செவ்வாய், 9 நவம்பர், 2021

எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !

 எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !



" யாதெரு தெய்வங் கொண்டீர்அத்தெய்வ மாகியாங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்

வேதனைப் படும் இறக்கும்பிறக்குமேல் வினையுஞ் செய்யும்

ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ,,,,...... சிவஞான சித்தியார்


" ஈறிலாதவன் ஈசன் ஒருவனே " என்கிறார் திருநாவுக்கரசர்


நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு, அது எவ்வாறு எனில் ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையவராய் , தத்தம் மதத்திற் கேற்றவாறு, எவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு, எவ்வெவ் தெய்வத்தை வழிபடினும் அவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு , அவ்வெவ் தெய்வத்தை தமது சக்தியால்( இறைவி) அதிட்டி நின்று அவ்வெவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுகிரகிப்பவர், முன்னைப்பழம் பொருட்டு,முன்னைப் பொருளாகிய சிவபெருமான்ஒருவரே,

எவ்விடத்து யாதொரு தெய்வத்தை பொருளாகக் கொள்ளினும், அவ்விடத்து அவ் வழிபாட்டை அறிந்து உயிர்களுக்கு பலனை கூட்டுபவர். அச் சிவபெருமானர் ஒருவரே,ஏனைய தெய்வங்கள் சுதந்திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்க மாடடா. எத்தெய்வத்தை வழிபடினும் அவ் வழிபாட்டிற்கு சிவபெருமானே பலன் தருவார்.

அவ்வாறாயின், பிற தெய்வ வழிபட்டவர்க்கு அவ்வத் தெய்வமே எதர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே என நூல்களிற் கூறப்படுகின்றதே யெனின் அன்றுஅரசன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்க்கு பலன் கொடுக்குமாறு போல சிவபெருமானே தமது ஆணையை தம்ஏவர் வழி நிற்கும். அவ்வவ் கடவுள் மாட்டு , அவரோடு நின்று பலன் கொடுப்பார். அங்ஙன மின்றி அக்கடவுள் பிறருக்கு பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது. அது அரசர் ஆணையை மீறியது போன்றே.

பிற தெய்ங்கள் அனைத்தும் பிறப்பு இறப்புக்குஉட்பட்டவை யாதலால் அது பசுவர்க்கமாகும். எனவே அவ் வழிபாட்டால் கிடைப்பது பசு (உயிர்) புண்ணியமே, பதி புண்ணியமன்று, பதியாகிய சிவனை நோக்கி வழிபாடே பதி புண்ணியம். எனவே ஏணைத் தெய்வங்களை யே முழுமுதற் கடவுள் என்று எண்ணி செய்யும் பசு புண்ணியம் சிவ புண்ணியமாகாது. எனவே ஏனை சிறு தெய்வ வழிபாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டு பலன் தருவார். என்பதால் நேரிடையாக சிவபெருமான் திருவடியை வழிபடுதலே நல்ல அறமாம்.மற்றவை வீண் செயலாகும்.

தொகுப்பு : சிவ, பூமாலை, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

திருச்சிற்றம்பலம்

திங்கள், 8 நவம்பர், 2021

சைவர்கள் அறிய வேண்டிய செய்திகள்

 சைவர்கள் அறிய வேண்டிய செய்திகள்


1. அடிப்படை நுட்பம்



இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.


நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.


நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:


பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்


இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.


சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.


உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை – சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.


பஞ்ச புராணம் துதித்தல்

 பஞ்ச புராணம் துதித்தல்


தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.


தேவாரம்


அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]


திருவாசகம்


ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.       [8. மணிவாசகர்]


திருவிசைப்பா


இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்

களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு

என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)

என்னையும் புணர்ப்பவன் கோயில்

பண்பல தெளிதென் பாடிநின் றாடப்

பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்

செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்

திருவளர் திருச்சிற்றம் பலமே.         [9. கருவூர்த்தேவர்]


திருப்பல்லாண்டு


ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

வஞ்சகர் போயகல

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனி யெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன்

அடியோ முக்கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே.        [9. சேந்தனார்]


பெரிய புராணம்

உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்

மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்

“உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்

சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.       [10. சேக்கிழார்]


வாழ்த்துப்பா


ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.   [3. சம்பந்தர்]


ஞாயிறு, 7 நவம்பர், 2021

ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

 சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் (இராஜகணபதி ) திருக்கோயில் சிறப்புக்கள் சிறு கண்ணோட்டம்

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படும் நம் ஆத்தடி பிள்ளையார் கோயிலின் சிறப்பு அமுசங்களை சற்று சிந்திப்போம். முதலில் நம் நகர் ஆத்தடி விநாயகர் என்றாலே வடக்குத்தெருக்கு அருகில் அர்ச்சனா நதியின் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகணபதியைத்தான் குறிக்கும் விநாயகர் எங்கும் ஆத்தங்கரையில் அமர்ந்திருந்தாலும் இக்கோயிலுக்கு பின்தான் அத்தனையும் அவ்வளவு சிறப்பு பெற்றது இக்கோயில்


 1) ஒரு கோயில் சிறப்பு அடைய வேண்டுமானால் அது ஆதிகாலத்து நாம் அறியாப் பருவத்தில் தோன்றியிருக்க வேண்டும் ஆனாலும் அதன் பின் அதன் வளர்ச்சி கண்டு பரிகார தெய்வங்களின் வளர்ச்சி பெற்று பெருமை பெறலாம். அதன்படிதான் இங்கு விநாயகர் கோயில் கட்டும் முன்னேயே ஆத்தடியில் தோன்றி அனாதி காலம் தொட்டு அருள்பாலித்து வருகிறார் என்பது ஒரு சிறப்பு

2. ஒரு கோயில் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்றவாறு சிறப்பு (அதாவது நாம் வணங்கும் தெய்வம் )சிறப்பு பெயர் பெற்று நமக்கு விசேடமாக காட்சி அளிப்பது இதனால் இவர் இராஜகணபதி என்ற சிறப்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

3) தலம் என்ற வருசையில் இத்தலம் புகழ் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரமாகிய சுந்தரபாண்டியத்தில் அமைந்தபடியால் தல வரிசையில் சிவபெருமானாரே அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்து அருள் செய்த சதுரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது அதன் சிறப்பு

  மேலும் தலம் என்ற வரிசையில் அங்குள்ள தல விரிச்சம் முக்கியத்துவம் பெறும் அந்த வகையில் இங்கு வெகு சிறப்பு பெற்றது இக்கோயிலின் தல விரிச்சம் வன்னி மரமாகும். வன்னி மரத்தடி விநாயகர் என்றேலே மனம் இறை இச்சை தன்னாலேயே ேதான்றும் இக்கோயிலில் வன்னி மரத்தடியில் விநாயகரும் கைலாய நாதரும் அமர்ந்து அருள் செய்வது சிறப்பிலும் சிறப்பு, ஒரு கோயிலில் வன்னி மரம் அமைந்திருந்தால் அக்கோயிலின் சிறப்பே மிக அளவிடற்கரியது.வன்னிமரம் அமைந்த திருக்கோயில் புனிதத்தன்னை அளவிடற்கரியது. இத்தலத்தில் வழிபட்டவர்கள் ஆன்மா முக்தி அடையும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த அடிப்படையில் விருத்தாசலம் நகரில் உள்ள திருமுதுகுன்றம் என்ற தலத்திற்கு ஈடானது என்றால் தப்பில்லை. இந்த திருமுதுகுன்றம் கோயில் கட்டும் போது கட்டிடப்பணிக்காக கூலியாக இந்த வன்னி மரத்தின் இலையைத்தான் கொடுப்பார்களாம் அவ்விலை வேலை செய்த பணியாளர்களுக்கு அவர்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்தாற்போல் இறை அருளால்  பொற்காசுகளாக மாறி பயன் தருமாம். என்பது வரலாறு. இத்தனை சிறப்பு பெற்ற வன்னி இலைகள் வில்வ இலையை விட சிறப்பு பெற்றதாக கூறுவது உண்டு இதனால்தான் இங்குள்ள கோயில் அர்ச்சகரும் வன்னி இலைக்கொண்டு பக்தர்களின் வேண்டுதலுக்கு அர்ச்சிப்பார், எனவே இங்கு அருச்சனை செய்வதற்கு வில்ல இலையும், வன்னி மர இலையும், மற்றும் சிவ பூசைக்கான சிகப்பு வெள்ளை அரளி பூக்களும் எளிதில் அமைக்கப்பட்ட இடமாக அமைந்துள்ளது இக்கோயில் கோயில் அமைந்த அன்றே இக்கோயிலுக்கு பக்கத்தில் நந்தவனம் இருந்த இடமும் இன்னும் உள்ளது. ஆனால் தற்போது பயன்பாடு அற்றதால் தற்போது கோயிலுக்குள்ளேயே இத்தனை வசதியும் தற்போது உண்டாக்கப்பட்டு விட்டுள்ளது. 

4) தீர்த்தம் என்ற வரிசையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி வைப்பாறு நதியுடன் இருக்கண்குடியில் கலந்து கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியாம் அர்ச்சுனா நதியின் ஆற்றங்கரையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார், எனவே இக்கோயில் மூர்த்தி, தலம். தீர்த்தம் என்ற அடிப்படையில் ஆகம விிதிப்படி அமைந்த கோயில் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பு பெறுகிறது.

  இயற்கை சூழலிலும் இக்கோயில் முகவும் சிறப்பு பெற்று உள்ளது. அதிகம் ஜன நட மாட்டம் இலலாத அமைதியான சூழலில் இயற்கை எழில் கோலத்துடன் அமைந்துள்ளது. சுற்றிலும் எங்கும் பசுமை நிறைந்த சூழல். மனம் லயத்து ஒன்றிக்கும் சூழல் கொண்ட ரம்மியமான அருள் சக்தி கைகூடும் இடம்

5, ஓர் ஆன்மா தன் உடலை விட்டு பிரிந்து (பிறப்பு இறப்பு மனித உடலுக்குத்தான் ஆன்மாவிற்கு பிறப்பும் இறப்பும் கிடையாது  அது என்றும் உள்ள நித்திய பொருள் வினைப்பயனை முடித்து சிவமுக்தி பெறவேண்டும் அதுவரை அவ் ஆன்மா மறுபடியும் வேறு உடலில் தோன்றி பிறக்கும்)  ஒன்று சிவமுத்தி பெறவோ அல்லது தன் வினைப்பயனால் அடுத்த பிறப்பிற்கு உட்படுவதற்கு அந்த ஆன்மா கடைதேற அதற்கான சிறப்பு வழிபாடுகள் செய்யும் இடம் ஒன்று புண்ணிய நதியாக இருக்க வேண்டும் அல்லது சமுத்திரமாகவோ அல்லது கடலாகவோ இருக்க வேண்டும் உதாரணத்திற்கு இராமேஸ்வரம், காவேரி ஆறு,அல்லது புனித நதிகள் சங்கமிக்கும் இடம் இவ்விடங்களில் தான் புனி நீர் கொண்டு அபிசேகம் செய்ய எடுத்துச் செல்வார்கள் அதன்படி பார்த்தாலும் இக்கோயில் அமைந்துள்ள அர்ச்சுனா நதிக் கரையில் தான் இங்கு (நம் ஊர்மக்கள்) இவ்விடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே இவ்விடத்திலுள்ள இக்கோயில் இராமேஸ்வரம் காவேரிக்கரைகள் உள்ள கோயில்களுக்கு ஈடாக உள்ளதை நாம் அறியலாம்,மேலும் நாம் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு தூய உடம்புடன் முதல்தரிசனம் செய்யும் கோயில் தெய்வம் விநாயகர்தான் எனவேதான்ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் விநாயகர் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார் அவ் வரிசையில் அவ்வாறே அமைந்த கோயில் ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை அதற்காக அதன் சிறப்பில்லாது போய்விடுமா?

6) ஓர் ஆத்மா உடலை வி்ட்டு சென்ற பின் அவ் ஆன்மா தனக்கு ஓர் உடம்பு கிடைக்கவோ அல்லது முக்தி பேறு அடையவோ தவித்துக்கொண்டிருக்கும் அப்போது அவ் ஆன்மா சிறப்பு பெற அவ் ஆன்மாவின் வழித்தோன்றல்கள் செய்யும் கரும (ஈமக்கிரியை) காரியங்கள் செய்யும் இடமும் அவர்கள் (ஆன்மாக்கள் ) முக்தி பேறு அடைய மோட்ச தீபம் ஏற்றும் கோயில் இக்கோயில் தான் ( மோட்ச தீபம் ஏற்றும் கோயில் சிவலாயங்களில் சிதம்பரம் தான் எனவே இக்கோயில் சிதம்பரத்திற்கு ஈடான மோட்ச தீபம்ஏற்றி வழிபடும் கோயிலானதால் இதற்கு தனி சிிறப்பு உண்டு.

