செவ்வாய், 12 மே, 2020

இறைவன் கோயில் கொள்ளும்உள்ளங்கள்

இறைவன் கோயில் கொள்ளும்உள்ளங்கள்



" அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
  ஐம்புலனும் அடக்கி ஞானம்
 புகலுடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து
 உள்ளிருக்கும் புராணர் ........ தி,மு1,132,6

போலிகளை கண்டு ஏமாறாமல் வாழ்வதற்கு இப்பாடல்  பெரிதும் உதவியாய் இருக்கும்.
சிவபெருமானார் ஒருவருடைய உள்ளத்தில் தங்க வேண்டுமானால் 
1) அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்திரு்க வேண்டும். அன்பு என்பதன் பொருள் சுயநலம் இல்லாமை என்பதும் ஆகும். ஒருவர் அன்புடையவர் என்றால் பிறர் நலத்திற்கு உதவும் பண்பு மிகுந்த காணப்பட வேண்டும்.இத கொள்ளத் தக்க குணங்கள்
2, காமம், குரோதம், லாேகம், பேராசை, பாேன்ற ேவண்டாத்தீய குணங்கள் இல்லாதிருக்க வேண்டும்.
3. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களையும் அவற்றின் போக்கில் செல்லவிடாமல் நல்ல வழிியில் செலுத்தும் பண்புடையவராய் இருத்தல் வேண்டும். வேண்டாதனவற்றை பார்க்கக் கூடாது. பிறருடைய இரகசியங்களை கேட்பதில் செவிடராய் இருத்தல் வேண்டும். உணவில் அதிவிருப்பம் கூடாது. வாயினால் தீய வார்த்தைகள் பேசுதல் கூடாது. மூக்கினால் மனதை திசை திருப்பும்நுகர்வுகளில் நுகர்தலும், உடம்பினால் மயக்கம் காெள்ளுதலும் கூடாது.
 இந்த ஐந்த பொறிகளை இறைவழிபாட்டிற்கே பயன்படுத்தும் பழக்கம் வேண்டும். சிவ சிந்தனையே மிகுந்திருக்க வேண்டும்.
சிந்தனை செய்ய மனம் அமைத்தாய்  .... திமு 11
சி்ந்தனை நின்தனக்கு ஆக்கி ........ திமு, 8
 இப்படியெல்லாம் மனதை திருத்தி அதனை தாமரை மலர் பாேல் ைவத்திருக்கும் சான்றோர்களின் 
( சிவஞானியர்களின் ) உள்ளத்தில் சிவம் விளங்கும் என்கிறார்கள் திருமுறை தந்த அருளாளர்கள். உள்ளக்கோயிலேயே இறைவனுக்கு திருக்கோயில் கட்டி இறைவனையே அங்கு எழுந்தருளச்செய்து குடமுழுக்கு செய்து  உள்ளக்கோயில் கட்டியவர் பூசலார் என்ற சிவஞானி.
 போலி வேடதாரிகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது என்பதற்கு அருளாளர்கள் தந்த விளக்கம் தான் அவர்கள் அருளிய திருமுறைகள்.
திருச்சிற்றம்பலம்

திங்கள், 11 மே, 2020

இறைவழிபாட்டில் தமிழின் பெருமை

இறைவழிபாட்டில் தமிழின் பெருமை

சுமார் 7ம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் மொழியின் நிலை கேட்போர் இல்லாத நிலையில் திருஞானசம்பந்தர் மற்றும் சைவ சமய நால்வர் மற்றும் திருமுறை ஆசிரிய பெருமக்களால் ஏற்றம் கண்டது தமிழ். தமிழால் சைவமும், சைவத்தால் தமிழையும் வளர்த்த பெருமை இவ்வாசிரிய பெருமக்களுககே தகும். இறைவனேயே தமிழாகவும், திருமந்திர தேவாரப்பாடல்களே மந்திர மொழியாகவும் ஏற்றம்  பெறச் செய்தனர்.

“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு உலகத்தவர்க்கு உயர்வு தரும் தமிழால் வழிகண்டவர் திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுகின்றார். பதிகப் பெருவழியாகிய இறையன்பு நெறியை நமக்கு அளித்தவர் திருஞானசம்பந்தர். தெரிந்த, எளிய, அன்னைத் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதே இதன் கருத்து. இதனையே தமிழர் வழிபடு மரபாகச் சேக்கிழார் தமிழர் வாழ்வியல் பெட்டகமான பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

 அடியார்கள் பெருமையை எவ்வாறு, என்னசொல்லிப் பாடுவது என்று சேக்கிழார் இறைவனை உள்கி நின்றபோது, “உலகெலாம்” என்று இறைவன் அன்னைத் தமிழில் அடியெடுத்துக் கொடுத்தார். பெருமானின் சிவஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் திருநெறிய தமிழில்தான்  இறைவனைப் பாடினார். சிவஞானபால் தமிழ்ஞானம் ஊட்டியதை என்னுகையில் சிந்தை குளிர்கின்றது. சூலை நோயால் துடிதுடித்துத் தமக்கைத் திலகவதியாரிடம் திரு நீறு பெற்று, அதிகை வீரட்டானத்து இறைவனைச் “சலம்பூவோடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று அழகு தமிழில் பாடியே சூலை நோய் நீக்கினார் திருநாவுக்கு அரசர்” என்று இறைவனால் அழைக்கப்பெற்ற அப்பர் பெருமான்.

 பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார். தமிழ்ஞானசம்பந்தர் பிறப்பினைப் பற்றி குறிப்பிடும் சேக்கிழார், “திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றுஏற, மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல, அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல, இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக” என்று குறிப்பிடுகின்றார்.

   தமிழர்கள் தங்கள் அன்னைத் தமிழின் பெருமையை மறந்த நிலையினையும் தமிழர்களின் இறைவழிபாட்டில் திருநீராட்டு, குடமுழுக்கு, பூசனை, ஓதல் அனைத்தும் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதனைச் சேக்கிழார் சுட்டிக் காட்டுகின்றார். தமிழர்கள் வாழும் தென்திசையின் பெருமை உலக முழுமைக்கும் சிறக்கவும், தமிழர் மரபாகிய சிவ நெறியும் தமிழ் மொழியும்,, தமிழர்தம் வழக்கங்களும், தமிழர் இசையும், மெய்யறிவும் மற்ற வழக்குகளைக் காட்டிலும் சிறக்கத் திருஞானசம்பந்தர் தோன்றினார் என்கிறார். திருஞானசம்பந்தர் கால கட்டத்திலேயே தமிழர்கள் தங்கள் தமிழ் வழக்கங்களைத் தொலைத்து விட்டிருந்திருக்கிறார்கள் என்றும் இதில் புலப்படுகின்றது.

 அருளாளர்கள் அன்னைத் தமிழில் பாடிய திருமுறைகள் தமிழ் மந்திரங்கள். அவை இறைவழிபாட்டிற்கு உரியவை என்பதனை, “பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி” சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இன்னும் திருமுறைகள் பாடிய நாயன்மார்களின் பதிகங்களுக்குச் சேக்கிழார் பல அரிய அடை மொழிகளைத் தந்து குறிப்பிடுகின்றார். பெருமானிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் தமிழ் மந்திரங்களைச் சேக்கிழார், “உரைத்தமிழ்மாலை, கோதில் திருப்பதிகம், தேமாலை செந்தமிழ், அருந்தமிழ், தூமொழி, நற்றமிழ் மாலை, விருத்தத் திருமொழி, அருஞ்சோல்வளத்தமிழ் மாலை, நாவார் பதிகம், சொன்மாலை, எழுது மறை, ஒப்பரிய தமிழ், அஞ்ஞான செந்தமிழ்ப்பதிகம்” என்று பலவாறாகப் போற்றுகின்றார்.

 பெருமானின் அருள்பெற்றுப் பெருமானை முழுக்க-முழுக்கத் தமிழிலேயே அருளாளர்கள் பாடி, பெருமானின் திருவடி நிழலை அடந்து காட்டியும் நம் போன்ற தமிழர்களுக்கு இன்னும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை! திருக்கோயில்களில் நம் அடியவர் பெருமக்கள் ஓதி இறைவனை வழிபட்ட தமிழ் மந்திரங்கள் இறப்பு வீடுகளில் மட்டும் ஓதப்பெறுவதும், அங்கு ஓதுவதற்கு மட்டுமே தகுதியுடையது என்று எண்னுவதும் நம் அறியாமையே.

சீர்மிகு செந்தமிழரின் அன்னை மொழியாகிய அருந்தமிழ் பெருமான் விரும்பிக் கேட்டது என்று கண்டோம். பெருமானின் அருள்பெற்ற அருளாளர்கள் அன்னைத் தமிழிலேயே பெருமானைப் பாடி வழிப்பட்டார்கள். இதற்குச் சான்று இறையன்பும் நெகிழ்வும் குழைவும் மிக்க பன்னிரண்டு திருமுறைகளும், பிற்காலத்து அடியார்களின் இறையன்புப் பனுவல்களும் ஆகும். பதினேழாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட தமிழ் மந்திரங்களான திருமுறைப் பாடல்கள் பெருமானைத் தமிழில் போற்றி வழிபட பாடப்பெற்றவையே!

 ‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒரு போதும் இருந்தறியேன்” என்று பாடுகின்ற பாடலின் பொருள் தெரிந்து உள்ளம் உருகிப் பெருமானை வழிபடுகின்றப் போது இறைவனிடத்திலே அன்பு பெருகுகிறது. உள்ளம் கசிகின்றது. கண்ணீர் மல்குகின்றது. நம் உளச் சுமைகளெல்லாம் குறைகின்றது. ஊன் உருகுகின்றது. உயிர் உருகுகின்றது. உவட்டாத இன்பம் சிந்தையில் கொப்பளிக்கின்றது. உள்ளத்து இருள் நீங்கி உள் ஒளி பெருகுகின்றது. வழிபாடுகளில் இடம் பெரும் கிரியைகள் அல்லது செயற்பாடுகள் உயிர் அறிவுபெறுவதற்குத் தேவையான செய்திகளைச் செயற்பாடுகள் மூலம் உணர்த்துவனவாகும். பூசனைகல் இடம் பெறும் செயற்பாடுகள் இறைவனின் பெருமைகளையும் பெருங்கருணையையும் உணர்த்துவன. இதனை உணர்ந்து நம் அறியாமையினைப் போக்கி, அன்புப் பிழம்பாய் மாறி நற்சிந்தனை, நற்செயல், நல்ல சொற்கள் பேசி உயிர் விளக்கம் பெற்று வாழ்வதே இறை நெறிக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதனை உணர்த்துவதற்கே இக்கிரியைகள் செய்யப்படுகின்றன.

 உயிர் அறிவு பெறுவதற்கு இறைவனிடத்திலும் இறை வாழும் பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே சிறந்த வழி என்பதனை அன்பே சிவம் என்று திருமூலர் குறிப்பிடுவார். இறைவனிடத்தில் அன்பு ஏற்படுவதற்கு இறைவனைப் புரிந்த மொழியில் வழிபட வேண்டி இருக்கின்றது. இறைவனைப் பற்றிய உண்மைகளையும், உயிரைப் பற்றிய உண்மைகளையும், உலகைப் பற்றிய உண்மைகளையும், முழுமையாகவும்,தெளிவாகவும், தமிழர் தம் பண்பாட்டிற்கும் மரபிற்கும் உட்பட்டு, விளங்கும் மொழியில் நமக்கு அறிவிப்பது அன்னைத் தமிழில் உள்ள திருமுறைகளே!
 “இரும்பு மனத்து என்னை உருக்கி, நின் கரும்பு சுவை எனக்குக் காட்டினை” என்று மணிவாசகர்   நைந்து உருகிப் பாடியது, வழிபட்டது அன்னைத் தமிழில்தான்.

இறைவன் தான் தன்னைத் தமிழில் பாட வைத்தான் என்பதனைத், “தன்னார் தமிழ் அளிக்கும் தன் பாண்டி நாட்டானை” என்று மணிவாசகர் குறிப்பிடுவார்.

பெருமான் தமிழ் வழிபாட்டினைக் கேட்டு இரங்குவான் என்பதனை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர் முன்தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை, கோளிலிப் பெருங்கோயில் உளானை, கோலக்காவில் கண்டு கொண்டேனே” என்று சுந்தரர் பாடுகின்றார்.

 தமிழ் மந்திரங்களான திருமுறைகள் இறைவனை இரங்க வைக்கக் கூடியவை என்னும் தமிழிலேயே இறைவனைப் பாடி அடையலாம் என்பதனைச் சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருமூலர், சேரமான் பெருமான் நாயனார், பொய்யடிமை இல்லாத புலவர்கள் போன்றோரின் வரலாறுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் தெளிவுற விளக்குகின்றார்.

 உண்மையான வழிபாட்டு முறைகளையும் உண்மையான சிவநெறிக் கொள்கைகளையும் உண்மையான இறையன்பு மீதூறும் நெறிமுறைகளையும் நமக்குத் தமிழில் உணர்த்தும் தமிழ் மந்திரங்களான திருமுறைகள் பல அருள் நிழக்வுகளை அடியார்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ளமையைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் காட்டுகின்றார்.
   தமிழால் இறைவனை வழுத்திப் பாடி தமிழ்ஞானசம்பந்தர் ஆண் பனையைப் பெண்பனை ஆக்கியதும்,
சாம்பலை மறுபடியும் பெண்ணாக்கியதும், பாம்பு தீண்டி இறந்த வனிகனை மறுபடியும் உயிர்ப்பித்ததும்,
நீரில் திருமுறை எழுதிய ஓலை எதிர்த்து சென்றதும், தீயில் திருமுறை எழுதிய ஓலை வேகாமல் பச்சையாய் நின்றதும்தமிழ் வழிப்பாட்டினால்தான்.
தமிழ் ஓதி முத்துப் பல்லக்குப் பெற்றதும் , பொன் தாளம் பெற்றதும்,முத்துப் பந்தல் பெற்றதும், பொற்காசு பெற்றதும், குளிர் நோய் போக்கியதும், கடும் வெப்பு நோயைப் போக்கியதும் தமிழால்தான்.

 திருநாவுக்கரசு அடிகள் கல்லில் கடலில் மிதந்ததும், நீற்றறையில் உயிர் பிழைத்ததும், மதங்கொண்ட யானையை அடக்கியதும், சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப் பெற்றதும், இறைவன் திருவடி தம்மேல் சூட்டப் பெற்றதும் தமிழில் வழிபட்டுத்தான்!

சுந்தரர் பெருமான் தம்பிரான் தோழர் நிலைமையை அடையப் பெற்றதும், பொன் பெற்றதும், பொதி சோறு பெற்றதும், முதலை உண்ட பாலகனை மீட்டுத் தந்ததும், திருவடி சூட்டப் பெற்றதும், இழந்த கண்னொளியை மீளவும் பெறப் பெற்றதும் தமிழ் வழிபாட்டினால் தான் என்பதனைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

   தமிழில் பாடி இறைவனை வழிபடும் வாழுங்காலத்திலேயே பலமுறை இறைக்காட்சியைக் கானும் பேறுபெற்ற இப்பெருமக்கள் தமிழில் வழிபட்டால் இறைவனை அடையளாம் என்றுதிருஞானசம்பந்தர் பெருமண நல்லூரிலும், அப்பர் பூம்புகலூரிலும், சுந்தரர் திருவஞ்சைக் களத்திலும், காரைகால் அம்மையார் திருவாலங்காட்டிலும் அடைந்துகாட்டினர். தமிழில் இறைவனை வழிபட்ட நம் மரபினைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தையில் கொண்டு வழிபடும் நால் எந்நாளோ!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்

சனி, 9 மே, 2020

பக்தி

இறைவனை குழந்தையாக பாவனை செய்தல் எனும் வாத்சல்யம் பஞ்ச பூதத்தில் அக்னியை குறிக்கும். இறைவனை நண்பனாக பாவனை எனும் சகியம் பஞ்ச பூதத்தில் ஆகாயத்தை குறிக்கும்.  இறைவனை முதலாளியாக்கி நம்மை அடிமையாக பாவனை செய்தல் எனும் தாசியம் பஞ்ச பூதத்தில் பூமியை குறிக்கும்.

இறைவனை , காக்கும் தந்தையாக பாவனை செய்தல் எனும் சாந்தம் பஞ்ச பூதத்தில் காற்றை குறிக்கும்.  இறைவனை காதலனாக பாவனை செய்தல் எனும் மதுரம் பஞ்ச பூதத்தில் நீர் தன்மையை குறிக்கும். இந்த பக்தி வழிமுறையையும் பஞ்ச பூத தன்மையையும் ஆழ்ந்து ஒப்பிட்டால் பக்தி செயல்படும் முறையும் அதன் அவசியமும் தெரிய துவங்கும்.
நம் உடல் மற்றும் மனம் பஞ்ச பூத தொகுப்பால் உருவாகி இருக்கிறது அத்தகைய பஞ்ச பூதத்தின் தொகுப்பால் உருவாகிய நாம் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கத்தில் இருப்போம்.  உதாரணமாக பஞ்ச பூதத்தில் பூமியின் ஆதிக்கத்தில் செயல்பட்டு நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மையை பின்னுக்கு தள்ளிய நிலையில் இருந்தால் நீங்கள் பக்தி செய்ய வேண்டிய தன்மை தாசியம் எனும் அடிமை தன்மை ஆகும். இது போன்று உங்கள் பஞ்சபூதத்தின் தன்மை ஆதிக்கம் தெரிந்து பக்தி வழியை தேர்வு செய்யலாம். 
பஞ்சபூதங்களின் அடிப்படையில் பக்தி வகைகள் இருக்கிறது என பார்த்தோம். பஞ்சபூதங்கள் நிலைபடுத்த வேண்டுமானால் அதற்கு பராமரிப்பு தேவை. முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தற்கால வாழ்க்கை முறையில் பஞ்ச பூதத்தில் அனைத்தும் மாசு அடைகிறது என்பதை பார்க்கிறோம். ஆகவே தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது.

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த
பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்.
1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

ஒன்பது வழிகளை திரும்ப திரும்ப செயல்படுத்துவதாலும் அத்துடன் இணைந்து இருப்பதாலும் பக்தி வலுவடைந்து மாசுபடாமல் வளர்கிறது. இந்த ஒன்பது வழிகளும் நவக்கிரகங்களின் செயலுடன் இணையாக வருவதால் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக ஒருவர் எப்படிப்பட்ட பக்தி செய்வார் என்பதையும் எத்தகைய வழியில் ஈடுபாடு இருக்கும் என்பதையும் அறியும் முறைகள் முற்காலத்தில் இருந்தது.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம். பக்தியோகத்தை எளிமையாகவும் அதன் கருப்பொருளையும் கொடுக்கவே இவ்வாறு குறுகிய வடிவில் எழுதி உள்ளேன். இதனை வாசிப்பவர்கள் பக்தியோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் போதுமானது.
நன்றி : தமிழ் வேதம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்