ஞானசம்பந்தரும் - திருத்தோணியப்பரின் சேய் அன்பும்
இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய வழிகள் பற்பல. அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம், என்னும் நான்கு வழிகள் ஆகும், சத்புத்திர மார்க்கமாவது இறைவனை தாய்தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும், தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானாக பாவித்து உயிர்கள் பணியாளர்களாக இருந்து வழிபடும் நெறியாகும், சகமார்க்கம் என்பது இறைவன் தன் தோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் நெறியாகும். சன்மார்க்கம் என்பது இறைவனை ஞானாசாரியனாகக் கொண்டு ஆன்மா சீடனாக இருந்து வழிபடும் நெறியாகும்,
இந்நெறிகளில் சத்புத்திர மார்க்கம் ஞானசம்பந்தர் காட்டிய வழி, இரண்டாவது தாசமார்க்கம் எசமானாக பாவித்தது திருநாவுக்கரசர் வழிபட்ட நெறியாகும், மூன்றாவதான சகமார்க்கம் என்ற நட்புநெறி சுந்தரர் வழிபாட்டு நெறியாகும்.நான்காவதாக உள்ள சன்மார்க்கம் என்ற சன்மார்க்கம் என்ற இறைவனை (சிவனை) குருவாக ஞானாசிரியனாக வழிபட்டவர் மாணிக்க வாசகர்,சிவபுண்ணிய விளைவால் மூர்த்தி தலம் தீர்த்தங்களை வழிபட இறைவன் குருவாகி எழுந்தருளி அருள் புரியும் நிலையே குருவருள் ஆகும்,
குருவின் திருவுருமாகி எழுந்தருளி அருள் புரியும் சீர்காளியில் கவுணியர் குலத்தில் சிவபாதஇருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் திருமகனாக சீர்காளிபிள்ளையாராக திருஅவதாரம் செய்தவர்தான் திருஞான சம்பந்த பெருமான், திருவருள் கூட்ட ஒருநாள் நீராட சென்ற தந்தையார்பின் பிள்ளையார் தொடர்ந்து அழுது கொண்டு உடன் தொடர்ந்தார்.சிவபாத இருதயர் குழந்தையைக் குளக்கரையில் நிற்க செய்து பிரிவதற்கு அஞ்சி தந்தையார் , தேவியுடன் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்கி அவர்பால் ஒப்படைத்து நீராட சென்றார். தந்தையார் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளையார் நீள நனைந்த முன் உணர்வினை நினைக்க அழத்தொடங்கினார். திருத்தோணி சிகரம் பார்த்து " அம்மே ! அப்பா! என்று அழுது அழைத்தருளினார். அக்குழந்தையின் அழுகை கண்டு அக்குழந்தைக்கு அருள் புரிய திருவுளங்கொண்ட இறைவர் தாமும், அம்மையமாய் விடைமேல் எழுந்தருளி வந்து, அக்குழந்தைக்கு துணைமுலைப்பால் ஊட்டிட இறைவியை பணிக்க இறைவியும், சிவஞானத்து இன்னமுதம் எனும் ஞானப்பால் ஊட்டி அருளியபின், கண்மலர் நீர் துடைத்து கையில் பொற்கிண்ணம் அளித்து, அம்மையப்பராகி இருவரும் காட்சிகொடுத்த வண்ணம், இருந்தனர். பிள்ளையாரும், சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாத கலைஞானமும், மெய்ஞானமும் பெற்று சிவஞான சம்பந்தராகி திருஞான சம்பந்தரானார்,
நீராடிவந்த சிவபாத இருதயர் குழந்தை பாலமுதம் அருந்திக் கையில் பொற்கிண்ணத்துடன் நிற்கும் பிள்ளையாரை நோக்கி, " யாரளித்த பால் அடிசில் உண்டாய்? அவரை காட்டுக" எனக் கோபமாக கடிந்தார். சிவஞானம் அருந்திய மகிழ்ச்சியில் திளைத்து நி ற்கும் பிள்ளையாரும், தேவியருடன் எழுந்தருளியிருக்கும் இறைவரை சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன் " எனும் திருப்பதிகத்தால் அடையாளங்காட்டி" எம்மை இது செய்த பிரான் இவனன்றே" என பால குமாரன் வயதிலேயே பதிகம் பாடி திருத்தோணியப்பரின் சேய் அன்பு எனும் சத்புத்திர மார்க்கம் கண்டு சிவனாரின் கருனையை பெற்றார்.
