செவ்வாய், 30 மே, 2023
புதன், 24 மே, 2023
சிவபோக சாரம் ( சைவ சித்தாந்த துளிகள்)
உலகப் பற்றினை விடுவதற்கு குரு கூறும் உபாயம்
“துரத்தி யுன்னை ஆசை தொடராமல் என்றும் விரத்தியினர் ஆங்கவற்றைவிட்டு / பரத்திலன்பு செய்யடா செய்யடா சேரப்ரபஞ்ச மெலாம்பொய்யடா பொய்யடா பொய் ”
பாடல் 107 ஸ்ரீ குருஞானசம்பந்தரின் சிவபோக சாரம்இப் பிரபஞ்ச மெல்லாம் ஒருசேர பொய் பொய் என்று உணர்ந்து அவற்றின்ேமல் உள்ள ஆசை உன்னைத் துரத்தித் தொடராத வண்ணம் அவற்றை உவர்த்து நீக்க, என்பெருமானிடத்து என்றும் நீங்காத அன்பை வைப்பாயாக, குருவின் உபதேசமாக அமைந்துள்ளது இந்தப் பாடல். இறைமீது வைக்கின்ற அன்பும் வழிபாடுமே பற்றை விடுவதற்கு வழி என்பதை வலியுறுத்துகிறார். பிரபஞ்சம் என்றால் உலகம், இந்த உலகமெல்லாம் ஒருசேரப் பொய் என்கிறார். பொய் என்றால்இல்லாதது என்று அர்த்தமன்று. பொருளின் நிலையற்ற தன்மையையே பொய் என்கிறது சைவ சித்தாந்தம். அதாவதுமாறுதலுக்கு உட்பபட்டதாய், ஐம்பொறிகளால் சுட்டி அறியப்படுவதாய் கால எல்லைக்கு உட்பட்டதாய் உள்ள அனைத்தும் பொய் என காட்டப்படுகிறது. அவை தோன்றி, நின்று, அழியும் தன்மையுடயது. இந்த பொய்யான பிரபஞ்சத்தை பற்றிக் கொண்டுதானே நாம் வாழ முடியும், அப்படி பற்றிக் கொ ள்வதால் அதுவே ேமலும் மேலும் நமக்கு ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசையே வினைத் துன்பமாக நம்மைத் துரத்தி துரத்தி தொ டர்வதற்கு காரணமாகிறது. யான் எனது என்னும் இருவகைப் பற்றினால் இந்த பிரபஞ்சத்தை இறுகப்பற்றிக் கொண்டு விடாதவர்களை துன்பமும்இறுகப்பற்றிக் கொண்டு விடாத என்கிறார். நம் உடம்போடு நம் உடமைகளோடும் எளிதல் பிரிக்க முடியாதபடி அவ்வளவு பற்றுக் கொண்டிருக்கும் நமக்கு விரத்தியோ நிறைவோ எளிதில்வராது. எனவே நம் எண்ணத்தை இறைவன் பால் நாம் திருப்பி விட வேண்டும், இறைவனது கருணையை நினைக்க நினைக்க அவன் மீது அன்பு மிகுந்து இறைபத்தியின் மூலம் இப் பிரபஞ்ச இன்பம் மிக மிக சிறுமையானதாக புலப்படும். பத்தி நெறியில் சிவத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகும் அன்பே பிரபஞ்ச பற்று விட காரணமாக அமையும் என்று தேவார திருவாசக அருளாளர்கள் அனுபவித்து பாடியுள்ளதை பார்க்கிறோம். தாயின் அன்பைப்போன்றே இறை அன்பு என்று உணர்த்தும் அப்பர் அடிகளைப் போல ஸ்ரீகுருஞானசம்பந்தரும்உபதேசமாக பரத்தில் அன்பு செய்யடா செய்யடா இந்த பிரபஞ்சமெல்லாம் பொய்யடா பொயயடா பொய் என்று வலியுறுத்தியுள்ளார் ஆக குருவுபேசத்தின் வழியாக இறைவனிடத்து அன்பு செய்யச் செய்ய இப்பிரபஞ்சம் நிலையானது என்றும் உண்மை புரியவரும். அதனால் அவற்றின் உவர்ப்பு வர ஆசையும் துன்பமும் துரத்தி தொடராது என்று இறையின்பத்தினை வலியுறுத்துகிறார் குருநாதர்.
திருச்சிற்றம்பலம்
புதன், 3 மே, 2023
தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே!
தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே!
தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இயல்பே தவத்திற்கு வடிவம் என்பார் ஐயன் திருவள்ளுவர். உலகிலுள்ள உயிருள்ள பொருள்களையும் உயிரற்றப் பொருள்களையும் பெருமானே அவற்றின் உள்ளே கலந்து நிற்பதனால் கலப்பினால் ஒன்றாயும் அப்பொருள்களை அவற்றின் உள்ளே நின்று செலுத்தும் வகையால் உடனாகவும் இறைவன் வேறு பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் நின்று அருள்புரிகின்றான் என்ற உண்மையை உணருமானால், தனக்கு வருகின்ற துன்பத்தினைத் தாங்கிக்கொள்ளும் செவ்வியை உயிர்கள் பெறும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும்.
“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய்ப் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய்ப் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய்ப் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய்ப் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்ப் போற்றி “ என்று உயிரற்றப் பொருள்களான, நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்தினில் பெருமான் எவ்வாறு கலப்பால் ஒன்றாய் நின்று அருளுகிறான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். பெருமானின் திருவருள் துணையாலேயே உலகங்களும் கோள்களும் விண்மீன்களும் இயங்குகின்றன. இதனால் மேற்கூறியவற்றாலும் பிற உயிர்களினாலும் பிற சத்திகளினாலும் உலகிற்கும் உலக உயிர்களுக்கும் கிட்டும் இன்ப துன்ப உணர்வுகள் பெருமானாலேயே கொடுக்கப்படுகின்றன. அதுவும் அனைத்தும் உயிர்களின் நன்மைக்காகவே கொடுக்கப்படுகின்றன. எனினும் நம் விருப்பு வெறுப்புக்களினாலும் அறியாமையினாலும் சிலவற்றை இன்ப நுகர்வாகவும் சிலவற்றைத் துன்ப நுகர்வாகவும் எண்ணுகின்றோம் என்ற தெளிவு அல்லது செவ்வி ஏற்படுமாயின், உயிர் தனக்கு ஏற்படுகின்ற ன்ப துன்ப உணர்வுகளைப் பொறுத்துக்கொள்ளும்; அவற்றை ஒருபடித்தாகவே நுகரும். சரிசமனாக எல்லாவற்றையும் எதிர்கொள்கின்ற ஒக்கு நோக்கும் நிலை ஏற்படும். “கேடும் ஆக்கமும் கெட்டத் திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவர்” எனும் இருவினை ஒப்பு ஏற்படுதலையே தவம் முற்றுதல் என்று குறிப்பிடுவர்.
இன்ப நுகர்வு துன்ப நுகர்வு, நல்ல செயல் தீய செயல் என்ற வேறுபாடு அற்றவர் பிற உயிர்களைத் துன்பப்படுத்தி இன்பம் காணுதல் எனும் இழிய செயலுக்கு ஆளாக மாட்டார். மன்னுயிரைத் தன்னுயிர் போல காக்கவும் அதற்கு உதவவும் மட்டுமே துணிவர். ஆரியிர்களுக்கு அன்பு செய்யும் உயர்ந்த இயல்பைப் பெறுவர். இறைவன் வாழும் இடமாக எல்லா உயிர்களையும் போற்றி வணங்கி, அவை எப்பொழுதும் இன்புற்று இருத்தலையே வேண்டுவர். இதனையே, “ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பிரான் குறிப்பிடுவார்.இதுபற்றியே பிற உயிர்களின் மீது பரிவும் அன்பும் கொண்டு, இன்ப துன்பங்களை ஒருபடித்தாய் எதிர்நோக்கி வாழ்ந்த அருளாளர்களைத் தவச்சீலர்கள் என்கிறோம்.
