திங்கள், 30 டிசம்பர், 2013


சும்மா இரு ..... சொல் அற ! நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழ்வதே கிடையாது. பழைய கால நினைவுகளை அசைபோடுகிறோம் , வருங்கால கனவுகளில் மிதக்கிறோம், நம்மனமும் உடலும் நிகழ்கால செய்கையில் ஒன்றுபடுதோ நிகழ்கால வாழ்வாகும்,அலைபாயும் மனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டுவருவதில் கடந்த கால, எதிர்கால கனவு நினைவு அலைகளிலிருந்து விடுபட்டால் தான் நம் மனம் முழுவதும் இறைவனிடம் நிலைபெறவும் அவன் அருள் பெறவும் வழிவகுக்கும், நம் மனம் பேசிக் கொண்டே இருக்கும் இயல் புடையது அதற்கு ஓய்வில்லை, அதனாலேயே பழங்கால நினைவுகளும் எதிர்கால கனவுகளும் நமக்கு ஏற்படுகின்றன, நாம் மனம்வழிப் பேச்சை குறைக்க வேண்டும். நம்மனம் அமைதியாக இருக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் மனம் பேசாதநிலையை நாம் உணர முடியும். நாம் இறைவனது அபிசேக அலங்காரங்களை காணும் போதும் இறை மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நம்மனம் அதிலேயே ஒன்றியிருக்கும். அப்போது அது பேசுவதை தவிர்த்துவிடும். இதனையே " சிந்தனை நிந்தனுக்கு ஆக்கி" என்கிறார் மாணிக்கவாசகர். நம்மனம் முழுவதும்இறையழகே நிறைந்திருந்தால் மறுபேச்சுக்கே அங்கு இடமில்லை அல்லவா? இப்படி மறு சிந்தனையே எண்ணித் தன்மனத்துள் அவனுக்குக் கோவில் கட்டி குடமுழுக்கும் செய்வித்து முத்தி பெற்றவர் பூசலார் நாயனார். பிராணாயாமம், தியானம் செய்பவர்கள் தங்கள் சிந்தனையை மூக்கின் முனியில் அல்லது இதயத் தானத்தில் இருத்தி செய்யும் போது மனஓட்டம் அடங்கும். மனமும் பேசாது ஒடுங்கும். இதனைச் " சும்மா இரு சொல் அற " என்கிறார் அருணகிரியார். ஆகவே இறைவனை வணங்கும் போதும் எண்ணும்போதும் தியானிக்கும் போதும் நாம் நம் மன ஓட்டத்தை நிறுத்தலாம். அவ் வழியில் நிகழ்காலத்தில் வாழலாம், இதுவே சும்மா இருந்து மன நிம்மதியுடன் சுகத்தை - பேரின்பத்தை காணலாம்,

புதன், 25 டிசம்பர், 2013

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. (4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


ஞாயிறு, 22 டிசம்பர், 2013

உண்மையான அன்பு திருமணமான புதிய தம்பதியர் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது முள் ஒன்று அந்த பெண்ணின் காலில் தைத்தது. அதை கண்டு பதறிப்போன அவன் கணவன் , அவளது பிஞ்சு காலில் இருந்த அம்முள்ளை பிடிங்கி "சனியனே " என்று அந்த முள்ளை ஏசிக் கொண்டு தூக்கி எறிந்தான். பின் பத்து வருடம் கழித்து அதே பாதையில் கணவன் மனைவி இருவரும் நடந்து வரும்போது ஒருநாள் அதேபோல ஒரு முள் அவளது காலில் முள் ஒன்று குத்தியது, அவள் கத்தினாள் அவள் குரலைக் கேட்ட கணவன் திரும்பிப்பார்த்து அவன் முகம் சுளித்தான் அன்று அவளை பார்த்து " சனியனே " பார்த்து வரக்கூடாது?" என்றான், ஆக பத்து வருடத்தில் சனி இடம் பெயர்ந்து விட்டதே முள் மீது இருந்த சனி மனைவி மீது பெயர்ச்சி ஆகி விட்டதே. நாளாக ஆக மனத்தில் அன்பு தேய்ந்து விட்டது குறைந்து விட்டது என்பதே உண்மை. நாம் இறைவனை வழிபடும் போது நிறைந்த அன்புடனே அவனை வழிபட வேண்டும் அதாவது என்றும் மாறத குறையாத அன்புடன் வழிபட வேண்டும். சாக்கிய நாயனார் புத்த சமயம் தழுவியவர், அவர் பின்னாளில் சிவனிடம் நீங்காத அன்பு கொண்டார். சிவனை வணங்கினார். தான் சார்ந்த சமய உடையையே அணிந்து வந்தார். தன் சமயவாதிகளுக்கு தெரியா வண்ணம் சிறுகல்லை எடுத்து பூவாக எண்ணி அதை சிவலிங்கத்தின் மீது போட்டார். தொடர்ந்து அவ்வாறே வழிபட்டு வந்தார். இறைவனும் அதனை ஏற்றுக் கொண்டார். மாறாக மன்மதன் ஒருமுறை மலர்களை ஆணவ மிகுதியுடன் மலர்களை அம்பாக எண்ணி இறைவன் மீது தொடுத்தான் அதை உணர்ந்த இறைவன் அவனை தண்டித்தார். வேடுவர் குலத்தில் பிறந்த கண்ணப்பர் சிவன்மேல் அளவிலா காதல் கொண்டார். வேடுவராக பிறந்த அவருக்கு சிவவழிபாடு செய்து பழக்க மில்லை இருந்த போதும் சிவன் மீது கொண்ட காதல் மிகுதியானது. பெருமானை நீராட்ட எண்ணினார் தன் வாய் நிறைய ஆற்று நீரை எடுத்து வந்து உமிழ்ந்து அவரை நீராட்டினார், பன்றி இறைச்சியை சுவைத்துப் பார்த்து அவற்றில் நல்லலைகளை மட்டுமே படைத்தார். நல்ல மலர்களை தன் தலையில் சூடிக் கொண்டு வந்து இறைவனுக்கு சூட்டினார், இறைவன் கண்ணில் இத்தம் வந்ததைக் கண்டு சற்றும் தளராது உடனே தன் ஒருகண்ணை ஈட்டியால் தோண்டி ஈசனக்கு ஈந்தார் மேலும் இறைவனின் இன்னொரு கண்ணிலும் ரத்தம் வருவதை கண்டு தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்கு வழங்க முற்பட்டார் அப்போது அடையாளமாக தனது செருப்பணிந்த காலை இறைவன் கண் அருகில் ஊன்றி தனது கண்ணை பிடுங்கி இறைவனுக்கு ஈந்தார்.இதனை மாணிக்க வாசகர் " செருப்புற்ற சீறடி வாய்கலசம் ஊண் அமுதம் விருப்புற்று வேடனார்" என்றும், கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் " என்றும் பாடுகிறார். நாம் செய்யத்தகாதன என்கிற செயல்களையும்கண்ணப்பர் அன்பின் மிகுதியால் செய்திறார். அடியார்களது செயல்களை காட்டிலும் அவர்கள் எண்ணமே முதன்மை ஆகிறது நம்உள்ளக்கிடக்கை அறிந்து அருள்பவன் அல்லவா இறைவன்? பச்சிளம் குழந்தை நம்மார்மீது உதைக்கும்போது அதன் உள்ளக் கிடக்கையான அன்பு ஒன்றையே நாம் காண்கிறோம். இறைவனை நோக்கும்போது நாம் அனைவரும் அவனுக்கு குழந்தைகள்தானே நமது உண்மை அன்பினால் தவறு செய்தாலும் நம்வழிபாட்டை அவன் ஏற்றுக் கொள்வான் அந்த அன்பு என்றும் நீங்காத மாறாத தேயாத அன்பாக இருக்க வேண்டும்


வெள்ளி, 20 டிசம்பர், 2013


பன்னிரு திருமறைகள் பற்றிய சிறு விளக்கம் பண் என்பது பாடலின் ஒலி. `பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர் அமைப்புக் கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச் சீர் முதலிய யாப் பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண் முறையமைப்பை ஒட்டியே இப் பதிப்பு வெளிவருகிறது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. பன்னிரு திருமுறையில் முதலாவது வரும் பாடல் "தோடுடைய " என்று துவங்கினார் திருஞானசம்பந்த பிள்ளயார், இதன்பால் சேக்கிழார் பெருமான் விளக்கம் தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது. மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும். உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு. இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள். ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு. தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது. குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார். `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013


தாயுமானவர் சித்தரின் அருள் வேட்கை புலம்கள் சில,: எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறோன்று அறியேன் பாரபரமே எனும் கொள்கையுடைய தாயுமானவரின் அருள்வேட்கை அளப்பரியதாகும், அற்றில் சில என்னை மாயையினின்று நீக்கி ஆணவத்தை அறத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து, காலைத்தூக்கி மன்றத்தில் ஆடும் திருவடியை வணங்கும் நாள் எந்நாளோ? தீமை விளைவதற்கு காரணமான பேராசையாம் புலைத்தொழியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் அறிவு சென்று அடையும் நாள் எந்நாளோ? கண்ணால் கண்டவை நிலையில்லாதவை என்றும் எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறியருளிய சிவ வாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ? இளமைப் பருவத்தின் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கும் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்? கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்பு சாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை விட்டு நீங்குவது எந்நாள்? பெருத்து உயர்ந்து சில நாட்களுக்கு பின் தளர்ந்து தொங்கும் முலைகளையுடைய மங்கையர் மீது படுத்து உறங்கும் காமத்தையுடைய சோம்பலை ஒழிக்கும் நாள் எந்நாள்? மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடைகாட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கி கொள்ள வைக்கும் மங்ககையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாள்? வாய் திறந்து கொஞ்சு மொழி பேசி ஆசை என்ற கள்ளை தம்மிடமிருந்து மொண்டு ஆடவர் ஊட்டும் விலைமாதர் கடைக்கண்ணில் அகப்பட்டு சுழல்விழியினின்று விடுபடுவது எந்நாள்? கரை வைத்த புடவையின் கொய்சகத்தில் ஆடவரின் உள்ளத்தை எல்லாம் பிணித்து வைத்துக் கொள்ளும் வஞ்சகத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாள்? ஆழ்ந்த கடைப் போன்ற அளவில்லா வஞ்சத்தை உடைய நெஞ்சம் பொருந்திய பயன் இல்லாத மங்கையர் மயக்கத்தினின்று நீக்குவது எந்நாள்? இவ்வுடல் காரண தத்துவஙகள் முப்பத்தாறும், காரிய தத்துவங்கள் அறுபதும் ஆகிய தொண்ணூற்று ஆறு தத்துவங்கள் என கூறப்பட்டவர் , அவரவர் கன்மத்துக்கு தக்கவாறு தாமாகவே சென்று வாழ்ந்திருப்பது இந்தவுடல் என்ற நாட்டைப் பித்தனான நான், " நான்" என்ற செருக்கு கொண்டு பிதற்றுதல் பிதற்றுதலை ஒழிப்பது எந்நாளோ? ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச் சேற்றினால் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாள்? ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகபபட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாள்?

சனி, 14 டிசம்பர், 2013

திருநீற்றின் மகிமை


திருநீற்றின் மகிமை விபூதி, பசிதம், பஸ்பம், க்ஷாரம், ரக்ஷா என்ற ஐந்து காரணப் பெயர்கள் திருநீற்றுக்கு உண்டு, நிறைந்த செல்வத்தை அளிப்பதால் விபூதி எல்லாப் பாவங்களையும் உண்டுவிடுவதால் பஸ்பம் , ஒளிவீசச் செய்வதால் பஸிதம், வரக்கூடிய ஆபத்துக்களை கழிப்பதால் க்ஷாரம், பூதம் பிசாசு, பிரமராட்சம், பிறவிநோய், ஆகிய அச்சங்களிலிருந்து காப்பதால் ரக்ஷா என்று கூறப்படுகிறது. சங்கு ஒன்றைத்தவிர மற்ற எந்த வெண்மையான பொருளை எரித்தாலும் அவை கருமை நிறமாக மாறும், ஆனால் கருமையான பசுஞ்சானத்தை எரித்தால் வெண்மையான திருநீறு கிடைக்கிறது, மனதில் ஏற்படும் கருமைகளை போக்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் வலிமை திருநீற்றுக்கே உண்டு, சிவாய நம என்று கூறி திருநீறு அணிவதால் கீழ்க்கண்ட சுகங்கள் கிடைக்கும் என்று வள்ளலார் பாடியுள்ளார், " பாடற்கினிய வாக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற்கினிய அடியவர் தம் கூட்டமளிக்கும் ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆனை கண்டால் தேடற்கரிய திருவனிக்கும் சிவாய நம என்றிடு நீறே" திருநீறு சிறந்த கிருமி நாசினி உடலிலி பூச துர்நீைரை இழுக்கும், முகத்தில் பூச முகவாதம் வராது தடுக்கும், நெற்றியில் மூன்று கோடுகளாக திருநீறு தரிப்பதால் கீழ்கண்ட ந்ன்மைகள் உண்டாகும், 1) வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் 2) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும் 3) ஆணவம், கர்மம், மாயை நீக்கும் 4) காமம், வெகுளி, மயக்கம் தீரும் 5) பிராரத்தம், சஞ்சிதம், ஆகாம்யம் என்ற தத்துவங்களை உணர்த்தும் 6) ஆன்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம், ஆகியவற்றை தெளிவுறச் செய்யும் 7) சந்தேகம், மயக்கம், விபரீதம், ஆகியவற்றை போக்கும் 8) இறப்பு, நிகழ்வு எதிர்வு ஆகியவற்றை தடுக்கும் 9) காலம், பொருள், சேதம், ஆகியவற்றை தடுக்கும் கூன் பாண்டியன் என்ற மதுரை மன்னனின் வெப்பு நோய் நீங்க திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருநீற்றுப் பதிகத்தை திருநீற்றை பூசிக் கொள்ளும் பொழுது உச்சரிக்க வேண்டும், திரு நீற்றுப்பதிகத்தில் சில வரிகள்: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு ெந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றை போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னவன் உடலுற்ற தீப்பணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

வியாழன், 12 டிசம்பர், 2013


சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன, அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார். இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே எனும் கொள்கையுடையவர் தாயுமானவர்

செவ்வாய், 10 டிசம்பர், 2013


பெரியோர் சிறியோர்! பாடியவர்: கணியன் பூங்குன்றன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

சொர்ணாகர்ஷண கிரிவலம்: நேரடி அனுபவம்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013


இறைவழிபாட்டில் மலர் தூவியும் மாலை தொடுத்து அணிவித்து வழிபாடு செய்வது என்பதும் மந்திரங்கள் ஒதி, வழிபடுவது போல் முக்கியத்துவம் கொண்டதாகும், " யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்கிறது திருமந்திரம், "சலம்பூவோடு மறந்தறியேன் " என்கிறார் நாவுக்கரசர், எனவே மலர் தூவி வழிபாடும் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் அடைந்துள்ளது என அறியலாம். அண்ட சராசரத்தையே அடக்கி ஆளும் ஆண்டவனுக்கு படைக்கும் பபடையல் பொருட்களை நாம் பக்தி சிந்தையுடன் பணிந்து ஏந்தி கொண்டு செல்ல வேண்டும். சிலர் வழிபாட்டிற்கு கொண்டு ெசல்லும் படையல் பொருட்கள் மலர் மாலைகளை யாதொரு சிறத்தையின்றி லவகமாக கொண்டு செல்கின்றனர். நம்மிடம் வேலலைபார்க்கும் பணியாளர்களிடம் நாம் எதிர்பார்க்கும் மரியாதையை பணிவை இறைவனுக்கு காட்ட வேண்டாமா? இதனை நாம் பக்தி சிரத்தையுடன் பபார்ப்பதே இல்லை, இந்த பூத்தொடுத்து செய்யும் எளிய வழிபாட்டையே முக்தியடைந்த முருகநாயனாரைப்பற்றி சேக்கிழார் பெருமான் மிகவும் தெளிவாக பெரியபுராணத்தில் விளக்கியுள்ளார். இவர் மலர்கள் பரித்து மாலை தொடுத்து சிவனுக்கு அணிவித்து சிவத்தொண்டு செய்து , தான் செய்த மலர் வழிபாட்டு தொண்டினாலேயே முக்தி பெற்றவர். அன்னாரின் மலர் வழிபாட்டு முறையே சிவ வழிபாட்டிற்கு இலக்கணம் அமைத்தது,இறைவனுக்கு படைக்கவிருக்கும் படையல் பொருட்களை / அரிச்சனை சாமான்களை தொப்பூளுக்கு கீழே தொங்கவிடக்கூடாது, பணிவுடன் தலையில் சுமந்து செல்லாம் அல்லது கைகளில் தாங்கிப்பிடித்துக் கொண்டு ஏந்திச் செல்லலாம், அது இறைவனிடம் நாம் கொண்டுள்ள பணிவைக்காட்டுமம் அதுபோல ஆசாரமில்லாதவன், நோயாளி கொணர்ந்த பூ, பழையது உதிர்ந்தது , பழுக்கடித்தது எச்சம் பட்டது அசுத்த மண்ணில் விழுந்தது கிடந்தது எனும் பூக்கள் இறைவருக்கு உகந்ததன்று் இவற்றை அறிந்து பணிவுடன் செய்யும் இறைத்தொண்டடு ஒன்றே இறைவனுக்கு உகந்தாகும், அதுவே உயர்வைத் தரும்

