செவ்வாய், 9 மே, 2017

காசிக்கு சமமான ஆறு ஆலயங்கள்

காசிக்கு சமமான ஆறு ஆலயங்கள்
அருள்நலம் சார்ந்த சான்றோர்கள் சிவனருட் செல்வர்கள், நாயன்மார்கள் ஆகியோர் சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தள்ளார்கள். அப்பெரு மக்கள் உணர்த்தியவாறு நம் பொருட்டு காசிக்கு சமமான ஆறு சிவத்தலங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
வசதி இல்லாதவர்கள், இயலாதவர்கள், தமிழ்நாட்டில் எளிதாக சென்று வழிபட்டு நலம் பொருட்டு இறைவர் தக்க அருளாளர்கட்கு உணர்த்தியுள்ளார் என்றே நாம் கொள்ளவேண்டும்.
அந்த ஆறு சிவத்தலங்கள்
1, திருவெண்காடு
2.திருவையாறு
3.மயிலாடுதுறை
4. திருவிடைமருதூர்
5.திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சயம்

திருவெண்காடுImage may contain: sky and outdoor

இறைவர் திருப்பெயர் : சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
இறைவியார் திருப்பெயர் : பிரமவித்யாநாயகி.
தல மரம் : வடஆலமரம்.
தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில்
அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்ற
முறையில் நீராடுவர்.)
வழிபட்டோர் : பிரம்மன், இந்திரன், வெள்ளையானை முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை,
3. மந்திர மறையவை.
2. அப்பர் - 1. பண்காட் டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித்.
3. சுந்தரர் - 1. படங்கொள் நாகஞ்
தல வரலாறு :
இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.
சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.
சிறப்புக்கள் :
அச்சுத களப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர் உள்ள பதி.
இத்தலம் மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள் (முறையே சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வடஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.
"சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.
இத்தலம் புதன் கிரகம் உரியவர்கள் வழிபடவேண்டிய சிறப்புத் தலமாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது.
இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது.
அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடகளமைந்துள்ளன; காணத்தெவிட்டாத கலையழகு.
நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது.
துர்க்கை இங்கு மேற்கு நோக்கியிருப்பது விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.
மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள்; சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும், அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுன்றன.
அமைவிடம் :
மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன.
திருச்சிற்றம்பலம்

திருஐயாறு (திருவையாறு) கோயில் தலவரலாறு


இறைவர் திருப்பெயர் : பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
இறைவியார் திருப்பெயர் : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி.
வழிபட்டோர் : திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி,
சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார்,
அருணகிரிநாதர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. கலையார் மதியோடு (1-36),
2. பணிந்தவர் அருவினை (1-120),
3. புலனைந்தும் பொறிகலங்கி (1-130),
4. கோடல் கோங்கங் (2-6),
5. திருத்திகழ் மலைச்சிறுமி (2-32);
2. அப்பர் - 1. மாதர் பிறைக்கண்ணியானை (4-3),
2. விடகிலேன் அடிநாயேன் (4-13),
3. கங்கையை சடையுள் (4-38),
4. குண்டனாய்ச் சமணரோடே (4-39),
5. தானலா துலக மில்லை (4-40),
6. அந்திவட் டத்திங்கட் (4-99),
7. குறுவித்த வாகுற்ற (4-91),
8. சிந்திப் பரியன (4-92),
9. சிந்தை வாய்தலு (5-27),
10. சிந்தை வண்ணத்த (5-28),
11. ஆரார் திரிபுரங்கள் (6-37),
12. ஓசை யொலியெலா) (6-38);
3. சுந்தரர் - பரவும் பரிசொன் (7-77).
தல வரலாறு
ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.
சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)
நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.
இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.
அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.
சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன
சிறப்புகள்
சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.
நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.
பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 10-கி.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.
திருச்சிற்றம்பலம்

திருஇடைமருதூர் (திருவிடைமருதூர்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruvidaimarudhur Temple
இறைவர் திருப்பெயர் : மருதவாணர், மகாலிங்கேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
தல மரம் : மருதமரம்
தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர் : உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர்,
பிரமன், திருமால்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. ஓடேகலன் உண்பதும்,
2. தோடொர் காதினன்,
3. மருந்தவன் வானவர்,
4. நடைமரு திரிபுரம்,
5. விரிதரு புலியுரி,
6. பொங்குநூல் மார்பினீர்.
2. அப்பர் - 1. காடுடைச் சுடலை,
2. பாசமொன்றிலராய்,
3. பறையின் ஓசையும்,
4. சூலப் படையுடையார்,
5. ஆறு சடைக்கணிவர்.
3. சுந்தரர் - கழுதை குங்குமந் தான்.
தல வரலாறு
இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.
அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.
பூசை விதிகளைத் தேவர்களுக்கு அறிவுறுத்தற் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்துக் காட்சியருளினார்.
மருத மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ள மூன்று தலங்களான திருப்பருப்பதம்(வடநாடு), சோழநாட்டுத் திருஇடைமருதூர் மற்றும் திருப்புடைமருதூர்(பாண்டியநாடு) ஆகியவற்றுள் இது இடையாக உள்ளது.
சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன:
விநாயகர்- திருவலஞ்சுழி,
முருகர்- சுவாமி மலை,
நடராஜர்-சிதம்பரம்,
தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி,
சண்டேச்சுரர்- திருசேய்ஞலூர்,
பைரவர்-சீர்காழி,
நவக்கிரகம்-சூரியனார் கோவில்
வரகுண பாண்டியனின் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்.
சிறப்புகள்
இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.
இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.
இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.
இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.
இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.
கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்.
பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர்.
இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.
பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.
இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.
பட்டிணத்தடிகளாரால் மும்மணிக்கோவை பாடப் பெற்றது.
இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.
சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர்.
சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
திருச்சிற்றம்பலம்

