குருவை தேடி
-உனக்குள் இருக்கும் ஒருவன் ....வெளியே குருவாக..
உலக பிணிகளில் கொடுமையானது அறியாமை எனும் பிணி. தற்பொழுது இதற்கு வைத்தியமும் இல்லை, வைத்தியரும் இல்லை. அறியாமை என்பது அஹங்காரத்தின் மறு உருவம். நமது அருகில் இருக்கும் இறை சக்தியை நாம் அறியாமல் இருப்பது அறியாமை. இதை நமக்கு உணர்த்த குருவடிவில் இருப்பதும் இந்த சக்தியே ஆகும்.
அனைவரும் குரு என்றால் இருளை நீக்குபவர் என பொருள் கூறுவார்கள். குரு இருளை நீக்குபவர்மட்டுமல்ல. குருவின் செயல் வார்த்தைக்கு உற்பட்டது அல்ல. அறியாமையை போக்கும் குருவை தேடி அலைந்த மக்கள் வேதகாலத்தில் அதிகம். தற்காலத்தில் பணத்தை தேடி அலையும் மக்களே அதிகம். பணத்தை தேடினால் பணம் கிடைக்கலாம். ஆனால் குருவை தேடினால் அனைத்தும் கிடைக்கும் எனும் போது செல்வமும் இதில் அடக்கம் என உணர வேண்டும். குரு என்பவர் எங்குள்ளார், எவ்வாறு நமக்கு ஒளி தருவார் என பார்க்க வேண்டும். இந்த செயல் ,கண்கள் இல்லாத ஒருவர் சிறந்த வண்ணத் துணியை தேர்ந்தடுப்பதற்கு சமம்.
உதாரணமாக தற்பொழுது உள்ள சமூக நிலையில் குரு என்பவர் பல கோடி மதிப்புள்ள ஆசிரமம் வைத்திருக்க வேண்டும், பல லட்சம் மதிப்புள்ள வாகனத்தில் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்களின் குருவை போஸ்டரிலும் , தொலைக்காட்சி பெட்டியிலுமே தேடி அலைகிறார்கள். இதன் விளைவு , 6 மாதத்திற்கு ஒரு ஆன்மீகவாதியை இவர்கள் குருவாக வைத்திருக்கிறார்கள்.
இதற்கும் ஒருவர் சினிமா நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெரிய வித்தியாசம் இல்லை. இது தான் அறியாமையின் வெளிப்பாடு. குரு இந்த ரூபத்தில் தான் இருப்பார் என்பதை இவர்கள் முடிவு செய்வதை விட்டுவிட்டாலே அறியாமை இவர்களை விட்டுவிடும். குரு உங்கள் வீட்டின் அருகில் பிச்சைகாரராக இருக்கலாம். சில சமயம் உங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய வரலாம். நான் மிகைபடுத்தி சொல்வதாக தெரியலாம்.
ஜென் கதை ஒன்று இதை விளக்கும். ஒருவன் குருவை கொண்டு ஞானமடைய எண்னான். அவனது ஊரில் ஓர் ஜென் குரு இருப்பதாவும் அவரிடத்தில் சென்று கேட்டால் தன் குருவின் இடத்தை கூறுவார் என்று னைத்து அவரிடத்தில் சென்றான். ஜென்குரு அவரின் ஆசிரமத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
அவரிடத்தில் எனது குரு எங்கு இருக்கிறார் அவரை நான் எப்படி அறிந்து கொள்வது என கேட்டான். புதிய ரோஜாப் பூவின் மணம் கமழ ஒளிபொருந்திய முகத்துடன் யார் இருக்கிறார்களோ அவர் தான் உனக்கு ஞானம் அளிப்பவர் என்றார் ஜென் குரு.
பல வருடங்களாக தனது குருவை தேடி அலைந்தான். இருண்ட காடுகள் மலைகள் அனைத்தும் கடந்தான் எங்குதேடியும் குருவை காணவில்லை. ஓய்வு எடுக்க ஓர் மரத்தடியில் அமர்ந்தவனுக்கு திடீரென சுகந்த வாசனை வருவது அவனது நாசியில் உணர்ந்தான். அந்த மரத்தின் பின்பகுதியில் கண்களை கூசும் ஒளி இருப்பதை கண்டான். அந்த உருவத்தை நோக்கி சென்று வணங்கினான். புதிய ரோஜா பூவின் மணத்துடன் ஒளிபொருந்திய லையில் அங்கே உற்கார்ந்திருந்தவர் , அவனுக்கு முன்பு வழிகாட்டிய ஜென்குரு. கண்களில் கண்ணீர் பெருக அவரை நோக்கி கேட்டான், ஏன் ஐயா இத்தனை காலம் என்னை காக்க வைத்தீர்கள்?".
ஜென்குரு கூறினார், "உன் அறியாமை உன்னிடத்தில் இருக்கும் வரை இந்த ஒளியும் வாசனையும் நீ அறியவில்லை. இது எனக்கு எப்பொழுதும் இருந்தது. உன் தேடலின் பயனாக உன் அறியாமையை களைந்தாய் இதோ நான் உனக்காக காத்திருக்கிறேன்".
இது போலத்தான் நாம் குருவை மறந்து அவர் அருகில் இருப்பதை அறியமுடியாமல் அவரை தேடி அலைகிறோம். சினிமாவுக்கு போகும், உங்களுக்கு சமமாக கிண்டல் செய்யும் அல்லது தனது பைக்கில் ஜாலியாக சவாரி செல்லும் குருவை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். அவர் அமைதியாக புன்னகை புரியவேண்டும், காற்றிலிருந்து தங்க சங்கிலி எடுக்க வேண்டும் அல்லது மாலையை வைத்து ஜபம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இது போல நீங்களே முடிவு செய்வதால் தான் பல தவறான வர்கள் ஆன்மீகத்தில் உதயமாகிறார்கள்.
என்னை சந்திக்க வட இந்தியாவிலிருந்து வந்த ஒருவர். சுவாமிஜீ நீங்கள் கம்யூட்டர் எல்லாம் பயன்படுத்துவீர்களா, ஆச்சரியமாக இருக்கிறது என்றார். எது என் தவறா? அவர் என்னை தான் எதிர்பார்த்ததை போல இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அவருடன் பேசிய சில மணி நேரத்தில் விடைபெறும் போது அவர் கூறிய வாசகம் " இது போல மனதுக்கு மிக அருகில் பேசும் ஒரு நபரை நான் பார்த்ததில்லை".
குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்கிறோம். குருவை தேடுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது. உங்கள் தாய் அல்லது மனைவி கூட உங்கள் குருவாக இருக்கலாம். அறியாமை போல அஹங்காரமும் குருவை மறைக்கும் ஒரு உணர்வாகும்.
ஹரிவரதன் என்பவரின் கதை இந்த கருத்தை உணரவைக்கும். ஹரிவரதன் என்பவர் அதிக ஆன்மீக தேடல் கொண்ட பக்தன். குருவை தேடி ஞானம் அடைய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு அதிகமாக இருந்தது. பல ஆண்டுகளாக குருவை தேடி கிடைக்காமல் களைத்து விரக்தியான நிலைக்கு சென்றான். குடும்பம் இவனை நிர்பந்தப்படுத்த திருமண வாழ்க்கைக்கு தயாரானான்.
நல்ல மனைவியுடன் குடும்பவாழ்க்கை துவங்கிய ஹரிவரதனுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சில வருடங்கள் கழித்து மீண்டும் இவன் ஆன்மீக தேடல் அதிகமானது. அந்த வேட்கை கட்டுப்படுத்த முடியாமல், ஒரு நாள் இரவு மனைவியையும் குழந்தையையும் விட்டு பிரிந்தான். உணவையும் உடல் சுகத்தையும் மறந்து பல வருடங்கள் குருவை தேடி அலைந்தான். தன் நிலை மறந்து உடல் இளைத்து உருமாறி இவனின் வைராக்கிய தேடல் அதிகமாகியது.
ஒரு நாள் ஓர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கு சிறு ஆன்மீக கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஒளிபொருந்திய இளைஞன் புன்சிரிப்புடன் ஆன்மீக கருத்துக்களை விவரித்துக்கொண்டிருந்தான். ஹரிவரதனும் களைப்பின் மிகுதியால் அந்த கூட்டத்தின் ஓர் மூலையில் அமர்ந்து, ஆன்மீக பேச்சை கேட்க ஆரம்பித்தார். ஆன்மீக கூட்டம் முடிந்ததும் இளைஞனுக்கு அருகில் சென்று பல ஆன்மீக கருத்துக்களை கேட்டு விளக்கம் பெற்றார். புதிய விடியல் அவருக்குள் பிறந்தது.
இளைஞனின் காலில் விழுந்து வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள மன்றாடினார். அந்த இளைஞன் புன்சிரிப்புடன் அவரை நோக்கி கூறினான், குருவை தேடி இவ்வளவு காலம் அலைந்தீர்கள் இதற்காக அனைத்தையும் துறந்தீர்கள். நான் வேறுயாருமல்ல உங்களுக்கு பிறந்த மகன் தான். குரு என்பவரை மகனாக பெரும் பாக்கியத்தை உங்களுக்கு கடவுள் அளித்துள்ளார். உங்களை ஞானமடைய செய்வேன் என்றான். ஹரிவரதனின் கதை உண்மையில் கதையல்ல உண்மை சம்பவம் கூட. இதே போன்று ரமணர் தனது தாயாருக்கு பிறவா வரம் அளித்த நிகழ்ச்சி இதை உறுதிப்படுத்துகிறது.
குருட்டினை நீக்குங் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குடுடுங் குழிவிழு மாறே.
குருவை நீங்கள் முடிவுசெய்தால் இது போல தவறானவர்களின் கையில் சிக்கி தவிப்பீர்கள். உங்கள் குருவை நீங்கள் முடிவு செய்யாதீர்கள், அவர் உங்களை முடிவுசெய்யட்டும். குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள், அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும்.
திருச்சிற்றம்பலம்