செவ்வாய், 14 அக்டோபர், 2025

நமசிவய வாழ்க

 நமசிவய வாழ்க



“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகத்தை அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்தை, “நமசிவாய வாழ்க” என்றே தொடங்குகின்றார். திருவாசகத்தின் உட்பொருள் சிவபெருமானே என்று காட்டித் தில்லை மன்றுள் நடவரசர் திருவடியில் அமர்ந்த மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில், சிவபுராணத்தின் முதல் வரியாக அமைவது, நமசிவாய வாழ்க” எனும் வரியாகும். செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையானச் சித்தாந்த சைவத்தில் பரம்பொருளைச் சிவம் என்பர். அச்சிவத்திற்கு மற்றொரு பெயர், ‘நமசிவய’ எனும் திருவைந்தெழுத்து என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.


பரம்பொருளான சிவத்திற்குப் பெயர் நமசிவய என்பதனை, “போற்றியோ நமசிவாய புயங்கனே மயங்கு கின்றேன், போற்றியோ நமசிவாய புகலிடம் பிரிதொன்றில்லை, போற்றியோ நமசிவாய புறமெனைப் போக்கல் கண்டாய், போற்றியோ நமசிவாய சயசய போற்றி போற்றி” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதில் நமசிவய எனும் பெயராய் நிற்பவனே, உன்னை நான் போற்றுகின்றேன். பாம்பினை அணிந்திருப்பவனே உலக விருப்பால் மயங்குகின்றேன், உன்னை அன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. என்னைக் கைவிடாமல் காத்து அருளல் வேண்டும் வெற்றியை உடையவனே என்று குறிப்பிடுகின்றார்.


பெருமானுக்கு நமசிவய என்பது மற்றொரு பெயர் என்பதனை, “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும், வஞ்சகம் அற்றஅடி வாழ்த்த வந்தகூற்று, அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே” என்று தன்னைத் தமிழ்ஞான சம்பந்தர் என்று குறிப்பிட்டத் திருஞானசம்பந்தர் பாடுவார். மார்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்தது நமசிவய என்ற திருவைந்து எழுத்தின் வடிவாக நிற்கின்ற பெருமான் என்பார்.


நமசிவய எனும் பெயரைக் கொண்ட பெருமானை வாழ்த்தினால் நாம் வாழலாம் என்பதற்காக ‘நமசிவாய வாழ்க’ என்பார் மாணிக்கவாசகர். தமிழ்ச் சைவர்களின் மரபிலும் தமிழ்த் திருமாலியத்தவர்களின் மரபிலும் இறைவனுக்குப் பல்லாண்டு பாடும் வழக்கம் உண்டு. தமிழ்ச் சைவர்களின் தமிழ் மந்திரமான திருமுறையில், ஒன்பதாம் திருமுறையில் சேந்தனாரின் திருப்பல்லாண்டு இறைவனை வாழ்த்துவதாக உள்ளது. அதே போன்று தமிழ்த் திருமாலியத்தவர்களின் தமிழ் மந்திரமான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் பெரியாழ்வார் திருமாலை வாழ்த்தும் திருப்பல்லாண்டு உண்டு. இவை நாம் வாழ்வதற்காக இறைவனை வாழ்த்துவது என்பதனை, “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என்று திருநாவுக்கரசு அடிகளும் மணிவாசகர் குறிப்பிடுவதனைக் குறிப்பிடுவார்.


சிவபுராணத்தில், ‘நமசிவய’ என்ற திருவைந்து எழுத்தினை முதன்மையாக மணிவாசகர் குறிப்பதற்குப் பல்வேறு கரணியங்களைக் குறிப்பிடலாம். பெருமானின் திருப்பெயராக நின்ற நமசிவய எனும் திருவைந்தெழுத்து, தமிழ்ச் சைவர்களின் அரிய தமிழ் மந்திரமாக உள்ளது என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். நிறைமொழி மாந்தர் எனும், உள்ளத்தில் குற்றம் அற்ற மாந்தர்களின் வாய்ச்சொல்லே மந்திரம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். அத்தகையவர் வாய்ச்சொல் ஆணையின்படி செயல் நிகழும் என்றும் குறிப்பிடுவார். அத்தகையோரின் மந்திரச் சொற்கள் அவர்களையும் பிறரையும் காக்கும் ஆற்றல் உடையவை என்பார். அவ்வகையில் நாயன்மார்களின் திருவாய்களில் இருந்து உதிர்ந்த மொழியாகவும் அவர்களையும் பிறரையும் காத்த மந்திரமாகவும் நமசிவய உள்ளது என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். சமணர்கள் திருநாவுக்கரசு அடிகளைக் கல்லோடு பிணைத்துக் கடலில் போட்டப் போது, “கல்துணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும், நல்துணையாவது நமசிவாயவே” என்று நமசிவய மந்திரம் தன்னைக் காத்தமையையும் தமிழ் மந்திரத்திற்குக் கடலில் கல் மிதந்த அருள் நிகழ்ச்சியையும் குறிப்பிடுவார்.


மணிவாசகர் முதன்மைப்படுத்தும் ‘நமசிவய’ மந்திரம் நம் சிந்தையைக் காப்பது என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்திஎழும் பழைய வல்வினை மூடாமுன், சிந்தை பராமறியா…” என்று சுந்தரர் அடிகள் பாடுவார். சிந்தையைத் தீயவற்றில் இருந்து காத்துச் செம்மைப் படுத்துவது திருவைந்து எழுத்து மந்திரம் என்று சுந்தரர் குறிப்பிடுவார். திருநாவுக்கரசரோ தன்னைச் சமணர்கள் வெப்பமான நீற்றறையில் போட்டுப் பூட்டிய போது, “மாசில் வீணையும் எனும் பதிகம் பாடி மீண்டார். அப்போது, “மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பதிகத்தின் இரண்டாவது பாடலில், “நமசிவாயவே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி விச்சையும், நமசிவாயவே நாநவின்று ஏத்துமே, நமசிவாயவே நன்னெறி காட்டுமே” என்று அருளி இருக்கின்றார். இதில் நமசிவய மந்திரம் இறைவனாக நின்று உலகக் கல்வியையும் இறை அறிவையும் இறை அருளையும் நன்னெறியையும் காட்டுவதோடு நம்மைக் காக்கவும் செய்யும் என்று குறிப்பிடுகின்றார்.


பல்வேறு பிறமொழி மந்திரங்களை விளங்காமலும் வலிந்தும் கற்று ஓதும் செந்தமிழ்ச் சைவர்கள், எளிய, அரிய, மணிவாசகர் போன்ற நாயன்மார்கள் குறிப்பிட்டத் தமிழ் மொழியில் இருக்கின்ற நமசிவய மந்திரத்தை அறியாமல் இருப்பது அறியாமைக் கொடுமை எனலாம். நாயன்மார்களும் திருமுறை ஆசிரியர்களும் ஓதி உணர்ந்த, இறைவனின் திருவருள் பெற்ற, அவர்களைப் பேணிக் காத்த நமசிவய மந்திரம் தமிழ்ச் சைவர்களைக் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாதது எவ்வளவு பெரிய அறியாமை!


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் போன்ற அருளாளர்கள் அன்னைத் தமிழில் இறைவனின் திருமுன்பு குறிப்பிட்டு, இறைவனின் திருவருளைக் குறைவின்றிப் பெற்றமையை உணராது தமிழ்ச் சைவர்கள் பிறமொழி மந்திரங்களை உயர்வாகவும் அவையே இறைவன் பேசும் மொழி என்றும் குறிப்பிடுவதும் நம்புவதும் தமிழ்மொழி மந்திரமான நமசிவய மந்திரம் ஆற்றல் இல்லாத வெறும் மந்திரம் என்று எண்ணுவதும் எவ்வளவு பெரிய அறியாமை ஆகும்? “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே” என்று தமிழ் மந்திரம் ஓதியே சுந்தரர் அருள் பெற்றமையைத் செந்தமிழ்ச் சைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


“செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று வேதமும் சைவமும் நன்கு அறிந்த திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுவதனை உண்மையாகத் திருஞானசம்பந்தப் பெருமானைத் தங்களின் சைவ ஆசானாக வைத்துப் போற்றுகின்ற தமிழ்ச் சைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பெருமானிடத்தில் அன்பினைப் பெருக வைப்பது, அவ்வன்பினால் உள்ளம் உருகிக் கண்ணீர் மல்க வைப்பது, அம்மந்திரத்தை ஓதுகின்றவர்களை நல்ல நெறிக்கு ஆட்படுத்துவது, நான்கு வேதங்களின் முடிந்த கருத்தாய் அமைவது, பெருமானின் திருப்பெயராகவும் விளங்குவது நமசிவய திருமந்திரம் என்று சம்பந்தப் பெருமான் குறிப்பிடுவார்.


தமிழ்ச் சைவர்களின் சமய நூல்களான சிவ ஆகமங்களும் திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் தமிழ்ச் சைவர்களுக்குத் தலையாய மந்திரமாகக் குறிப்பிடும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமிழ்ச் சைவர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும். உண்ணும் முன்னும் உறங்கும் முன்னும் உறங்கி எழும் போதும் சொல்லிப் பழக வேண்டும். இன்பம் ஏற்பட்ட போதும் துன்பம் ஏற்பட்ட போதும் நமசிவய மந்திரத்தை மறவாமல் தவறாமல் சொல்ல வேண்டும். உள்ளத்தில் அச்சம் ஏற்பட்ட போதும் பில்லி சூனியம், காத்துக் கருப்பு, நோய், ஏவல், நாள், கோள், நேரம், சகுனம் என்று எதுவாக இருப்பினும் திருவைந்து எழுத்தினைப் படைக்கலமாகக் கொண்டு துணிவு பெறல் வேண்டும். இதனையே, “படைக்கலமாக உன்நாமத்து எழுத்துஅஞ்சு என்நாவில் கொண்டேன், துடைக்கினும் போகேன்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.


தமிழ்ச் சைவர்களின் புதுமனைப் புகு விழா, காதணி விழா, தமிழ்ப் பெயர் சூட்டு விழா, பூப்பெய்தல் விழா, வளைகாப்பு, திருமணம், குழந்தைப் பிறப்பு, மணிவிழா, இறப்பு என்று எதுவாக இருப்பினும் அதில் திருவைந்து எழுத்து ஓதுதலும் சொல்லுதலும் இடம்பெறல் வேண்டும். திருவைந்து எழுத்தினை ஓதி தமிழ்ச் சைவர்கள் திருநீறு அணிதலும் திருநீறு அணிவித்து வாழ்த்துதலும் செய்தல் வேண்டும். தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களில் நமசிவய திருவைந்தெழுத்து மந்திரம் பூசனையிலும் வழிபாட்டிலும் இடம்பெறுதலைச் செய்தல் வேண்டும். தமிழ்ச் சைவர்களுக்கு மந்திரம் என்றால் அது நமசிவய எனும் திருவைந்து எழுத்து மந்திரமும் திருமுறைகளும் என்பது புழக்கத்திலும் வழக்கத்திலும் இடம்பெறல் வேண்டும் என்பதே மணிவாசகர் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.


மிகச் சிறந்த சிவச் செறிவாளராகிய (சிவயோகி) திருமூலரும் திருவைந்து எழுத்து மந்திரத்தின் முதன்மையை உணர்த்துவார். சிவச்செறிவாளர்களின் உள்ளத்தில் இறையுணர்வை ஏற்றும் மந்திரம் என்று குறிப்பிடுவார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், …. ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே” என்று குறிப்பிடுவார். “செம்பு பொன்னாகும் சிவாயநம என்னில்” என்று இன்னொரு பாடலில் திருமூலர் குறிப்பிடுவார். களிம்பு படிந்த செம்பு பொன்னாவது போல் ஆணவம் படிந்த உயிர், சிவயநம என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தை விடாமல் சொன்னால், பொன்னார் மேனியனாக இருக்கின்ற சிவபெருமானைப் போன்று மேம்பாடு அடையும் என்பார்.


திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவமான ‘சிவசிவ’ எனும் மந்திரத்தை மாந்தர் சொல்வதற்கு அறியாமல் இருக்கின்றனர். அவர்களின் தீவினைப் பயனே அவர்களை அவ்வாறு வைத்திருக்கின்றது. அத்தகையத் தீவினைப் பயனைப் போக்குவதற்குச் ‘சிவசிவ’ என்று சொல்வதே வழி என்பதனை அறியாமல் இருக்கின்றனர் என்பார். இதனைச், “சிவசிவ என்கிலர் தீவினை யாளர், சிவசிவ என்றிடத் தீவினை மாளும்” என்பார். மேலும் அவ்வாறு திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்பவர்கள், வானவர்களாய் ஆவார்கள் என்றும் சிவகதி பெறுவார்கள் என்றும் குறிப்பிடுவார்.


சிவபுராணத்தின் முதற் சொல்லாக உள்ள ‘நமசிவய’ என்ற திருவைந்து எழுத்தே பெருமானுக்குத் திருவடிவாக, நடவரசர் திருவடிவில் இருக்கின்றது என்பதனை  உண்மை விளக்கம் எனும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல் குறிப்பிடும். உடுக்கையை உடைய திருக்கரம் சிகாரம், நன்றாக வீசிய திருக்கரம் வகாரம், அஞ்ச வேண்டாம் என்று அமைந்த திருக்கரம் யகாரம், தீ ஏந்திய திருக்கரம் நகாரம், முயலகனைப் பொருந்தி இருக்கின்ற திருவடி மகாரம் என்று குறிப்பிடும். இதனை வேறு முறையில் குறிப்பிடுவதும் உண்டு.


மேலும் இத்திருவைந்து எழுத்தில் ‘ந’ நடப்பாற்றல், ‘ம’ மலம், ‘சி’ சிவம், ‘வ’ வனப்பாற்றல், ‘ய’ யாக்கை எனும் உயிர் என்ற மெய்ப்பொருள்களைக் உணர்த்துவதாகவும் அம்மெய்கண்ட நூல் குறிப்பிடும். இத்தகைய அரிய பொருளை நமக்கு உணர்த்தவே மணிவாசகர், “நமசிவாய வாழ்க” என்று எடுத்து ஓதினார். இவ்வரிய தமிழ் மந்திரத்தைச் செந்தமிழ்ச் சைவர்கள் தங்கள் திருகோயில்களிலும் இல்லங்களிலும் நடைபெறும் பூசனைகளிலும் வழிபாடுகளிலும் நடைமுறைப் படுத்துவார்களாக!

திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 10 அக்டோபர், 2025

அப்பர் ஒரு புரட்சியாளர்:

 திருச்சிற்றம்பலம்


அப்பர் ஒரு புரட்சியாளர்:

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று

எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்

பண்ணி னார்அவர் பாலைத் துறையரே.

-அப்பர் (தி. 5ப. 51பா.6)

அப்பர் ஒரு புரட்சியாளர்:

     புரட்சி என்பது சீர்கெட்டுப் போனதை - மீண்டும் சீர்மைபெறச்

செய்வதேயாகும். சுதந்திரமாக வாழ்ந்த இந்தியர்களை ஆங்கிலேயர் 150 ஆண்டுகட்கு மேலாக அடிமைப்படுத்தி ஆண்டு வந்தனர். சீர்கெட்டு நின்ற பாரத தேசந்தன்னை மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கு மகாத்மா காந்தியடிகள் போன்ற தலைவர்கள் பெரும் புரட்சி செய்தனர். மீண்டும் சுதந்திரப்பாதையில் இந்தியர்களை நடையிடச் செய்தனர். இதுவே புரட்சி. சீர்கெட்ட தனிமனிதரை அல்லது சமுதாயத்தை, அல்லது நாட்டை, செப்பஞ்செய்ய எடுக்கும் நடவடிக்கைக்கே புரட்சி என்ற பெயர் பொருந்தும். மக்களிடையே குழப்பம் விளைவிப்பதெல்லாம் புரட்சியாகாது.

     இக்காலத்தில், புரட்சி செய்து தேசத்தைச் செம்மை செய்த மகாத்மா காந்தியடிகளைப் போல், அன்று கடமை செய்யத் தவறியோரைக் கடமை வழிச் செலுத்தி. செம்மை செய்த புரட்சியாளர் அப்பர் அடிகள்.

     பகவத் கீதையில் கண்ணபிரான் அருச்சுனற்குக் கடமையை உணர்த்தினார்.

      "கர்மண்யேவ அதிகாரஸ்த்தே மாபலேஷு   கதாசன"

 என்பது கீதாசாரியன் வாக்கு. 'அர்ச்சுனா, கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு அதிகாரம். அஃதாவது உரிமை உண்டே தவிர பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரமில்லை. அஃதாவது உரிமை இல்லை' என்பது இதன்பொருள்.

     இது துவாபர யுகத்தில் நடந்தது. இப்போது நடப்பதோ கலியுகம். இதற்கு ஏற்ப அதே தர்மத்தைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்வது? அப்பர் அதே உரிமையைக் கடமை என்ற சொல்லால் புரட்சிகரமாகச் சொல்கிறார். அப்பாடல் காண்க.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்அடி யேனையும் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

-தி. 5ப. 19பா. 9


     'கடமையைச் செய்யத்தான் உனக்கு அதிகாரம். பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரம் இல்லை. என்கின்றது கீதை.


     ஆனால் கடமையைச் செய்பவனுக்கு அதற்குரிய பலனைப் பகவான் கொடுத்தே தீர்கிறார். அணு அளவுகூடக் குறைக்கமாட்டார். அக்கருத்து அர்ச்சுனற்குத் தெரியும்; உயர்ந்தோரானதால்; யுகமும் துவாபரயுகமானதால், இக்கருத்தைக் கலியுகத்தில் அப்பர் சுவாமிகள் புரட்சிகரமாகத் திருக்கடம்பூர்த் தேவாரத்தில் தெளிவாக விளக்குகிறார். கீதையில் கண்ணன் கர்மத்தைச் செய்யத்தான் அதிகாரம் என்று சொன்னார். அப்பர், உரிமை என்ற சொல்லையும் புரட்சிகரமாக மாற்றி, கடமை என்ற சொல்லாலேயே கடவுளின் கடமையையும், மக்களின் கடமையையும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் கடமை மக்கட்கு உரிமையாய் விடுகிறது. மக்களின் கடமை கடவுளுக்கு உரிமையாகி விடுகிறது. உரிமைப் போராட்டத்திற்கே இடமில்லாமல் கடமை என்ற சொல்லாலேயே அவரவர்க்கு உள்ள உரிமையைக் கிடைக்கச் செய்துவிடுகிறார்

இதை எல்லோரிடத்தும் வைத்துத் தெளிவு பெறலாம். முதலாளி செய்யும் கடமை தொழிலாளிக்கு உரிமை. தொழிலாளி செய்யும் கடமை முதலாளிக்கு உரிமை. கணவன் செய்யும் கடமை மனைவிக்கு உரிமை. மனைவி செய்யும் கடமை கணவனுக்கு உரிமை. பெற்றோர் செய்யும் கடமை மக்களுக்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை பெற்றோர்க்கு உரிமை. ஆசிரியர் செய்யும் கடமை மாணாக்கர்கட்கு உரிமை. மாணாக்கர் செய்யும் கடமை ஆசிரியர்கட்கு உரிமை. அரசு செய்யும் கடமை மக்கட்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை அரசுக்கு உரிமை. இறைவன் செய்யும் கடமை உயிர்கட்கெல்லாம் உரிமை. உயிர்கள் செய்யும் கடமை இறைவனுக்கு உரிமை. கடவுள் கடமையைச் சரியாகச் செய்துவிடுவார். சூரியன், சந்திரன்,

நட்சத்திரங்கள் காலத்தில் உதிப்பது கடவுளின் கடமை தவறாமையைக் காட்டுகிறது.

திருச்சிற்றம்பலம்

ருத்ராட்சம் அணிந்துள்ளீர்களா?

 ருத்ராட்சம் அணிந்துள்ளீர்களா? அப்போ இதை தெரிஞசுக்கோங்க ..



ஜோதிடத்தில் ருத்ராட்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. ருத்ராட்சம் சிவனின் கண்ணீரில் இருந்து உருவானதாகவும் நம்பப்படுகிறது.

ருத்ராட்சம் அணிவதன் மூலம் சிவபெருமானின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். மேலும் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.ருத்ராட்சம் ஒரு முகத்திலிருந்து இருபத்தி ஒரு முகம் வரை வேறுபடுகிறது. ஒவ்வொரு ருத்ராட்சத்திற்கும் தனி சிறப்பம்சம் உண்டு. அறிவியல் காரணத்தின் அடிப்படையில் ருத்ராட்சம் இயற்கையான ஆண்டிபயாடிக் தன்மை வாய்ந்தது.

இதனால், நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். அதிலும் இயற்கையாக நேர்மறை ஆற்றலை இது ஈர்க்கும் எனவே நாம் இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும்.இதன்காரணமாக, மனதில் ஒருவித தெளிவும், நிம்மதியும் கிடைக்கும். இதை தவிர பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற நோய்களின் வீரியத்தையம் குறைக்குமாம்.

செய்யக்கூடாத தவறுகள்

ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் அணியக்கூடாது என சொல்லப்படுகிறது.

இறந்த வீடு அதாவது துக்கம் நிகழ்ந்த வீட்டிற்கோ, தகனம் செய்யும் இடத்திற்கோ செல்லும் போது ருத்ராட்சை அணியக்கூடாது.

தேபோல, படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது.ஒவ்வொரு இரவும் தூங்கும் முன்பும், ருத்ராட்சை மாலையை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுப்பது நல்லதுருத்ராட்சம் அணியும்போது மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, இறைச்சி சாப்பிடக்கூடாது என சொல்லப்படுகிறது.

இதை மீறினால் ருத்ராட்சை தூய்மையற்றதாகிவிடுமாம்.

மேலும் உங்களுக்கு வரக்கூடிய நன்மையும் வராமல் போய்விடும்

செவ்வாய், 7 அக்டோபர், 2025

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்


இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்
திருவருட் பயன் பாடல் எண் 54
ஊன் உயிரால் வாழும் ஒருமைந்தே,ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தாம்
உடம்போடு உயிர் சேர்ந்து ஒன்றாகி இருக்கிறது.உடம்பும் உயிரும் பொருளால் இரண்டு ஆயினும் இரண்டு என்ற தன்மை தோன்றாதபடி உயிர் உடம்போடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. உடம்போடு கூடிய உயிர் அறிவு வடிவான திருவருளோடு ஒன்ற பட்டு நிற்கிறது. இவ்வாறு திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போல் என்றால் உடம்பும் உயிரும் காெண்டுள்ள ஒற்றுமையைப் போல்போன்றதாகும்.
உடம்பில் கலந்துள்ள உயிர் தன் இருப்பை சிறிதும் புலப்படுத்தாது,உடம்பு ஒன்றே உள்ளது என்பது போல் அதனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அது போலவே திருவருள் உயிராேடு நீக்கமின்றி எப்போதும்கலந்திருப்பினும், தன் இருப்பை புலப்படுத்தாது உயிர் ஒன்றே உள்ளத என்னும் படியாக ஒற்றுமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இரு பொருள்களுக்கிடையே இரண்டன் தன்மை தெரியாதவாறு அவை இயைந்து நிற்கும் ஒற்றுமைத் தொடர்பு அத்துவிதம் என்றும் அத்துவித சம்பந்தம் என்றும் சொல்லப்படும்
அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று (துவிதம் 2) என்றால் அத்துவிதம் 2 அன்று என்று பொருள்படும், என ேவற்றுமை படாமையை குறித்து நிற்கும்
ேவற்றுமைபடாமையாவது இது சிவப்பகுதி, இது ஆன்மா பகுதி என பிரித்தறிய வாராத நிலை எனவே ஒற்றிற்று நிற்றல் எனப்பெறப்படும்
தன்மையால் இரண்டாதல், வேற்றுமையால் / கலப்பால் ஒன்றாதல் ஒற்றமை.இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும், தன்மையால் வேறாயும்நிற்றல்.
உயிர் செலுத்தவே உடம்பு செயல்படுகிறதே தவிர, உடம்புக்கு என்று தனியே ெசயல் இல்ைல ஏனெனில் உடம்பு சடப்பொருள். அது போல திிருவருள் செலுத்தவே உயிர் செயல்படுகிறதேயன்றி, திருவருள் துணை இன்றி உயிருக்கு தனிச் செயல் சுதந்திரம் இல்லை.
திருவருள் தன்னுடன் எப்போதும் பிரிப்பின்றி கலந்திருக்கிறது என்பதையும், அதனுடைய துணை தன் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாதது என்பதையும்உயிர் உணர வேண்டும்என்பது இப்பாடலின் கருத்தாகும். மொத்தத்தில் உடலை உயிர் இயக்குகிறது, உயிரை திருவருள் இயக்குகிறது, திருவருள் துணையினால் தான் உயிர்களுக்கு கட்டு நிலையில் ( கேவல நிலை / பிறப்பு நிலையில்) பொது இயல்பும், முத்தி நிலையில் தன் இயல்பும் விளங்குகின்றது.
உயிர் அறிவதற்கு திருவருள் துணை வேண்டு்ம்
கண்ணானது காணும் தன்மை உண்டு இருப்பினும் கண் காண ஒளி (ெவளிச்சம்) வேண்டும் அவ்வாறு ஒளி இல்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.
உயிர் உடன் நின்று செலுத்துவதால் தான் கண் ஒரு பொருளைக் காண முடிகிறது. ஆனாலும் கண்ணுக்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவினால் தான் கண் காணமுடியும். ஒளி இல்லையென்றால் உயிர் உடனின்றும் கண் காண இயலாது/ முடியாது.
கண் போல் உயிர். உயிர் உடன் நின்று செலுத்துவே கண் காணுமே அன்றி தானாக காணாது. உயிரின் அறிவு விளங்குவதற்காக திருவருள் கருவி கரணங்களை கூட்டு விக்கிறது. அதோடு மட்டுமன்றி கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே நின்று திருவருள் ஒளி செலுத்துகிறது. அவ்வாறு திருவருள் ஒளி செலுத்தாவிட்டால் உயிர் அறிய இயலாது.
திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

VID 20250131 08482631.01.2025 அன்று திருக்கடையூரில் நடந்த அகோர சிவம் சிவ,வை,பூமாலை /பழனியம்மாள் தம்பதியரின் சதாபிசேக நிகழ்ச்சி

VID 20250131 09512031.01.2025 அன்று திருக்கடையூரில் நடந்த அகோர சிவம் சிவ,வை,பூமாலை /பழனியம்மாள் தம்பதியரின் சதாபிசேக நிகழ்ச்சி

VID 20250131 31.01.2025 அன்று திருக்கடையூரில் நடந்த அகோர சிவம் சிவ,வை,பூமாலை /பழனியம்மாள் தம்பதியரின் சதாபிசேக நிகழ்ச்சி122054