7) நம் ஊர் கிராமத்து தெய்வமான அருள்மிகு மாரியம்மன் சித்திரை மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடும் தெய்வம் முதல் நாள் அம்மன் எழுந்தருளச் செய்யப்படும் இடம் இக்கோயில் முன் உள்ள மாரியம்மன் சக்தி பீடத்தில்தான், மேலும் அவ்வாறு எழுந்தருளச் செய்யும் போது நம் ஊர் பெரியகோயில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பர், மாமுண்டி கருப்பர் ஆகியோர் மருளாடிகளால் எழுந்தருளி அருள் வாக்கு கொடுத்து அம்மனை வரவழைக்க செய்யும் இடமும் இக்கோயில்தான்

8) நம் ஊர் சாலிய சமுதாயத்தினரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் வைகாசி திங்களில் கொண்டாடும் போது இரண்டாம் நாளான புதன் கிழமையில் அம்மனையும், அம்மனோடு வரும் சுமார் 500 முளைப்பாரி அம்மனும் கரைக்கும் இடமும் இதுதான். எனவே நம் ஊர் கிராம தேவதைகள் திரியோதன சக்தியாக (மறைமுகமாக ) இங்கு ஆட்சி செய்யும் இடம் இக்கோயில்தான்

9) முன்னோரு காலத்தில் மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு அடியார் அல்லது சித்தர் இக்கோயிலில் நீண்ட நாள் தங்கியிருந்து இங்கு சமாதி அடைந்ததாக வாய்வழி செய்திகளாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அடக்கம் செய்த இடம் இக்கோயில் அருகில்தான் அமைந்திருந்தது யாவரும் அறிவர் எனவே இவர் சித்தராக இருந்து சமாதி ஆகியிருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அவ்வாறானால் பிரசித்தி பெற்ற தலங்களில் சித்தர்களின் சமாதி இருப்பதை நமக்கு இங்கு உறுதிபடுத்துகிறது. எனவே இவ்வகையிலும் இக்கோயில் சிறப்பு பெறுகிறது.

10.தெய் வழிபாட்டிற்கு சிவ முக்திக்கும் நம் பகுதி இறை தெய்வமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் நம் ஊரின் வடக்கு திக்கில் அமைந்தபடியால் எல்லோராலும் வடக்கு திக்கு நோக்கியே வழிபாடு செய்வது முக்கியமானதாலும் நம் இஸ்ட தெய்வமான நம்ஆத்தடி விநாயகரும் கைலாய நாதரும் வடக்கு திக்கில் அமர்ந்து நம் ஊருக்கு அருள்பாலித்து வருகிறார்கள் எனவே இக்கோயில் வடக்கு திசையில் அமைந்தது இவ்வூருக்கு கிடைத்த சிறப்பு

   நம் ஊரில் சிவதலம் முதன்முதலில் சதுரகிரி சுந்தரமூர்த்தியின் பிரதிநிதியாக எழுந்தருளிஉள்ள அருள்மிகு  கைலாய நாதராக உள்ளார்.  இங்கு  அவர் முன்,  தினமும் காலை மாலை மணிவாசகர் அருளிய சிவபுராணம் ஒரு தடவையாவது மனம் மொழி மெய்யால் உணர்ந்து பாடி வர அவ் ஆன்மாவிற்கு வீடு பேறும் கடைசி காலத்தில் மரண அவஸ்தை நீங்கி எளிய இறப்புடன் முக்தி பேறும், வாழும் போது எல்லாச் செல்வங்களும் நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும்,தந்து குரு லிஙக, சங்கம பக்தியும் சிவஞானமும் மென்மேலும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம்.

 தற்போது இக்கோயிலில் பிரதி மாதமும் அமாவாசை பூசையும், பெளர்ணமி தோறும் அருள்மிகு மாரியம்மன் சக்தி பீடத்தில் அம்மனுக்கும், மூலவர் மற்றும் கைலாய நாதருக்கும், மற்றும் சங்கடகர சதுர்த்தி தினத்தில் மூலவர் இராஜகணபதிக்கும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அடியார்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழிபாடு தமிழிலேயே அவர்ரவர்கள் இறைவனை போற்றி பாடி மலர் வில்வம் மற்றும் வன்னிமர இலைகளால் அரச்சனை செய்து சிறப்பு பெறலாம், இதன் மூலம் தான் ஒரு ஆன்மா மனம் மொழி மெய்யால் இறை வழிபாடு செய்ய முடியும்  இவ்வாய்ப்பு இவ் ஆலயத்தில் மட்டுமே உண்டு அவரரவர்கள் செய்தமாக வினைப்பயனுக்கு ஈடாக  " மாணிக்க வாசகரின் கூற்றுப்படி " முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்றபடி வினைப்யன் நீங்கவும் நல்வாழ்வு நல்கவும் தாங்களே அர்ச்சனை தமிழால் செய்யலாம். வெறு எந்கக் கோயில்களிலும்  செய்ய முடியாத செயல் இதுதான் எனவே இக்கோயிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் விரும்பி வந்து அபிசேக ஆராதனையிலும் அர்ச்சனையிலும் ஒன்றி பக்தி நெறியில் பங்கு பெற்று அருள் பெற்று உய்ய வேண்டுகிறோம். அபிசேக பொருட்களும் கோயிலுக்கு கட்டளையாக செலுத்த விரும்பும் பொருட்களும் அனைத்தும் தாங்கள் நேரிலேயே கொண்டுவந்து காெடுத்து சிறப்பு மற்றும் அபிசேக பூசையில் கலந்து அருள் ெபறலாம். இங்கு எக்காரியத்திற்கும் பணமாக வாங்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து்க் கொள்கிறோம். தங்களால் முடியாத தருணத்தில் அதற்கு வேண்டிய வழிமுறைகளை தெரிந்து காெள்ள திருநாவுக்கரசு வழிபாட்டு மன்றத்தார்களையும், சக்தி பீட உபாசகர்களையும் நேரில் அணிகி விபரங்கள் தெரிந்து கொள்ளலாம். இக்கோயில் மேலும் ேமலும் சிறப்பு பெற அவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க இக்கோயிலின் வளர்ச்சிக்கு தங்களின் யாக்கை மனம் ெமாழி, கொண்டு அர்ப்பனித்து இக்கோயில் சிறக்க உதவிட அன்புடன் வேண்டுகிறோம். இவ்வூரில் சிவலாயம் சிறப்பு பெற்று நம் ஊர் வளர்ச்சி அடைய அன்புடன் அழைக்கிறோம். தற்போது வரை இக்கோயில் வளர்ச்சிக்கு அடியார்கள் பூசை சாமான்கள். அபிசேக சாமான்கள் பிரசாதம் தயார் செய்ய சமையல் சாமன்கள் என்று அடியார்கள் நன்கு உதவி செய்துள்ளார்கள் மற்றும் கோயிலில் சுற்று சூழல் வளர்ச்சிக்கு பொருளாகவும் யாக்கையாலும் உதவிகள் செய்து வருகிறார்கள் இவர்களுக்கு ஊர் சார்பாகவும், திருநாவுக்கரசர் வழிபாட்டு மன்றத்தின் சார்பாகவும், சக்தி பீட உபாசகர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  இக்கோயிலில் வழிபாடு செய்ய விரும்பும் அடியார்களுக்கு "அவன் அருள் இருந்தால் தான் இது கிடைக்கும் எனவே அவன் அருளாலேயே அவன் தாள் வணங்கி வளம் பெறுவோம். தற்போது இக்கோயிலின் உட்பிரகாரத்தில் மலர் செடிகள் வைத்து பூத்துக் குலுங்கி வளம் சேர்த்து மனத்திற்கு ரம்மியமான சூழலில் கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.இதுவும் சிறப்பிற்கு ஒர் எடுத்துக்காட்டே

திருச்சிற்றம்பலம்




புதன், 3 நவம்பர், 2021

சர்வம் சிவமயம் / “எல்லாம் சிவமயம்”

 சர்வம் சிவமயம் / “எல்லாம் சிவமயம்”



சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையை பார்ப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்.
சிவவழிபாடு முறைகள் பலவாறாயிருப்பினும் மாதந்தோறும் பெளர்ணமியில் சிவனுக்குச் செய்ய வேண்டிய ஆராதன முறைகளைத் தெரிந்து பூசை செய்ய வேண்டியது மிக அவசியம். சர்வம் சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திங்கள், 1 நவம்பர், 2021

பாதமே துணை

 


நாம் யாரைச் சார்ந்து வாழ்கிறோமோ அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை வந்தடைகின்றன. உலகில் நல்லவர்களாக வாழ, நல்லவர்களின் துணையும் வழிகாட்டுதல்களும் தேவைப் படுகின்றன. குடும்பத்திலுள்ள நற்பண்புகளிலிருந்து துவங்கி வெளியில் பழகும் வரை நல்ல பழக்கம் ஏற்பட இது வகை செய்கிறது. அது இல்லாதவனைப் “பழக்க தோஷம்” உள்ளவனாக அடையாளப்  படுத்துகிறோம். ஆணவம்.கன்மம்,மாயை ஆகியவற்றின் வசப்படும் உயிர்கள் தாமே உயர்கதி அடைய சக்தியற்ற தன்மையால் இறைவனது கருணையால் மட்டுமே உய்யப்பெறுகின்றன. பாசத்தோடு கட்டுண்ட பசுக்களாகிய உயிர்கள் பதியின் துணையினால் உய்யப்பெறுவதை சித்தாந்த நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.


உலகைப் படைக்கும்போதே உயிர்களின் பக்குவத்திற்கேற்றபடி கருணை பாலிப்பதால் தனிப் பெருந்துணையாக இறைவன் விளங்குவதை ,              “ எனக்கு ஆர் துணை நீ அலதே “ என்ற திருமுறை வாக்கால் அறிகிறோம். உயிர்களுக்கு உருவத்தைத் தந்த ஈசனே அவற்றின் அங்கங்கள் யாவும் அவனை வணங்கிப் போற்றுவதற்காக அமைத்து,  உய்யும் வழியைக் காட்டியுள்ளான். தானும் ஓர் உருவெடுத்து முன்வந்தருளி சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்துகிறான். சீவன் சிவனை அடையாளம் கண்டவுடன் சிவ சம்பந்தமாகி, பழக்கமும் அவ்வுயிர்க்கு  ஏற்பட்டுவிடுகிறது. சிவ புண்ணியத்தை ஈட்டிய உயிர்களுக்கு இப்பழக்கம் பணி செய்வதன் மூலம் சித்திக்கிறது. சித்த மலம் அறுபட்டுச்  சிவமாகிறது. இதற்கு எதுவாக அமையும் முதற்கட்ட வழிபாடே உருவ வழிபாடு.


உருவ வழிபாட்டில் முதலிடம் பெறுவது, அவ்வுருவத்தின் பாதமே கதி என்று பணி செய்வதாகும். “ திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் “ என்பது திருவாசகம். பாதாதி கேசமாகத் திருவுவைப் பெரியோர் வணங்குவர். திருவடிகளைக் காண்பதை  ருத்ர பாத தரிசனம் என்று திருவாரூரில் அழைப்பார்கள். “ எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் “மனித்தப் பிறவியும் வேண்டுவதே “ என்பார் அப்பர் சுவாமிகள். ஆலயங்களில் அர்ச்சனைகளும் அப்பொன்னடிக்கே செய்யப்படுகின்றன. பிரார்த்தனையும் பொன்னடிக்குச் செய்யப்படுவதை, “ பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் “ என்ற அப்பர் வாக்கால் அறிகிறோம்.


தீக்ஷா கிரமங்களில் திருவடி தீக்ஷை முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே குருவாக எழுந்தருளித் திருவடியைச் சிரத்தின் மீது வைத்தருளுவது அருளாளர்களுக்கே வாய்க்கும். சுந்தரர் துயின்று கொண்டு இருந்தபோது இறைவன் அவரது முடியில்  திருப்பாதத்தைச் சூட்டி அருளியதும், நல்லூரில் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டியதும், பெரிய புராணம் நமக்கு அறிவிக்கும் செய்திகளாகும்.  “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் “ என்ற அப்பரது தேவார வாக்கு இதற்கு அகச் சான்றாக அமைகிறது. வைணவக் கோயில்களில் சடாரி சார்த்தப்படுவது போலவே நல்லூரிலும் சேவார்த்திகளின் சிரத்தில் திருப் பாதம் சார்த்தப்படுகிறது. 


இன்னம்பர்,திருவையாறு ஆகிய தலங்களில் அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள் பலவற்றுள் திருவடியைப் பாடல் தோறும்  போற்றுவதாக அமைந்துள்ளன. திருவதிகை வீரட்டத்துப் பதிகங்களில் ஒன்று திருவடித் திருத்தாண்டகம் என்பதாகும். அதில் ஒவ்வொரு வரியிலும் அப்பரடிகள்  சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுவதாக உள்ளது அறிந்து இன்புறத்தக்கது. அதில் ஒரு பாடலை இங்குக் காணலாம்:


“அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி


அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி


சரவணத்தான் கை தொழுது சாரும் அடி


சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி


பரவுவார் பாவம் பறைக்கும் அடி


பதினெண் கணங்களும் பாடும் அடி


திரைவிரவு தென் கெடில நாடன் அடி


திரு வீரட்டானத்து எஞ் செல்வன் அடி. “


{ அரவணையான்- பாம்பணையில் துயிலும் திருமால்; அருமறையான்- பிரமன்; சென்னி-சிரம்; சரவணத்தான்-முருகன்; சார்ந்தார்கட்கு – தன்னைச் சரண் என்று சார்ந்தவர்களை; பரவுவார்-துதிப்பவர்கள்; கெடில நாடன் – கெடில நதி அருகே கோயில் கொண்டுள்ள திருவதிகைப் பதி }


இப்பதிகத்தில் இறைவனது திருவடி, காலனைக் காய்ந்தது, அரக்கனான இராவணனின் ஆற்றலை அழித்தது, கணக்கு வழக்கைக் கடந்தது, அழகு எழுத முடியாத அருட் சேவடி, உரு என்று உணரப்படாத அடி, உரையால் உணரப்படாத அடி, மந்திரமும் தந்திரமும் ஆய அடி, மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி என்றெல்லாம் திருவடியைப் பலவாறு போற்றுகின்றார் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமான்.  


திருவடிகளே ஆதியும் அந்தமும் ஆவன.அவையே பல்லுயிர்களின் தோற்றத்திற்கும், போகத்திற்கும், மறைவுக்கும் கார்ணமாவன. திருமாலும் பிரமனும் காணாத அத்  திருவடிகளே நம்மை ஆட்கொண்டு அருளுவன. இவை அனைத்தையும் ஒரே பாடலில் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்க வழங்குகிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல். அப்பாடலின் மற்றுமோர் அழகாவது அத்திருவடிகளின்  வருணனையே. அதனைப் , பாதமலர், செந்தளிர்கள்,பொற்பாதம், பூங்கழல்கள், இணை அடிகள், புண்டரீகம் ஆகிய சொற்களால் சொற்பதம் கடந்த தொல்லோனுக்குச்  சொன்மாலை அணிவித்து அகமகிழ்கிறார் மாணிக்கவாசகர்:


“போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்


போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்


போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்


போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்


போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்


போற்றி யாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். “


“ கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் “ என்ற அப்பர் வாக்கும் இங்கு சிந்தித்தற்குரியது.

******

சார்ந்தாரைக் காப்பவன்



மனிதனாகப் பிறந்தால் பிறந்தது முதல் இறுதி வரை யாரேனும் ஒருவரையோ பலரையோ சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்பும், பாலகனானது முதல் கல்வி கற்கும் வரை தந்தையின் கண்காணிப்பும் கல்வியைப் போதிக்கும் குருவின் கருணையும் , மணம் செய்து கொண்டபின்னர் மனைவியின் துணையுடன் செய்யும் அறமும், முதுமைக் காலத்தில் மக்களும் மனைவியும் ஆற்றும் சேவையும்,  உடலை நீத்தபின்னரும், உறவினர்கள் முறைப்படி இறுதிக் கடன்களை ஆற்றுவதும் போன்ற சேவைகளைப் பலரும் செய்யும்படியாக வாழ்கிறோம்.  

இன்பதுன்பங்கள் இல்லாதவன் ஈசன் ஒருவனே. “ இன்பமும் துன்பமும் இல்லானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இன்பதுன்பங்களை சமமாகப் பாவிப்பது எல்லோருக்கும் எளிய செயல் அல்ல. இன்பம் வந்தால் ஆகாயம் அளாவக் குதிப்பதும் துன்பம் வந்தால் துவண்டு போவதும் மட்டுமே நம்மால் இயலும். அப்படியானால் உலகில் நீடு வாழவும் துன்பம் நீங்கி என்றும் இன்பம் துய்க்கவும் வழி இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவனது மலரடிகளை நம்பி அடைக்கலமாக வாழ்பவர் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் திருவள்ளுவர். இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கும் அவ்வுலகம் பெற்றுப் பிறவாத நிலை பெறுவதற்கும் இறைவனது அருள் வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.


இறைவன் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? அவனது உருவம் தான் என்ன? அவனை வழிபட்டால் ஈடேற முடியுமா? உலகில் இத்தனை மதங்களும் பல்வேறு கடவுள்களும் இருப்பதன் நோக்கம் என்ன? இறைவனைக் கண்டவர்கள் உண்டா ? பிறப்பும் இறப்பும் எதனால் ஏற்படுகிறது? எல்லோரும் ஒருபோல வாழாததன் காரணம் என்ன? பிணியும் முதுமையும் ஏற்படுவது எதனால்? அவற்றை வெல்ல முடியுமா? நல்லவர்களும் துயரங்களை எதற்காக அனுபவிக்கிறார்கள்? தீயவர்கள் பலர் சுகவாசிகளாகத்  திரிகிறார்களே!  தீயவர்களில் பலர் தண்டிக்கப்படாதபோது தெய்வம் இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படாதா? இதுபோன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயற்கை.


மேற்கண்ட கேள்விகளுக்கு அனுபவத்தால் விடை காண்பது சிறந்தது. அந்த அனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது என்றால் குருமூலமாகவும் அறவழி நூல்களாலும், அவ்வழியைக் கடைப் பிடிப்பதாலும் ஆலய தரிசனங்களாலும் கைகூடுவது சாத்தியம். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்படுவதில்லை. பலருக்கு முதுமைக் காலம் வரை அவ்வித எண்ணமே ஏற்படுவதில்லை. சிலருக்குப் பிணி வந்தபோது முதிர்ச்சி ஏற்படும். “ நோயுளார் வாய் உளான்” என்பார் சம்பந்தர். இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே தெய்வ சிந்தனையோ அல்லது தன்னை இறைவனருள் பெறுவதற்கு உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை.


தன்னைத் தயாராக ஆக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதே விருப்பு வெறுப்பு மெதுவாக நீங்க ஆரம்பிக்கிறது. உடலைப் பற்றிய கவலை நீங்குகிறது. பிணிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆத்ம ஞானம் பிறக்கிறது.  இவ்வாறு வேதாந்த ஞானம் ஏற்பட்டால் முக்தி வரம் வேண்டும் இயல்பு வந்து விடுகிறது. இறைவன் தனக்குள் இருப்பதை மெல்ல அறியும் நிலையும் கிட்டி விடுகிறது.  


திருவோட்டையும் செம்போன்னையும் எவ்வாறு சமமாகப் பாவிக்க முடியும் என்பதே வினா. அதற்கான ஒரே வழி நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்வதேயாகும். தகுதி ஏற்பட்டால் ஒழிய பாசம் களைவது இயலாததொன்று. பாசத்தைப் பிறர் துணை இன்றி நாமே களைந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்கின்றன சித்தாந்த நூல்கள். இறைவனது கருணையாகிய பற்றுக்கோடு இல்லாமல் உயிர்கள் ஞானம் பெற சாத்தியமே இல்லை என்று அந்நூல்கள் கூறுகின்றன. “ பாசமான களைவார்” என்று அதனை இறைவனது தனிப் பெருங் கருணையாகப் புகழ்வார் ஞானசம்பந்தர். நம்மைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிகளைத் தெளிவாகத்  திருவாவடுதுறை என்ற தலத்தின் மீது அவர் பாடியருளிய பதிகத்தால் அறியலாம். தன்  நெஞ்சுக்குச் சொல்வது போல் நமக்காக  இரங்கி உபதேசம் செய்வதை அப்பதிகம் முழுதும் காணலாம். அவரது நிகரற்ற பக்தியின் வெளிப்பாட்டை அப்பதிகத்தில் நாம் காண முடிகிறது.   “நற் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்று அவரை சுந்தரர் சிறப்பித்து அருளிச் செய்துள்ள திருத்தொண்டத்தொகை வரிகளும் இக்கருத்துக்கு அணி செய்கின்றன.


“ இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”


“ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”


“ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்”


“ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா “


“கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”


“ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் எத்தாதென் நா”


“ வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா “


“பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”


“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர்க்கழலலால் உரையாதென் நா”


“பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா”  


என்ற வரிகள்,  நமக்கு  எவ்விதத் துயரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் கொடுக்க வல்லன. நாள் தோறும் இதனைப் பாராயணம் செய்யச் செய்ய அந்நிலை அடைவதற்காக  அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நமது  அனுபவத்தால் அறிய முடிகிறது. இந்த ஞான முதிர்ச்சி ஒன்றே நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவித்துப் பேரின்பமாகிய சிவானந்தம் பெற ஆற்றுப் படுத்தும். உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மையும் வெளிப்படுகிறது.