கோடி லிங்க தரிசனத்தை தரும் அன்னாபிஷேகம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பலரும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அதே போல் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலமும் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒவ்வொரு விதமான விசேஷங்கள் இருந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு மிகவும் சிறப்பு மிகுந்த விசேஷம் இருக்கிறது. அன்றைய தினம் தான் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் என்பது நடைபெறும்.
அன்னாபிஷேகம் பூஜை வழிபாடு யார் ஒருவர் கோடி லிங்க தரிசனத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி அற்ற நிலை உண்டாகும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார். அனைவராலும் சுலபத்தில் கோடி லிங்க தரிசனத்தை காண இயலாது அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்தை யார் ஒருவர் தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் கோடி லிங்க தரிசனத்தை செய்த பலனை பெறுவார்கள். ஒவ்வொரு அரிசியும் சிவலிங்கமாக பாவிக்கப்பட்டு அன்றைய தினம் நாம் வழிபாடு செய்வதால் தான் கோடி லிங்க தரிசனத்தை நம்மால் அன்றைய தினம் செய்ய இயல்கிறது
ஐப்பசி மாத பௌர்ணமி திதி என்பது நவம்பர் மாதம் நான்காம் தேதி இரவு 9:42 மணிக்கு தொடங்கி நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாலை 7:27 வரை இருக்கிறது. அதனால் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 9:15ல் இருந்து 10:15 மணிக்குள்ளோ அல்லது காலை 11:45 மணியிலிருந்து 12:45 மணிக்குள்ளோ அல்லது மாலை 5:30 மணியிலிருந்து இரவு 7 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். வீட்டில் சிவபெருமானின் படம், சிலை, லிங்க ஸ்வரூபம் என்று எது இருந்தாலும் அன்னாபிஷேக நாளில் கண்டிப்பான முறையில் பூஜை செய்ய வேண்டும்.
எந்த வடிவத்தில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்கத்தை முதலில் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பசும்பாலால் அபிஷேகம் செய்து பிறகு பச்சரிசி சாதத்தை வடித்து ஆறவைத்து அதை வைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் சிவலிங்கம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து பச்சரிசி சாதத்தை அதில் வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்து முடித்த பிறகு சிவபெருமானுக்கு முன்பாக 5 விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை வைக்கலாம்.
பிறகு “ஓம் லிங்கேஸ்வராய நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்து 2 மணி நேரம் கழித்த பிறகு தான் சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பொழுது லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுக்காமல் ஆவுடையின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி கலந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது காக்கை குருவிகள் போன்றவற்றிற்கோ தானமாக தர வேண்டும். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அன்னாபிஷேக நாளில் அனைவரும் சிவ ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கும் இந்த முறையில் வழிபாடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்
