ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்
இறைவன் திருவருளால் ஆன்மா பல்வேறு பிறவிகளிலே பிறந்தும் இறந்தும் இரு வினைகளைப் புரிந்தும் அவ்வினைகளின் பயன்களை அநுபவித்து வருகின்ற சகல நிலை நீங்குவதற்கு, இருவினை ஒப்பு, மலபரிபாகம, சத்தி நிபாதம் இவற்றின் வழி முதல்வனது ஞானம் விளங்க அந்தஞானத்தின் முன் மாயா கருவிகளும் மாயா உலகமும் புலனாகாது முதல்வனது நிறைவில் தோய்ந்து நிற்பது சுத்த நிலை எனப்படும் இந்நிலையில் தான் உயிராகி ஆன்மா முத்திக்கு தகுதியடைந்து தயாராக உள்ள நிலை
பாசப்பற்று விடுதற்பொருட்டும், முதல்வன் பேரருளை அடைவதற்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகள் துணைபுரிகின்றன. உலகப்பயன் நோக்கி சிவனை வழிபடுதல் உபாயம் என்றும்,அப் பயன்கள் யாதொன்றயும் விரும்பாது அன்பே காரணமாக சிவனை வழிபடுதல் உண்மை என்றும் கூறப்படும். இச்செயலே சிவ புண்ணியத்தை விளைவிக்கும் இச் சிவ புண்ணியங்களால் இருவினை ஒப்பும், இருவினையொப்பால் மலபரிபாகமும், சத்திநிபாதமும் நிகழும், இம்மூன்றும் முன்னும் பின்னும் அல்லது ஏக காலத்தில் நிகழலாம் இதுவேஞானம் பெறுவதற்குரிய பக்குவ நிலையாகும்.
இருவினையொப்பு ;சரியை, முதலிய தவங்களின் வழி நல்வினைப்பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப்பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது, அவற்றால் உள்ளம் வேறுபடாது ஒன்றுபோல கருதி அவற்றின் மேல் பற்றுச் செய்யாது இருக்கும் மனநிலை உண்டாகும். அதுவே இருவினை ஒப்பு ஆகும். இது "ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நாேக்குதல் " என சொல்லப்படும். இதனால் ஆன்மாவிற்கு ஞான வேட்கை உண்டாகும்.
மலபரிபாகம்
இருவினை ஒப்பாவது அனுக்கிரக காரணம் அன்று, மலபரிபாகம் படுவதற்கே துணையாகும்,இருவினை ஒப்பு நிகழவே ஆணவத்தின் சத்தி மெலிந்து ஆன்மாவின் அறிவைத் தடுத்து ைவத்திருந்த அதன்பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலையை அடையும், அந்நிலை " மலபரிபாகம்" எனப்படும். பரிபாகம் என்பதற்கு பக்குவம் என்று பொருள். மலசக்தி நீங்கக்கூடிய பக்குவத்தை அடைந்தள்ளது என்பதைக் குறிக்கும்.
சத்தி நிபாதம்
மலப்பரிபாகம் சிறிது சிறிதாக நிகழ நிகழ அதற்கேற்ப அதுவரை ஆன்மாவில் மறைந்திருந்து பக்குவப்படுத்தி வந்த திரோதன சத்தி சிறிது சிறிதாகத் தன் தன்மை மாறி அருட் சக்தியாக மாறும். மலசத்தி தேய்நது வரும்நிலையை மலபரிபாகம் என்றாற்போல அருட்சத்தி விளங்கி வரும் நிலையை "சத்திநிபாதம்" என்பர் , இது மலபரிபாகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் சித்திநிபாதம் நிகழும்.இதனை சத்தி வீ்ழ்தல் என்பது பொருளாகும். இதனை சத்தி வீழ்ச்சி என்பதற்கு மக்கள் கூட்டம் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஒரு கல் அக்கூட்டத்தில் வீழ்ந்தால் என்னவாகும் மக்கள் எல்லாம் அஞ்சி அகல ஒதுங்குவார்கள். அதுபாேல சத்திநிபாதம்ஒருவருக்கு நிகழுமாயின் உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சி உண்டாக உலகியலில் இருந்து நீங்குவதாகும். எனவே சத்தி வீழ்ச்சி என்றே கூறப்படுகிறது. இந்த சத்திநிபாதம் ஆன்மாவின் பக்குவநிலைக்கு ஏற்ப மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என படிமுறைகளல் உயர்ந்து நிற்கும். இவ்வாறு ஆன்மா ஞானம் பெறுவதற்கு இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் எல்லாம் ஆன்மாவின் அறிவினில் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஞானம் பெறுவதற்கான படிநிலையை அடையும்.
குருவருள்
இறைவனது அருளே உயிர்க்கு அருளவேண்டி வடிவு கொள்கிறது. உயிர் பெத்தநிலையில் திரோதன சத்தியையும், முத்தியில் தடையில்லாத சிவஞான சத்தியையும் உருவாகக் கொண்டு உயி்ர்கட்கு அருள்புரிய கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் திருமேனி கொண்டு எழுந்தருளி மயக்கமாய் வந்து, தடுக்கும் கேவலம், விகற்பமாய் வந்து தடுக்கும் சகலம் ஆகிய நிலைகள் சேராதவாறு அருளில் நிறுத்தி மலங்களை போக்கியருள்வான். அதனால் ஆன்மா தன்னுடைய சிற்றறிவினை ஒழித்து மெய்ஞானம்பெறும். பெருகிய ஞானத்தால் பெருமானின் திருவடியை அடைந்து பேரின்பத்தில் திளைக்கும். சுத்த நிலையாகிய இந்நிலையே பிறவி ஒழிந்த இறைவனோடு கலந்திருக்கும் அருள்நிலையாகும். இவ்வருள்நிலை, சரியை, கிரியை, யோகம் நிலைகளில் நின்று முதிர்ச்சி பெற்ற ருக்கே வாய்க்கும் என்று சிவ ஆகமங்கள் சொல்லும்.
திருச்சிற்றம்பலம்
நன்றி சிவப்பிரகாசம் நன்நூல்