வெள்ளி, 10 நவம்பர், 2023

புண்ணியம் செய்வர்க்கு பூவுண்டு நீருண்டு

 சீல மிகு பைந்தமிழர் போற்றும் செந்நெறியாகிய சித்தாந்த சைவம் வழிபாட்டை அன்றாட வாழ்வின் கடமைகளில் முதன்மையனது என்றே கூறுகின்றது. ‘மனம் வாக்கு…. என்ற மெய்கண்ட சாத்திரமான சிவஞான சித்தியாரில் இடம் பெற்ற இப்பாடல் வரிகள் வழிபாடு செய்வதற்கே இறைவனால் இவ்வுடல் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் வழிபாட்டின் முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்த விண்ணில் வாழ்கின்ற தேவர்களும் மண்ணுலகில் இறங்கி வந்து பூசனைகள் செய்கின்றனர். ஆனால் மண்ணிலே வாழ்வதற்கென்றே வந்த நம்மை போன்ற அறியாமையில் வாழும் மாந்தர்கள் வழிபாட்டின் முக்கியதுவத்தை உணராமல் இருக்கின்றோம் என்று வருந்துகின்றது.

திருமந்திரம் அருளிய திருமூல தேவ நாயனாரோ “எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை நன்னறியாமல்  நலுவுகின்றாரே!” என்று வழிபாடு செய்யாதவர்களை பாவிகள் என்று கடுமையாக சாடுகின்றார். வழிபாடு செய்யாவிடில் கருணையே வடிவான பெருமானுடைய திருவருள் பேறு கிடைக்காமல் வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்க நேரும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டினை எப்படிச் செய்வது என்ற கேல்வி உடனே எழும். சீர்மிகு செந்தமிழர் போற்றும் சைவம் மிகவும் எளிய முறையில் வழிபாடு செய்யலாம் என்று திருமுறை வழி நமக்கு கூறுகிறது. தூய நீர், அன்றலர்ந்த மலர்கள், தூப தீபம் போன்றவை வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள் என்று திருநாவுக்கரசு அடிகள் தாம் அருளிய திருமுறையின் முதல் பதிகத்தில் “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” என்கின்றார். “பூ தேர்ந்து ஆய் எனக் கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை என்னும் கால்” என்ற திருஞானசம்பந்தரின் பாடலில் நல்ல பூக்களைக் கொண்டு தாயே என்று மனமுருகி வழிபடுவதே வழிபாடு, அதனை செய்யாத ஒருவரும் உண்மை சைவர் ஆகார் என்கின்றார்.

மேழும் வழிபாட்டினை நாமே சொந்தமாகச் சேய்ய வேண்டும் என்பதனை திருமூலர் “புண்ணியம் செய்வர்க்கு பூவுண்டு நீருண்டு” என்கிறார். அவரவர் வாழ்வு மேம்படுவதற்கு அவரவரே வழிபாடு செய்ய வேண்டும் என்பது நால்வர் பெருமக்கள் நமக்குக் கூறிச் சென்றுள்ளார்கள். அவ்வாறு நாமே செய்யும் வழிபாடும் நமக்கு புரிந்த மொழியில் இருப்பது அதனிலும் முக்கியம் என்கின்றார்கள். தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட நமக்கு அம்மொழியே வழிபாட்டிற்கு ஏற்ற மொழி என்பதனை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே சிவபெருமான் சுந்தர மூர்த்தி அடிகளை ஆட்கொண்ட போது “நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்” என்று சிவபெருமானே கூறியதாக தெய்வச் சேக்கிழார் தாம் அருளிய பெரிய புராணத்தில் கூறியுள்ளார். பெருமானே தமக்கு தமிழில் அற்சனை செய்வதே விருப்பம் என்று கூறியதோடு மட்டும் நில்லாமல் சுந்தரருக்கு “பித்தா” என்று அடியும் எடுத்துக்கொடுத்து அவரை தமிழில் பாடவைத்தார் என்பது சைவம் காட்டும் வரலாற்றுச் சான்றாகும்.

மேழும் தமிழ்மொழியில் நாம் ஓதி இறைவனை வழிபடவேண்டும் என்று அற்சனைப் பாட்டுக்களாக பெருமான் 18 ஆயிரம் பாடல்களை 27 ஆசிரியர்கள் மூலம் நமக்கு அருளியுள்ளார். இத்திருமுறைகளில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு எழுத்தும் கூட மந்திரமாகும். இவை நெருப்பில் வேகாது, நீரில் அழியாது, இறந்தவர்களை மீட்டுக்கொடுத்தது, சுண்ணாம்புக் காலவாயை பூ சொரியும் நந்தவனமாக மாற்றியது, மிதித்துக் கொல்ல வந்த யானையை வலம் வந்து வழிபடச் செய்தது. செந்தமிழர் போற்றும் தமிழ்மொழியே மந்திரமாக இருக்கும் பொழுது தமிழ்மொழியில் பெருமான் அருள்பெற்ற அடியார்கள் அருளிய திருமுறை மந்திரமாக இருப்பதில் வியப்பொன்றும் இருக்க முடியாது.

வழிபாட்டில் பாடப்பெறும் இவ்வரிய தமிழ்மறை பாடுபவர் பொருள் புரிந்து ஓதுவது சால சிறந்தது. நம்மைப் படைத்து, அன்பு செய்ய தாய் தந்தையைக் கொடுத்து, இன்றளவும் நாம் இருக்கும் இந்த நிலை பெருமானின் திருவருளாலே நமக்கு வந்தது என்று நினைந்து, ஒவ்வொரு வினாடியும் பெருமான் செய்கின்ற உதவிக்கு நான் எந்த வகையிலும் கைமாறு செய்ய முடியாது என்று உண்மையாக மனம் உருகி செய்வதே வழிபாடாகும். இவ்வாறு நாம் உணர்ந்தும் உருகியும் வழிபாடு செய்ய வேண்டுமானால் நாம் ஓதும் திருமுறைக்கு பொருள் தெரிய வேண்டும் என்கிறார் மணிவாசகப் பெருமான். “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா……. அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று  என்பால்” என்று மணிவாசகர் சிவபெருமானை நோக்கி உள்ளம் உருகிப் பாடுகின்றார். இவ்வரிகளில் பெருமன் உதவியால் நாம் இன்ப வாழ்வை அனுபவிக்கின்றோம், நமக்கு உதவுவதனால் பெருமானுக்கு எந்த நன்மையும் இல்லை, கைமாறு கருதாது உதவும் பெருமானுக்கு நம்மால் என்ன நன்மை செய்து விட முடியும்? என்று எண்ணி மணிவாசகப் பெருமான் அழுது புழம்புவதைத் திருவாசகம் முழுமையும் காணலாம்.

இவ்வாறு பெருமான் செய்த உதவிக்கு நன்றி கூற வேண்டும் என்று நமக்கு விளங்கும் போது பெருமான் மீதும், பெருமான் படைத்த பிற உயிர்கள் மீதும், நம் மீதும் நமக்கு அன்பு எற்படும். சைவம் கூறுவது மிகவும் எளிய வழிபாடு. அவ்வழிபாட்டின் பயனோ மிகவும் பெரியது. ஆடம்பர வழிபாடு சைவர்களுக்கு தேவையில்லை. புரியாத மொழியில் செய்யப்படும் வழிபாட்டிலும், நமக்காக மற்றவர் செய்யும் வழிபாட்டிலும் பெரிதாகப் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை. பைந்தமிழர் சமையமான சித்தாந்த சைவம் கூறும் எளிய வழிபாட்டினை பின்பற்றி கைமாறு கருதாத, நம்மால் கைமாறு செய்ய இயலாத பெருமானை நன்றியினால் வழிபட்டு, அன்பே சிவம் என்று உனர்ந்து உண்மை சைவர்களாக வாழ்ந்து, சைவம் கூறும் பேரின்ப நிலையை அடைவோமாக.

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”.