திங்கள், 8 நவம்பர், 2021

பஞ்ச புராணம் துதித்தல்

 பஞ்ச புராணம் துதித்தல்


தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.


தேவாரம்


அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]


திருவாசகம்


ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.       [8. மணிவாசகர்]


திருவிசைப்பா


இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்

களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு

என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)

என்னையும் புணர்ப்பவன் கோயில்

பண்பல தெளிதென் பாடிநின் றாடப்

பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்

செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்

திருவளர் திருச்சிற்றம் பலமே.         [9. கருவூர்த்தேவர்]


திருப்பல்லாண்டு


ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

வஞ்சகர் போயகல

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனி யெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன்

அடியோ முக்கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே.        [9. சேந்தனார்]


பெரிய புராணம்

உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்

மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்

“உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்

சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.       [10. சேக்கிழார்]


வாழ்த்துப்பா


ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே.   [3. சம்பந்தர்]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக