சனி, 30 ஜூலை, 2016

வாசலில் அமீனா நிற்கிறான் (காலன் அழைப்பு)


வாசலில் அமீனா நிற்கிறான் (காலன் அழைப்பு)


தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.

காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.

அதைப் பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்:

“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”

தமிழர் பதில் சொன்னார்:

“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகி விடுகிறது”.

ஆங்கிலேயர் திகைத்துப் போனார்.

அன்று முதல் இந்துமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

இன்றும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.

`யாக்கை நிலையாமையை’ இந்துசமய தத்துவஞானிகள் அடிக்கடிக் கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

`விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்

சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்…’

என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே.

இந்த ஞானம், ஒவ்வொரு சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.

ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும்போது, “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.

அதையே `மயான வைராக்கியம்’ என்பார்கள்.

“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.

`பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே, நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே’ என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.

`இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.

இந்த உடல் இலவசமாகக் கொடுத்த பரிசு.

தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபகக் கடிதம்.

`நீ கையெழுத்துப்போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது.

கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.

உன் உயிரை நான் ஜப்தி செய்யப் போகிறேன்”.

என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.

உயிரை ஜப்தி செய்தவற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும் ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.

அந்த அமீனாவுக்கு `யமன்’ என்றும், `கூற்றுவன்’ என்றும் பெயர் கொடுத்தார்கள்.

உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில் நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.

சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.

அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு ஒருவழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச்செய்வது, இந்துசமயவாதிகளின் நோக்கங் களில் ஒன்றாகும்.

எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!

மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!

செத்தாரைப் போலத் திரி!
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ
நெஞ்சகமே!

வைப்பிருக்க வாயில்
மனைஇருக்கச் சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச் செத்துக் கொட்டக்
கண்டு!

ஒன்பதுவாய்த் தோல்பைக்கு
ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே
அலைந்தாயே!

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

எத்தனைநாள் கூடி
எடுத்த சரீரம் இவை!

ஒருத்தருக்கும் தீங்கினை
யுன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!  

இவை பட்டினத்தார் பாடல்கள்.

காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.

“செத்தாரைப் போலே திரி”, என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.

அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப் படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத் தக்கது.

வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.

முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.

இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.

மூன்றாவது சங்கு மரணத்திற்குப் பிறகு ஊதப்படுகிறது.

அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.

`சங்கம்’ என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும்; சங்கமம் ஆவதையும் குறிக்கும்.

`முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால் கொடுப்பதைக் குறிக்கிறது.

`மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாவதைக் குறிக்கிறது.

`கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாவதைக் குறிக்கிறது.

“இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.

`இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோமாம்.

`நாயும் நரியும், பேயும் கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப் போகிறோம்’ என்று காத்துக் கொண்டிருக்கின்றனவாம்!

நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்; எவ்வளவு வருணனைகள்!

இந்த உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்?

அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.

கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசை தோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.

அதனால்தான் இந்துக்கள், பிற மதத்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.

இந்த உடம்புக்கான தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.

புதைபட்ட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.

எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.

இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.

தங்களைத் தாங்களே சரிபார்த்துக் கொள்ள நமது தத்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.

“அமீனா வாசலில் நிற்கிறான்”.

“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 29 ஜூலை, 2016

வருகிறது ஆடி அமாவாசை

வருகிறது ஆடி அமாவாசை


பித்துருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டிய தருணம்
ஏற்ற இடங்கள்
இராமேஸ்வரம், பாபநாசம்,காவேரி ஆற்றங்கரை கோவில்கள், கடல்கரை சிவன்கோவில்கள், 


தர்பணம் செய்யும் முன் ஏற்படும் சந்தேசங்களுக்கு விடை இதோ !

கேள்வியும் பதிலும் --25 (தர்ப்பணம் )

1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ?
2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ?
3.முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ?
4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?

ஒரு அன்பரின் கேள்விகள் இது .....

நம்முடைய சமய நூலில் குறிப்பாக கருட புராணம் என்னும் நூலில் இதை பற்றி தெளிவாக சொல்லபட்டு இருக்கிறது.

விண்ணில் உள்ள சூரியன் பூமியில் உள்ள குளத்து நீரில் தெரியும் ,
இதை போல 3 குவளையில் நீர் ஊற்றி வெளியில் வைத்தால் எல்லா
குவளையிலும் சூரிய ஒளி தென்படும் ,
இது போல 
ஒரு ஆண்மகனின் ஆன்மாவில் உண்டான ஒன்று மேற்பட்ட ஆன்மாகளும் தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும்,
அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் 
தரவேண்டும் ......(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும் )

பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் 
பெண்கள் திதி தரவேண்டும் ,பிறகு வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .

தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும் ,
அவர் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும் ,
தந்தை இறந்த பிறகு இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

தாய்க்கு தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது ,
தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு ,மறுமுறை 
தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் ,தனியாக படையல் பூசை போடலாம் என்று நூல்கள் சொல்கிறது .....

திதி வேறு படையல் பூசை வேறு குழப்ப வேண்டாம் ....

திதிகள் கொடுப்பது நம் வம்சத்தினருக்கு ஆரோக்கியம் ,நல்ல வாழ்க்கை ,மேலும் 
பல பிரச்சனைகளில் நமக்கு விலக்கு அளித்து விடும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்..

நன்றி ....

அகத்தியர் 
புஜெந்தர் ஆசிகளுடன் ..

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

புண்ணியத்தை சேர்க்கும் ஆடி அமாவாசை

புண்ணியத்தை சேர்க்கும் ஆடி அமாவாசை


விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது. 

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும். 

அமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளை களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். 

சூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீ வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும். 

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 


‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர் களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்த மட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள். 

சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது. 

ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். 

நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை போட்டு, அவர் களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

விரதம் இருப்பது எப்படி? 
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும். 

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். 

ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

புதன், 27 ஜூலை, 2016

நான் யார்?- ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!
உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில், காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர், அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர்.


அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார்.

எதிரில் வந்தவர், 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் பிரம்மம். இந்தப் பிரபஞ்சமும் பிரம்மம். தூய உணர்வுதான் இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் அறியாமையினால் நான் பொருட்களைப் பிரம்மம் அல்லாததாகக் கருதுகிறேன். பேரானந்தமான, அழிவில்லாத, தூயவடிவமான பிரம்மம்தான் எங்கும் நிறைந்துள்ளது என்று யாருக்கு உறுதியான ஞானம் உள்ளதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்வாக கருதப்படுபவரோ அவரே என் குரு என்பதில் நான் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

எந்தப் பேரானந்தக் கடலின் சிறு துளியினாலேயே இந்திரன் போன்ற தேவர்கள் திருப்தி அடைகிறார்களோ, முற்றிலும் அமைதியான மனதை அடைந்து முனிவர்கள் நிறைவு பெறுகிறார்களோ, அந்த அழிவற்ற பேரானந்தக் கடலில் ஒன்றுபட்டவரே பிரம்மத்தை உணர்ந்தவர் ஆவார். அவரே பிரம்மமும் ஆவார். அவர் யாராக இருந்தாலும் சரி, இந்திரனால் பூஜிக்கப்பட வேண்டிய பாதங்களை உடையவர் என்பதும், அவரே என்னுடைய குரு என்பதும் என்னுடைய உறுதியான நம்பிக்கை.
திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவாய ஓம்
தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

செவ்வாய், 26 ஜூலை, 2016

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து












வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த ‏இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக ‏இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பி‎ன்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவெ‎‎ன்று ஆகமங்கள் பறைசாற்றுகி‎ன்றன.
   வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவின‎ன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் ‏இல்லை எ‎‎ன்றும் ஆகமங்கள் கூறுகி‎ன்ற‎ன. ஐந்தெழுத்து மந்திரந்தா‎ன் யாது ? அது ந‎கார‎ம், மகாரம், சிகாரம் வகாரம் யகாரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியது. ‏‏இது பெரும்பாலும் மேற்குறித்த ஆகமநூல்களில் காணப்படுவது; ஆ‏யினும் அகாரம், உகாரம் மகாரம் பிந்து நாதம் ஆகியன அடங்கிய ஐந்தெழுத்து மந்திரத்தையும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். ‏‏இதற்கு ஸூக்ஷம பஞ்சாக்ஷரமந்திரமெ‎‎ன்று பெயர். சிவஞா‎னபோதம் 9 ம் சூத்திரத்தில் “எண்ணும் அஞ்செழுத்தே” எ‎ன்னும் சொற்றொடரால் குறிக்கப்படும் ஐந்தெழுத்து நம சிவாய எ‎ன்னும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும் ஓம் எ‎னப்படும் பிரணவ பஞ்சாக்ஷரத்தையும் ஹௌம் எனப்படும் பிராஸாத பஞ்சாக்ஷரத்தையும் குறிக்கும் எ‎ன்று சிவாக்கிரயோகிகள் தம்முடைய வடமொழிச் சிவஞா‎னபோதத்தி‎ன் லகுடீகை எ‎‎ன்னும் சுருக்கமான உரையில் கூறுகி‎ன்றார். எனவே பஞ்சாக்ஷர மந்திரம் மூவகையெ‎‎ன்று தெளிகிறோம்.
பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள்

ஓ முனிவரே ! மஹாதேவராகிய சிவபெருமானுக்கொப்பான கடவுள் மூவுலகிலும் இல்லை; பஞ்சாக்ஷரத்திற்கொப்பான மந்திரம் இல்லை, இல்லை.

பஞ்சாக்ஷரமே எல்லா மந்திரங்களுள்ளும் சிறந்தது; திருநீறே மருந்துகளுள் தலை சிறந்தது; மஹாதேவராகிய சிவபெருமானே எல்லா உறவினர்களுள்ளும் சிறந்த உறவினர்; இதுவே எல்லா சாத்திரங்களும் நிச்சயாமன முடிபு. இவை வித்தியாபுராணமென்னும் சைவ உபாகமத்தின் சுலோகங்களாம். "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகமும், "மருந்து வேண்டில்" எனத் தொடங்கும் திருந்துதேவன்குடிப் பதிகமும் இக்கருத்தையே வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது.

இம்மந்திரத்தை சீடரல்லாதவருக்கோ அல்லது தக்க குருவினிடத்தில் முறையாக உபதேசம் பெறாதவருக்கோ கூறலாகாது என்று தேவீகாலோத்தராகமம் எச்சரிக்கிறது. ஏனெனில், இதன் பெருமைகளோ கூறவும் இயலாதன; இம்மந்திரத்தை நினைத்த அளவிலேயே பிரஹ்மஹத்தி உள்ளிட்ட அனைத்துப் பாவங்களும் விலகும்:

வித்தியாபுராணம் என்னும் ஆகமம் கூறும் செய்திகள்: பஞ்சாக்ஷரமென்பது நகாரம் மகாரம் சிகாரம் வகாரம் யகாரம் என்னுன் ஐந்தெழுத்துக்களைக் கொண்ட மந்திரம்; இதனுடன் தொடக்கத்தில் ஓம் என்னும் பிரணவத்தைச் சேர்த்தால் ஓம் நம சிவாய என்னும் ஷடக்ஷரமந்திரம். இந்த ஐந்து எழுத்துக்களும் முறையே ஸத்யோஜாதம் வாமதேவம் அகோரம் தத்புருஷம் ஈசானம் என்னும் பஞ்ச பிரஹ்மங்களைக் குறிக்கும்; ஐவகைப் பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகியனவும் குறிக்கப்பெறும்; மேலும், இவ்வைந்தெழுத்துக்களுக்கும் முறையே பிரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன், ஸதாசிவன் ஆகியோர் அதிதேவர்கள். நகாரம் தங்கநிறமுடையது,; மகாரம் கருநிறமுடையது; சிகாரம் தீயையொத்த நிறமுடையது; வகாரம் கருநீலநிறத்தையும் யகாரம் ஸ்படிகநிறத்தையுமொத்தவை. நகாரம் ருக்வேதத்தையும் மகாரம் யஜுர்வேதத்தையும் சிகாரம் ஸாமவேதத்தையும் வகாரம் அதர்வணவேதத்தையும் யகாரம் இதிஹாஸங்களையும் குறிக்கின்றன.

எவ்வளவு தடவை ஜபித்தால் மந்திரம் ஸித்தியாகுமோ அத்வரையிலும் எப்பொழுது ஸித்தியாகுமோ அதுவரையிலும் ஒருவன் இம்மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும் என்று இவ்வாகமம் கூறுகிறது.

ஆடல்வல்லானான நடராசப் பெருமானின் உடுக்கை (டமரு) உலகத்தின் சிருஷ்டியையும் பெருமானின் அபயஹஸ்தம் பிரபஞ்சம் நிலை பெற்றிருத்தலையும் பெருமான் தாங்கியிருக்கும் அக்னி அழிவையும் ஊன்றிய திருவடி திரோபாவத்தையும் தூக்கிய திருவடி அனுக்கிரஹத்தையும் குறிப்பன என்று மேற்கண்ட சுலோகம் கூறுகிறது. இக்கருத்தை அப்படியே நமக்கு வழங்குகிறார் மனவாசகம்கடந்தார் தம்முடைய உண்மைவிளக்கம் என்னும் நூலின் 36 ம் பாடலில். பாட்டு சைவப்பெருமக்கள் யாவருமறிந்ததே:

தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்றுமலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

சிவதாண்டவமானது மக்களுக்கு எவ்வாறு முத்திப் பேறு அளிக்கிறதென்பதையும் இச்சிதம்பரரஹஸயம் கூறுகிறது:

மாயை, பாவம் புண்ணியம் முதலிய கருமவினைகள் ஞானத்தை மறைக்கும் ஆணவமலம் ஆகிய மும்மலங்களையும் அறவே நீக்கி தன்னுடைய அபயமென்னும் ஆனந்தக் கரத்தினால் எல்லையில்லா ஆனந்தக்கடலில் அமிழ்த்துவதே நடராசப் பெருமானின் ஆனந்ததாண்டவரஹஸ்யம்". என்பதூ இதன் பொருள்.

இதே கருத்தை நாம் உண்மை விளக்கத்தில் 37-ம் செய்யுளில் மீண்டும் காண்கிறோம்:

மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால் 
ஆனந்தவாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான் .

28 மூலாகமங்களுள் ஒன்றான வீராகமம் பஞ்சாக்ஷரபடலமென்னும் இரண்டாம் படலத்தில் பெரும்பான்மை வித்தியாபுராணக் கருத்துக்களையே கூறுகின்றது; மேலும், சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரமென்னும் மூவகைப்பட்ட நியாஸங்களையும் அங்கநியாஸத்தையும் இம்மந்திரத்தைக் கொண்டே செய்யும் முறையைக் கூறுகிறது.

கோடிக்கணக்கான பிறவிகளில் மனம் மெய் மொழி ஆகியவற்றால் செய்த பாவங்களனைத்தும் ஒருமுறை பஞ்சாக்ஷரமந்திரத்தை உச்சரிப்பதால் விலகும்; அவன் தூயவனாகிறான்" என்பது. மேலும் இம்மந்திரம்

சண்டாளனுடைய அன்னத்தைப் புசிப்பதாலும் கள் முதலியவற்றை அருந்தியதாலும் திருட்டுவழியில் சம்பாதித்துப் புசிப்பதாலும் சிராத்தம் முதலியவற்றில் உணவு உட்கொள்ளுவதாலும் பிராஹ்மணனைக் கொன்றதால் விளையும் பிரஹ்மஹத்தி என்னும் மிகக் கொடியபாவத்தையும் முற்றும் அழிக்கவல்லது" .

அடுத்து, "சிவ" என்னும் ஈரெழுத்துக்களின் பெருமையை மற்றொரு சுலோகம் கூறக்கேட்கலாம்:

கற்கவேண்டியவற்றுள் வேதம் தலைசிறந்தது; அவற்றுள் [யஜுர்வேதத்திலமைந்துள்ள] ருத்ரைகாதசினீ என்னும் ஸ்ரீருத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்தது; அதனுள் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்களும் அதனுள் சிவ என்னுமிரண்டெழுத்துக்களும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தனவென்று இச்சுலோகம் முழங்குகிறது.

நம சிவாய என்னும் ஐந்தெழுத்துக்களை மாற்றியமைத்து யநவாசிம என்னும் மந்திரத்தால் உச்சாடனம் மாரணம் என்னும் கிரியைகளையும், மவாயநசி என்னும் மந்திரத்தால் வித்துவேஷணம் என்னும் கிரியையும், வாசிமயந என்பதால் மோஹனத்தையும், செய்யலாம் என்று சிவஞானவித்தியா என்னும் நூல் கூறுகிறது.

எவனொருவன் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை இடையறாது பக்தியுடன் செய்கிறானோ அவனால் கற்கப் படவேண்டிய நூல்களனைத்தும் கற்றனவாகின்றன; எல்லா நற்செயல்களும் இயற்றப்பட்டதாகின்றன. எவனுடைய நாவில் நமசிவாய என்னும் மந்திரம் எப்போதும் விளங்குகின்றதோ அவனுடைய வாழ்வு நிறைவுற்றதாகிறது; மிகவும் இழிந்த குலத்தில் பிறந்தவனோ பொருளற்றவனோ கல்வியறிவற்ற மூர்க்கனோ எல்லாக் கல்வியையும் கற்றவனோ எவனாகிலும் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை மன உறுதியுடன் செய்பவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றான் என்பதே அதன் பொருள்.

சிவபெருமானுடைய திருவாக்கில் தோன்றிய எல்லா மந்திரங்களும் பஞ்சாக்ஷரமந்திரத்தினுடைய 16 ல் ஒரு பங்கு மஹிமைக்குக் கூடச் சமமற்றவை என்றும் சிவஞானவித்தியா என்னும் நூல் கூறக்காண்கிறோம்.

பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையை விளக்க வந்த இந்நூலானது கூறும் மற்றொரு செய்தி: சிவபெருமான் தேவியாருக்குக் கூறுகிறார்:

பிரளயம் ஏற்பட்ட போது எல்லாத் தாவரங்களும் உயிர்களும் தேவர்களும் அரக்கர்களும் அழிந்து பிரகிருதியில் ஒடுங்கின; அப்பிரகிருதி என்னிடத்தில் ஒடுங்கியது. என்னைத் தவிர வேறெவரும் இல்லை. நானோ பஞ்சாக்ஷர வடிவில் அவை யாவற்றையும் தாங்கியிருந்தேன். அதிலிருந்து மீண்டும் பிரபஞ்சத் தோற்றத்திற்காக என்னுடைய சக்தியே நாராயணன் என்னும் வடிவமாகவும் அதிலிருந்து பிரஹ்மாவும் தோன்றினர். உலகத்தைப் படைப்பதற்காக பிரஹ்மாவானவர் பஞ்சாக்ஷரமந்திரத்திலிருந்தே மீண்டும் யாவற்றையும் தோற்றுவித்தார். எனவே அம்மந்திரத்தின் மஹிமை பெருமைகள் கணக்கிலடங்கா. அவற்றைப் பேசவும் அரிது எனப் பெருமான் கூறுகிறார்.

சிவபெருமானுக்கிணையான வேறொரு தெய்வம் மூவுலகிலுமில்லை; பஞ்சாக்ஷரமந்திரத்திற்கிணையாக மந்திரம் கடந்தகாலத்திலும் இனி வரும் காலத்திலுமில்லை.
நடந்துகொண்டோ நின்றுகொண்டோ தனக்குத் தோன்றிய முறையில் செயல்களைச் செய்துகோண்டோ சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்துகொண்டோ ஜபம் செய்தாலும் இம்மந்திரம் பலனளிக்காமல் போகாது .

எல்லாத்தெய்வங்களையும் நீக்கி ஐந்துமுகங்கொண்ட சிவபெருமானையே வழிபடு; எல்லா மந்திரங்களையும் நீக்கி பஞ்சாக்ஷரமந்திரத்தையே ஜபம் செய் என்பதாகும் அதன் பொருள். வில்வமரத்து நிழலில்பக்தியுடன் இம்மந்திரத்தை ஜபித்து, பின்னர் பூசைக் கேற்ற இலைகளையோ அல்லது புஷ்பங்களையோ ஹோமம் செய்தால் எல்லா நற்குணங்களும் பொருந்திய மகனைப் பெறுவான் என்பது திண்ணம். இது சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவது.

எவனுடைய இதயத்தில் எப்போதும் ஓம் நமசிவாய என்னும் மஹாமந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறதோ அவனுக்கு மற்ற மந்திரங்களாலோ அல்லது மற்ற சாத்திரங்களலோ என்ன பயன் ? ஒன்றுமில்லை எனச் சிவபெருமானே அம்மந்திரத்தின் மஹிமையை விளக்குவதாகக் காண்கிறோம் . மேலும் அந்நூல் கூறுவதாவது:

ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரம் கைவல்லியமென்னும் மோக்ஷத்தை அடைவதற்கான வழியாகும்; அவித்தியை என்னும் அஞ்ஞானக் கடலை அணைக்கும் படவா என்னும் பிரளயகால நெருப்பு; கொடிய பாவங்களாகிய காட்டை எரிக்கும் காட்டுத் தீ. இம்மந்திரம் ஒன்றே முத்திய அளிக்கவல்லது. ஆதலின் முத்தியை அடையும் பொருட்டு எல்லா முனிவர்களாலும் இம்மந்திரம் ஒன்றே எப்போதும் ஜபிக்கப்படுகின்றது.

எப்படிப்பட்ட கொடிய பாவங்களையும் அழிக்கவல்லன மந்திரங்கள்; ஆனால் சிவபெருமானுடைய திருநாமங்கள் அழிக்கக் கூடிய அளவுக்குப் பாவங்களே இல்லாமையால் மனு முதலிய ஸ்மிருதிகளில் சிவநாமத்தைப் பிராயச்சித்தமாக ஜபிக்கும்படி கூறவில்லை. அப்பாவங்களைப் போக்க மற்ற மந்திரங்களுள்ளன என்பது இதன் உட்பொருள்.

ஐந்து கொடிய பாவங்களையும் அழிக்கவல்ல பஞ்சாக்ஷரமந்திரத்தை ஜபிப்போர்க்கு அப்பாவங்களினின்றும் விடுதலை, பிறவியிலிருந்தும் விடுதலை. மேலும், அகஸ்தியர், இராமர் முதலிய புண்ணிய புருஷர்களால் இம்மந்திரம் ஓதப்படுவதாலும், வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுவதாலும் வேதத்தில் காணப்படுவதாலும் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும் மந்திரமாதலாலும் நமசிவாய என்னுமிம்மந்திரத்தை எப்போதும் உச்சரிப்பீராக என்று முனிவர்கள் வேண்டுகின்றனர்.

எப்போதும் திருநீறும் ருத்திராக்ஷம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு பஞ்சாக்ஷரமந்திரத்தையும் எப்போதும் ஜபித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்பவன் ஜீவன்முக்தன் எனப்படுவான்; அவனே முற்றும் உணர்ந்த ஞானி, வைராக்கியமுடையவன், அறிவிற் சிறந்தவன், மூவுலகிலும் போற்றப்படுபவன்.

அகத்தியமுனிவர் கந்தப்பெருமானை வேண்டி உலகில் மக்கள் பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கும் உபாயமொன்றைக் கூறும்படி கேட்க, அதற்குக் கந்தப்பெருமான் இந்த ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் கூறினார்: இது எல்லா ஞானத்திற்கும் விதை போன்றது; ஆலங்கனியில் மிகச் சிறிய விதையானது பின்னர் பெரிய மரமாக வளர்வதுபோல் எல்லாக் கலைகளுக்கும் ஞானத்திற்கும் மந்திரங்களுக்கும் இம்மந்திரம் விதை போன்றது; மிக சூக்குமமானது; அதே சமயம் பரந்த பொருள் விரிவையுடையது.

நோய்களுக்கு எதிர்மறையாக மருந்து விளங்குவதுபோல் ஸம்ஸாரமென்னும் நோய்க்கு எதிர்மறையாக அதனை முற்றிலும் அழிக்கவல்லவர் சிவபெருமானே.

இவ்வாறு பலதிறத்தானும் பல விளக்கங்களாலும் ஆகமங்களும் புராணங்களும் சிவபெருமானைக் குறிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மஹிமை பெருமைகளை ஒப்புயர்வற்றநிலையில் வைத்துப் போற்றுகின்றன. அந்நூல் கடலிலிருந்து சில துளிகளை ஸமுத்திரகலசநியாயமாக என் சிற்றறிவுக்கேற்ற வகையில் இச்சைவ சபையில் சைவ ஆன்றோர்கள் முன்னர் பகிர்ந்துகொண்டேன்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம்.காம்

திங்கள், 25 ஜூலை, 2016

எது கெளரவம்?

எது கெளரவம்?
நம்மை விட உயர்ந்தவரை பார்த்து பொறரமைப்படாமலும், நம்மை விட தாழ்ந்தவர்கள் மீது வெறுப்பு ஏளனம் காட்டாமலும் எவராக இருந்தாலும் சமமாக பாவித்து அன்பு காட்டுவது ஒரு வகை பண்பு நலம். இத்தகைய இனிய பண்பு நலன்களை நம் மனதின் அடி ஆழத்தில் நீர் ஊற்றுப் போல இருக்கிறது. நம் மனதில் நாம் சேர்த்துக் கொண்ட போட்டி, பொறாமை வறட்டுக் கவுரம், போன்றவை அந்த ஊற்றை மூடி விடுகின்றன. பெரிய மகான்கள் ஞானிகள், குருமார்கள் தொண்டுள்ளம் படைத்தவர்களைப் பாருங்கள் அவர்கள் கொஞ்சம் கூட கவுரம் பார்க்கமாமல் ஏற்ற தாழ்வு காணாமல் சாதி இன பேதம் பாராமல் மக்களை மகேசனாக பாவித்து அன்பு காட்டிவார்கள். நாமோ சாதாரண மானவர்கள் நமக்கு தான் எத்தனை ஆனவம், அகம்பாவம், வறட்டுக்கவுரவம் உள்ளது. சக மனிதனையே பேதம் பிரித்து பார்க்கிறோம். ஆனால் நம்மைவிட மேலான இறைவன் மட்டும் நம்மை பேதம் பார்க்காமல் நமக்கு அருள்புரிய வேண்டும்என ஆசைப்படுகிறோம். நியாயம் தானா? இதனை விளக்கும் ஒரு சிறிய நிகழ்வு :


பாரத்போர் முடிவடைந்த தருணம் கிருஷ்ணன் களைப்படைந்து தன் கண்ணில் ஒளியிழந்து உடல் சோர்உற்று காணப்பட்டார். இதற்கு காரணம் பாரதப்போருக்காக துரியோதனனும் அர்ச்சுனனும் கிருஷ்ணனிடம் உதவி கேட்டு நாடியபோது,கிருஷ்ணனிடமிருந்த தன் சேனைகளை துரியோதனனுக்கும், அரிச்சுனனுக்கு தன்னையும் பெற்றுக்கொண்டனர். இறுதியில் போரில் அர்ச்சுனன் பக்கம் வெற்றியும் அடைந்தனர் , தனது படைகள் போரில் மடிந்தன. இந்த பாவம் அவரைத்தாக்கியது. இதன் பொருட்டு கிருஷ்ணன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்தில் எல்லோரும் கலந்து கொண்டனர். அப்போது விருந்துண்பவர்களிடம் ஒரு வரம் கேட்டார். அதற்கு எல்லோரும் சம்மதித்தனர். திடீரென்று விருந்து முடிந்தவுடன் கிருஷ்ணனை காணவில்லை. அப்போது கிருஷ்ணன் விருந்துண்டவர்களின் இலையை எடுத்துக்கொண்டிருந்தார். அதை எல்லோரும் தடுத்தனர். அதற்கு கிருஷ்ணன் எனக்கு தாங்கள் எல்லோரும் வரம் கொடுத்துள்ளீர்கள். அதனை மறக்கக் கூடாது. அது தான் இது என்றார். எனவே தான் இலையை நான்தான் எடுப்பேன்என்றார் உறுதியாக. இச்செயல் முடிந்தவுடன் கிருஷ்ணன் உற்சாகம் அடைந்தார். அவர் முகத்தில் அழகு கலை பிறந்தது. தன் பாவம் நீங்கி புண்ணியம் கிடைத்தது. உண்ண உணவு கொடுப்பதைவிட உண்ட இலையை எடுப்பது பாவம் விலகி புண்ணியம் பெருகிறது என்பதை எல்லோருக்கு உணர்த்தினார். இதனை உணர்த்தவே இச்சம்பவம் உருவாக்கப்பட்டது. 
நாம் வறட்டுக் கவுரவம் சாதி இன ஏழை செல்வ ஏற்றத்தாழ்வு பார்க்காதிருக்கவே அந்த நிகழ்வை உணர்த்தினார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : பிரத்திலிப் ஆன்மீகச் சிந்தனைகள்

சனி, 23 ஜூலை, 2016

ஆலயங்களில் பலிபீடம் எதற்காக?


ஆலயங்களில் பலிபீடம் எதற்காக?     

ஆலயங்களில் பலிபீடம் எதற்காக?  ...................        திருக்கோயில் அமைப்பில் முன் கோபுரம்பிரகாரங்கள்கொடிமரம்வாகனம்,விமானம் முதலியன முக்கியமானவை. இவை அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனிதன் இயல்பை அறிவுறுத்துவதே ஆலய அமைப்பாகும்.
கோ + இல் = கோயில் - தலைமையான இல்லம் என்பது பொருள். ஆ + லயம் = ஆலயம். ஆன்மா - உயிர்லயிக்கும் – இறைவனோடு ஒன்றுபடும் இடம் என்பது பொருள். மனிதர் யார்என்பதனை விளக்குவதே ஆலய வழிபாட்டு நிலையாகும். மனிதன் உடம்பாக மாட்டான். குணமாக மாட்டான். அறிவு ஆகமாட்டான். இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவன். அந்த நிலையே ஆன்மா ஆகும்.
ஆன்மாவின் பல்வேறு நிலைகளைச் சர்வஞானோத்தரம் என்னும் ஆகமம் சிறப்பாக விளக்குகின்றது. மனிதன் தன் உடம்பையேதூல தேகத்தையேபரு உடலையே தானாகக் கருதும்போது தேகான்மா எனப்படுகின்றான். சூக்குமைபைசந்திமத்திமை,வைகரி ஆகிய வாக்குக்கள் அடிப்படையான இச்சைகள் ஆகியவற்றைத் தானாகக் கருதும்போது அந்தரான்மா எனப்படுகின்றான். தத்துவங்களையும்அவற்றை அறியும் கருவியாகிய மனத்தையும் தானாகக் கருதும்போது தத்துவ ஆன்மா எனப்படுகின்றான்.
முற்கூறிய அனைத்தையும் அடக்கியாளும் உணர்வு தோன்றிஅதனால் நான் பிரமம் என்ற முனைப்பு ஏற்படும்போது சீவான்மா எனப்படுவான். பின் நல்லறிவு தோன்றி யான்எனது என்ற செருக்கு நீங்கிப் பேரின்பத்தை அடைய மந்திரம் செபிக்கும்போது மந்திரான்மா எனப்படுவான். இறுதியாகஇறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையில் பரமான்மா எனப்படுவான். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே கோயில் அமைப்புகள் உள்ளன.
முன் கோபுரம் உயர்ந்து காணப்படும். அதுவே தேகான்மா அல்லது தூல லிங்கம் எனப்படும். பலிபீடம் அந்தரான்மா அல்லது பத்திரலிங்கம் எனப்படும். கொடிமரம் தத்துவான்மா அல்லது துவச லிங்கம் எனப்படும். கருவறையில் உள்ள லிங்கம் சீவான்மா அல்லது சதாசிவ லிங்கம் எனப்படும். இதுவே அருவுருவ நிலையாகும்.காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்நீள் நாகம் பூண்டார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்’ என்பார் சேக்கிழார் பெருமான்.
சிவத்துக்கு லிங்கம்-சிவத்துக்கு அடையாளம் - சிவத்துக்குக் குறி சிவலிங்கம் ஆகும். உருவம்-நடராசர்தட்சிணாமூர்த்திசோமாஸ்கந்தர் முதலிய வடிவங்கள்,மகேசுவர மூர்த்தங்கள் எனப்படும். உருவம் இல்லாதது அருவநிலைஞானியர்களால் வழிபடும் நிலையாகும். அருவுருவம் சிவலிங்கம் ஆகும். இம்மூன்று நிலையும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலையாகும்.
     “உருமேனி தரித்துக் கொண்டது
      
என்றலும்உருவுஇறந்த
      
அருமேனி அதுவும் கண்டோம்அருவுருவான போது
      
திருமேனி உபயம் பெற்றோம்செப்பிய மூன்றும் நந்தம்
      
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே!
என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது.
திருக்கோயில் பூசை செய்யும் அர்ச்சகர் மந்திரான்மா அல்லது ஆன்ம லிங்கம் எனப்படும். பரந்த பெருவெளி பரமான்மா அல்லது அகண்ட லிங்கம் எனப்படும். இவற்றுள் பலிபீடம் என்றதும் பலி கொடுப்பது-உயிர்ப்பலி இடுவது என்ற தவறான எண்ணம் உண்டாகிறது.
கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின்நறும்புகை எடுமின்பூப்பலி செய்ம்மின்,காப்புக் கடைநிறுமின்’ - என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.பூசை செய்யும் போது மணியடிக்க வேண்டும். தோத்திரம் பாட வேண்டும். வாசனைப் புகை எடுக்க வேண்டும். பூக்களைப் பலியாகத் தூவ வேண்டும். பூசை செய்வோர் காப்புக்கட்ட வேண்டும்’ என்ற முறை வழிபாட்டில் பண்டுதொட்டு இருந்து வந்ததை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். தற்காலத்தில் புஷ்பாஞ்சலி என்று கூறுவதையே இளங்கோவடிகள் பூப்பலி செய்தல் எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். கோவில்களிலுள்ள பலிபீடம் தத்துவ அமைப்பு உடையது. உயிர்ப்பலி இடுவது ஆகாது.
திருக்கோயில் அமைப்பு முறைகளைத் தெளிவாகப் பாடியவர் திருமூலர் ஆவார். கோயில் அமைப்பு முறைகளை நன்கு ஆராய்ந்து அறிவோர்கருவறையில் மேல் உள்ள விமானம் தூல லிங்கம் என்றும் கருவறையில் உள்ளே உள்ளது-சதாசிவ லிங்கம் அல்லது சூக்கும லிங்கம் என்றும்முன் பகுதியில் விரிந்து காணப்படும் பலிபீடம் பத்திர லிங்கம் என்றும் கொள்வார்கள்.
     “தூய விமானமும் தூலமது ஆகுமால்
      
ஆய சதாசிவம் ஆகும் நற்சூக்குமம்
      
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
      
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே
என்பது திருமந்திரப் பாடல் ஆகும்.
பலிபீடம்வாகனம்சிவலிங்கம் மூன்றும் முறையாக அமைந்திருக்கும். பலிபீடம்-பாசத்தின் அறிகுறி. வாகனம் பசுவை-உயிரைக் காட்டும் அறிகுறிப் பொருள். கருவறையில் அருவுருவமான சிவலிங்கம் - பதியைக் காட்டும் அறிகுறியாகும்.
     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
      
ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும்
      
ஆய பலிபீடம் ஆகும் நற்பாசம் ஆம்
      
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே
என்று திருமூலர் பாடியுள்ளார்.


திருக்கோயில் அமைப்பை ஆராய்ந்து அறிவோர்க்குக் கருவறையில் உள்ள சிவலிங்கம் பதியாகும். லிங்கத்தின் முன் உள்ள எருது வாகனமே (ஆன்மா) ஆகும். பின் உள்ள பலிபீடம் பாசம் ஆகும் என்பது பாடற் பொருள். ஆன்மா,பாசத்தைவிட்டுப் பதியை அடைய வேண்டும். பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியை அடைதல்’ என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.
கோவிலுக்குள் செல்லும்போது யான்எனது என்னும் செருக்குஉலக பந்த பாசங்கள் ஆகியவற்றைப் பலியிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பலிபீடம் அமைக்கப்பட்டது.
எருது வாகனம் லிங்கத்தை நோக்கும்போது பலிபீடம் அதன் பின்னே அமைகிறது. பதியையே நினைக்கின்ற உயிர்களுக்குப் பாசங்கள் பிற்பட்டுத் தங்கிவிடும். எருது வாகனம் லிங்கத்தை நோக்காது வெளியே நோக்கினால்பலிபீடம் முன்னே இருக்கும். சிவ சிந்தனையில்லாது உலக சிந்தனை உடையவர்க்குப் பாசங்கள் மேலோங்கியிருக்கும்.

கோவில்களில் உள்ள வாகனங்கள் - ஆன்மாக்களின் பிரதிநிதிகள். 
பலி பீடங்கள் - உலக பாசங்கள். 
எனவே உலக பாசங்களை விட்டு நீங்கி இறைவனை அடைவதே உண்மை நிலையாகும்.
--திருச்சிற்றம்பலம்--

(வரைவு ; முனைவர் சென்னியப்பர். சைவ சித்தாந்தம் கட்டுரையில்  கண்டது)

--திருச்சிற்றம்பலம்--
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

உத்திரகோசமங்கை

உத்திரகோசமங்கை 
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.





திருஉத்தரகோசமங்கை
இறைவர் திருப்பெயர்   : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி.
தல மரம்   : இலந்தை.
தீர்த்தம்   : அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர்   : மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன்,மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
திருவாசகப் பாடல்கள்   : திருவாசகம் - "நீத்தல் விண்ணப்பம்"

தல வரலாறு

பாண்டிய நாட்டில் உள்ள தலம்.
மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது” என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
உத்தரம் – உபதேசம்; 
கோசம் – ரகசியம்; 
மங்கை – பார்வதி. 
பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு – ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.
இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : – ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து “மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்” என்று வானொலியாக அருள் செய்தார்.


மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி ‘யார் பெற்றதோ இது’ என்று வினவினான். வண்டோதரி, “யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்” என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் – இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் – குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.
மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள்.இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார்.மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார்.இதனால் பெருமானுக்குக் “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்கலாயிற்று.ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் – அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது.இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.
சிறப்புக்கள்
அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வௌ¤யில் பிரம்ம தீர்த்தமும்; சற்றுத் தள்ளி ‘மொய்யார்தடம் பொய்கை’த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.
திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
கீர்த்தித் திருவகவலில் “உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் – ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, ‘மகேந்திரம்’ என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே “மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்” என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி.
தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.
பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார்.
சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது.
நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.
நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.


அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள கூத்தப்பிரான் – நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் – முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.

இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌ¤க் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)
மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக – அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.
அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.
நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.
நடராசரைத் தொழுது முன் மண்டபம் வந்தால், அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக் காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தரிசிக்கும்போதே வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத் தக்கது.
உமாமகேசுவரர் சந்நிதிக்குச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.
நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் – உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.
இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர்.
திருச்சிற்றம்பலம்


ஒம்நமசிவாய
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்