திருவாஞ்சியம்
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீவாஞ்சியநாதர்
இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி
தல மரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்த கங்கை,யம தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - வன்னிகொன்றை மதமத்தம்.
2. அப்பர் - படையும் பூதமும் பாம்பும்.
3. சுந்தரர் - பொருவனார் புரிநூலர்.
தல வரலாறு
இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழ வந்த நாயகி"யாக இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் என்ற செய்தி இத்தல புராணத்தில் காணப்படுகின்றது. பராசர முனிவர் இத்தலத்தில் நீராடி, வீரதனு மன்னனைப் பற்றிருந்த பிரமகத்தியைப் போக்கிய சிறப்பால் இத்தீர்த்தம் அம்முனிவர் பெயரால் விளங்குகின்றது. அத்திரி முனிவர் நீராடித் தத்தாத்ரேயரை மகவாகப் பெற்ற சிறப்பால் அத்திரி தீர்த்தம் என்று வழங்குகிறது. பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது. உரோமச முனிவர் தவம் செய்து முத்திப் பெற்ற வரலாறு புராணத்தில் கூறப்படுகிறது. திருமால் வழிபட்டுத் திருமகளை அடைந்ததோடு, காத்தல் தொழிலைப் பெற்றார். நான்முகன் வழிபட்டுப் படைத்தல் தொழிலைப் பெற்றார். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி ஆனந்த வடிவமுற்றான். விருட்சி என்பவனின் மனைவி சாருமதி கயநோய் நீங்கப் பெற்றாள். தர்மத்துவசன் என்ற வணிகன் நற்கதி எய்தினான்.
இயமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது. இறைவன் இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத் திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற / இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன் ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) ஓதி சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும் தலபுராணம் கூறுகின்றது.
சிறப்புகள்
இத்தல தீர்த்தம் (குப்தகங்கை), அத்திரி, பரத்துவாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற சிறப்புடையது. காசியில் கங்கைதன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள் சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை நீக்கிக் கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற சிறப்புடையத் தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற நாமங்களைக் கொண்டு விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன் இங்குத் தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய பாவங்கள் அனைத்தையும் நீக்கி வெற்றி, ஆனந்தம், வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது இத்தலம். இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.
இத்தலம் மூவர்த் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 70-வது திருத்தலமாகும். மாணிக்கவாசகரும் கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத்தலத்தைக் குறித்துள்ளார். இஃது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன. பாவங்களை ஏற்று அகற்றும் கங்கா நதியானவள் தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்து மீதி 999 கலைகளுடன் இத்தல தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் "குப்தகங்கை" என வழங்குகின்றது. தல விருட்சம் சந்தனமாகும்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம் பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளது. இராமலிங்க சுவாமிகள் பாடலும், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையும் உள்ளன. தருமை குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக் குறித்தருளுகிறார்.
இத்தலத்தில் 27 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுளன. பிற்கால சோழர்கள் கல்வெட்டுகள் ஏழும், பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் ஏழும், நாயக்கர்கள் கால கல்வெட்டு ஒன்றும், ஏனைய பொது. கல்வெட்டுக்களில் முறையே - குலோத்துங்கச் சோழவள நாட்டில் பனையூர் நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் என்ற குறிப்பு உள்ளது. இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை நில தானம், வரி தள்ளுபடி முதலிய தகவல்கள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இக்கோவில் மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 9-கி.மீ.தூரத்தில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. (ஸ்ரீவாஞ்சியம் என்றும் வழங்கப்படுகின்றது).

Image may contain: sky and outdoor

மயிலாடுதுறை
இறைவர் திருப்பெயர் : மயூரநாதர்.
இறைவியார் திருப்பெயர் : அபயாம்பிகை
தல மரம் : மா, வன்னி.
தீர்த்தம் : பிரம தீர்த்தம், காவிரி, ரிஷப தீர்த்தம்.
வழிபட்டோர் : இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள்,
உமாதேவி, அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. கரவின் றிநன்மா மலர்,
2. ஏனவெயி றாடரவோ.
2. அப்பர் - கொள்ளுங் காதன்மை பெய்
தல வரலாறு
அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது.
சிறப்புகள்
ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும்.
காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று.
சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.
கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.
நாடொறும் ஆறு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார்.
கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் முதலான பல ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் ஏராளமாகவுள்ளன.
திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக