சைவர்கள் அறிய வேண்டிய செய்திகள்
1. அடிப்படை நுட்பம்
இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.
நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.
நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்
இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.
சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.
உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை – சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக