தி என்று செயல்படும் தன்மை கொண்டவர் , வியாபாரம் முக்கியமல்ல என்பதை நன்கு உணர்ந்தவர், இதற்காக வேளாண் துறை அலுவலர்களிடம் தானே பயிற்சி கொண்டு செயல்படுவது அவரின் தனி சிறப்பு, இத்தன்மை கொண்டதால்தான் திரைகடல் ஒடி திரவியம் காண்பதுபோல் தேனி தனக்கு வியாபார தலமாக கொண்டு தேர்வு செய்து, தேனி ஆனந்தம் என்ற பட்டு ஜவுளி ஸ்தாபனம் அமைத்து முதல் சிகரம் தொட்டார்,

இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தனது மைத்துனர்களான தர்மராஜ் மற்றும் செல்வராஜ் அவர்கள்தான், இவர்கள் இருவரும் அந் நிறுவனத்தின் தூண்காளாக இருந்து தோள் கொடுத்தவர்கள்.

    தேனியில் வளர்ச்சி கண்டபோது தினமலர் நாளிதழ் க்கு பேட்டி கொடுத்த செய்தியையும் இங்கு வைத்துள்ளேன், அவர் அந்நாளில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கைத்தறி தொழில் நலிவுற்றபோது அரசு கஞ்சித்தொட்டியில் கஞ்சிவாங்கிக் குடித்த அனுபவத்தையும் காட்டியுள்ளார். தேனி நகரில் வளர்ச்சி கண்டபோது புதிய ஜவுளி ஷோரூம் திறப்பு விழாவிற்கு அமைச்சரர் திருமிகு பன்னீர்செல்வம் திறந்து சிறப்பு பெற்றதையும் காணலாம்,


அவரின் வளர்ச்சி சாலியர் சமுதாயத்தினரின் போத்தீஸ் நிறுவனத்திற்கு அடுத்த படிக்கல்லாக சிகரம் தொட்டு வருகிறார் என்பது மிகையாகாது, அதன் அடிப்படையில்தான் தற்போது காணும் திண்டுக்கல் புது ஜவுளி மாளிகை திறப்பு விழா



 வளரட்டும் அவ்வணிய வளாகம், அதன் அடிப்படையில் உயரட்டும் வேலை வாய்ப்பும் அதனைச்சார்ந்த சமுதாய வளர்ச்சியும்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்



திங்கள், 26 செப்டம்பர், 2016

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் நவராத்திரி கொலு பூசை விழா

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் நவராத்திரி கொலு பூசை விழா

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்

பிரதோஷ பூஜைக்கு சிறப்புபெற்ற தலம் திருக்கடம்பூர்


இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி பெயர்:
 
ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி
எப்படிப் போவது?
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில், சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழக்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மீ. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்துக்குச் செல்லலாம்.
ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,
மேலக்கடம்பூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 304.
இவ்வாலயம், காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பிரதோஷ பூஜை
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபடுவதும், அவரது வாகனமான நந்திதேவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்துகொள்வதும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்புபெற்றது. இந்தச் சிறப்புக்குக் காரணமானவர், இவ்வாலயத்தில் உள்ள ரிஷபதாண்டவமூர்த்தி உற்சவர்.

பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே இந்த உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். இந்த உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாம் காண இயலாது.

தல வரலாறு
பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச் சென்றனர். இதைக் கண்ட விநாயகர், தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதக் கலசத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர், சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி, சிவனை இந்திரன் வேண்ட, அவர் இந்திரனுக்கு அமுதக் கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். சிவனும் அங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.

 
இந்திரனின் தாய் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது, விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், தேர்ச்சக்கரத்தை விநாயகர் தன் காலால் மிதித்துக்கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்தின், இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்குக் காட்சி கொடுத்து "தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி" இங்கு வந்து தன்னை வணங்கும்படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
கோவில் அமைப்பு
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது.
அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரம் இல்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன.
கருவறை, தேர்ச் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம் அவசியம் வர வேண்டும். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும்போது, விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறையின் பின்பக்கச் சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார்.
கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர், நந்தியுடன் இருக்க, அவருக்குக் கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன் தொடை மீது இருத்தி, ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
ரிஷபதாண்டவமூர்த்தி
இத்தலத்தில், நந்தி மீது நடனமாடிய கோலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி  10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்கமுடியும். இவருக்குக் கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.

ஆரவார விநாயகர்

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர்ச் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்தப் பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் மற்ற சிறப்புகள்
  • சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம்.
    கடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலம்.
  • ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம்.
  • கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான்.
  • அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.
  • அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம்.
  • கடம்பவன தலமாதலால், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
  • காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி.
  • சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை.
  • அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலம்.
  • ஸ்ரீ முருகப்பெருமான், சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம்.
     
பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சுவாமி மீது சந்திர ஒளி விழுவதும் சிறப்பு.
ஒரு பிரதோஷ நாளில் திருக்கடம்பூர் சென்று பிரதோஷ கால பூஜையில் கலந்துகொண்டு ரிஷபதாண்டவமூர்த்தி தரிசனம் செய்யுங்கள்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

திருவண்ணாமலை கிரிவலம்... அது தருமே உயிர்பலம்!

திருவண்ணாமலை கிரிவலம்... அது தருமே உயிர்பலம்!

முக்தி தரும் சிவத்தலங்கள்
காசியில் இறக்க முக்தி
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
திரு அண்ணாமலையில் நினைக்க முக்தி

இவைகளி்ல் எளியவழியில் முக்தி பெற வழிகொடுக்கும் தலம் அண்ணாமலை

திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம்.  இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர்.  இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,

‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்

வெண்பாப் பயிராய் விளையுமலை,’

எனக்கூறினார்.

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்   கிரிவலம் வருவது  வாடிக்கை. முழு நிலவொளியில் ஈசனை மனதில் நிறுத்தி, 'அருணாச்சலேஸ்வரா' என்று முணுமுணுத்தவாறே வருவதில் உள்ள சுகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். கிரிவலம் செல்லும்போது வழியில், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கும். 
 சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்துப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இறுதியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலம்தான் திருவண்ணாமலை.
கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில்தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகின்றது.

திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்கு பக்தர்கள் அவரவரது தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம்.


மலை முழுவதுமே அருணாச்சலேஸ்வரரே வியாபித்திருக்கிறார் என்பதால், ,கிரிவலம் முடித்ததும் சுவாமி தரிசனம் செய்யத் தேவையில்லை. இதனால், பலர் முதல் நாளே அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவார்கள். கிரிவலப்பாதை முழுவதும் 400 ரூபாயிலிருந்து குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன.



கிரிவலம் செல்லும்போது கால்களில் செருப்பு இல்லாமல், செல்வது நல்லது. மலை முழுவதும் ஒவ்வொரு அடியிலும் பல நூறு லிங்கங்கள் பதிந்து இருப்பதாக ஒரு நம்பிக்கை உலவுகிறது. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.
கிரிவலம் வரும்போது நண்பர்களுடனோ குழுவாகவோ வந்தாலும் தேவையற்ற வீண் பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் ஆகியவற்றை தவிர்த்து சிவாய நமவென ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறே நம் பயணத்தைப் பூர்த்திசெய்வது நல்லது. 
கிரிவலப் பாதையில் நடக்கும்போதே நமக்கும் இறைவனுக்குமான (ஆத்ம நிவேதனம்) உரையாடல் தொடங்கிவிடும். மனம் ஒடுங்குதலாகி, ‘நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப்போகின்றோம்?’ என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழத் தொடங்கிவிடும். அந்த சிந்தனைகள் நம் மனத்தை சுத்தம் செய்து நமக்கான வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக்கி விடும். 
கிரிவலம் உடல், மனம் இரண்டுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும். தேக பலமும் தெய்வ பலமும் ஒன்றாகி நமக்கு உயிர் பலம் தந்திடும்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு ° வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 19 செப்டம்பர், 2016

திருநாமத்தின் மகிமை


திருநாமத்தின் மகிமை
இறைவனும் அவனுடைய திருநாமமும் வெவ்வேறல்ல, திருநாமம் என்பதே இறைவன்தான். இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பியவுடன் உள்ளம் இறைவனின் சன்னதியாகி விடுகிறது. நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த அவருடைய திருநாமத்தை இடையாமல் நினைவு கூர்வது எளிமையான வழி. திருநாமத்தின் மீது உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறிக்கு கூட்டு விப்பது திருநாமம். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமக்கு நன்னறிக்கு உய்ப்பதும், வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவதும் நாதன் நாமம் நமசிவாயவே " என்கிறார் திரு ஞானசம்பந்தர். அது நான்கு வேதங்களின் உண்மை பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானரின் திருநாமமான நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இம் மந்திரம் அனைத்து உயிர்களின் துன்பங்களையும் சொன்ன மாத்திரத்தில் நீக்கவல்ல அற்புத மந்திரமாகும் என்கிறார் சம்பந்தர். 
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கே என்கிறார் மாணிக்க வாசகர். இம்மந்திரத்தை பொருள் உணர்ந்தோ அல்லது உணராமலோ எப்படி சொல்லினும் உயர்வு உறுதி. அவர் திருநாமம் ஒருவனை ஆன்மீக வாழ்வின் உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திரு நாமத்தின் சக்தி வெல்ல முடியாது.மனதில் திருநாமம் நிறையும் போது மனம் பணிவு, இறக்கம், இளக்கம் மடையும் நிலை ஏற்படுகிறது. நாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திரு நாமதத்தில் தஞ்சம் அடைவதால் பல அதிசயங்கள் ஆற்ற முடியும். நீங்கள் எந்த இனம் , சாதி கொள்கை கொண்டவராயினும், இறைவனின் திருநாமத்தின் இனிய உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆத்மா தூய்மை அடைவதோடு யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும், அன்பினாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி , திருநாமம் ஓதும் பழக்கத்தால் ஆசா பாசங்களில் அலையும் மனது கட்டுப்படும் திருநாமத்துடன் தியானம் செய்யும் போது முகமும் உடலும் ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசிக்கும். இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்லமுடியாவிட்டாலும், காலையில் தூங்கி எழும்போதும், இரவில் படுக்குக் செல்லும் போதும் மற்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிவந்தாலே இறைவன் அருள் பெறமுடியும் என்பது உறுதி, பிறந்த பிறப்பின் மகிமை அடைய நாவுக்கரசர் பெருமான் இவ்வாறு கூறுகிறார். " திருநாமம் ஐந்தெழுத்தை செப்பாராகில், தீவண்ணர் திரம்ஓருகாலும் பேசாராகில் ஒருகாலும் திருக்கோவில் செல்லராகில், உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகின், அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் பெருநோய்கள் மிகநலிய வந்து செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே " என்கிறார். எனவே பிறந்த பிறப்பின் பயன் பெற திருநாமத்தை கூறி பயன் பெற்று வீடு பேறு அடைவோம், 
"ஓம் நமசிவாய"
தொகுப்பு : வை. பூமாலை சுந்தரபாண்டியம்

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில் "சில முத்துக்கள்" `மங்கலம்-அமங்கலம்’


கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில் "சில முத்துக்கள்" 
`மங்கலம்-அமங்கலம்’

`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.

நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது.சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.

மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

திருமணத்தில் மாங்கல்யம் கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?

ஏதாவது ஒரு மூலையில், யாரோ யாரையோ, `நீ நாசமாய்ப் போக’ என்றோ, `உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும்.

அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக் கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.

இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது.


நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.

மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?

ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?

எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.

மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.

`சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் `வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

`வலம்’ என்பது `நாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது.

`வலியோம், வல்லோம், வல்லம், வலம்’

இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை.

தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள் இந்துக்கள்.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது, `போய் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே.

அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும் போது, “போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டியதாயிருக்காது” என்று நம்பிக்கைட்டுவதாகும்.

மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?

உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள்,

இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாக விரியும்.

மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் `பதினாறும் பெற வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகள், விழுது விட்டு விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்!

ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான்.

இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கலவழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள்.

`கணவரின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.

யாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் `வாழ்க’ என்பார்கள்.

`தும்மினேனாக வழுத்தினாள்’ என்றான் வள்ளுவன்.

தும்மும் போது சிலர் `நூறு வயது’ என்பார்கள்.

எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் `இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.`நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள்.

தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, `அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். `வளர்த்து விடு’ என்பார்கள்.

வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதைக் குறிக்கும் போது `சிவலோகப் பதவியடைந்தார்; பரலோகப் பிராப்தியடைந்தார்’ என்பார்கள்.

பெண் ருதுவாவதைப் `பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.

அதாவது `பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள்’ என்பது அதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை `சாந்தி முகூர்த்தம்’ என்பார்கள்.

“காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.

இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.

நான் சொல்லுவது சராசரி இந்துக்களை.

ஆத்திரக்காரர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல.

நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் `வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில் `வாவரசி’ என்பார்கள்.

பெரும்பாலான இந்து சமூகங்களில் `கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணியவேண்டும்’ என்று விதிவகுத்து வைத்திருப்பது ஏன்?

`இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும் `தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும்.

ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே.

அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன.

“இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைப்பதன் நோக்கம்.

வாழாமல் இறந்துபோன குழந்தைகளை, வாலிபர்களை,கன்னிப்பெண்களை, இந்துக்கள் புதைக்கிறார்கள்.
கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள்.

வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதியடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள்?

“ஆறுபோல உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்கே.

இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள்.

அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள்.

இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும்.

மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும்.

அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், `அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்லுவது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்.

“பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”

என்றான் வள்ளுவன்.

உலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது.

நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.

திங்கள், 5 செப்டம்பர், 2016

வெற்றி தரும் விநாயகரின் 16 வடிவங்கள்

வெற்றி தரும் விநாயகரின் 16 வடிவங்கள்

வெற்றி தரும் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதன் மூலம் சிறப்பான பலன்கள் நம் வாழ்வில் உண்டாகும்.

1. பாலகணபதி: 

மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

2. தருண கணபதி: 

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக் கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி: 

தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் 
காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறைவழிபாடு உபாசனை நன்கு அமையும்.

4. வீர கணபதி: 

தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, கோபத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி: 

பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்துார வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி: 

இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

7. சித்தி கணபதி: 

பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி 
ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

8. உச்சிஷ்ட கணபதி: 

வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

9. விக்னராஜ கணபதி: 

சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்ரம், தந்தம், நெற்கதிர், சரம் 
ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்
குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10. க்ஷிப்ர கணபதி: 

கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11. ஹேரம்ப கணபதி: 

அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடரி, இரும்பினாலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய 
ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் உண்டாகும்.

12. லட்சுமி கணபதி: 

பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு 
தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை 
வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13. மகா கணபதி: 

பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி: 

விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு 
வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15. நிருத்த கணபதி: 

மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதிரம் ஜொலிக்கும் ஆறாவது கையான துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் ஆனந்த நடனமாடும் இவர் நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

16. ஊர்த்துவ கணபதி: 

பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர்.பச்சை நிற மேனியுடன் விளங்கும் தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் 
இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை,பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி தினமலர்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

காரைக்காலம்மையார்

காரைக்காலம்மையார்


தமிழ் திருமுறையில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

காரைக்காலம்மையார் வரலாறு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `பேயார்` எனக் குறிக்கப்படுபவர் இவ்வம்மையார். இவர் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளி லும் `காரைக்கால் பேய்` என உரைப்பதால் இவர் தம் ஊர் காரைக்கால் என்பதும் பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியன ஆதலால் தன்னைப் பேய் எனக் குறித்துரைத்துள்ளார் என்பதும் அறியற் பாலனவாகும்.

பெரிய புராணத்தில்


இவர் தம் வரலாற்றைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அழகுற விரித்துரைத்துள்ளார்.

சோழவள நாட்டில் கடற்றுறைப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் பதியில் வணிகர் குலத்தில் தனதத்தன் என்பா னுக்கு அரும் பெறற் புதல்வியாய் திருமகள் போன்ற பேரழகோடு அம்மையார் தோன்றினார். 

பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். புனிதவதியார் பிறந்து மொழி பயிலும் காலத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே தெரிந்து வழிபடும் திறம் வாய்க்கப் பெற்றவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார்.

திருமணம்


நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான்.

மனைத்தக்க மாண்பு


பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.

அடியவர்க்கு அமுது


ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியால் மிக இளைத்தவராயப் புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் திருஅமுது (சோறு) மட்டும் சமைத்திருந்த நிலையில் ஏனைய கறியமுது முதலியவற்றை விரைந்து செய்தளிக்க எண்ணினார். வந்த அடியவரோ மிக்க பசியோடு இருத்தலைக் கண்ணுற்றுத் தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் திருஅமுது படைத்து மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் அடைந்தான். புனிதவதியார் இன்முகத்தோடு தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார். திரு அமுதுடன் அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் இனிய சுவையில் மயங்கியவனாய்ப் பிறிதொன்றையும் இடுவாயாக என்றான்.

அதிமதுரக்கனி


கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அவ்வளவில் இறையருளால் அவர் தம் கையகத்தே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முன்னுண்ட கனிச் சுவையின் வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார்.

மாங்கனியின் மாயம்


அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.

மறுமணம்


இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.

புனிதவதியார் சந்திப்பு


இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.

பேய் வடிவம்

சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார்.

அம்மையே வருக


பின்பு திருஇரட்டை மணிமாலை என்ற சிறு பிரபந்தத்தையும் அருளி இறைவனைப் போற்றித் திருக்கயிலையில் சிவபிரானது திருவோலக்கத்தைக் காணும் பெருவிருப்புடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டு, திருக்கயிலை மால்வரையை அடைந்தார். சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதியவராய்

தலையால் நடந்து மேல்ஏறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந் தார். இறைவனது திருவருள் நோக்கம் அம்மையார் மேற் பதிந்தது. சிவபோகத்தைத் தன் அடியவர்க்கருளும் அருட்சத்தியாகிய அம்பிகை அம்மையாரின் அன்பின் திறங்கண்டு வியந்து இறைவனை நோக்கி `எம் பெருமானே? தலையினால் நம்மை நோக்கி நடந்துவரும் இப் பெண் யார்?` என வினவ பெருமான் `இவர் அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்` எனக்கூறி `அம்மையே` என்னும் செம்மொழியால் அவரை அழைத்தருள `அப்பா` என்று சொல்லிக் கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கினார். 

இறைவன் அவரை நோக்கி `நீ நம்பால் பெறக் கருதுவது யாது?` எனக் கேட்க அம்மையார் இறைவா நீ திருநடம் புரியும்போது உன் அடி நிழற்கீழ் இருக்க வேண்டு மென வேண்டினார்.

பெருமான் `தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற் றிருப்பாயாக` என அருளினார்.

திருவடிப்பேறு

அம்மையார் கயிலைப் பெருமானிடம் விடைபெற்று தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து அண்டமுற நின்றாடும் இறைவனது திருக்கோலத்தைக் கண்டு உளம் உருகி வழிபட்டு `கொங்கை திரங்கி`, `எட்டி இலவம்` என்று தொடங்கும் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி பெருமானது தூக்கிய திருவடி நிழற்கீழ் என்றும் நீங்காது வாழும் பெருவாழ்வு பெற்றார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இவ்வரலாற்றை அழகுற விரித்துரைத்துள்ளார்.

தொகுப்பு வை,பூமாலை, சுந்தரபாண்டியம்

சனி, 3 செப்டம்பர், 2016

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி

விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்
ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர் கொடுத்து காவலுக்கு நிற்கச் சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையைத் துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையைத் துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையைத் துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்தச் சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்குப் பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்


விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.


திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

மறைஞானசம்பந்தர்

சந்தான குரவர்கள் -   மறைஞானசம்பந்தர் 
அகச்சந்தான குரவர்கள் 
1. திருநந்திதேவர்
2. சனற்குமாரர்
3. சத்தியஞான தரிசினிகள்
4. பரஞ்சோதியார் 

புறச்சந்தான குரவர்கள் 
1. மெய்கண்டர்
2. அருள் நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்
மறைஞானசம்பந்தர் / சந்தான குரவர்

குருபூசை நாள் ; 3/9/16 சனிக்கிழமை
மறைஞானசம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். சந்தான குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக விளங்கியவர். மெய்கண்ட தேவரைப் போன்று பக்குவ நிலையை எய்திய மறைஞானசம்பந்தர் சைவசித்தாந்த வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மறைஞானசம்பந்தரின் சைவப் பணிகளுள் பிரதானமானது சைவசித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்தமையாகும். தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களாகியசிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய நூல்களைக் கற்று அவை கூறும் சித்தாந்த உண்மைகளை தம் மாணக்கருக்குக் கற்பித்தார்.

மறைஞானசம்பந்தரது பெருமைகளையும், அவரது சைவ சித்தாந்தப் பணிகளையும், இவரின் சீடராகிய உமாபதி சிவாச்சாரியார் தனது நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் மட்டுமே சித்தாந்த நூல்கள் எதனையும் எழுதவில்லை. 

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்