தாய் அன்பின் உயர்வையும், தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் திருஞானசம்பந்தர் திருநள்ளாறு தாயாகிய இறைவியையும் தந்தையாகிய இறைவனையும், வணங்கி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதன் மூலம் சம்பந்தர் மூர்த்திக்கும் ஆலவாய் சுந்தரருக்கும் உள்ள தாய் சேய்ழ அன்பின் மகத்துவம் விளங்குகிறது, "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் ,,,,,," என்ற திருப்பதிகத்தில் தானும் தாய் அன்பையும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு ஒரு ஆன்மா பிறவிபெற்று பூமிக்கு வரும்போது அதன் வினைக்கு ஏற்ப இன்பதுன்பம் தன் தாய்பால் வழியாக உலக உயிர்களுக்கு ஊட்டப்படுகிற்து, இந்த அன்பே தாய்தந்தையர்களும் தனது குழந்தைகளிடம் எதிர்பார்க்கின்றனர், இதற்கு ஒப்பாகவே இதன் கருத்து அமைந்து பதிகம் பாடியுள்ளார்,.
சிவனாரின் அன்பு ஞானசம்பந்தர் பால் மேலும் மேலும் வளர்ந்தது, சம்பந்தர் பதிகம் பாடும் போது கைத்தாளம் போடுவது வழக்கம் இதனைக் கண்ட தந்தை அன்பு கொண்ட ஈசன் கைநொகாது இருக்க பொற்றாளம் வழங்கினார், பல தளங்களை அடைந்து தரிசிக்க காலால் நடந்து சென்றதைக்கண்டு மனம் பொறுக்காது ஈசன் அவருக்கு முத்து பல்லாக்கு முத்து சீவிகை ,முத்துக் குடை வழங்கினார், அத்தோடு மட்டுமன்றி அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு நேர்ந்த சோதனைகளுக்கு உடனுக்குடன் தோழ்கொடுத்து தந்தையின் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். சம்பந்தரும் ஈசன்மேல் தனியாத தந்தை பாசம் கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். திருநாவுக்கரசரோடு கூடியிருந்த காலத்தில் அவருக்கு அப்பர் என்ற திருப்பெயரிட்டு சிறப்பித்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லிமழவன் புதல்வியை பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலை தவிர்த்து அடியாரைக்காத்தார்.திருவாடுதுறையில் உலக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப்பதிகம் பாடி அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பை புலப்படுத்தினார். திருமருகலில் பாம்பு கடித்து இறந்த வணிகனை உயிர்த்தெழத் செய்து பெருவாழ்வு நல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாதவளுக்கு தெய்வத்துணையானார். திருவீழிமமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் கோவில் மூடியிருந்த கதவை பதிகம் பாடி கதவைத்திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று மங்கையர்கரசியாரையும், குலச் சிறையாரையும், சிறப்பித்தார். அரசன் வெப்பு நோய் மற்றும் கூன் நீங்க திருநீற்றுப்பதிகம் மற்றும் சமனர்களின் கொட்டத்தை அடக்கி கழுமரமேற்றி சைவ மதம் தழைக்க செய்தார்.. திருவோத்தூரில் ஆன் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். மயிலாப்பூரில் கென்றிருந்து பாம்பு கடித்து இறந்த பூம்பாவையின் எலும்பைக் கொண்டு திருப்பதிகம் பாடி உயிருடைய உருவமாக்கி வீட்டையும் காட்டினார். திருநல்லூரில் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம் புரியுங்கால் இவளோடு சிவனடி சேர்வன் என்று திருக்கோவிலை உற்று திருப்பதிகம் பாடினார். திருமணம் காணவந்த எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நதபெற காரணமாகுமென பதிகத்தால் உணர்தெி சம்பந்தர் பால் கொண்ட ஈசனின் சேய் அன்பையும் சம்பந்தர் ஈசன் மேல் கொண்ட தாய் தந்தை - பெற்றோர் அன்பையும் சிறப்பிக்க உதாரணமாக விளங்கியவர் திரு ஞானசம்பந்த பெருமான் ,
திருச் சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக