வெள்ளி, 25 ஜூன், 2021

சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

  •  சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

  • சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

  • உயர்ந்த தத்துவங்களை எளிய உவமைகள் மூலம் விளக்குவதில் மாணிக்கவாசகர் வல்லவர். அவர் ஓர் அழகான கதை சொல்கிறார்:
  • எளிதில் உணவுப் பண்டங்கள் கிடைக்கின்றனவே என ஒரு கப்பலில் தங்கிவிடுகின்றன பறவைகள். உணவு கிடைக்காத சில சமயத்தில் வெகு தூரத்தில் பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு கடற்கரை தென்பட்டால் அவற்றுக்கு எப்படி இருக்கும்? பசியையும் சோர்வையும் மறந்து ஆனந்தமாகக் கடற்கரையை நோக்கிப் பறக்கும் அல்லவா? இந்த நிலையை மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார்:

  • உரை மாண்ட உள்ளொளி உத்தமன் வந்துளம் புகலும்
  • கரை மாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
  • இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
  • துரை மாண்டவா பாடித் தோணோக்கம் ஆடாமோ. (பாடல் 326)

  • வர்ணிக்க முடியாத ஒரு பேரொளியாக இறைவன் என் உள்ளத்தில் வந்து அமர்ந்ததுமே, காமம் எனும் பெருங்கடலைக் கடந்துவிட்டேன். உடனே ‘இனி இங்கு நமக்கு உணவில்லை’ என இந்திரியங்களாகிய பறவைகள் என்னைவிட்டு ஓடிவிட்டன’ என்கிறார்.

  • *** உங்களுக்குப் பண்டமாற்றுமுறை தெரிந்திருக்கும். மாணிக்கவாசகப் பெருமான் தாம் ஒரு மோசடி வியாபாரம் செய்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறார்! அதுவும், இவர் யாரை ஏமாற்றினாரோ, அவரிடமே பெருமையடித்துக் கொள்கிறார்.
  • பயனற்ற பொருளை உன்னிடம் தந்து
  • விட்டு மிக உயர்ந்த பொருளைப் பெற்றுக் கொண்டுவிட்டேன். நான் எத்தகைய சாமர்த்தியசாலி!” என்கிறார்.

  • தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
  • சங்கரா ஆர் கொலோ சதுரர்
  • அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
  • யாதுநீ பெற்றதொன் றென்பால்
  • சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
  • திருப்பெருந்துறை உறை சிவனே
  • எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
  • யானிதற் கிலன் ஓர் கைம்மாறே. (395)

  • *** மாணிக்கவாசகரின் கற்பனை வளமும் நகைச்சுவையும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. ஓர் உதாரணம்: ‘நாம் ஏன் திருநீறு பூசிக் கொள்கிறோம்? நம் உடல், உள்ளம் இரண்டும் தூய்மை பெற்று சிவபெருமானின் அருளைப் பெறுவ
  • தற்காகத்தான். ஆனால் சிவபெருமான் எதற்காகத் தன்னுடல் முழுவதும் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும்? மாணிக்கவாசகர் காரணம் கூறுகிறார்:
  • ரசாயனப் பொருள்கள் எல்லாம் வருவதற்கு முன், சிறிது சாம்பலால் ஒளியிழந்த பொன் நகைகளை அழுத்தித் தேய்த்தால் அவை ஒளிரும். அதனால் நீதான் பொன்னார் மேனியன் ஆயிற்றே! உன் பொன்மேனிக்கு மேலும் மெருகூட்டுவதற்காகச் சாம்பலைப் பூசிக் கொண்டாய் போலும்!” என்கிறார்.

  • மாறுபட்டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த் தாள்
  • வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
  • ஊறு மட்டே மன்னும் உத்தர கோச மங்கைக் கரசே
  • நீறு பட்டேயொளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே (114)

  • *** இன்னும் ஒரு கற்பனை. சிவபெருமான் தலையில் பிறைச்சந்திரனும் பக்கத்திலேயே கங்கையும் உள்ளன. அந்தக் கங்கையில் சந்திர பிம்பம் தெரிகிறது. இது ஈசனின் கழுத்திலுள்ள பாம்பைப் பார்த்துச் சந்திரன் பயந்து போய் நீருக்குள் ஒளிந்து கொண்டதுபோல் இருக்கிறதாம்!

  • கதியடியேற்குன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
  • விதியடியேனை விடுதி கண்டாய் வெண்தலை முழையிற்
  • பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்சுருங்க அஞ்சி
  • மதிநெடு நீரிற் குளித்தொளிக்கும் சடை மன்னவனே (146)

  • நீரில் ஒளிந்து கொண்டாலும் தன் ஒளி தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பது சந்திரனுக்குத் தெரியவில்லை. அதுதான் குறைமதியாயிற்றே!
  • இந்த இரு பாடல்களும் ‘நீத்தல் விண்ணப்பம்’ என்ற தொகுதியில் காணப்படுகின்றன. இந்தத் தொகுதியில் ஐம்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அவர் சொல்வது இதுதான்! இறைவா, நான் உன்னை நம்பி விட்டேன். என்னைக் கைவிட்டுவிடாதே!” முதலில் பல பாடல்களில் ‘என்னை விட்டுவிடாதே!’ என்று கெஞ்சுகிறார். பிறகு மிரட்டுகிறார். எப்படி?

  • நாம் சொல்வதில்லையா ‘ஏய் தணிகாசலம், வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்காவிட்டால், நடுத்தெருவில் நின்று கொண்டு உன்னைக் கண்டபடி பேசிப்புடுவேன்’ என்று, அதே போல் மிரட்டுகிறார். ‘உன்னைக் குணமிலி – மானிடன் – தேய் மதியன்’ என்பேன்.
  • இது மட்டுமா? ‘நான் விந்தையாக எல்லோரும் சிரிக்கும்படி நடந்து கொள்வேன். ஊரார் என்னைப் பார்த்து ‘நீ யாருடைய ஆளப்பா?’ என்று கேட்டால், ‘நான் சிவனின் ஆள்’ என்பேன். அவர்கள் உன்னையும் பரிகசிப்பார்கள். உனக்கு இது தேவையா?’ என்கிறார்.

  • தாரகை போலும் தலைத்தலை மாலை தழலரப்பூண்
  • வீரவென் றன்னை விடுதிகண்டாய் விடிலென்னை மிக்கார்
  • ஆரடியானென்னின் உத்தர கோச மங்கைக்கரசின்
  • சீரடியாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே (152)

  • *** இன்னும் சொல்கிறார்: ‘நீ பித்தனல்லவா? கைலாச மலை எவ்வளவு தூய்மையாக வருடம் முழுவதும் ‘ஏர்
  • கண்டிஷன்’ செய்யப்பட்டு இருக்கிறது. அங்கேயே இருக்கக் கூடாதா? சுடுகாட்டின் நாற்றத்தில், எரியும் பிணங்களுக்கு நடுவே ஆடிக் கொண்டிருக்க வேண்டுமா? நீ நினைத்தால் விலையுயர்ந்த பட்டாடைகளை அணிய முடியாதா? யானை, புலித்தோலையும் அணிகிறாயே! அமுதை விட்டு நஞ்சை உண்டாயே!

  • சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத்
  • தொழும்பையும் ஈசற்கென்று
  • விரிப்பிப்பன் என்னை விடுதி கண்டாய்
  • விடின் வெங்கரியின்
  • உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்
  • நஞ்சூண் பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
  • எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப்
  • பிச்சன் என்றேசுவனே. (153)

  • இவ்வளவு கடுமையாக இறைவனை ஏசியதும் அவருக்கு ஒரு பச்சாதாப உணர்ச்சி வந்துவிடுகிறது. உன்னையா நான் இப்படி ஏசினேன்! எனக்குத் தெரியாதா? நீ உலகையெல்லாம் காப்பதற்காக அல்லவா நஞ்சுண்டாய்? நான் ஏசினாலும், புகழ்ந்தாலும், உன்னையன்றி எனக்கு யார் உள்ளார்? என்னைக் கைவிட்டு விடாதேயப்பா!” என்கிறார்.

  • ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
  • வேசறுவேனை விடுதி கண்டாய் செம்பவள வெற்பின்
  • தேசுடையாயென்னை ஆளுடையாம் சிற்றுயிர்க்கிரங்கி
  • காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே (154)

  • இந்தப் பகுதி மாணிக்கவாசகர் பக்தியின் ஆரம்ப நிலையில் இருந்தபோது பாடப்பட்டது. இந்த நிலையில் ‘என்னை விட்டு விடாதேயப்பா!’ என்று கெஞ்சுபவர், பக்தி முற்றிய நிலையில் என்ன கூறுகிறார் தெரியுமா? ‘நான் உன்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டேன். என்னை விட்டுவிட்டு உன்னால் திமிறிக் கொண்டு ஓட முடியுமா?’ என்று சவால் விடுகிறார். ‘பிடித்த பத்து’ என்ற இந்தப் பதிகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
  • பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
  • ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
  • தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
  • யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே (542)

  • பக்தி நிலையின் ஆரம்ப கட்டத்தில் தொண்டன் இறைவனுக்கு அடிமையாக இருக்கின்றான். இறுதியில் இறைவன் தொண்டன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறான்.

  • ஒருவரை மரியாதைக்கு வீட்டிற்கு அழைத்தால், அவர் மிகவும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு நம் இல்லத்திற்கு வந்து தங்கிக் கொண்டு நம்மைச் சிரமப்படுத்தினால் நமக்கு எப்படி இருக்கும்?
  • இதே நிலை – வாழ்க்கையே வெறுத்துப் போகும் நிலை – தனக்கும் ஏற்பட்டது என்கிறார் மணிவாசகர்.

  • நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்
  • தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
  • தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற்கருள் செய்தரன்
  • ஊனாரும் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. (553)

  • ‘நான் ஒன்றும் பெரிதாகத் தவம் செய்யவில்லை. ஏதோ ‘நமசிவாய’ என்றேன். அந்த ஆள் என்னடாவென்றால், என் உள்ளத்தின் நடுவில் வந்து அமர்ந்துவிட்டான்: அது முதல் எனக்கு உலக வாழ்க்கையே வெறுத்துவிட்டது’ என்கிறார். ‘வாழ்க்கை வெறுத்துவிட்டது’ என்றால், நாம் முன் சொன்ன பொருளில் அல்ல.

  • ஒருவனுக்கு மிகவும் சிறந்த பொருள் ஒன்று கிடைக்கும்போது, அதற்கு முன் அவனிடமிருந்த சாதாரணமான பொருள்கள் எல்லாம் வெறுத்துப் போகின்றன அல்லவா? கந்தல் ஆடைகளே அணிந்து வருபவனுக்கு விலையுயர்ந்த புத்தாடைகள் கிடைத்தால் பழைய துணிகளை வெறுத்து ஒதுக்குவதில்லையா அது போல.
  • ஒரு கடை வாசலில் ஓர் அறிவிப்புப் பலகை. ‘இங்கு பொன்னும், வைரமும், முத்தும், பவளமும் மலை மலையாகக் கொட்டிக் கிடக்கின்றன. உங்களுக்குத் தேவையானவற்றை அள்ளிச் செல்லுங்கள். பதிலுக்கு நீங்கள் ஒன்றும் தர வேண்டாம். இங்கு வந்து வரிசையில் நின்றால் போதும்’ என்று எழுதி வைத்திருக்கிறது.

  • புத்திசாலிகள் முதலில் எந்தக் கடைக்குச் செல்வார்கள்? ‘மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எல்லாப் பொருள்களையும் வாங்குவதற்குத் தேவையான பொன்
  • னும், மணியும் இங்கு ‘சும்மா’ கிடைக்கிறதே! அதனால் இதை முதலில் பெற்றுக் கொள்வோம்’ என்றுதானே நினைப்பார்கள்! மாணிக்கவாசகர் கூறுகிறார்:

  • காலமுண்டாகவே காதல் செய்துய்ம்மின் கருதரிய
  • ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
  • ஆலமுண்டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு
  • மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமின்னே. (528)

  • ‘பண்டாரம்’ என்றால் பொக்கிஷம் என்று பொருள். இந்தப் பொக்கிஷம் எப்போதும் காலியாவதில்லை. ஆனால் – சீக்கிரம் வந்து வரிசையில் நின்றால் சீக்கிரமே வேண்டியதைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பலாம்.

  • *** இறைவனை அடைவதற்கு கர்ம, பக்தி, ஞான யோகங்கள் என மூன்று வழிகள் உள்ளன என்கிறது கீதை. மாணிக்கவாசகரின் வாழ்க்கையை இந்த மூன்று யோகங்களின் சங்கமம் எனலாம். வாழ்க்கையில் முதல் கட்டத்தில் அவர் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார். அது கர்ம யோகம்.
  • மனிதனாகப் பிறந்தவர் ஒவ்வொருவரும் தம் கடமையைச் செவ்வனே, பயனில் நாட்டமில்லாமல் செய்தால் இறைவன் அருளைப் பெற முடியும். அந்நிலையில் இருந்த மாணிக்க
  • வாசகருக்கு முக்தி கிடைத்திருக்கும். ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. அவர் திருவாசகம் என்னும் நூலை இயற்ற வேண்டும். அதனால் பல்லாயிரக்கணக்கானோர் உய்ய வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம். அதன் பொருட்டு விளைந்த ஈசனின் திருவிளையாடல்கள்தான்
  • ‘பிட்டுக்கு மண் சுமந்ததும்’ – ‘நரியைப் பரியாக்கியதும்’.

  • பக்திநிலை முற்றி ஞானநிலையை அடைந்ததும், ஞான க்ஷேத்திரமாகிய சிதம்பரத்துக்குச் சென்று தம் வாழ்
  • நாட்களின் கடைசிப் பகுதியை அங்கே கழித்தார் மணிவாசகப் பெருமான். அங்கும் சிதம்பரேசனைத் துதித்துப் பல பாடல்கள் இயற்றினார்.

  • ஒரு நாள் மாணிக்கவாசகரின் இல்லத்துக்கு வந்த இளைஞன் ஒருவன் அவரிடம், ‘ஐயா! நீங்கள் சிவபெருமானைப் பற்றி இனிமையான பல பாடல்கள் பாடியிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அவற்றையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டால் வருங்கால சந்ததியினருக்குப் பயன்படும் அல்லவா?’ என்றான்.

  • மாணிக்கவாசகர், அதற்கெல்லாம் எனக்கு எங்கே நேரம்?” என்று சொல்ல, வந்தவன் விடாமல் நீங்கள் சொல்லச் சொல்ல எல்லாப் பாடல்களையும் எழுதிக் கொள்கிறேன்” என்றான்.

  • அந்த இளைஞன் மாணிக்கவாசகரிடமே சில நாட்கள் தங்கி, திருவாசகம் முழுவதும் எழுதிக் கொண்டான். கிட்டத்தட்ட 660 பாடல்கள். பணி முடிந்ததும் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஏட்டுக்கட்டையும் எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டான்.

  • மறுநாள் காலையில் நடராஜரின் சந்நிதிக் கதவைத் திறந்த தீட்சிதர்கள் பஞ்சாட்சரப் படியில் ஏட்டுக்கட்டு இருப்பதைக் கண்டார்கள். அதைப் பிரித்துப் பார்க்க, திருவாசகம் முழுவதும் அதில் எழுதியிருந்ததைப் படித்து மகிழ்ந்தார்கள். முடிவில் ‘மாணிக்கவாசகர் சொல்ல, அழகிய சிற்றம்பலக் கூத்தன் எழுதியது’ என ஒப்பமிடப்பட்டிருந்தது.
  • மாணிக்கவாசகரும் செய்தியறிந்து இறைவனின் கருணையில் திளைத்தார்.

  • பின்னொரு நாள் சிதம்பரத்திலுள்ள தீட்சிதர்கள் மாணிக்கவாசகரிடம் சென்று, ஐயா! திருவாசகம் முழுவதும் நாங்கள் மீண்டும் மீண்டும் படித்து இன்புற்றோம். அதன் வெளிப்பொருளை நன்கு உணர்ந்தோம். ஆனால், இத்தகைய தெய்விக நூலுக்கு நிச்சயம் ஓர் உட்பொருள் இருக்க வேண்டுமே! அதை எங்களுக்கு விளக்குங்கள்’ என்றனர். மாணிக்கவாசகர், ‘ஆம்! உட்பொருள் உண்டு. அதை உங்களுக்குக் காட்டுகிறேன். ஆனால், இப்போது அல்ல. உரிய நேரம் வரும்போது நானே உங்களை அழைத்துக் காட்டுகிறேன்’ என்றார்.

  • பல நாட்கள் சென்றன. மறுநாள் ஆனி மகம். முதல் நாள் மாலை மாணிக்கவாசகர் தீட்சிதர்களை அழைத்து ‘நாளை காலை தில்லையம்பலத்தானுக்கு வழிபாடு நடக்கும்போது கோயிலுக்கு வாருங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் அனைவரும் சென்றனர்.

  • வழிபாடு முடிந்து ஆரத்தி காட்டும்போது மாணிக்கவாசகர் இறைவன் திருவுருவைக் காட்டி, ‘அதோ, கற்பூர சோதியுடன் சோதியாகக் கலந்து நிற்கிறானே. அவன்தான் திருவாசகத்தின் உட்பொருள்’ என்று கூறி, அக்கணமே அந்தச் சோதியில் கலந்து மறைந்துவிட்டார்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக