சனி, 29 ஏப்ரல், 2023

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

 


 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை




பாறையில் விதை விதைத்தால் ..... பலன் உண்டோ?

  செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

  பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ

அத்தன் என்று அரியோடு பிரமனும்

 துத்தியஞ்செய நின்றநற் சோதியே ............தி,மு,5 பதி, பொது


   ( மனப்பாறைப்பட்டு =பாறைபோான்ற கல்மனம் உடையவர்கட்கு,  அத்தன் = தலைவன்., துத்தியம் செய = போற்றித்துதித்தல், தேஎன்று = பெருந்தெய்வம் என்று)


  செத்துச் செத்து பிறக்கும் சிறுதேவதைகளையே கடவுள் (முழுமுதற் பொருள்) என்று எண்ணி பக்தி செய்யும் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு முழுமுதற் பொருள் சிவபெருமானார் என்று திருமாலேோடு, பரமனும்துதித்து போற்றுவது பொருந்துமோ?

  கடவுள் நிலை உணர்ந்து அமமயமான அருளாளர்கள் முழுமுதற் பொருள் / பெருந் தெய்வத்திற்கும், செத்துச் செத்துப் பிறக்கும் சிறு தேவதைகட்கும் இலக்கணம் கூறியுள்ளார்கள்.

  செத்து செத்து பிறப்பவை யாவும் சிறு தெய்வங்களாகும். அவை பிறக்கும் இறக்கும் மேல் வினையும் செய்யும்,வேதனைப்படும்,

  பிறப்பும் இறப்பும் / முதலும் முடிவும் இல்லாததது தான் பெருந்தெய்வம் அதுவே முழுமுதற்கடவுள்

  தோற்றம் உண்டானால் இறப்பும் நேர்ந்தே தீரும். பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு. தோற்றம் உடையவையெயல்லாம் பிறந்து, குழந்தையாய் வளரும் இவைகட்கு பிள்ளைத்தமிழ் உண்டு.  ஆனால் சிவபெருமானார் பிறந்திருந்தால் தானே குழந்தையாய் இருந்திருப்பார் அதனலாேயே அவருக்கு பிள்ளைத்தமிழ் ஏதும் கிடையாது. திருநாவுக்கரசர் திருவாரூர் திருத்தாணடகத்தில் தி,மு 6ல் சிவபெருமானார் பிறாவதவர் என்பதை பாடி யுள்ளதைக் காணலாம். "பாலனாய் வளர்ந்திலாப் பான்மையான் " என்கிறார்.

   ஒரு ஊருக்கு ஒரு தலைவன்,ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியர் ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர், ஒரு நாட்டிற்கு ஒரு அரசன் அல்லது பிரதமர், இதைப்போல அகில் உலகங்களையும் ஆளக்கூடிய கடவுளும் ஒருவரே. அவரைத்தான் சிவபெருமான் என்கிறோம். இவரே முழுமுதற்கடவுள்.

  மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், ரிசிகள், திருமால், பிரம்மா, கிரகங்கள், தேவேந்திரன் சூரியன், சந்திரன் மற்றமுள்ள எல்லா தெய்வங்களும் தேவதைகளும் சிவபெருமானாரைத்தானே தொழுகின்றன, ஆனால் இப்பெருமான் தொழக்கூடியவர் எவரும் இல்லையே என்பதை மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் கூறியுள்ளார.

 " என்னால் தொழப்படும் எம் இறை மற்றவன்

  தன்னால் தொழப்படுவார் இல்லை தானே "   திருமந்திரம் (தி,மு10)


 " சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை

   அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,,,  திருமந்திரம்


  பிரமனும் மாலும் மேலைமுடியோடு பாதம்

  அறியாமை நின்ற பெரியோன்      ....  திரு,மு, 4/14/02


 ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

  ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே    ...... 05/100/03


  அவனை ஒழிய அமரரும் இல்லை

 அவனன்றி ெசய்யும் அருந்தவம் இல்லை

 அவனன்றி மூவரல் ஆவது ஒன்றில்லை

  அவனன்றி ஊர்புகுமாறு அறியேனே......  திருமந்திரம் 


 சிவபெருமானை அன்றி வேறு பெருந்தெய்வம் உலகில் இல்லை. முத்திக்கடவுள் என்று இவருக்கு ஒர் பெயரும் உண்டு. இவரைத்தவிர ேவறு யாராலும் பிறப்பை அறுக்க முடியாது என்கிறார் திருமூலர்.

  இவரை வழிபடுவதால் நாம் அடையும் பலன்கள்

 1. இம்மண்ணில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்

 2. சிவனுலகு அடைந்து இன்பமாய் வாழ்வர்.

 3. மனச்சோர்வு அடையார்.

  4. பசியால் வருத்தப்பட மாட்டார்கள்

  5. நோயால் வருந்த மாட்டார்கள்.

     இந்த உண்மைகள் எல்லாம் கல்போன்ற மனம் உடையவர்களுக்கு  சொன்னால் கேட்க மாட்டார்கள் என்கிறார் அப்பர் அடிகள்.

  பஞ்சு மென்மையானது அதனை தண்ணீரில் போட்டால் ஈர்த்துக் கொள்ளும் , கல்லை தண்ணீரில் போட்டால நீரை ஈர்க்காது. அதைப் போல கல்போன்ற மனம் உடையவர்களுக்கு உண்மைகள் புகா.

 பாறையில் விதை விதைத்தால் முளைக்காது. கல்மனம் உடையவர்கள் மனத்தில் சிவ பெருமானரை பற்றி மேற் கூறிய உயர்ந்த உண்மைகள் நிற்காது. இவர்கள் செத்து செத்து பிறக்கும் சிறு தெய்வங்களையே வழிபடுபவர்கள் என்கிறார் நாவரசர் அப்பர் அடிகள்.

திருச்சிற்றம்பலம்

(நன்றி தமிழ் வேதம்)


புதன், 26 ஏப்ரல், 2023

அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும்


 அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.
அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.
இதனால் பெறும் பயன் வருமாறு :-
கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.
இதற்குப் பிரமாணம் :-
சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).

ஆகம வழி பூசை முறைகள்


ஆகம வழி பூசை முறைகள்


சிவபூசை

பூ, புகை, விளக்கு, திருமஞ்சனம், திருவமுது முதலி யன கொண்டு, பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐந்துசுத்திசெய்து ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து மூர்த்தி மானுகிய பரஞ்சோதியைப் பாவனே செய்து அதன்கண் ஆவாகித்து மெய்யன்புடன் அருச்சனை செய்து விருப்புடன் சிவ வேள்வியினைச் செய்து முடித்தல். இதன் இயல்பினே,

இப்பூசை புறப்பூசை (கிரியை) அகப்பூசை (ஞானம்) என இருவகைப்படும். பூசைத்திரவியங்களே வெளியிற் சேர்த்துக்கொண்டு இறை வன வழிபடுதல் புறப்பூசை. இவற்றை மனத்தாலே படைத்துக்கொண்டு வழிபடுதல் அகப்பூசை யாகும்.

167. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானுர்க்கு வாய்கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்
சிவலிங்கம் கள்ளப் புலனேந்துங் காளா
மணிவிளக்கே (1828)
அகப்பூசைக்குரிய அங்கங்கள் ஆமாறு உணர்த்துகின்றது.

அகப்பூசை

கடவுளை மனதில் நிறுத்தி தாமே பூசை செய்வது. இந்தப் பூசை செய்யும் போது யாரும் பார்க்க முடியாது. இப்பூசையைச் செய்ய எந்தவொரு பொருளும் செலவுசெய்யத் தேவையில்லை. பூசாரியும்தேவையில்லை. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்யலாம். நேரகாலம் பார்க்கவும் தேவையில்லை. இதனை ஞானபூசை என்பர்.இப்பூசையின் சிறப்பை தாயுமானசுவாமிகள்

“நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பு
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
என இறையை தன் மனக்கோயிலில் எழுந்தருள அழைப்பதைப்பாருங்கள்.
திருநாவுக்கரசு நாயனார் தான் செய்த அகப்பூசையை
“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய அட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே” - (பன்.திரு: 4:76:4)

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

புறப் பூசை

எல்லோரும் பார்த்திருக்கச் கடவுளுக்கு பூசை செய்வது.இதனை கிரியாபூசை என்றும் கூறுவர். தேவாரம் பாடி,மந்திரங்களைக்கூறி, நாம் இப்பூசையை பூவால் அர்ச்சித்தும்செய்யலாம். பூசாரியைக் கொண்டும் செய்விக்கலாம். இதுவேகோயில்களில் நடைபெறும் பூசையாகும். இப்பூசையை ஒவ்வொருகோயில் அறக்காவலர் தத்தமது வீக்கத்தைப் பொறுத்து பெரும்தடல் புடலாக போட்டி போட்டு செய்வர். அதிலும் நம் கோயில்திருவிழாக்களையும் சிறப்புப் பூசைகளயும் செய்தோர் தாம்செய்ததைச் சொல்லும் பாங்கைக் கேட்க காதுகள் கோடி வேண்டும்.இதற்கு சில கோயில் அறக்காவலர்களும் பூசாரிகளும்விதிவிலக்கல்ல.
நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைப்பவரது மனத்துள்ளே புகுந்துநிற்கும் பொன்போலும் சடையையுடைய இறைவன், பொய்யும்புரட்டும் மிக்கோர் பூசையில் இடுகின்ற பூவையும் நீரையும் பார்த்துஅவர்களின் அறியமையை எண்ணி வெட்கப்பட்டுச் சிரிப்பாராம்' எனதிருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் பாடியுள்ளார். அதனை நாம்நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும்நீரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே” (பன்.திரு: 5: 90: 9)
எம்மனம் குற்றங்களாகிய தூசுக்களால் அழுக்குப் படிந்துஇருக்கின்றது. மனம்நிறைய குற்றங்களைச் சுமந்து கொண்டு நாம்என்ன கூக்குரல் இட்டாலும் இறைவனின் தன்மையை நாம்உணரமாட்டோம் என்பதை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில்

சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய் காண்”

என்று சுவையாகச் சொல்லியுள்ளார்.
திருச்சிற்றம்பலம்

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது

 பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது



பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப்,

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்,

இறைவன் அடி சேராதார்” /// என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும் குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

….. ….. நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி,

தலையார கூம்பிட்டு கூத்துமாடி

சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,, என்கிறார்


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். உயிர்களிடத்தில் அன்புகாட்டிப் பிறவி அறுக்கும் வழியினை அடுத்த கட்டுரையில் காண்போம்.

திருச்சிற்றம்பலம்

வியாழன், 13 ஏப்ரல், 2023

அடியார் பூசனை

 

அடியார் பூசனை


சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர். அவை சிவலிங்கப் பூசனை, (லிங்க வழிபாடு)சிவஅறிவு பெற்ற சிவஆசான் பூசனை (குரு வழிபாடு), சிவஅடியார் பூசனை ( சங்கம அல்லது அடியார் வழிபாடு) என்பனவாகும்

  திருக்கோயில்களில் உள்ள பெருமானின் திருமேனிகள் மந்திர ஆற்றல்களால் சிவனாகவே விளங்குதல் போல அடியார்களின் இறை அன்பின் உறைப்பாலும் இறைவனை இடைவிடாது எண்ணும் இயல்பாலும் சிவஅறிவு உணர்வாலும் அடியார்களின் உடம்பு எனும் கோவிலில் இறைவன் நிலைபெற்று இருக்கிறான் என்கிறார் திருமூலர். பெருமானை ‘மகேசுரர்’ என்றும் அடியார்களை ‘மாகேசுரர்’ என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானிடத்திலிருந்து எந்த ஒன்றாலும் தங்களைப் பிரிக்க முடியாத உள்ளத்தை உடைய அடியார்கள் உண்ட பொருள், மூன்று உலகத்திலும் உள்ளவர்கள் உண்டதின் பயனாய் விளையும் என்கின்றார் திருமூலர். இத்தகைய அடியார்கள் பெற்றுக்கொள்ளும் பொருள்கள் மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பெற்றுக்கொண்ட பொருளின் பயனை அளிக்கும் என்றே நந்தி பெருமான் தனக்கு உரைத்ததாகத் திருமூலர் குறிப்பிடுவார். இத்தகைய அடியார்களை வணங்கி அவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் கொடுத்தலே அடியார் பூசனை எனப்படுகின்றது.


சிவன், சிவலிங்கப் பூசனையை ஏற்று மகிழ்வதனைக் காட்டிலும் தன் அடியவர் பூசனையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவானே ஆயினும் சிவஆசான் பூசனையையும் சிவஅடியார் பூசனையையும் மட்டும் செய்து சிவலிங்கப் பூசனையை விட்டுவிடுதல் தவறு என்று திருமூலர் தெளிவுபடுத்துகின்றார். சிலர் சிவபெருமானிடத்து மட்டும் அன்பு வைத்துச் சிவஅடியாரிடத்து அன்பு இல்லாது இருப்பதனால், நீண்ட நாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் மிகக் கிடைக்காது வருந்துவதற்கு இதுவே காரணம் என்கின்றார் திருமூலர். சிவபெருமானை அடைய விரும்புவோர் சிவனடியார்களை விரும்பி வழிபடல் இன்றியமையாதது என்ற கருத்தினைத் திருமூலர் உணர்த்துகின்றார். இதனையே பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் நாயன்மார்களும் வாழ்ந்து காட்டினார்கள் என்பது நினைவுகூறத்தக்கது. “அடியவர்க்கு அன்பிலார் ஈசனுக்கு அன்பிலார்” என்று அருள்நந்திசிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் என்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூலும் இதனையே குறிப்பிடுகின்றது.

“காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடை இறைவா, எங்கள் பெருமானே” என்று சிவனை எப்பொழுதும் போற்றி வணங்கி, அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனது அடியவர் ஆவார்கள். இவர்களை நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள் என்றும் சிவபெருமான் என்றும் கருதி, இவர்களைச் சராசரி மக்களில் இருந்து வேறாக வைத்து வழிபடுகின்றவர்களுக்குக் குவிந்து கிடக்கும் வினைகள் கெட்டு ஒழியும் என்பதனை,


“ஏறுஉடையாய் இறைவா எம்பிரான் என்றே,

நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்,

ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று,

வேறுஅணிவார்க்கு வினை இல்லை தானே”


என்று குறிப்பிடுகின்றார். சிவனைத் தவிர வேறு ஒரு தேவரை வழிபடாத, சிவனின் அருள்வீழ்ச்சி கிடைக்கப்பெற்ற இத்தகைய அடியார்களை வானவர்களுக்கு ஒப்பாகவும் இவர்களை வழிபட்டால் அது சிவபூசனையாகிப் பிறப்பை அறுக்கும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்ற வழக்கு ஒன்று தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளதனை அறிவோம். சராசரி உயிர் வகைகளுக்குச் செய்யும் உதவியும் அடியார்களுக்குச் செய்யும் உதவியும் வேறு என்கின்றார் திருமூலர். சராசரி உயிர் என்கின்ற நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைபெற்று நின்று சிவமாம் தன்மையில் நிற்கும் அடியவர்க்குச் செய்யும் உதவியும் வழிபாடும் நம் வினையைப் போக்கிப் பிறவி அறுக்கும் என்கின்றார் திருமூலர். சராசரி உயிர்களுக்குச் செய்யும் உணவு அளித்தல், உறையுள் அளித்தல், பிற உதவிகளைச் செய்தல் என்பதானது உயிர்களுக்குச் செய்யும் நல்வினையாய் மட்டுமே முடியும் என்பதனைத் திருமூலர் உணர்த்துகின்றார். உயிர் நல்வினைகள் சிவ நல்வினைகளாய் மாறுதற்குப் படிக்கல் என்பதும் உணர்தற்பாலது.

தானங்களில் தலையதாகிய அன்னதானமும் அந்தணர் என்று அழைக்கப்படுவோருக்குச் செய்தலைக் காட்டிலும் சிவ அடியாருக்குச் செய்தல் கோடான கோடி மடங்கு மிக்க பயனைத் தரும் என்று தெளிதல் வேண்டும்.


உலகப் பற்றுக்களாகிய இழிநிலையில் இருந்து நீங்கி உயர் நிலையை அடைந்தவர்களாயினும் மீண்டும் அந்த இழிநிலைப் பற்றுக்கள் வந்து பற்றாதபடி என்றும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு ஆகிய அரிய தவங்களை விடாது இயற்றும் உண்மைச் சிவனடியார்களை வணங்கி, அவர்களுக்கு உதவிகளைச் செய்வோம். வினைப் பயன்களைப் போக்கிப் பிறவி அறுவோம்!அடியார் தம் பெருமையை விளக்க வந்த மகா பெரும் காப்பியமே பெரியபுராணம்

திருச்சிற்றம்பலம்