புதன், 24 ஜூன், 2015

ஆனி திருமஞ்சனம்.


நாளை (24.06.15) – ஆனி திருமஞ்சனம். கோடையின் கடும் வெப்பம் தணிந்து இதமான தட்பவெப்பம் துவங்குவது ஆனி மாதம் தான். ஆகவே அகில உலக நாயகனாகிய சிவபெருமானை குளிர்விக்கும் பொருட்டு, வெம்மையின் நாயகனாகிய சூரிய பகவானின் ஆதிக்கம் பொருதிய உத்திர நட்சத்திரத்தன்று அவருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மேலும், பெருமானின் திருமேனி குளிர்ந்தால் அண்ட, சராசரமும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம். சிவ பெருமான் கோவில்களில் 6 கால பூசைகள் நடப்பது முறை. ஆனால் இங்கே சிதம்பரத்தில் நடராஜராக இருக்கும் பெருமானுக்கு தினமும் அபிஷேகம் இல்லை. வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை,இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு. இந்த வகையில் தேவர்களுக்கு : • வைகறை – மார்கழி மாதம். • காலை - மாசி மாதம் • உச்சி காலம் – சித்திரை மாதம் • மாலை - ஆனி மாதம் • இரவு - ஆவணி மாதம் • அர்த்த ஜாமம் – புரட்டாசி மாதம் இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்தசிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது. சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடைபெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். ஆலய விசேஷங்கள் : ஆனி திருமஞ்சன தினத்தன்று, தில்லை நடராஜப் பெருமானின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு, இறை மூர்த்தங்களை திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். 100 தீட்சிதர் பெருமக்களால் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற்று அதன் பின்பு, சுமார் 2 மணி நேரத்திற்கு பெருமளவிலான பொருட்களால் மகா அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். அதன் பின்னர் நிறைவாக, பலவித மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடத்தபெறும். அதன் பின்னர், மகா தீபாராதனை ஆன பின், அம்மையும், அப்பனும் ஆனந்த நடனம் புரிந்தவாறே, சித்சபைக்கு எழுந்தருள்வதை காணக் கண் கோடி வேண்டும். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை. இம்மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர். இதனை தரிசிப்பவர் வேண்டும் வரங்களையும், பிறவி பயன்களையும், பெரும் புண்ணியங்களையும் அடைவர் என்று பல்வேறு புராண நூல்கள் தெரிவிக்கின்றன. பூஜை முறை : புனிதமும், மகத்துவமும் நிறைந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும்,இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழிவகுக்கும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இறையை வேண்டி நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி, அவனது நாமத்தை போற்றியும் பாடலாம். இந்த தரிசனத்தை தில்லையில் காண இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனமுருகி துதித்து வணங்கினாலும் ஈசனின் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. தில்லை அம்பல நடராஜா போற்றி !! போற்றி !! ஓம் நமசிவாய

பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள்


பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய் நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய். ஸ்ரீ குருஞானசம்பந்தர் இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, கடவுளை வழிபட்டு முத்தி இன்பம் பெறுதற் பொருட்டேயாம்' என்பது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரின் பாலபாடத்தில் காண்பது. பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் என்பது இதனால் நன்கு தெளிவாகிறது. நோயும் மருந்தும்: பிறவி அறவேண்டுமானால் பிறப்பு எதனால் வருகிறது என்று அது வரும்வழியைக் காணவேண்டும். பிறவி என்பது ஒரு நோய். அந்நோய்க்கு மூலம் எது என்று தெரிந்தாலன்றிப் பிறவியை ஒழிக்க முடியாது. எனவே "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருவள்ளுவர் வாக்கிற்கு இணங்கப் பிறவிநோய் எதனால் வருகிறது என்பதை முதலில் அறிதல் வேண்டும். ஆசை பாசம் சினம் அகல: "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாப் பிறப்பீனும் வித்து", என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பிறவி ஆசையால் வருகிறது என்பதை உணர்கிறோம். ஆசை எங்கிருந்து வருகிறது என்று அதன் மூலத்தைக் காண வேண்டும். ஆசைக்கு மூலம் ஆணவமாகிய பாசம். எனவே பிறவி அறவேண்டுமானால் அதற்கு மூலமாகிய ஆணவம் நீங்க வேண்டும். ஆணவத்தை அகந்தைக் கிழங்கு என்கிறார் குமரகுருபரர், "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே" என்பது அவர்தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். கிழங்கு இருக்கும்வரை தாமரை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். ஆணவக்கிழங்கை அகழ்ந்தெடுத்துவிட்டால் அத் தொண்டர் உள்ளத்தே இறைவி பிரகாசிப்பாள், என்பது இத்தொடரின் கருத்தாகும். ஆணவமாகிய பாசம் நீங்கவேண்டுமானால் சிவபூசை செய்தல் வேண்டும். சிவபூசை செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாகச் சற்குருநாதரிடம் சமயதீட்சை பெற்று அஞ்செழுத்தை ஓதி உணர்ந்து உருவேற்ற வேண்டும். இந்நிலை எய்தவேண்டும் என்றால், சினம் முதலாகிய அறுவகைக் குற்றங்களும் அகலவேண்டும்.அப்போது தான் குருநாதரை அணுகி ஞானோபதேசம் பெறும் பக்குவம் உண்டாகும். சினம் முதலிய குற்றங்கள் தீர வேண்டுமானால் திருமுறைகள் ஓதவேண்டும். திருமுறைகளே நமக்குத் தாயாக இருந்து உதவி புரிய உறு துணையாய் உள்ளன. அத்திருமுறைகளைப் பலகாலும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். மனமே மனிதனின் உற்ற நண்பன்; அமைச்சன். அதனால் தான் குருஞானசம்பந்தர் மனத்தை அழைத்து உபதேசித்தார். ஒரு மனிதன் பிறவி நீங்க வேண்டுமானால் ஆசாரியரைச் சரணடைய வேண்டும். அவர் கற்பித்த வழிநின்று திருமுறைகளைப் பன்னாளும் பயின்று ஓதுதல் வேண்டும், ஓதினால், சினம் அகலும், சினம் அகன்றால் நல்ல குருநாதர் நமக்கு அஞ்செழுத்தை உபதேசிப்பார், அவ்வஞ்செழுத்தை, நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும், மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும், ஓதியும் உணர்ந்தும் உருவேற்றினால், சிவபூசைபுரியும் வாய்ப்பும் ஆசாரியனால் கிடைக்கும். அச்சிவபூசையைப் பன்னாளும் பயின்று முறையாகப் பூசித்து வந்தால் பாசம் அகலும். பாசம் அகன்றால் பிறவி அறும். வீடு பேறு கிட்டும். `அற்றது பற்றெனில் உற்றது வீடன்றோ' இதனையே ஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் "அற்றவர்க் கற்ற சிவன்' என்று ஓதினார். பற்றற்ற பரம்பொருள் பற்றற்றவர்கட்குப் பற்றுக் கோடாயிருந்து அருள் புரியும் என்பது இதன் கருத்து. வீடும் ஞானமும்: குருஞானசம்பந்தர் பாடலில், "திருமுறைகள் ஓதாய்" என்று பிரித்துச் சொன்னால், திருமுறைகளை ஓதுவாயாக என்பது பொருளாகும். "திருமுறைகளோ தாய்" என்று பிரித்துச் சொன்னால் திருமுறைகளே நமக்கெல்லாம் தாயாயிருந்து அருள்புரிந்து வீடுபேறு நல்கும் என்பது பொருளாகும். திருமுறைகளை ஓதுவிப்பதற்கும் ஒரு ஆசான் வேண்டும். அதைத்தான் ஞானசம்பந்தர் திருவலஞ்சுழித் தேவாரத்தில் குறிப்பிடுகின்றார். வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் வேண்டுவீரானால் விரதங்களால் மட்டும் ஞானமும் வீடும் கிடைத்து விடாது. வலஞ்சுழியில் நமக்கெல்லாம் ஞானத் தந்தையாக எழுந்தருளியுள்ள ஈசனை நாடுவதும், ஞானசம்பந்தனுடைய செந்தமிழைக் கொண்டு இசை பாடும் ஞானம் வல்ல ஓதுவாரடி சேர்வதுமே உனக்கு வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் கிடைத்தற்கு வாயில் என்கிறார் ஞானசம்பந்தர். எனவே, முதலில் திருமுறைகளை ஓதுவாரடி சேர்க, என்று உபதேசிக்கிறார். வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால், வாடின் ஞானம்என் னாவதும் எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே. (தி.2 ப.2 பா.11) இது ஞானசம்பந்தரின் இரண்டாவது திருமுறையில் இரண்டாவது பதிகத்தின் இறுதிப்பாடல் காட்டும் உபதேசம்

புதன், 10 ஜூன், 2015

ஆதி சித்தர்கள்


ஆதி சித்தர்கள் பதினென் சித்தர்கள்வரலாற்றில் சித்தர்களுக்கெல்லாம் ஆதியாய், தீட்சை பெறாத சித்தர்களுக்கெல்லாம் மூலகாரணமாக காரணமானவர்கள் குரு தட்சணாமூர்த்தி, சுப்பிரமணிய சித்தர், நந்தி தேவர் ஆகிய மூவர்கள், இவர்கள் சித்தர் பரம்பரையனர் அல்லர், சித்தர்கள் தோன்றுவதற்கு மூல காரணமானவர்கள். இவர்கள் பதினென் சித்தர்கள் எண்ணிக்கையில் சேராதவர்கள். 1. குருதட்சணாமூர்த்தி : இவர் ஆதியும் அந்தமும் ,அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருளின் வெளிப்பாடே ஆவர், இவர் குரு தட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரியராக வெளிப்பட்டு சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்தே பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரை தோன்றுவதற்கே முதல் வித்திட்டவர் ஆவார். சிவபரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி, இவர் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்று திருமந்திர பாடல் வாயிலாக நாம் அறிய திருமூலரே கூறியுள்ளார், பாடல் 68, நந்தி அருள் பெற்ற நாதரை நாடின் ............. என்னோடு எண்பருமே " 2, சுப்பிரமணிய சித்தர்: சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப பொறிகளாக வெளிப்பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுக சிவமாக இந்த சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணியஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை ெபெறுபவர்கள் யாவருமே அகத்தியர்கள்தான். அகத்தியம் என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் - தீ - அர் என பிரித்தால் அது ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் என்று பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணிய சித்து. இந்த காரணப் பெயர் சு - பிரம்ம - மணி - அர் என பிரிந்து " தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவமாக வெளிப்பாடே அகத்தியர். அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சித்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே அகத்தியர் என்ற முனிவர் - சித்தர் சுப்பிரமணிய ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு என்பதையும் உணரலாம். 3, நந்தி தேவர் : சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்த வண்ணம் நந்தி தேவர் அமர்ந்திருப்பார். நந்தியின் அனுமதி பெற்றுத்தான் சிவதரிசனம் செய்யவேண்டும் என்பதும், நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் நந்திதேவனை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக் கூடாது என்பதும் சைவ மரபு. காரணம் நந்தி சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்பதே. இடைவிடாது வாசி ஓட்டம் (உள் சுவாசம், வெளிச் சுவாசம் ) நடைப் பெற்றுக் கொண்டுள்ளது. சிவமும் நந்தியும் பிரிக்க முடியாத ஒன்று என்று காண்க. ஆதிகுரு தட்சணாமூர்த்தியான பரம்பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர், அவர்களில் நந்திகள் நால்வர் என திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த நால்வர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்பவராவர். இந்த நந்திகள் நாலவரும் குருதட்சணாமூர்த்தியிடம் மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்லர் , என்பதை உணரவேண்டும். இவர் திருக்கயிலாய பரம்பரையை சேர்ந்தவர், சிவனாருக்கு வாயில் காப்பவராகவும், வாகனமாகவும் இருந்தவர் இந்த நந்தியம் பெருமான். தோற்றம்: தஞ்சையிலுள்ள திருவையாறு தலத்தில் சிலாத முனிவர் என்பவர் நந்தியம் பெருமானின் தந்தையாவார். அவருடைய மனைவி சாருட்சன என்ற சித்ரவதி என்ற அம்மையார் . இந்ந தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. இத்தருணத்தில் சப்தரிஷிகள் இவருடைய ஆசரமத்திற்கு உணவருந்த வந்தனர், அப்போது சிலாத முனிவருக்கு மகப்பேறு இல்லாததை அறிந்து குழந்தைச் செல்வம் இல்லாத ஆசரமத்தில நாங்கள் உணவருந்துவதில்லை என கூறி உணவருந்தாமலே திரும்பிவிட்டனர் இது கண்டு தம்பதியர் மிக மனம் வருந்தி தங்களுக்கு மகப்பேறு வேண்டி சிலாத முனிவர் கடும் தவம் மேற்கொண்டார், இவரின் தவத்தினை கண்டு மனம்இரங்கிய சிவனார் " முனிவரே உங்களுக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான் அவன் எனக்கு சமமானவன் மரணமில்லாதவன் என்னை வழிபடுகிறவர்கள் அவனையும் வழிபடுவார்கள் "என்று கூறி மறைந்தார். அதன்படி சிலாத முனிவர் ஒருநாள் பூமியை தோண்டும் போது ஒளிவடிமான பிரகாசிக்கும் பேழையில் நந்தி தேவர் கிடைத்தார், நந்தி தேவருக்கு எட்டு வயது ஆகும் போது மரணமில்லாத வாழ்வு பெற எட்டு கோடி ஜபம் செய்து அழிவில்லா வாழ்நாளை பெற்றதுடன் கயிலையில் சிவத்தொண்டு செய்யவும் காவலனாகவும் இறைவருக்கு வாகனமாகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார், இவரே சிவனாரின் நேர் மெய் காவலனாகவும் இறைவரின் சம அந்தஸ்து பெற்று சிவனடியார்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் நன்றி : பதினென் சித்தர்கள் வரலாறு மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 6 ஜூன், 2015

இந்து மதம் கூறும் வழிபாடும் , வழிமுறைகளும்


இந்து மதம் கூறும் வழிபாடும் , வழிமுறைகளும் ( way to successful prayer) பகவானின் அருள் பெற நமக்கு தேவையான தகுதிகள் அ, பகவானிடத்தே மனதை வைத்தல் ஆ. பகவானின் அருள் பெற மந்திரம் கூறி தியானித்தல் இ. பகவானையே அடைக்கலம் அடைதல் ஈ. இந்துமதம் கூறும் சின்னங்கள் தறித்தல் கீதை கூறும் புண்ணிய செயல்கள் 1, வழிபாடு. 2. தானம். 3. தவம் ஆகிய இம்மூன்றும் புண்ணிய செயல்களும் மனித வாழ்க்கையை உயர்வடையச் செய்யும் வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு பிடித்த கோயிலை மனதில் நினைத்து அனுதினமும் கூற வேண்டிய மந்திரங்கள் " ஓம் நமசிவாய வாழ்க ! ஓம் சச்சிதானந்தம் வாழ்க ! ஓம் சிவசிவ ஓம் ! " மற்றும் சக்தியை போற்றும் காயத்திரி மந்திரங்கள் இறை மந்திரத்தின் மகிமை இந்து மதம் " ஸநாதன தர்மம் " என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அழிவில்லாத அறம் என்பதாகும். இது மட்டுமல்லாது இந்து மதம் சன்மார்க்கம், தவநெறி, மெய் நெறி, அருள் நெறி, திருநெறி என்ற பெயர்களாலும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. அகங்காரம், காமம்., பேராசை, பற்று இவற்றை விலக்கி சுகதுக்கங்களை நீக்கி ஆத்ம ஞானத்தில் தியானித்து ஆன்மாவின் உண்மைத் தோற்றத்தை அறிந்து முக்தி பெற இந்து மதம் உதவுகிறது. மந்திரம் கூறி துவங்கும் வேலை வெற்றியாகும், அத்துடன் தொடர்ந்து மந்திரம் கூறி வந்தால் பிரச்சனைக்ள நீங்கும். அற்புதங்கள் நடக்கும். எனவே தோத்திரங்கள் இன்றி வழிபாடு சிறக்காது. இந்து மதம் கூறும் மூன்று விதமான வழிபாடுகள் 1. சகுண நிராகரம் - உருவ வழிபாடு 2. நிர்குண நிராகரம் - ஏகத்துவ வழிபாடு ( எங்கும், எதிலும் இறைவனைக் காண்பது ) 3. சகுண சாக்காரம் - அவதார பருசர்களை வழிபடுவது உலகில் உள்ள நான்கு வித பக்தர்கள் யார்? 1. முக்தியை லட்சியமாக கொண்ட ஞானி 2. குடும்ப வாழ்க்கை உயர தியானிக்கின்ற பக்தன் 3. நோய்கள் நீங்க பிராத்தனை செய்பவர்கள் 4. வசதி வாய்ப்புகளுக்காக யாசிப்பவர்கள் மனிதர்களில் சிறந்தவர்கள் யார்? நல்ல கருத்துக்க் நல்லவர் வாயிலாக வரும் பொழுது இழந்த பொருள் மீண்டும் வந்து விட்டதாக நினைத்து மூளையில் பதிவு செய்து பின் பற்றுபவர், நமது ஐம்புலங்கள் வழியாக வரும் இன்பம் மற்றும் துன்பங்களை நீக்க , ஐம்புலங்களின் கதவை மூடிக்கொண்டு உள்ளத்தில் இறைவனை பார்க்கும் தன்மையவன். இறைவனிடம் இருந்து ஆறு விதமான நன்மைகளை பெறும் முறை சிவன் என்பவன் இறைவன் . இறைவனுக்கு ஆறு குணங்களை உடையவர் என்று பொருள் உண்டு. இறைவனாகிய பகவானை உள்ளத்தில் வைத்து அடிக்கடி பூசிப்பவர்களுக்கு அவரின் ஆறு குணங்களாகிய ஞானம், ஐஸ்வரியம், சக்தி. பலம், வீரியம், தேஜஸ் என்பன சேர்ந்து விடும். சிவ தர்மம் என்பது யாது? 1, கொல்லாமை. 2. பழிக்கு அஞ்சுதல். 3. பொறுமை. 4. நலம்புரிதல். 5. உள்ளன்புடன் இருத்தல். 6. இயன்றவரை ஈதல் பண்புடமை. 7, சிவனாகிய சச்திதானந்த்தை அர்ச்சனை செய்தல். 8. புண்ணிய காரியங்கள் செய்தல். 9. சிவனை தியானித்தல், ஞானம் " உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண்" என்று ஒளவையார் கூறுகிறார். அதாவது இந்த பூமியில் பிறந்ததே உடம்புக்குள் உள்ளத்தில் இருக்கும் ஆனந்த சபையில் உத்தமராகிய இறைவனை தியானத்தால் கண்டு உயர்வதற்கே ஆகும். " நெருப்பை புகை மூடுவது போல கண்ணாடியை அழுக்கு மூடுவது போல கருவை கருப்பை மூடுவது போல ஞானத்தை காமம் மூடியிருக்கிறது " பகவத் கீதை இந்த காமத்திரையை விலக்குவதற்கு மனதில் மூலமந்திரத்தை உச்சரித்து அனுதினமும் பகவான் மேல் பக்தி செலுத்தி வந்தால் , காமம் அழிந்து ஞானம் பிறக்கும். இந்து மக்களின் கடமைகள் 1, தினம் காலையில் மந்திரம் கூறி தியானப் பயிற்சி செய்து அன்றாட வேலைகளை கவனித்தல் 2. யோகாசன பயிற்சி செய்தல் 3. காரம், புளிப்பு. எண்ணெய் குறைவான உணவை அளவோடு உட்கொளல் 4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மிக நூல்கள் படித்தல், அல்லது ஆன்மிக சொற்பொழிவு கள் கேட்டல் 5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை தியானித்தல் 6. தன் குற்றம் கண்டு பகவானிடம் மன்னிப்பு கேட்டல் 7. சமயத் தொண்டில் தன்மை ஈடுபடுத்தி உழவாரப் பணிகள் மேற்கொண்டு புண்ணியம் சேர்த்தல் இறைவனை அறிவதையும் அடைவதையும் யார் லட்சயிமாக கொண்டிருக்கிறாரோ, அவரை ஒருபோதும் இறைவர் கைவிட மாட்டார். நமது லட்சியத்தில் காட்டுமு உறுதியே, வெற்றியின் ரகசியம். பகல் பொழுதை பகவானை நினைக்கும் பயனுள்ள பொழுதாக நாம் மாற்றிக் கொண்டால், இரவு பொழுது இனிமையாகத்தான் இருக்கும். இடைப்பட்ட வாழ்க்கையில் கிடைத்திட்ட பொருட்கள் எல்லாம் செல்வமாகி விடாது. ஆனால் உள்ளத்தில் இறை நினைப்போடு இருப்பதே பெரும் செல்வம் என்பதை ஒருபோதும் மறவாதீர் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.