தனக்கு வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமலும் இருக்கின்ற தவத்தினை எய்துவதற்குச் சிலர் தங்களை அன்றாட உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொண்டு, காவி அணிந்து, தாடியையும் மீசையையும் வெட்டாமல், துறவு கோலத்தோடு தங்களைக் காடுகளிலோ குகைகளிலோ தனிமை படுத்திக் கொள்கின்றனர். மூச்சுப் பயிற்சிகள் மூலமும் நீண்ட நேரம் அமரக்கூடிய இருக்கை வகைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமும் உலகை மறந்து இறைவனைத் தொடர்ந்து எண்ண முற்படுகின்றனர். அப்படி முயன்று இறைவனோடு அகத்திலே கூடி இருக்கின்ற அகத்தவ நிலையைச் சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்கின்றனர். இதற்குக் கடின பயிற்சியும் முயற்சியும் தேவையாகின்றது. இவர்கள் இப்பயிற்சியினால் கிட்டும் சிறு-சிறு சத்திகளான எட்டுச் சத்திகளைப் பெறுவர்.
உடலை மென்மையாக்கிக் கொள்ளல், உடலை நுண்மையாக்கிக் கொள்ளல், உடலைப் பருமையாக்கிக் கொள்ளல், விரும்பியதை எய்தல், விண்தன்மை அடைதல், ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல், சிற்சத்திகளை ஆட்சி செய்தல், தன்வயப்படுத்துதல் போன்ற எட்டு சிற்சத்திகளைத் துணைக்கொண்டு இறைவனை மேலும் தொடர்ந்து உய்த்து உணரவும் தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொண்டுப் பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதற்கும் மட்டுமே எண்ணுவர். இவ்வாற்றல்களை ஒருபோதும் எளிய உலகச் சிற்றின்பங்களைப் பெறுவதற்கும் நுகர்வதற்கும் பயன்படுத்தமாட்டார்கள். சிவ அறிவையும் திருவடிப்பேற்றினையும் பெறவே அவற்றைத் துணைக்கொள்வர். எது எப்படி இருப்பினும், அகத்தவம் இயற்றுகின்றவரும் பத்திநெறியில் நிற்பவரும் தங்களுடைய தவத்தினை இயற்றும்போது நினைவில் நிறுத்த வேண்டிய கடவுள் பரம்பொருளான சிவபெருமானே என்பது திருமூலர் வாக்கு.
நாம் இயற்றும் இவ்விருவகைத் தவங்களையும் நிறைவு பெறச் செய்யக்கூடிய இறைவன் சிவபெருமான் ஒருவனே! அவன் இட்ட பணிகளைச் செய்யும் இந்திரன், வாயு, வருணன், தீ, காலன், முதலாய தேவர்களும் ஒன்பது கோள்களும் அவனின் ஆணைப்படியே செயல்படுகின்றன. இறைவனின் ஆணைப்படி இயங்கும் தேவதைகளும் பிறவும் தாம் உய்வதற்குக் கால காலனாகிய, மகாதேவனாகிய சிவபெருமானையே வேண்டிப் பணிந்து நிற்கின்றன. சிவபெருமான் இல்லையேல் அவனுக்கு ஏவல் செய்யும் தேவர்களின் பணி இல்லாமல் போகும். இதனால் தேவர்களை எவரும் மதியாமல் போவர்.
தவத்திற்குத் தலைவனானவன் சிவபெருமானே! தவத்தின் முடிந்த முடிவாகிய வீடு பேற்றினை அளிப்பவனும் அவனே என்பதனை, “அவனை ஒழிய அமரரும் இல்லை, அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை, அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை, அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே” என்று திருமுலர் குறிப்பிடுவார். உண்மைத் தவத்தினை இயற்றி நிலைத்தப் பேரின்பப் பெருவாழ்வினை அடைவோமாக!
திருச்சிற்றம்பலம்