திருப்பள்ளியெழுச்சி (சிவன்)
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 1
அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே! 2
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 3
இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 4
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 5
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 6
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு; இவன்அவன்; எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்சூழ் திருஉத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்;
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 7
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே! 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே!உன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்! வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்!
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 9
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக