செவ்வாய், 28 அக்டோபர், 2025

சுநதரரின் தோழமை நெறி

 சுநதரரின் தோழமை நெறி 


சுந்தரரின்  வாழ்வில் இவருடன் தோழமை கொண்டோர் பற்றிய நாயன்மார்கள்

1, தம்பிரான் தோழராதல்:

 திருவாரூர்ப் பெருமான் `தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்` என்றருளினார். சுந்தரர் தம்பிரான் தோழரானார். இக் குறிப்புப் பல பதிகங்களில் காணப்படுகின்றது.

``தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68 பா.😎

``என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் 

துரிசுகளுக்கு உடனாகி`` (தி.7 ப.51 பா.1)

``என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)

 சிவனடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது உள்ளே சென்று பூங்கோயிலமர்ந்த பெரு மானை வணங்கி இன்புற்றார். இன்னிசைப் பாமாலைகளாகிய தமிழ் மாலைகள் பாடினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானிடையே ``நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந் நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக` என்ற அருள்வாக்குத் தோன்றிற்று. அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். தியாகேசர் திருமுன் சென்று வலம்செய்து வணங்கினார். 

 2,ஏயர்கோன் நட்பு:

நம்பியாரூரர் பெருமானைச் சிறிதும் மனம் நடுங்காது ஒரு பெண்ணிடத்து இரவில் தூதனுப்பி ஏவல் கொண்டார் என்ற செய்தி நாடு முழுதும் பரவியது. சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில் வாழும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் இச்செய்தி கேட்டு உளம் வருந்தினார். `இறைவனை அடியவர் ஏவல் கொள்வது தொண்டர்க்கு முறையன்று` என்று கருதியது அவர் உள்ளம். `இச்செய்தி கேட்டும் என்னுயிர் செல்லவில்லையே` என்றிரங்கினார். `அடியவரிடத்துள்ள கருணையால் இறைவன் இசைந்தாலும் அப்பெருமானை ஏவுதல் என்ன முறை? அரிவையரிடத்து வைத்த ஆசைக்கு இறைவனைத் தூது கொண்ட வன்றொண்டரைக் காணின் என்ன நேரும்` என்று சுந்தரர் மேல் சினம் கொண்டிருந்தார்.

ஏயர்கோன் தம்பால் சினங் கொண்டிருத்தலையறிந்த நம்பி யாரூரர் தாம் செய்தது பிழையென வுணர்ந்தார். கலிக்காமர் செற்றத்தைக் தணித்தற் பொருட்டு இறைவனைப் பலமுறை இறைஞ் சினார். இவ்விருவரையும் ஒன்றுபடுத்தத் திருவுளங்கொண்ட இறைவன் ஏயர் கோன் கலிக்காம நாயனார்க்குச் சூலை நோயை ஏவி னார். சூலை நோயால் தளர்ச்சியுற்று வாடிய கலிக்காமர் சிவபிரான் திரு வடிகளைச் சிந்தித்துப் போற்றினார். இறைவன் அவர் முன்னே தோன்றி `இச்சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது` என்று கூறினார். கலிக்காமர், `இறைவனே! வழிவழியாக நும்மையே வழிபடும் தொண்டனுக்குற்ற நோயைப் புதியவனாகிய வன்றொண்டனோ தீர்த்தற்குரியன்; இந்நோய் தீர்க்கப்படுதல் வேண்டா` எனக் கூறினார். இறைவன் மறைந்தான். இருப்பினும் சுந்தரர் அவர் இல்லம் சென்று அவரை சந்தித்தார் அப்போது கலிக்காமர் தன் வாளால் தன் வயிற்றை கிழித்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை அறிந்த சுந்தரர் அவரும் அதே வாளால் தன்னை வெட்டிக்கொள்ள ஓங்கினார் உடனே இறைவர் அவரகள் முன் தோன்றி இருவரையும் தடுத்தாட்கொண்டார் இவர்களின் நட்பின் பெருமை கண்டு வியந்தனர்

3.சேரமான் நட்பு:

இவருடைய நட்பை அறிமுகம் செய்தவர் இறைவரே ஆவரர்.தினமும் இறைவழிபாடு செய்து முடிக்கும் போது இறைவனின் கால் சிலம்பு காதில் கேட்டால்தான் வழிபாட்டை முடிப்பார். ஒரு நாள் இச் சிலம்போலி கேட்க தாமதம் ஆனபடியால் அதற்கு இறைவர நான் சுந்தரரின் இசையில் மெய்மறந்தபடியால் இங்கு வர தாமதம் ஆகிவிட்டது என சேரமான் பெருமானாரிடம் இறைவர் கூற அவ்வளவு அன்பும் இசை ஈர்ப்பு கொண்ட சுந்தரரை நான் காண வேண்டுமென்று கூறி சேரமண்டலத்தையாண்ட சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரது பெருமையினைத் தில்லைக் கூத்தனுணர்த்தக்கேட்டு சுந்தரரைக் காண வேண்டு மென்னும் பேரார்வத்துடன் தில்லைச் சிற்றம்பலவரைத் தரிசித்துத் திருவாரூரை அடைந்தார்.நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார்.

 ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்திறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து `அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும்` என்னும் குறிப்புடன் `தலைக்குத் தலைமாலை` என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர். பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. இவ்வாறு இருவரும் திருக்கயிலை வந்தடைந்தனர் இவ்வாறு இருவரும் நட்பின் பெருமைக்கு இலக்கணம் கண்டவர்கள்

4,கோட்புலியார்

சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் `இவர்கள் என் குழந்தைகள்` என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளினார்

5, பெரும் மழலை குறும்ப நாயினார்

  குறும்ப நாயினார் சைவ ஆகம வேள்விகள் செய்து வாழ்வாதாரம் செய்து வந்தவர் சுந்தரரின் பெருமை யறிந்து அவரை தனது மானசீக குருவாகக் கொண்டு அவரை அனுதினமும் தன் நினைவில் நிறுத்தி அவர்தம் பெருமைகளையும் பரப்பு அவர் மேல் தீராத அன்பு கொண்டிருந்தார். இவர் தன் தவப்பயனாலும் ஞான சக்தியாலும் எதிர்கொள்ளும் வாழ்வை கணிப்பவர். இதனால் சுந்தரர் திருக்கயிலை செல்வதை ஞான ஒளியால் கண்டு தன் பிராணத்தை ஒடுக்கி அவருக்கு முன்பாகவே தானும் கைலாயம் அடைந்தார்.

6 சோமாசி நாயனார்

  மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனடியார் வழிபாடும் திருவைந்தெழுத் துபாசனையும் சுந்தரமூர்த்திநாயனார் பால் நண்புறவுங் கைவரப் பெற்றிருந்த சோமாசிமாறநாயனாரே, தாம் "ஈசன் மலர்க்கழல் பேணுதற்குச்" சிவவேள்வியே செவ்விய நெறியாகக் கொண்டிருந்ததார்.

  சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார். 

7.விறன்மிண்ட நாயினார்

"தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது. வழக்கம் போல் சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார். இதனைக் கவனித்த விறல்மிண்டர், சுந்தரரை தவறாக எண்ணினார். சுந்தரரின் மனப்பக்குவத்தை அவர் எவ்வாறு அறிய இயலும்! இறைவனை வழிபடுவது எளிது. அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும், அன்பும் இருத்தல் வேண்டும். அஃது தமக்கு இல்லாமற் போயிற்றே! அடியார்களைப் பேணும் பேற்றினைத் தாம் பெறவில்லையே என்ற மனத்துடன், அடியார்களை மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். வன்றொண்டான் அவ்வடியார்களுக்குப் புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்குப் புறம்பானவன் தான் என்று கடுமையாகச் சொன்னார்.திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு விறல்மிண்டர் கூறியிராவிடில் திருத்தொண்டத் தொகையே பாடப்பட்டிருக்காது எனலாம்

 இறைவனையே புறகு என்றதால் இறைவர் சுந்தரரை திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துக் கொடுத்து சுந்தரர் பாடி அடியார்களுக்கு பெருமை சேர்த்தார்.

 இவ்வாறு சுந்தரரின் வாழ்வில் இறைவருடன் இந்த ஏழு அடியார்கள் / நாயன்மார்கள் நட்புடன் வாழ்நது வந்து நட்பின் பெருமையை உலகறியச் செய்தனர்

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக