அடியார் பூசனை
சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர். அவை சிவலிங்கப் பூசனை, (லிங்க வழிபாடு)சிவஅறிவு பெற்ற சிவஆசான் பூசனை (குரு வழிபாடு), சிவஅடியார் பூசனை ( சங்கம அல்லது அடியார் வழிபாடு) என்பனவாகும்
திருக்கோயில்களில் உள்ள பெருமானின் திருமேனிகள் மந்திர ஆற்றல்களால் சிவனாகவே விளங்குதல் போல அடியார்களின் இறை அன்பின் உறைப்பாலும் இறைவனை இடைவிடாது எண்ணும் இயல்பாலும் சிவஅறிவு உணர்வாலும் அடியார்களின் உடம்பு எனும் கோவிலில் இறைவன் நிலைபெற்று இருக்கிறான் என்கிறார் திருமூலர். பெருமானை ‘மகேசுரர்’ என்றும் அடியார்களை ‘மாகேசுரர்’ என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானிடத்திலிருந்து எந்த ஒன்றாலும் தங்களைப் பிரிக்க முடியாத உள்ளத்தை உடைய அடியார்கள் உண்ட பொருள், மூன்று உலகத்திலும் உள்ளவர்கள் உண்டதின் பயனாய் விளையும் என்கின்றார் திருமூலர். இத்தகைய அடியார்கள் பெற்றுக்கொள்ளும் பொருள்கள் மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பெற்றுக்கொண்ட பொருளின் பயனை அளிக்கும் என்றே நந்தி பெருமான் தனக்கு உரைத்ததாகத் திருமூலர் குறிப்பிடுவார். இத்தகைய அடியார்களை வணங்கி அவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் கொடுத்தலே அடியார் பூசனை எனப்படுகின்றது.
சிவன், சிவலிங்கப் பூசனையை ஏற்று மகிழ்வதனைக் காட்டிலும் தன் அடியவர் பூசனையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவானே ஆயினும் சிவஆசான் பூசனையையும் சிவஅடியார் பூசனையையும் மட்டும் செய்து சிவலிங்கப் பூசனையை விட்டுவிடுதல் தவறு என்று திருமூலர் தெளிவுபடுத்துகின்றார். சிலர் சிவபெருமானிடத்து மட்டும் அன்பு வைத்துச் சிவஅடியாரிடத்து அன்பு இல்லாது இருப்பதனால், நீண்ட நாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் மிகக் கிடைக்காது வருந்துவதற்கு இதுவே காரணம் என்கின்றார் திருமூலர். சிவபெருமானை அடைய விரும்புவோர் சிவனடியார்களை விரும்பி வழிபடல் இன்றியமையாதது என்ற கருத்தினைத் திருமூலர் உணர்த்துகின்றார். இதனையே பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் நாயன்மார்களும் வாழ்ந்து காட்டினார்கள் என்பது நினைவுகூறத்தக்கது. “அடியவர்க்கு அன்பிலார் ஈசனுக்கு அன்பிலார்” என்று அருள்நந்திசிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் என்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூலும் இதனையே குறிப்பிடுகின்றது.
“காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடை இறைவா, எங்கள் பெருமானே” என்று சிவனை எப்பொழுதும் போற்றி வணங்கி, அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனது அடியவர் ஆவார்கள். இவர்களை நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள் என்றும் சிவபெருமான் என்றும் கருதி, இவர்களைச் சராசரி மக்களில் இருந்து வேறாக வைத்து வழிபடுகின்றவர்களுக்குக் குவிந்து கிடக்கும் வினைகள் கெட்டு ஒழியும் என்பதனை,
“ஏறுஉடையாய் இறைவா எம்பிரான் என்றே,
நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்,
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று,
வேறுஅணிவார்க்கு வினை இல்லை தானே”
என்று குறிப்பிடுகின்றார். சிவனைத் தவிர வேறு ஒரு தேவரை வழிபடாத, சிவனின் அருள்வீழ்ச்சி கிடைக்கப்பெற்ற இத்தகைய அடியார்களை வானவர்களுக்கு ஒப்பாகவும் இவர்களை வழிபட்டால் அது சிவபூசனையாகிப் பிறப்பை அறுக்கும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்ற வழக்கு ஒன்று தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளதனை அறிவோம். சராசரி உயிர் வகைகளுக்குச் செய்யும் உதவியும் அடியார்களுக்குச் செய்யும் உதவியும் வேறு என்கின்றார் திருமூலர். சராசரி உயிர் என்கின்ற நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைபெற்று நின்று சிவமாம் தன்மையில் நிற்கும் அடியவர்க்குச் செய்யும் உதவியும் வழிபாடும் நம் வினையைப் போக்கிப் பிறவி அறுக்கும் என்கின்றார் திருமூலர். சராசரி உயிர்களுக்குச் செய்யும் உணவு அளித்தல், உறையுள் அளித்தல், பிற உதவிகளைச் செய்தல் என்பதானது உயிர்களுக்குச் செய்யும் நல்வினையாய் மட்டுமே முடியும் என்பதனைத் திருமூலர் உணர்த்துகின்றார். உயிர் நல்வினைகள் சிவ நல்வினைகளாய் மாறுதற்குப் படிக்கல் என்பதும் உணர்தற்பாலது.
தானங்களில் தலையதாகிய அன்னதானமும் அந்தணர் என்று அழைக்கப்படுவோருக்குச் செய்தலைக் காட்டிலும் சிவ அடியாருக்குச் செய்தல் கோடான கோடி மடங்கு மிக்க பயனைத் தரும் என்று தெளிதல் வேண்டும்.
உலகப் பற்றுக்களாகிய இழிநிலையில் இருந்து நீங்கி உயர் நிலையை அடைந்தவர்களாயினும் மீண்டும் அந்த இழிநிலைப் பற்றுக்கள் வந்து பற்றாதபடி என்றும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு ஆகிய அரிய தவங்களை விடாது இயற்றும் உண்மைச் சிவனடியார்களை வணங்கி, அவர்களுக்கு உதவிகளைச் செய்வோம். வினைப் பயன்களைப் போக்கிப் பிறவி அறுவோம்!அடியார் தம் பெருமையை விளக்க வந்த மகா பெரும் காப்பியமே பெரியபுராணம்
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக