செவ்வாய், 12 மார்ச், 2024

சொல்லும் நா நமச்சிவாயவே

 நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு



தற்காலத்தில் கிரகங்களும் நட்சத்திரங்களும் (நாளும் கோளும்) சரியில்லை என்று வருத்தப்பட்டு அலைந்து திரிந்து இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதனால் சிவன் கோவில்களில் நவக்கிரங்களின் வழிபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அனுதினமும் காணும் உண்மை. இது பற்றிக் கடவுளைக் கண்டவர்கள் கூறியுள்ள உண்மைகள் யாவை என்பதை காண்போம்.


"ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே

கோளு நாளவை போயறுங் குற்றமில்லார்களே" திரு ஞான சம்பந்தர் த.வே.2


தற்காலத்தில் மக்கள் கோள்கள் தான் தங்களுக்கு நன்மையைச் செய்யும் என்று நினைத்து அவற்றையே பெருந்தெய்வமாக கருதி (முழுமுதற் பொருளாக) வழிபட்டும் வருகிறார்கள். இது முற்றிலும் பொருந்தாத செயலாகும்.

கோள்கள் யாவும் தமக்குவமை இல்லாத சிவபெருமானாரை வணங்கியே கிரகப்பதங்கள் பெற்றுள்ளன. இவை யாவும் சிவபெருமானாருடைய ஆனையின்படி செயல்படக்கூடியவை என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்


" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை .............. திருமந்திரம் த,வே, 10


அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை " திருமந்திரம்


பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாதவர் சிவபெருமானார் ஒருவரே ஆவார். இவரைத்தான் பெருந்தெய்வம் என்றும், முழுமுதற் பொருள் என்றும் கூறுகிறோம். இவரை வழிபட்டால் நவக்கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யா. மேலும் நமக்கு நன்மைகளைச் செய்யும் என்று சொல்கிறார் மூன்று வயதில் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தர்


" ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" ........... ஞானசம்பந்தர் கோளாரு பதிகம்


சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி , இராகு,கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் சிவபெருமானாரை வணங்குபவர்கட்கு நன்மைகளைச் செய்யும் என்பது கடவுளை கண்ட சம்பந்த சுவாமிகள் திருவாக்கு ஆகும்.

போலிவேடதாரிகளை நம்பி வேண்டாப் பொருளற்ற சடங்குகளைச் செய்து காலத்தையும், செல்வத்தையும் வீண் செய்ய வேண்டாம். கடவுள் நிலையறிந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ளனவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


திருமுறைப் பாடல்கள் பாடியே இறைவரை நாம் வணங்க வேண்டும். நமக்கு பசி வந்தால் நாம் தான் சாப்பிட வேண்டும். நமக்கு நோய் வந்தால் நாம் தான் மருந்து உட்கொள்ள வேண்டும் நமக்கு தாகம் எடுத்தால் நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைப்போல நம்முடைய தீயவினைகள் நீங்கி நல்வினை பெருகி நலம் பெறுவதற்கு நாம்தான் பாடிப்பரவ (வணங்க ) வேண்டும்.


"பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்

ஓட்டினார் வினை ஓல்லையே" .............. ஞான சம்பந்தர் தி,முறை 1


உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிகள் உள்ளன. அவற்றுள் பேசும் திறம் பெற்றுள்ளவன் மனிதன் மட்டுமே. அதனால் வாயினால் பாடி வணங்குவதுதான் நலம் தருவதாகும்.

" நீரார் சடையானை நித்தல் ஏத்துவான்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே" .................... ஞான சம்பந்தர் தி.மு. 1


ஒன்பது கோள்களும் சிவபெருமானாரை வழிபட்ட தலங்கள் பற்றியும், அத்தலங்களுக்குரிய பதிகங்களையும் " தமிழ் மாலைகள் மண்ணிற்கும் விண்ணிற்கும் " எனும் நூலில் காணலாம்.


பொதுவாக மக்கள் துன்பங்கள் வரத் தொடங்கும் பொழுது கிரகங்கள் பற்றியும், தாங்கள் வாழுமிடங்கள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

" நோய்எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" எஎன்பது திருக்குறள்


பிற உயிர்கட்கு ஏற்கனவே நாம் செய்துள்ள துன்பங்கள்தான் இப்பொழுது நமக்கு வருகின்றன என்பதை தான் மறுக்க முடியாத உண்மை.


"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையினால் முடிந்தது" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திருமந்திரம்


எந்த வகையில் துன்பங்கள் வருகின்றனவோ அந்த வகையில் முற்பிறவிகளில் நாம் பிற உயிர்கட்குத் துன்பங்கள் செய்கின்றோம் என்று உணர வேண்டும், இப்பொழுது அவ்வகையில் புண்ணியங்களைச் செய்துவிட வேண்டும்.


நாம் ஏற்கனவே செய்துள்ள புண்ணியத்தால் இப்பொழுது இன்பங்களை அனுபவித்து வருகின்றோம். புண்ணியம் முடிந்து விட்ட பொழுது, துன்பங்கள் தொடர ஆரம்பிக்கின்றன.ஆதலால், அன்றாடம் புண்ணியங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும் ( வங்கியில் நம் கணக்கில் பணம் போட்டுக் கொண்டே இருப்பது போல)

விதைத்தைத் தான் அறுவடை செய்கிறோம். முள்ளை விதைத்தால் நெல்லை எதிர்பார்த்தால் கிடைக்காது தானே? புண்ணியத்தால் நற்செயல்களால் நலன்கள் பல பெறலாம் இதுவன்றி வெற்றுச் சடங்குகளால் பெற்றுவிட முடியாது.


எங்குச் சென்றாலும் நம்முடைய நிழல் நம்மைத் தொடர்வது போலு, நாம் செய்யும் நல்லனவும் தீயனவும் நம்மைத் தொடர்ந்து வரும். இதை உணர்ந்து விட்டால், போலித் துறவிகளிடம் சென்று ஏமாற மாட்டோம். ஏழைகட்கு உதவும் செல்வந்தர் நீண்ட நன்மையை தேடிக் கொள்கிறார். என்பதை மனதில் கெர்ள்ள வேண்டும், நாம் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்வதன் பொருட்டுப் பிற உயிர்கட்கு கனவிலும் தீமையை நினைக்க க் கூடாது. அனுதினமும் " சிவாயநம" எனும் திருஐந்தெழுத்து மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லில் நலமாக வாழலாம் என்பது ஞானசம்பந்தர் சொல்வது போல் உண்மை. இவர்கள் வானில் அரசாழ்வார் என்பது சம்பந்தரின் கட்டளை. நமசிவாய என்று நாம் மனத்தால் உச்சரிக்க மறந்தாலும் நம் நாக்கு அதனை அனிச்சை செயலாகக் கொண்டு சொல்லும்படி பழக்கப்படுத்திக் கொள்ள ேவண்டும் என்கிறார் சுந்தரர் பாண்டி பதிகத்தில் "..... நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே " என்கிறார்.


திருச்சிற்றம்பலம்

நன்றி: தமிழ் வேதம்