வெள்ளி, 27 ஜனவரி, 2023

குருவாக்கியம்

 குருவாக்கியம் 




      இது ஆசாரியர் சிஷ்யருக்குச் சமயதீக்ஷை செய்யும் போது போதிக்கத்தக்கது.


      சிவனேச அன்பர்களே!


      1.     ஆன்மாக்களுக்கு, எந்தச்சரீரத்திலும் மனிதசரீரங் கிடைப்பது மிக அரிது; மனிதசரீரங்கிடைத்தாலும், சைவசமயம் வழங்குந் தேசத்திலே பிறக்க்க் கிடைப்பது அதினும் மிக அரிது; சைவசமயம் வழங்குந்தேசத்திலே பிறக்கக் கிடைத்தாலும், சைவசமயத்திலே பிரவேசிக்கக் கிடைப்பது அதினும் மிக அரிது. சைவ சமயத்தை அநுட்டித்து முத்தியின்பம் பெறும்பொருட்டே மனிதசரீரங் கிடைத்தது.


      2.     சைவசமயம் என்பதற்குப் பொருள் சிவபெருமானை வழிபடு மார்க்கம். சிவபெருமான் பிறப்பிறப்பின்றி என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், இயல்பாகவே எல்லாம் அறிபவர், எல்லாஞ் செய்ய வல்ல்வர், தமது அனுபத்தின் பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர், பிறர் வசத்தினராகாது தம்வசத்தினராயே உள்ளவர், பசுக்களாகிய உயிர்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக உடையவர். இவ்விலக்கணங்களெல்லாம் உடையவர் சிவபெருமான் ஒருவரேயன்றி வேறில்லை. ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுக்களுக்குப் பதி. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டென்றவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டென்றாவது கொள்வது சிவநிந்தை. இவ்வுணமியெல்லாம் அறிந்து சிவபெருமான் ஒருவரையே வழிபடுஞ் சமயம் சைவசமயம்.


      3.     பசுபதியாகிய சிவபெருமானை வழிபடுநெறியையும், சிவபெருமானுடைய ஏவல்வழி ஒழுகும் பசுக்களாகிய தேவர்களை வழிபடு நெறியையும் அறிவிக்கும் பொது நூல் வேதம்; சிவபெருமானை வழிபடுநெறியையே விரித்து அறிவிக்குஞ் சிறப்பு நூல் சிவாகமம்; சிவபெருமானை வழிபடுதற்கு யோக்கியதையைப் பிறப்பிப்பது சிவாகமத்தில் விதித்த சிவதீக்ஷை; சிவபெருமானுடைய அடையாளங்கள் விபூதி உருத்திராக்ஷம்; சிவபெருமானுடைய மூலமந்திரம் ஶ்ரீ பஞ்சாக்ஷரம்; சிவபெருமானை மிக மகிழ்விக்குந் தோத்திரங்கள் தேவார திருவாசகம்; சிவபெருமானை வழிபடும் இடங்கள் குரு லிங்க சங்கமம். குரு என்றது தீக்ஷை செய்யுங் குருவையும், சைவசமயத்தைப் போதிக்குங் குருவையும், சைவசமய நூலைப் படிப்பிக்குங் குருவையும், லிங்கம் என்றது சிவஞானிகளுடைய பாவனையுற்றுத் திருக்கோயிலுள்ளிருக்குந் திருவுருவங்களை. சங்கமம் என்றது சிவதீக்ஷை பெற்று விபூதி உருத்திராக்ஷந் தரித்துச் சிவாலயத்தொண்டு சிவபூசை சிவசாத்திரம் படித்தல் முதலியன செய்யுஞ் சிவனடியார்களை.

     

      4.     உங்களுக்கு மனிதசரீரங் கிடைத்தது. அம்மட்டோ! சைவசமயம் வழங்குந் தேசத்திலே பிறக்கவுங் கிடைத்தது. சிவபெருமான் உங்களுக்கு அனுக்கிரகிக்கும் பொருட்டு இங்கே இந்தக் கும்பத்திலும் இந்த மண்டலத்திலும் இந்த அக்கினியிலும் நம்மாலே ஆவாகித்துப் பூசிக்கப்பட்டு உங்களுக்குத் தீக்ஷையாகிய அநுக்கிரகத்தைச் செய்யும் பொருட்டு இடங்கொண்டு மறைந்து நின்று செலுத்துங் குருவடிவம் நாம், நாம் இங்கே இப்பொழுது உங்களுக்குச் சமயதீக்ஷை செய்யப் பெற்றீர்கள். இந்தச் சமயதீக்ஷை வாயிலாக நீங்கள் சைவசமயத்திலே பிரவேசித்தீர்கள். விபூதியை மந்திரத்தோடு தரிக்கப்ப பெற்றீர்கள். ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தை நாம் உபதேசிக்கப் பெற்றீர்கள். தேவார திருவாசகம் ஓத அதிகாரம் பெற்றீர்கள். குருலிங்க சங்கமங்களுக்குத் தொண்டு செய்ய உரிமை பெற்றீர்கள். எல்லா வகையாலும் பசுபதியாகிய சிவபெருமானுக்கே அடிமை பூண்டீர்கள்.


      5.     இனி மரணபரியந்தம் அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை அநுட்டிக்கத்தக்க கருமங்கள் எவை என்று நீங்கள் நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். அநுட்டிக்கலாகாத கருமங்களை மரணபரியந்தம் விலக்கி விடல் வேண்டும். அநுட்டிக்கத்தக்க கருமங்களை மரணபரியந்தம் அநுட்டித்தல் வேண்டும்.


      6.     பெரும்பான்மையும் எல்லாச் சமயத்தாரும் விலக்கத்தக்க பாதகங்கள் உயிர்க்கொலை, களவு, கள்ளுணல், மற்சமாமிசம் புசித்தல், பொய், வியபிசாரம் முதலியவைகள். இவைகளை நீங்கள் ஒரு பொழுதுஞ் செய்யலாகாது.


      7.     பிதா மாதா முதலிய பெரியோர்களை ஒரு சிறிதும் அவமதியாது எந்நாளும் மிக்க மரியாதை செய்து பாதுகாத்து நடத்தல் வேண்டும். வறியவர்களாயுந் தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லமை இல்லாதவர்களாயும் உள்ள கூனர் குருடர் முடவர் வியாதியாளர் கிழவர் இவர்களுக்குச் சமயம் வாய்க்கும் பொழுது உங்களாலே கூடிய உதவி செய்தல் வேண்டும். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நீங்கள் நன்மையே செய்தல் வேண்டும். இவையெல்லாம் எல்லாச் சமயத்தாருக்கும் வேண்டப்படுந் தருமங்கள்.


      8.     சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திர நிந்தை, சிவத்திரவியத்தைக் குருத்திரவியத்தை உபயோகித்தல் முதலாயின அதிபாதகங்களாகிய சிவத்துரோகங்கள். இவைகளை நீங்கள் மறந்துஞ் செய்யாது மரணபரியந்தஞ் சாவதானமாக இருத்தல் வேண்டும்.


      9.     நியமமாக நாடோறும் அநுட்டானஞ் செய்து சிவபெருமானைத் தியானித்து ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தல் வேண்டும். பெண்கள் வீட்டுக்கு விலக்கானால் மூன்று நாளும் ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தை மனசினாலே சிந்தித்தல் வேண்டும். நாலா நாள் ஸ்நானஞ் செய்தபின் அநுட்டானம் பண்ணலாம்.


      10.    விபூதி நெற்றியில் எப்பொழுதுந் தரித்துக்கொள்ளல் வேண்டும். கீழே சிந்தா வண்ணம் அண்ணாந்து “சிவசிவ” என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன்றினாலுந் தரித்தல் வேண்டும். விபூதி தரியாத முகம் சுடுகாட்டுக்குச் சமம். ஆதலால் விபூதி தரித்துக் கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.


      11.    தினந்தோறுமாவது புண்ணியகாலங்களிலாவது திருக்கோயிலுக்குப் போய்ச் சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து வணங்கி வலம் வந்து துதித்தல் வேண்டும். உங்களாலே கூடியபொழுது திருக்கோயிலிலே சுகந்த தூபமிடுங்கள்; திருவிளக்கேற்றுங்கள்; திருவலகிடுங்கள்; திருமெழுக்கிடுங்கள்; திருநந்தவனம் வையுங்கள்; சுசியோடு புஷ்பமெடுத்துத் திருமாலை கட்டிக் கொடுங்கள்; திரு வீதியில் உள்ள புல்லைச் செதுக்குங்கள்.


      12.    குருவையுஞ் சிவனடியார்களையுங் கண்டால் உடனே இருக்கை விட்டெழுந்து கும்பிட்டு நமஸ்காரஞ் செய்யுங்கள்; அவர்களெதிரே இருக்கு முறையறிந்து இருங்கள்; பேசு முறையறிந்து பேசுங்கள்; அவர்களை எவராயினுங் குற்றம் பேசினால் உடனே காதைப்பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்றும் போய்விடுங்கள்.


      13.    சிவபெருமானின் வேறாகாத திருவருள் என்கின்ற சிவசத்தியே பார்வதி தேவியார். ஆதலால் அவரை வழிபடுவது சிவபெருமானை வழிபடுவதேயாம். புண்ணியஞ் செய்தவர்களுக்கு அநுக்கிரகமும் பாவஞ் செய்தவர்களுக்கு நிக்கிரகமுஞ் செய்யும் பொருட்டுச் சிவபெருமான் கருணையினாலே கொண்டருளிய மூர்த்தங்கள் அவருடைய திருக்குமாரர்கள் எனப்படுகிற விநாயகக்கடவுள் சுப்பிரமணியக்கடவுள் வைரவக்கடவுள் வீரபத்திர்ரக்கடவுள். ஆதலால் அவர்களை வழிபடுவதுஞ் சிவபெருமானை வழிபடுவதேயாம். குருவினிடத்தும் சிவனடியார்களிடத்தும் சிவசின்னமும் சிவ மந்திரமும் சிவநாமமும் சிவமகிமையும் சிவசாத்திரமும் விளங்கக் காண்டலினால் அவர்களை வழிபடுவதுஞ் சிவபெருமானை வழிபடுவதேயாம். இப்படியன்றி, உயிர்ப்பலியேற்குந் துட்ட்தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது. வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்குத் தப்பாது கிடைக்கும்.


      14.    தேவார திருவாசகத் திருமுறையையும் சிவபுராணத் திருமுறையையும் மடியிலாவது நிலத்திலாவது ஆசனத்திலாவது சயனத்திலாவது வைக்கலாகாது. பீட்த்திலாவது பட்டுப்பரிவட்டத்திலாவது காவிப்பரிவட்டத்திலாவது வைத்தல் வேண்டும்.


      15.    திருக்கோயிலி லாவது திருமடத்திலாவது தேவார திருவாசகம் ஒதப்ப்டும் பொழுதும், சைவப்பிரசங்கஞ் செய்யப்படும் பொழுதும், சிவபுராணம் படிக்கப்படும் பொழுதும், நீங்கள் போய்ச் சிரத்தையோடு கேட்டல் வேண்டும்.


      16.    நீங்கள் ஓரோர் காலத்து அறிந்தேனும் அறியாதேனும் அநுட்டிக்கலாகாத கருமங்களை அநுட்டித்தாலும், அநுட்டிக்கத்தக்க கருமங்களை அநுட்டியாதொழிந்தாலும் மனம் பதைபதைத்துக் குருவை அடைந்து விண்ணப்பஞ் செய்து குரு முன்னிலையாகப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும். பிராயச்சித்தமாவது செய்த பாவத்தைப் போக்கும் வாயில்.


      17.    பெறுதற்கரிய மனித சரீரமும் சைவ சமய தேசப்பிறப்பும் சைவசமயப் பிரவேசமும் பெற்ற நீங்கள், இவை வீண் போகா வண்ணம் நாம் இங்கே போதித்தபடி ஒழுகிச் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று வாழக்கடவீர்கள்.


திருச்சிற்றம்பலம்

வியாழன், 26 ஜனவரி, 2023

சிவ பூசை

 சிவ பூசை தத்துவங்களும் அதன் பயனும்




  வாழ்க்கையின் பயனைப் பெறுவதற்கு சிவபூசை இன்றியமைாததாகும், இதனை தற்கால சந்ததியினர் உணர்ந்து அதன்வழி ஒழுகாதிருப்பதால் சிவபூசையின் தத்துவங்களையும்,உணர்வுகளையும் உணராதிருப்பதால் சிவபூசை பற்றிய அறிவு தெளிவது அவசியமாகிறது.

  நாம் முற்பிறபபில் செய்த புண்ணியங் காரணமாக பெறுதற்கரிய இம்மானுட பிறப்பை நமக்கு தந்து, திருவருள் பாலித்தருளியுள்ளார் நம் பெருமான். நமக்கு இம்மானிட தேகம் தந்தது சரியை, கிரியை, யோகம், ஞானம்என்னும் சிவ புண்ணிங்களை செய்து தம்மை வழிபட்டு சிவஞானம் உதிக்கும்படி செய்து முத்தியின்பத்தை தரும் பொருட்டே ஆகும். 

  விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கும் அரும்பு மலர் காய் கனி போன்றே என்னும் தாயுமான சுவாமிகளின் திருவாக்கால் உணரலாம். இது படி முறை என்றமையால் காலை வைத்து தான் அடுத்த படிகளில் ஏறமுடியும் என்பதும், ஏறி இறைவனை அடைய முடியும் என்பதும் கூறாமலே விளங்கும், இதனால் இதன் இன்றியமையாமை புலனாகிறது. இந்நான்கு சரியை யாவது புறத்தாெழிில் மாத்திறையானே சிவபெருமானுடைய உருவத்திருமேனியை நோக்கி வழிபடுதலாகும். நெறியில் இரண்டாம் படிமுறை ஆகிய கிரியை நெறியில் விசேட தீட்சை பெற்று அருவுருவ திருமேனியாகிய சிவலிங்க பெருமானை ஏற்ற அகத்தொழில் புறத்தொழில் என்ற இரண்டாலும் வழிபடுவதாம்.இதில் தான் சிவபூசை அடங்கும்.அது ஆணவத்தை நீக்கி பிறவி ஒழிந்து மோட்சத்தை தரும்படி வேண்டித்தூப தீபங்களாலும், சந்தனம், பஷ்பம், திருமஞ்சனம் முதலிய பூசோபகரங்களை கொண்டு பஞ்ச சுத்தி செய்து அகமும் புறமும் பூசித்து அக்கினி காரிமும் பண்ணி பெருமானுடைய வரத அத்தத்தில் உடல், பொருள் ஆவி மூன்றையும் ஒப்பித்தலாகிய சிவபூசையாம்.

   மந்திரம், கிரியை,பாவனைகளால் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் ஒருமித்து மெய்ணன்போடு கிரியை செய்தல்  வேண்டும்.

   கோடி தீீர்த்தம் ஆடினாலும் அரனுககு அன்பில்லையேல் ,,,,, மூர்க்கரோடு ஒப்பர் 

 நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுள்ளே புக்கு நிற்கும் பொன்னா் சடையன். 

  வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,. தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவி துதியாத உறுப்புகளும் , பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டு நாமம் நவில்கிலார் ஆக்கைக்கு இரை தேடி காக்கைக்கே இரையாகி கழிவர் என்ற தேவாரப்பாடல்களால் நமக்கு தந்த ஆக்கையை இறைவனுக்கு பயன் படுத்த வேண்டும் என்பதை தெளிவாகக் காணலாம்,

  மானிட பிறவி எடுத்த காலத்தில் அனுபவிக்கும் துன்பத்தை சிந்தித்தால் பிறவாதிருத்தல் தவீர வேறு ஒன்றும் வேண்டாமென எண்ணும் முடிவிற்கே வரக்கூடும்  எனவே பிறப்பு வேண்டாதிருக்கவும், பிறந்தால் உன்னை மறவாமல் உன்னடியில் இருக்க வேண்டுமென்றனர் அப்பர் அடிகளும், காரைக்கால் அம்மையார்களும். பிற பிறப்புக்களில் ஜீவன் ஒழிந்த பிறகும் அச்சரீரம் ஊழ்வினையால் சிவகாரியத்திற்கு ஆகலாம். பல்வேறு சரீரங்களால் சிவவழிபாட்டிற்கு உதவும்் புனுகு, கவரி, கோரோசனை, தந்தம், தேன், நரம்பு, தோல், போன்றும், தாவரங்களின் பூ,இலை, காய் கனி போன்றும் இறைவனுக்காக தங்களின் பாகங்களை வழங்கி பெருமை சேர்க்கின்றன, ஆனால் மானிட உடம்பால் இறந்தபின் நாற்றம் எடுத்து வேண்டா பெருளாகி விடுகிறது.

 முற்பிறப்பின் புண்ணியத்தால் இம்மானிட சன்மத்தை பெற்றதன் மேலீட்டினால் செய்யும் சிவபூசையானது இருவகைப்படும், அது ஆன்மார்த்த பூசை, மற்றொன்று பிராத்த பூசை என்பனவாகும்.

  ஆச்சாரியாரிடம்தீட்சை பெற்று அடியேன் இச்சரீரம் உள்ள வரையுஞ் சிவார்ச்சனை செய்வேன் என்று உறுதி செய்து அவரிமிருந்து பெற்ற சிவலிங்கத்தை பூசிப்பது ஆன்மார்த்த பூசை அல்லது இட்டலிங்க பூசையாகும்.

   எல்லா ஆன்மாக்களும் அனுக்கிரகம் செய்யும் காரணமாக கோயில்களில் பிரதிஷ்டை செய்து பூசிப்பது பிராத்தலிங்க பூசையாகும்.

  ஆன்மார்த்த பூசைக்கான லிங்கங்கள்,கணிசங்களாலும், ( மண், மாவு, சந்தனம், மஞ்சள், சாதம்), பொன்போன்ற உலோகங்களாலும் (தங்கம், வெள்ளி தாமிரம், இரும்பு, பித்தளை) பிரதிஷ்டை செய்யப்படுவன.

  இட்டலிங்க பூசையானது மூன்று வகையாக சிவகாமங்கள் விரிக்கின்றன, 

1, சுத்த சிவபூசை ( சிவ லிங்கம்மட்டும் கொண்டு வழிபடுவது)

2, கேவல சிவபூசை ( ஐம்மூர்த்திகளை கொண்ட வழிபடுவது)

3, மிக்சிர சிவபூசை ( பலமூர்த்தங்கள் உடைய சிவ வழிபாடு)

 ஆன்மார்த்த பூசை தவிர்த்து பிரார்த்த சிவபூசையில் சுத்த சிவபூசையில் லிிங்கம் பிரதிஷ்டை கீழ்கண்ட வாறு அமையும்

 1,பாணலிங்கம் பூசை அல்லது சுயம்பு லிங்க பூசை

 2, ஏனைய லிங்க பூசை

    பாணலிங்க பூசைக்கு ஆவாகனம் என்ற சடங்கு தேவையில்லை, காரணம் லிங்கத்ததில் இறைவன் தானாகவே தோன்றி அதில் வீற்றிருக்கிறார். இதே போன்றுதான் சுயம்பு லிங்கத்திலும்,

  ஏனைய லிங்கங்களில் ஆவாகனம் செய்து தான் வழிபாடுகளை தொடங்க வேண்டும். ஆவாகனம் என்பது எழுந்தருளுதல், அதன் பின் ஸ்தாபனம், சந்நிதானம் மற்றும் சந்நிரோதனம் ஆகிய நான்கையும் சேர்த்து செய்தலே சிவபூசையின் லட்சணமாகும்.

   ஆன்மார்த்த பூசை செய்யாது பிரார்த்த பூசை செய்தல் பூசையின் பயனை இழப்பதுமன்றி நரகத்துன்பத்தை அடைவர்

   சிவபூசை செய்யாது உண்பவனுடைய உணவானது புழுவாம், பிணமுமாம், பெரும் பாவமுமாம்.

   சிவபூசையின் பெருமையை உலகத்தாருக்கு அறிவிக்க நினைந்த பேரருளாலே உல மாதாவாகிய உமாதேவியாரும், விநாயகரும், கந்தரும், பூவுலகத்தை அடைந்து காஞ்சி திருச்செங்கோடு, செருத்தனி  முதலிய சிவலாயங்களில் சதாக்கிய (லிங்க) திருவுருவை பூசித்து வணங்கினார்கள்.

   சிவபூசை மூன்று காலமாவது, இரண்டு காலமாவது, சக்தியற்றவர்கள் ஒரு காலமாவது தவறாது செய்ய வேண்டுமென்று கால நியமம் பிரதிபாதிக்கிறது.

  ஆன்மார்த்த பூசையை மனவுறுதியுடன் செய்தவர்கள்  பிரமசுத்தி முதலிய பாவங்களையும், பகைகளையும் நீங்கி பெருவாழ்வு வாழ்வார்கள்.

  மூவுலகு ஐசுவரங்களையும் பலவித தானங்களாலும், யாசகங்களாலும் எய்திய பலன்களையும், வெற்றியையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அடைவார்கள்

  ஆணவ மலத்தை வென்று மோட்சத்தை அடைவார்களாக விளங்குவார்கள் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்கின்றன, 

   சிவார்ச்சனைக்கு அன்பினால் கொண்டு செய்தவர்களும், பூசையை தரிசித்தவர்களும் பிறவித் துன்பம் நீங்கும் மெய்யறிவு பெற்று சிவலோகத்தை அடைவர் என்கிறது புராணங்கள்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; சிவபூசா தத்துவங்கள்

செவ்வாய், 17 ஜனவரி, 2023

சைவ சித்தாந்தம் அத்துவிதம்

 சிவஞான போதம் – இரண்டாம் நூற்பா

இரண்டாம் நூற்பா
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே” (சிவஞானபோதம் – நூற்பா-2)
பெண் ஒருத்தி பருவம் அடைந்து உரிய காலத்தில் நல்ல கணவனைத் திருமணம் செய்கிறாள். கருவுற்றுப் பத்து மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை வளர்ந்தபின் பள்ளிக்குச் செல்கின்றது. கருவுற்ற காலத்தில் குழந்தையும் தாயும் ஒன்றாக இருந்தனர். பிறந்த குழந்தை சில காலம் தாயாருடன் இருந்தது. வளர்ந்த பின் தாயை விட்டுப் பிரிந்து வேறாகப் பள்ளிக்குச் செல்கின்றது. ஒன்றாக, உடனாக, வேறாக இருக்கும் நிலையைக் கண்கூடாகக் காண்கிறோம். அதுபோல இறைவன் ஞான நிலையில் அருவநிலையில் உலகத் தொகுதியுடன் ஒன்றாகவும், உடனாகவும், வேறாகவும் இருப்பான். தத்துவ உலகில் அவ்வாறு இருத்தல் அத்துவிதம் என வழங்கப் பெறுகிறது.
உலகத்துக்கு முதல்வனாக உள்ள இறைவன் உயிர்களுக்காக உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கின்றான். உடம்பு இருந்து செயல்படுவதற்கு உயிர் அந்த உடம்புடன் கலந்து அவ்வுடம்பாகவே நிற்கும். அதுபோல உயிர்கள் நிலைபெற்றுச் செயல்படுவதற்கு அவ்வுயிர்களிடத்து இறைவன் கலந்து அவ்வுயிராகவே இருப்பான். இவ்வாறு இருத்தல் ஒன்றாய் நிற்றல் என வழங்கப் பெறும்.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி”
என்று திருவாசகத்தில் வருவது இத்தகைய ஒன்றாய் நிற்றல் ஆகும்.
கண்கள் காண்பதற்குத் துணையாக ஒளியைத் தருவது சூரியன் ஆகும். சூரியன் கண்களிலிருந்து வேறாதல் போல உயிர்களிடத்தில் அறிதலைச் செய்வதற்குத் துணையாக நிற்கும் இறைவன் அவ்வுயிர்களின் வேறாக நிற்பான்.
“மண் அல்லை, விண் அல்லை, வலயம் அல்லை
மலை அல்லை, கடல் அல்லை, வாயு அல்லை”
என்று தேவாரத்தில் வருவது வேறாக நிற்றல் ஆகும்.
கண் ஒளி பொருளைக் காண்பதற்கு உயிரறிவு உடன் நின்று காண வேண்டும். சில சமயங்களில் வேறு சிந்தனையுடன் நடந்து கொண்டிருப்போம். கண்கள் விழிந்திருந்தாலும் எதிரில் வரும் நண்பரைக் காண்பதில்லை, பார்க்காமலேயே நடந்து கொண்டிருப்போம். உயிரறிவு கண்களுடன் பொருந்தி உடன்நின்று காணாததால் அந்நிலை ஏற்படுகின்றது. அதுபோல இறைவன் உடனிருந்து அறிவிக்கவில்லை என்றால், உயிர்கள் அறிய மாட்டா. உயிர்கள் பொருள்களை அறிந்து அனுபவித்தலுக்கு இறைவன் உடனாய் நிற்றல் வேண்டும்.
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துவிசுகளுக்கு உடனாகி”
என்று சுந்தரர் பாடியது இறைவன் உடனாய் நிற்றலை உணர்த்தும்.
இறைவன் உயிர்களுடன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இரண்டறக் கலந்து நிற்றலைச் சைவ சித்தாந்தம் அத்துவிதம் என்று கூறுகின்றது. இறைவன் உயிர்களுடன் செயல்படும் நிலைக்கு மூன்றுவிதமான கருத்துக்கள் தத்துவ உலகில் கூறப் பெறுகின்றன.
1) பொன்னே ஆபரணமாவதைப் போல பிரம்மமே உயிராயிற்று என்று ஏகான்மவாதிகள் கூறுவர்.
2) இருளும் ஒளியும் போல இறைவனும் உயிரும் வேறு வேறு என்று மத்துவர் கூறுவர்.
3) சொல்லும் பொருளும் போல இறைவனும் உயிரும் ஒருவிதத்தில் ஒன்றாயும் வேறு விதத்தில் வேறாயும் இருக்கும் என்று வைணவர் கூறுவர்.
ஆனால் இம்மூன்று கொள்கையும் சைவ சித்தாந்தத்தில் மறுக்கப் பெறும்.
உயிர்கள் மனத்தால் நினைத்தலையும், வாயால் சொல்லுதலையும், உடம்பால் செய்தலையும் மேற்கொள்கின்றன. இவை வினை என வழங்கப் பெறும். வினையின் பயன் விளையும்போது இன்பமாயின் நல்வினை என்றும் தீமையாயின் தீவினை என்றும் பெயர் பெறும். வினைகள் அறிவில்லாத சடமாகலான் தம்மைச் செய்த உயிரைத் தாமே சென்று சேரா. வினையும் வினைப்பயன்களையும் உயிர்களுக்குக் கூட்டுபவன் இறைவன் ஆவான்.
வினைப் பயன்களையும், பயன்களை அனுபவிப்பதற்குரிய உடல் கருவிகளையும் இறைவன் தன் ஆணையாகிய திருவருட் சக்தியால் தோற்றுவிப்பான். இறைவன் எண்ணத்தையே தனக்கு ஆணையாகக் கொண்டு திருவருட் சக்தி இயங்குவதால் அதனையே ஆணை என்றனர். ஆணையாகிய திருவருட் சக்தி வினைப் பயன்களை நுகர்தற்கேற்ப உடல் கருவிகள் முதலியவற்றை கூட்டுவதும் நீக்குவதும் செய்யும். கூட்டும் போது பிறப்பும், நீக்கும்போது இறப்பும் உண்டாகின்றன.
எனவே இறைவன் உயிர்களுடன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நின்று தன்னுடைய ஆணை எனப் பெறும் திருவருட் சக்தியினால் செலுத்தப் பெற்று வரும் இரு வினைகளால் உயிரின்ங்கள் பிறப்பு இறப்புகளை மேற்கொள்கின்றன என்பது தெரிய வருகின்றது. செந்தாமரைப் பூவின் செம்மையை பூவிலிருந்து பிரிக்க முடியாமல் ஒன்றியிருப்பதைப் போல ஆணையாகிய திருவருட்சக்தி இறைவனை விட்டு நீங்காமல் ஒன்றி இருக்கும்.
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே” (சிவஞானபோதம் – நூற்பா-2)
அவையே யாய் நிற்கும் – இறைவன் உயிர்களுடன் கலந்து ஒன்றாய் நிற்பான். தானேயாய் நிற்கும் – பொருள் தன்மையினால் உயிர்களின் வேறாய் நிற்பான். அவையே தானேயாய் நிற்கும் – அவையும் (உயிர்களும்) தானுமாய் உடனாய் நிற்பான். ஆணையின் இரு வினையின் – தன்னுடைய திருவருட் சக்தியினால் வருகின்ற இரு வினைகளுக்கு ஏற்ப. போக்குவரவு புரிய – உயிர்கள் பிறந்தும் இறந்தும் வருமாறு செய்து. ஆணையின் நீக்கமின்றி நிற்கும் – அத்திருவருட் சக்தியின் நின்றும் தான் வேறாதல் இல்லாமல் கலந்து நிற்பான். 1) இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் அத்துவித நிலை.
2) உயிகளுக்கும் உண்டாகும் – உயிர்கள் செய்யும் இரு வினைகள்.
3) இருவினைகள் காரணமாக வரும் பிறப்பு இறப்புகள்.
4) வினைகளைச் செயல்படுத்தும் திருவருட் சக்தி.
ஆகிய நான்கு பற்றிய செய்திகளே இரண்டாம் நூற்பாவில் விரிவாக விளக்கப் பெறுகின்றன. மெய்கண்டார் பத்து வெண்பாக்களில் அவற்றை விளக்கியுள்ளார். அவர் மாணக்கர் அருள்நந்திசிவம் சிவஞான சித்தியாரில் அறுபத்தாறு பாடல்களில் அவற்றை விளக்கமாகப் பாடியுள்ளார். சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவின் செய்திகளை ஏறக்குறைய 170 பக்கங்கள் மிக விரிவாக விளக்கு எழுதியுள்ளார். படிப்போர் புரிந்துகொள்ளும் முறையில் சில செய்திகள் சுருக்கமாகத் தரப் பெறுகின்றன.
நாடி, நரம்பு முதலியவற்றால் கட்டப்பெற்ற உடம்பினையும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளையும் பற்றி நிற்கும் உயிரானது – உடம்பிற்கு வைத்த பெயர் கொண்டு முருகா! கந்தா! என்று பிறர் அழைத்த போது, ஏன்? என்று கேட்கும்.
இருவர் ஒன்றாகச் செல்லும் போது அவ்வாறு பெயரைச் சொல்லி அழைத்தால் அப்பெயருக்கு உரியவன் ஏன்? என்று கேட்பான். உடம்புக்கு வைத்த பெயர் கொண்டு அழைத்தபோது உயிர், ஏன்? என்று கேட்டதற்குக் காரணம் உயிரானது உடம்பு என்றும் தான் என்றும் வேற்றுமை காணாமல் ஒன்றாக நிற்பதே காரணமாகும். அதுபோல இறைவன் உயிர்களிடத்தில் வேறுபடாது நன்றாக இயைந்து நிற்பதே கலப்பினால் ஒன்றாக நிற்றல் எனப்படும்.
உயிரும் மெய்யுமாக உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் ‘அ’கரம் முதலானாற் போல உயிர்களும், உடம்புகளுமாக உள்ள உலகத்திற்கு இறைவன் முதல்வன் ஆவான்.
“அகர முகர எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ”
என்று திருவள்ளுவரும் அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறியுள்ளார். அகரம் தானும் இயங்கிப் பிற எழுத்துகளையும் இயக்கும். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பது தொல்காப்பியம். அகரம் தனித்தன்மையும் தலைமைத் தன்மையும் உடையது. அதுபோல இறைவன் பிறவற்றை இயக்கும்போது வேறாக இருப்பான்.
பண்ணும் அதனின் வேறாகாத இசையும் போலவும், பழமும் அதனின் வேறாகாத சுவையும் போலவும் இறைவன் உயிர்களிடத்தில் வேற்றுமையின்றி உடனாய் நிற்பான். உருக்கிய அரக்குடன் கலந்த கற்பொடியானது அந்த அரக்கினுடன் சேர்ந்து ஒருங்கு இயைந்து நீக்கமின்றிச் சாணைக் கல்லாய் நின்றதைப் போல, இறைவன் உயிர்களிடத்தில் ஒருங்கு சேர்ந்து நீக்கமின்றி உடனாதலால் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பான்.
இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும்போது இரு வினை நிகழும்.
‘இவ்வான்மாக்கட்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும்’ என்பது சிவஞானபோத மேற்கோள்.
இன்றைய உலகில் செல்வத்துடன் வீடு, ஊர்தி, நிலம், தொழில் முதலியவற்றால் சிலர் சிறப்பாக வாழ்கின்றனர். சிலர் வறுமையுற்று, வீடு முதலியன இல்லாமல் துன்பப்படுகின்றனர். எல்லாவற்றையும் நடத்துபவன் இறைவன் என்றால் இத்தகைய ஏற்றத்தாழ்வு வரலாமா? என்று தடை எழுப்புவர் உள்ளனர்.
நாட்டையும் நகரத்தையும் ஆட்சி செய்யும் மன்னன் மக்களுக்கு இடையூறு வாராமல் காக்கும் கடமை உடையவன். அரசாட்சி நெறிமுறைக்கேற்ப வாழ்வோர்க்கு நல்லன செய்வான். நெறியில் இல்லாமல் குற்றம் செய்வோர்க்குத் தண்டனை கொடுப்பான். தண்டனையை மன்னன் நேரே கொடுப்பதில்லை. அங்குள்ள நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் செயல்படுத்துவான். இறைவ உயர்ந்தோர் மூலம் அற நூல்களையும் அருள் நூல்களையும் வழங்கி அறநெறிப்படி வாழ வழிவகுத்துள்ளான். நன்னெறியில் ஒழுகியவர்க்கு அவர் செய்த வினைக்கேற்ப நன்மைகளைத் தருகின்றான். தீய வழியில் நடந்தவர்க்குத் தீமைகளைத் தருகின்றான். தீமை போலத் தோன்றினாலும் உயிர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தி நன்னிலைப்படுத்துவதற்கே ஆகும்.
‘திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள்கயிலாயா’ என்பது சுந்தரர் வாக்கு. உயிர்களுக்கு நன்மை புரிதலும் தண்டித்தலும் இறைவன் ஆணையாகிய திருவருட்சக்தியின் மூலமே நடைபெறும்.
முற்பிறப்புக்களில் செய்யப்பெற்ற வினைத் தொகுதிக்குப் பழவினை, தொல்வினை, சஞ்சிதம் எனப் பெயர்கள் வழங்கப் பெறும். அத்தொகுயிலிருந்து இப்பிறப்பில் அனுபவிப்பதற்கென்று எடுத்துக் கொண்ட வினை நுகர்வினை, ஊழ்வினை, பிராரத்தம் என்று வழங்கப் பெறும். வினையை நுகரும்போது மனம், மொழி, மெய்களால் செய்யப் பெறும் புது வினை எதிர்வினை, ஆகாமியம் எனப் பெயர் பெறும். வினைக் கோட்பாட்டில் 1) செய்வான், 2) செய்வினை, 3) வினைப்பயன், 4) பயனைக் கொடுப்போன் என்ற நான்கு அடிப்படை சைவ சித்தாந்தத்தில் கூறப் பெறும்.
பழவினையே உயிர் அனுபவிப்பதற்குரிய இன்ப துன்பங்களையும் அவற்றிற்கு இடமான உடம்பையும் தோற்றுவிக்க உயிர் அவ்வுடம்பைப் பொருந்திப் பயன்களை நுகரும். ஊழ்வினையை நுகரும்போது தோன்றும் புதிய வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமையும். உழவர் செய்யும் உழவுத் தொழில் நேரே பயன் கொடுப்பதில்லை. விளைநிலம் உழவுத் தொழிலை ஏற்று நின்று அதற்குரிய பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களை இறைவனே ஏற்றுநின்று உயிர்களுக்குப் பயன்களைக் கொடுப்பான்.
ஒருவன் இரும்பை எடுத்துக் காந்தத்தின் நேரே பிடிக்கும்போது காந்தம் அவ்விரும்பை இழுத்துக் கொள்ளும். அதுபோல் இறைவன் உயிர்களுக்கு வினைப் பயன்களை நுகர்விக்கும்போது உயிர்கள் தமக்கு இடமாக உள்ள உடம்பிலே இருந்து வினைப் பயன்களை அனுபவிக்கும்.
நெல்லிடத்தில் உமியும், செம்பிடத்தில் களிம்பும் புதியனவாக வந்தன அல்ல. தொன்றுதொட்டே உள்ளனவாகும். அதுபோல மாயா மலம், ஆணவ மலம், கன்ம மலம் ஆகிய மூன்றும் தொன்றுதொட்டே உள்ளனவாகும். சூரியன் ஒளியால் தாமரை மலர் மலர்தலும் வாடுதலும் நடைபெறுவதைப் போல மூன்று மலங்களும் இறைவனின் திருவருட் சக்தியால் தொழிற்படும்.
மாயை சடப்பொருள் உலகத் தோற்றத்திற்கு முதற்காரணமாக இருக்கும். இறைவனுக்கு வைப்பு ஆற்றல் (பரிக்கிரக சத்தி) எனப்படும். ஊர்தி, எழுதுகோல், கருவிகள் முதலியவற்றை வேண்டும் போது பயன்படுத்துகிறோம். அப்போது அவற்றின் ஆற்றல்கள் வெளிப்படும். வேண்டாதபோது உரிய இடத்தில் வைத்து விடுகிறோம். அதுபோலவே இறைவன் படைக்கும் காலத்தில் மாயையைப் பயன்படுத்துவான். தன்னிடத்தில் அடங்கிய மாயையை உடல், கருவி, உலகம், நுகர்பொருளாக விரியச் செய்வான்.
திருவருட்சத்தி சிற்சத்தி (அறிவாற்றல்) எனப்படும். சிற்சத்தி இறைவனைப் பிரியாமல் நீக்கமின்றி நிற்கும். அதனால் தாதான்மியசத்தி என அழைக்கப் பெறும்.
நம்முடைய உடல், கை, கால், கண், செவி முதலிய உறுப்புகள் மாயையே ஆகும். இவ்வுடல் பருவுடல் (தூல சரீரம்) எனப்படும். பருவுடலை விட்டு உயிர் பிரிவது இறத்தல் எனப்படும். “சென்ற உயிரின் நின்ற யாக்கை’ என்பார் தொல்காப்பியர். பிரிந்த உயிர் நுண்ணுடம்புடன் மேலே செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டினால் ஆகிய நுண்ணுடம்பு (சூக்கும சரீரம்) என்ற அழியாததைத் துணையாகக் கொண்டு உயிர் மேலே செல்லும். எட்டினால் ஆனதால் புரியட்ட சரீரம் என்றும் வழங்கப் பெறும்.
எல்லாப் பிறப்புகளிலும் நுண்ணுடம்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். முத்தியடைதல் அல்லது முற்றழிவுண்டாகும் பேரூழிக் காலத்தில் மட்டுமே நுண்ணுடம்பு அழியும். நுண்ணுடம்புடன் செல்லும் உயிர் முன்பு தீவினையை நரகத்தில் சென்று அனுபவிக்க வன்மையான யாதனா சரீரத்தைப் பெற்று அனுபவிக்கும். முன்பு செய்த நல்வினையைச் சுவர்க்கத்தில் சென்று அனுபவிக்க மென்மையான பூதசார சரீரத்தைப் பெற்று அனுபவிக்கும். இவ்வாறு துன்ப இன்பங்களை அனுபவித்து வரும்போது நனவில் கண்டவற்றைக் கனவு காணும்போது மறந்து அறிவு வேறுபட்டதைப் போலப் பருவுடல், நுண்ணுடல், யாதனா சரீரம் ஆகியவற்றில் அறிவு வேறுபட்டு, அனுபவித்தவற்றை மறந்து, புண்ணிய பாவங்களுக்கேற்ப மனம் செலுத்து முறையில் நுண்ணுடம்பாய்ச் சென்று ஒரு கருவினில் சென்று பிறக்கும்.

saiva sinthanai thuligal






 

வியாழன், 12 ஜனவரி, 2023

தத்துவ சிந்தனைகள்

 தத்துவ சிந்தனைகள்

ஆன்மா விளக்கம்
ஆன்மா" விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்குகிறார்.
"பால்"பயனுள்ளதுதான்...
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...
தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...
அதைக் கடைய வேண்டும்....
கடைந்தால் வெண்ணெய்ஆகி விடும் கெடாது...
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....
அதை உருக்க வேண்டும்...
சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......
கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்...
அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு
இந்த பஞ்ச பூத உலகத்தில்,ஆன்மா என்னும் அணுவானது 84,லட்சம் யோனி பேதங்களிலும் பிறப்பு எடுத்து வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறப்பு கொடுக்கப் படுகின்றது,.மனிதப் பிறப்பை நீக்கி மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்றால்,உண்மைக் கடவுளான அன்பால்,தயவால்,கருணையால்,ஆன்மாவில் உள்ள அருளைப் பெற்று,அசுத்த பூத காரிய தேகத்தை,சுத்த பூத காரிய தேகமாக மாற்றி,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று,ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல முடியும்
உடம்போடவோ,மரணம் வந்தோ இறைவனிடம் செல்ல முடியாது...ஆன்மா என்னும் அணு தன்னை உணர்ந்து ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்ல முடியும்.
மேலே கண்ட ஆன்ம அணுக்கள் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து ஒரு அணுக்கள் கூட வெளியே செல்ல முடியாமல்,வழி தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளது ...
இந்த உண்மையை ஆன்மாக்களுக்குத் தெரியப்படுத்தவே சைவ சித்தாந்தம் தெளிவு படுத்துகிறது.
திருச்சிற்றம்பலம்

சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.
2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன் என்னும் மற்றொரு பொருள் உண்டு.
3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.
4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.
5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை
6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை
7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது
8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்
9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.
10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.
திருச்சிற்றம்பலம்
May be an illustration of dog
Like
Comment
Share

0 comments

உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

 உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

மனிதனாகப் பிறந்தால் பிறந்தது முதல் இறுதி வரை யாரேனும் ஒருவரையோ பலரையோ சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்பும், பாலகனானது முதல் கல்வி கற்கும் வரை தந்தையின் கண்காணிப்பும் கல்வியைப் போதிக்கும் குருவின் கருணையும் , மணம் செய்து கொண்டபின்னர் மனைவியின் துணையுடன் செய்யும் அறமும், முதுமைக் காலத்தில் மக்களும் மனைவியும் ஆற்றும் சேவையும், உடலை நீத்தபின்னரும், உறவினர்கள் முறைப்படி இறுதிக் கடன்களை ஆற்றுவதும் போன்ற சேவைகளைப் பலரும் செய்யும்படியாக வாழ்கிறோம்.
இன்பதுன்பங்கள் இல்லாதவன் ஈசன் ஒருவனே. “ இன்பமும் துன்பமும் இல்லானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இன்பதுன்பங்களை சமமாகப் பாவிப்பது எல்லோருக்கும் எளிய செயல் அல்ல. இன்பம் வந்தால் ஆகாயம் அளாவக் குதிப்பதும் துன்பம் வந்தால் துவண்டு போவதும் மட்டுமே நம்மால் இயலும். அப்படியானால் உலகில் நீடு வாழவும் துன்பம் நீங்கி என்றும் இன்பம் துய்க்கவும் வழி இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவனது மலரடிகளை நம்பி அடைக்கலமாக வாழ்பவர் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் திருவள்ளுவர். இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கும் அவ்வுலகம் பெற்றுப் பிறவாத நிலை பெறுவதற்கும் இறைவனது அருள் வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.
இறைவன் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? அவனது உருவம் தான் என்ன? அவனை வழிபட்டால் ஈடேற முடியுமா? உலகில் இத்தனை மதங்களும் பல்வேறு கடவுள்களும் இருப்பதன் நோக்கம் என்ன? இறைவனைக் கண்டவர்கள் உண்டா ? பிறப்பும் இறப்பும் எதனால் ஏற்படுகிறது? எல்லோரும் ஒருபோல வாழாததன் காரணம் என்ன? பிணியும் முதுமையும் ஏற்படுவது எதனால்? அவற்றை வெல்ல முடியுமா? நல்லவர்களும் துயரங்களை எதற்காக அனுபவிக்கிறார்கள்? தீயவர்கள் பலர் சுகவாசிகளாகத் திரிகிறார்களே! தீயவர்களில் பலர் தண்டிக்கப்படாதபோது தெய்வம் இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படாதா? இதுபோன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயற்கை.
மேற்கண்ட கேள்விகளுக்கு அனுபவத்தால் விடை காண்பது சிறந்தது. அந்த அனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது என்றால் குருமூலமாகவும் அறவழி நூல்களாலும், அவ்வழியைக் கடைப் பிடிப்பதாலும் ஆலய தரிசனங்களாலும் கைகூடுவது சாத்தியம். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்படுவதில்லை. பலருக்கு முதுமைக் காலம் வரை அவ்வித எண்ணமே ஏற்படுவதில்லை. சிலருக்குப் பிணி வந்தபோது முதிர்ச்சி ஏற்படும். “ நோயுளார் வாய் உளான்” என்பார் சம்பந்தர். இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே தெய்வ சிந்தனையோ அல்லது தன்னை இறைவனருள் பெறுவதற்கு உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை.
தன்னைத் தயாராக (முக்தி) ஆக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதே விருப்பு வெறுப்பு மெதுவாக நீங்க ஆரம்பிக்கிறது. உடலைப் பற்றிய கவலை நீங்குகிறது. பிணிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆத்ம ஞானம் பிறக்கிறது. இவ்வாறு வேதாந்த ஞானம் ஏற்பட்டால் முக்தி வரம் வேண்டும் இயல்பு வந்து விடுகிறது. இறைவன் தனக்குள் இருப்பதை மெல்ல அறியும் நிலையும் கிட்டி விடுகிறது.
திருவோட்டையும் செம்போன்னையும் எவ்வாறு சமமாகப் பாவிக்க முடியும் என்பதே வினா. அதற்கான ஒரே வழி நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்வதேயாகும். தகுதி ஏற்பட்டால் ஒழிய பாசம் களைவது இயலாததொன்று. பாசத்தைப் பிறர் துணை இன்றி நாமே களைந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்கின்றன சித்தாந்த நூல்கள். இறைவனது கருணையாகிய பற்றுக்கோடு இல்லாமல் உயிர்கள் ஞானம் பெற சாத்தியமே இல்லை என்று அந்நூல்கள் கூறுகின்றன. “ பாசமான களைவார்” என்று அதனை இறைவனது தனிப் பெருங் கருணையாகப் புகழ்வார் ஞானசம்பந்தர். நம்மைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிகளைத் தெளிவாகத் திருவாவடுதுறை என்ற தலத்தின் மீது அவர் பாடியருளிய பதிகத்தால் (3 பதிக) அறியலாம். தன் நெஞ்சுக்குச் சொல்வது போல் நமக்காக இரங்கி உபதேசம் செய்வதை அப்பதிகம் முழுதும் காணலாம். அவரது நிகரற்ற பக்தியின் வெளிப்பாட்டை அப்பதிகத்தில் நாம் காண முடிகிறது. “நற் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்று அவரை சுந்தரர் சிறப்பித்து அருளிச் செய்துள்ள திருத்தொண்டத்தொகை வரிகளும் இக்கருத்துக்கு அணி செய்கின்றன.
“ இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”
“ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”
“ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்”
“ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா “
“கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”
“ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் எத்தாதென் நா”
“ வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா “
“பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”
“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர்க்கழலலால் உரையாதென் நா”
“பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா”
என்ற வரிகள், நமக்கு எவ்விதத் துயரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் கொடுக்க வல்லன. நாள் தோறும் இதனைப் பாராயணம் செய்யச் செய்ய அந்நிலை அடைவதற்காக அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நமது அனுபவத்தால் அறிய முடிகிறது. இந்த ஞான முதிர்ச்சி ஒன்றே நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவித்துப் பேரின்பமாகிய சிவானந்தம் பெற ஆற்றுப் படுத்தும். உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மையும் வெளிப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
May be an image of 2 people