புதன், 4 டிசம்பர், 2013


காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது. அஷ்ட லிங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர் இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி. இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி. மூன்றாவதாக எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி. அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம். அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும். மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார். அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர். கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர். மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும். அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள். கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ நிகழ்வு. வாஸ்து சாஸ்திரப்படி , அற்புதமாக அமைந்த இரண்டு ஸ்தலங்கள் : திருவண்ணாமலையும் , திருப்பதியும் ஆகும். உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயர , உங்களால் முடிந்தவரை இந்த ஸ்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். பரம்பொருளின் துணை உங்களுக்கு தேவையான நேரத்தில் கச்சிதமாக கிடைப்பது உறுதி.அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்.

திருவண்ணாமலையின் அர்ப்புதங்கள்! திருவண்ணாமலை என்று சொன்னாலும் முத்தி, தீப ஜோதியை பார்த்தாலும் முக்தி. கிருதயுகத்தில் இம்மலை அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகள் சித்தர்கள், பார்வையில் மரகத மைலையாகவும், பாமர மக்களுக்கு கல் மலையாகவும், காட்சி தருகிறது, இம்மலையில் ஏராளமான மூலிகைகளும் குகைகளும் உள்ளன, இம்மலை சித்தர்கள் வாழும் சதுரகிரி மற்றும் அகத்தியர் வாழும் பொதிகை மலை, சேர்வராயன் மலைகளை விட மிகவும் சிறப்பு பெற்றது, இம்மலை பல்லாயிரக்கணக்காணவர்களை கவரும் மகத்துவம் பெற்றது, இங்கு ஆயிரக்கணக்கான சித்தர்கள் அருளாளர்கள், மகான்கள் ஞானிகள் ரிசிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதிகள் உள்ளதால் அவர்களின் ஆத்மாக்கள் இம்மலையிலேயே உலவிவருவதால் அவர்களின் வைப்பிரேசன் என்ற ஈர்ப்புத்தன்மை மக்களை ஆன்மீக வாதிகளை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்குள்ள அண்ணாமலையாகிய இறைவன் முதன்மையான மூலாதரமாக விளங்கினாலும், அவனையே வேண்டி முத்தி பெற்ற அருளாளர்கள் , சித்தர்கள் இறைவனின் - அண்ணாமலையானின் - செயல்திறனை ஊக்குவித்து மக்களுக்கு நேரிடையாக அருளாசி வழங்குகிறார்கள். எனவே தான் மற்ற சிவதளங்களை விட திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவனின் பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகும், மற்றவை சிதம்பரம் ஆகாயம், காளகஸ்தி வாயு, திருவானைக்கால் நீர் தலம், காஞ்சி நிலம் இவற்றில் இறைவன் அக்னியாக காட்சி தருகிறார் இங்கு, இம் மலை இமயமலையை விட மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இம் மலை ஈசானம் தத்புருஸம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின்ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக காட்சி ( பஞ்சலிங்கம்) தருகிறது, இக்காட்சியை கிரிவலம் வரும்போது குபேரலிங்கம் தாண்டியவுடன் காணலாம். கிரிவலம் வரும் போது கீழ்திசையிலிருந்து பார்த்தால் ஓன்றாக தெரியும் மலையாகவும், சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும் மலையின் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் - கெளதம ஆசிரமத்திற்கு எதிரிலிருந்து பார்த்தால் மூன்று பிரிவாகத் தெரியும், இதை திரிமூர்த்தி தரிசனம் என்று போற்றுவார்கள். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் சேசத்திரி சுவாமிகள் தன்னை முழுவதுமாக மண்ணால் மூடிக் கொண்டு தவமிருந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் மட்டும் மண் கறுப்பு சிவப்பு நிறத்தில் காணப்படும், இஙகிருந்து சற்று நடந்தால் தொடர்ச்சியாக நான்கு மலைகள் போல் காட்சி தரும் வலம் வந்து முடிக்கும் தருவாயில் அதாவது குபேரலிங்கம் தாண்டியவுடன் ஐந்து மலையாக அதாவது பஞ்சலிங்கமாக காணப்படும். திருமால் பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்க சிவபெருமான் லிங்கோத்பவராக ஜோதிப் பழம்பாக காட்சி தந்த திருத்தலம் இது. இந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தி துன்பப்படவே சிவபெருமான் மலையாகி நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. இம்மலையில் தவமிருந்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து அர்த்தநாரீஸ்வராக காட்சி கொடுத்த தலமும் இங்கேதான்.இம்மலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்கிறது புராணம், திருவண்ணாமலை வலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம், ஒருமுறை வலம் வரவேண்டுமென்று எண்ணி ஒரடி எடுத்து வைத்தால் ஒரு யாகம் செய்த பலனும், இரண்டடி எடுத்து வைத்தால் ராஜயேக பலனும், புண்ணிய தீர்ததங்களில் நீராடிய பலனும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேக யாகப் பலனுடன் தான தர்மங்கள் பல செய்த பலன்களும் நான்கு அடி எடுத்து வைத்தால் எல்லா யாகப்பலன்களும் கிட்டும் என்று அருணாசலபுராணம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களையும், லிங்கங்களையும் தரிசித்தால் பேறுக்ள பல பெறலாம் என புராணம் கூறுகிறது. கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது இந்திர லிங்கமாகும், கிழக்கு திசையில் அருள்புரியும் இந்திர லிங்கத்தை வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ளது இரண்டாவது லிங்கமான அக்னி லிங்கமாகும் இது தாமரைக்குளம் அருகே அமைந்துள்ளது, இந்த லிங்கத்தை வழிபட்டால் நோய் பயம் நீங்கும், மூன்றாம் லிங்கமாக தெற்கு திசையில் இருப்பது எம லிங்கம். இந்த லிங்கத்தின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி எம லிங்கத்தை வழிபட எமபயம் நீங்கும். தென்மேற்கு திசையில் நான்காம் லிங்கமாக உள்ளது நிருதி லிங்கம், இங்கிருந்து மலையை பார்த்தால் இறைவனும் இறைவியும் இணைந்த தோற்றம் போல் ஒர் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்ததம் எனப்படுகிறது இந்த லிங்கத்தை வழிபட சனியின் தாக்கம் குறையும். ஐந்தாவது வருண லிங்கம் மேற்கில் உள்ளது. இங்கு வருண தீர்த்தம் உள்ளது. வருண லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும் நீரிழிவு தாக்கம் இருந்தால் கட்டுக்குள் அடங்கும். ஆறாவதான வாயு லிங்கம் வடமேற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசித்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் மூட்டுவலி முழங்கால் வலி நாளடைவில் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. வடதிசையில் உள்ளது ஏழாவதான குபேர லிங்கம் , இந்த லிங்கம் காசுக்களை அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ செழிப்பு வளரும், எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் வடக்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட துன்பங்கள் விலகும். இந்த அஸ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. திருவண்ணாமலையோ சிவபெருமானாக உள்ளதால் நந்திகளும் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. மேலும் கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்களும் உள்ளன, விநாயகர் துர்க்கை முதலான ஆலங்களும் உள்ளன வணங்கி பேறு பெற்றுய்யலாம். கிரிவலம் வருவோர் திருவண்ணாமலையை மட்டும் வலம் வராமல் அடி அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையையும் சேர்த்து வலம் வரம் வேண்டும் இவ்வாறு வலம் வந்தால் எதிர்பாரரத நல்ல பலன்கள் கிட்டும் என்பதில் யாதொரு ஐயமில்லை, ஓம அருணாசல ஈஸ்வராய நம!