வெள்ளி, 1 மார்ச், 2019

பட்டினத்தாரின் ஞானப் பாடல்கள் (பிறவியின் நோக்கம்):

பட்டினத்தாரின் ஞானப் பாடல்கள் (பிறவியின் நோக்கம்):

'பிறவியின் நோக்கம் பிறவாமையை எய்துவது ஒன்றே' என்பது இந்து தர்மத்தின் சாரம். உலகியல் சார்ந்த நோக்கங்கள் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெவ்வேறாக இருப்பினும், முக்தி நிலையை அடை...யும் ஆன்மீக நோக்கமானது அனைவருக்கும் பொதுவான ஒன்று.

'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஆன்மீக நோக்கத்தை முற்றிலும் விடுத்து, உலகியல் நோக்கத்தில் மட்டுமே நாட்டம் கொண்டு உழலும் ஆன்மாக்களுக்காக பாடி வைத்த வரிகள் அவை.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, நிற்கிறார்
இனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போம்.

1. உண்டதே உண்டு, உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து உரைத்ததே உரைத்து, கண்டதே கண்டு, கேட்டதே கேட்டுக் கழிந்தன கடவுள் நாள் எல்லாம்!!!

ஒரே மாதிரியான செய்கைகளைப் புரிந்தும், ஒரே வகையான அனுபவங்களை திரும்பத் திரும்பப் பெற்றும், மனமானது மீண்டும் அவற்றிலேயே நாட்டம் கொண்டு உழலும் தன்மையை இப்பாடலில் சாடுகிறார் பட்டினத்தார்.

2. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே - வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!!!
பேசிச் சிரித்து கை வீசி நடந்து செல்லும் நிலையிலும், ஒரு பணிப்பெண்ணின் மனம், அவள் சுமந்து வரும் நீர் குடத்திலேயே நிலைத்து நிற்கும் (நீர் தளும்பாது இருக்கும் பொருட்டு). அது போன்று, உலகியலில் எச்செயலைப் புரியும் நிலையிலும் மனம் 'ஆன்ம குறிக்கோளான முக்தி நிலையிலேயே நிலைத்து நிற்றல் வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார் பட்டினத்தார்.

3. மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!!!

இது வரையில் எண்ணற்ற பிறவிகளில், அடியேனை ஈன்ற அன்னையரும் உடலால் வருத்தமுற்று சோர்ந்தனர்; கர்ம வினையில் உழன்று அடியேனின் கால்களும் சலிப்புற்றன; மேலும் அடியேனின் தலையில் விதியை மீண்டும் மீண்டும் எழுதிய தன்மையால் பிரமனின் கைகளும் சலிப்புற்றுத் தளர்ந்து விட்டன.

'இருப்பையூர்' தலத்தில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே 'இனியும் ஒரு அன்னையின் கருப்பை வாசம் வாராது காத்தருள்வாய்' என்று பிறவிப் பிணிக்கு பெரிதும் அஞ்சிப் பாடுகிறார் பட்டினத்தார்.
திருச்சிற்றமபலம்

'ஏக தெய்வ' வழிபாடு - சில முக்கிய விளக்கங்கள்

இந்து தர்மத்தின் தெய்வங்கள் பரம்பொருளின் பல்வேறு வடிவங்களே என்ற படிநிலை ஞானத்துடன் நின்று விடாமல், மனமும் ஆன்மாவும் எந்த இறை வடிவத்தில் லயம் பெறுகிறதோ, அந்த வடிவத்தை உபாசனை மூர்த்தியாகவும், பிரதான தெய்வமாகவும் கொண்டு வழிபடுதல் வேண்டும்.
இந்து தர்மத்தின் அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம், ஆனால் முக்தி நிலையைப் பெற, நாம் தேர்ந்தெடுக்கும் பிரதான தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டி வழிபடுவது அவசியம். 'அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்' என்ற பழமொழியும் இதற்குச் சான்று கூறும்.

சைவம்; வைணவம்; சாக்தம்; காணாபத்தியம்; கௌமாரம் என்று ஐந்து படகுகள் உண்டு. பிறவிப் பெருங்கடலைக் கடக்க வைத்து, முக்தி நிலையை அடைவிக்க வல்ல இப்படகுகளுள் எவ்வித வேறுபாடும் கிடையாது. எனினும் ஆன்ம பயணம் மேற்கொள்ளும் ஒரு சாதகன், ஐந்து படகுகளிலும் ஒரே சமயத்தில் பாதம் பதித்துப் பயணிப்பது என்பது இயலாது.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு உதாரணம் கூறுகிறார். ஒருவன் நீர் வேண்டி ஒரு இடத்தில் பத்தடி மண்ணைத் தோண்டினான். நீர் கண்ணில் படாத காரணத்தால் பொறுமை இழந்து, வேறொரு இடத்தில் அதே ஆழத்துக்கு மண்ணை அகழ்ந்தான். இவ்வாறு ஐந்து இடங்களில் அகழ்ந்தும் நீர் கிடைக்கப் பெறாது முயற்சி வியர்த்தமானது.

ஒரே இடத்தில் ஐம்பது அடி மண்ணை அகழ்ந்து இருந்தால், நீரைப் பெற்று இன்புற்று இருப்பான் என்று தன் உதாரணத்தை முடிக்கிறார் பரம ஞானியான ஸ்ரீராமகிருஷ்ணர். எத்துனை எளிய உதாரணம் - எத்தகு நுட்பமான கருத்து! பிரதான தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் உபாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியக் கருத்துகளும் உண்டு.

ஒரு உபாசகன், தான் உபாசிக்கும் மார்கம் 'சர்வ நிச்சயமாய் முக்தியைப் பெற்றுத் தரும்' என்ற உறுதி மாறாத நம்பிக்கையை முதலில் கொள்ள வேண்டும். அத்துடன், மற்ற நான்கு மார்கங்களில் உபாசனை செய்வோரும், அம்முக்தி நிலையைப் பெறுவர் என்ற சமயம் சார்ந்த புரிதலும் மிகமிக அவசியமான ஒன்று.
'ஏக தெய்வ வழிபாடு' சிறப்புப் பொருந்தியது. நலம் பயக்கக் கூடியது. வழிபாட்டில் ஒருமுகச் சிந்தனையை ஏற்படுத்த வல்லது. சீர்மிகு ஐந்து மார்கங்களுள் நமது மனம் லயம் பெற்று, எளிதில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு மார்கத்தை தேர்ந்தெடுத்து உபாசிப்போம். உய்வு பெறுவோம்!!!

திருச்சிற்றம்பலம்Vivekananda

புண்ணியம், பாவம், பிறவிச் சுழல், கர்ம யோகம்:
1. வேதங்கள் - உபநிடதங்கள் - புராணங்கள் - இதிகாசங்கள் - சாத்திரங்கள் - ஞானிகள் மற்றும் அருளாளர்களின் பாடல்கள் போன்றவை 'எவை பாவச் செயல்கள் - எவை புண்ணியச் செயல்கள்' என்று தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2. புண்ணிய செயல்கள் புரிந்த நிலையிலும், அச்செயல்களின் நற்பலனை அனுபவிக்க ஒரு ஆன்மா மீண்டும் இப்புவியில் பிறப்பு எடுக்க நேரிடுகிறது.

3. பாவச் செயல்கள் புரிந்த ஆன்மாக்கள், அச்செயல்களின் தீய பலன்களை அனுபவிக்க மீண்டும் இப்புவியில் ஜனிக்கும்.

4. புண்ணியம் - பாவம் இவைகளை முழுவதுமாய் இழந்த பின்பே ஒரு ஆன்மா முக்தி நிலையைப் பெறுகிறது.

5. புண்ணியச் செயல்கள் மீண்டும் மீண்டும் பிறவியிலேயே ஆட்படுத்தும். பிறவாமையாகிய முக்தியை நல்காது. எனில் புண்ணியச் செயல்கள் புரிவதை துறந்து விடலாமா?

6. அதுவும் இயலாது. புண்ணியச் செயல்கள் புரிவதற்கு சக்தி இருந்தும் அவைகளை புரியாமல் விடுப்பது பாவச் செயலாக மாறி மீண்டும் பிறவியில் ஆட்படுத்தும்.

7. எனில் இக்கொடிய பிறவிச்சுழலில் இருந்து மீள என்ன தான் வழி? புண்ணியச் செயல்கள் செய்தாக வேண்டும். ஆனால் 'நான் செய்கிறேன்' என்ற தன்முனைப்பு இல்லாது செயல் புரிதல் வேண்டும்.

8.'இறைவனே செய்விப்பவன் - தான் வெறும் கருவியே' என்று கருதி, பலனில் பற்று வைக்காது புரியப்படும் நற்செயல்களின் விளைவுகளுக்கு இறைவன் தானே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆதலால் அவை புண்ணியப் பலன்களாக மாறி ஆன்மாக்களை பந்தப் படுத்தாமல், முக்தி நிலைக்கு படிகளாக மாறுகிறது.

9. இந்து தர்மம் பலனை துறக்கச் சொல்லவில்லை. பலனில் உள்ள பற்றையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே துறக்குமாறு வலியுறுத்துகிறது.

ஆன்மாக்கள் முக்தி நிலைக்கு செல்வதற்கு தடையாக விளங்கும் இரு சங்கிலிகளால் பிணைக்கப் பட்டுள்ளனர். 'புண்ணியம்' என்பது பொன் விலங்கு. பாவம் என்பது 'இரும்பு விலங்கு'. இரண்டுமே பிறவியில் ஆழ்த்தக் கூடியது!!!

திருவாசகத்தில் கர்ம யோகம்:-
'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே'!!!!

சிவபெருமான் உள்ளிருந்து தன்னை முழுவதுமாய் இயக்குவதால், அனைத்தும் அப்பெருமானின் செயலே அன்றி தன் செயல் எதுவும் இல்லை என்று திருவாசகத்தில் குறிக்கிறார் மாணிக்கவாசகர்!!!!

அபிராமி அந்தாதியில் கர்ம யோகம் (அபிராமி பட்டர் அருளியது):
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!!!!

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக