புதன், 26 ஏப்ரல், 2023

அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும்


 அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.
அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.
இதனால் பெறும் பயன் வருமாறு :-
கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.
இதற்குப் பிரமாணம் :-
சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக