திங்கள், 19 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு! மெய்யும்-பொய்யும்!

வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல்கள்!


அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.

படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மானை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிருவருளாலே நான்தான்ஆ னேனே.
மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருத்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
இறக்கவும் ஆசை இல்லை; இப்படிநான்
இருக்கவும் ஆசை இன்றி; இனிநான்
பிறக்கவும் ஆசை இலை; உலகெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலை துயர்அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே