ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

பண்டார சாத்திரங் காட்டும் " தச காரியம் "

 பண்டார சாத்திரங் காட்டும் " தச காரியம் "



  சிவபுண்ணியங்களாகிய சரியை, கிரியை, யோகங்களை முற்றவித்தால் அவற்றின் பயனாக இருவினை ஒப்பு, மலபரிபாகம் நிகழ்ந்து, சக்திநிபாதம் உண்டாகும். சக்தி நிபாதம் ஏற்படும் போது அது காணும் திரோதன சக்தியாய் விளங்கிவந்த சிவ சக்தி அந் நிலையினின்று நீங்கி கருணை நிறைந்த அருட் சத்தியாக விளங்கும்.

   சிவாகம அறிஞர்கள் பொருள்களை பதி, பசு, பாசம் என்று மூன்றாக சொல்வார்கள்.  அவற்றினுள் பசுவாகிய ஆன்மா பாசத்தையோ, அல்லது பதியையோ சார்ந்து விளங்குமே அன்றி தன்மயமாக தனித்து விளங்கும் திறன்அற்றது. ஆன்மாவானது பாசத்தை சார்ந்த போது பாசமாகவும், பதியை சார்ந்தபோது பதியாகவும், விளங்கினாலும், பாசத்தை சார்ந்தபோது அந்த பாசமாகிய ஆணவ மலத்தால் மறைப்புண்டு நுணுகி கிடக்கும். பதி அருளால் மாயையின் சார்பற்று வினைக்கீடாய் பிறவிகளில் செல்லும். இத்துன்பத்தினின்றும் நீங்கும் பொருட்டு பதிக்கு கீழான கதி என்று மதிக்கத்தக்க அவத்தைகளை பத்தாக (தச காரியம் ) கூறப்படுகிறது.

 இந்த பத்து அவத்தை (படிநிலை) யே தசகாரியம் என்படும். தச (பத்து) காரியம் (நிலை) அந்த தச காரியங்களாவன;

  1.தத்துவ ரூபம், 2, தத்துவ தரிசனம், 3. தத்துவ சுத்தி

 4. ஆன்ம ரூபம், 5. ஆன்ம தரிசனம்,  6. ஆன்ம சுத்தி

 7. சிவரூபம்,  8. சிவ தரிசனம், 9. சிவயோகம், 10. சிவபோகம் என்பன

    பாசக் கருவியாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் பகுத்தறிந்து தனித்தனியே அவற்றின் தொழிலை அறிதல் - தத்துவ ரூபம்,

   ஆராய்ந்தால் அத்தத்துவங்களுக்கு ஒரு செயலும் இல்லை என உணர்தல் /  தத்துதரிசனம்

   அறிவுடைய ஆன்மா இவற்றின் இயலாமையையும் உணர்ந்து, தத்துவங்களில் பற்றற்று  நிற்றல் -  தத்துவ சுத்தி

  மலவலிகுன்றி ஆன்மா தன்னறிவாய் விளங்கி, முப்பொருள் உண்டென தோன்றும் நலையே - ஆன்ம ரூபம்

  திருவருள் விளக்கம் பெறுவதே தன்னறிவு என ஆன்மாவாகிய உன்னை உள்ளவாறு அறிதல் - ஆன்ம தரிசனம்.

  திருவருளை நினைந்து அதுவே எப்போதும்துணை நின்று காட்டுவது என தெளிந்து அருளில் அழுந்துதல்  - ஆன்ம சுத்தி

  ஆன்மா மூன்று விதமான ஞானங்களுள் ஆராய்ந்து மேலானதாக விளங்கும் சிவஞானத்தை உணர்ந்து நிற்றல் - சிவரூபம்

  சிவஞானத்தை உணர்ந்த அதன் வாயிலாக சிவமாகிய தன்னை ஆன்மாவுக்கு காட்டி நிற்றல் - சிவ தரிசனம்

  அவ்வான்மா மல வாதனையால் விளையும் பேத ஞானம் (திரிபுர உணர்வு) காணாதவாறு தன்னையே உணர்த்தி நிற்றல் - சிவயோகம்,

  சிவபோகத்தினை சிவம் காட்டும் உபகாரம், காணும்உபகாரம் எனும் இரண்டும் செய்து விளைவித்து நிற்றல் - சிவபோகம்.

 ( ஆன்மாவின் கண்போல காட்சியை காட்டி, அக்கண்ணோடு உடன  இயந்து காண்பது போல)

  ஞான ஒளிமயமான ஞாதிருவே திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த ஆசாரிய மூர்த்தி  உபதேசித்து அருளிய இப் பத்து அவத்தைகளையும் ஆன்மா தெளிவாக அறிந்து கொள்ளல்

  இவ்வாறு தசகாரியங்களையும் பயின்று மெய் பொருளாகிய சிவத்தினை பெற்றோர் இப்பிறப்பிலேயே பரமுத்தி அடைந்திடுவர். சாதனைகளில் நின்று வருவோர் உடல் பிரியும் காலத்தி்ல் முக்தி எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; தட்சினாமூர்த்தி தேசிகர் அருளிய தசகாரியம் பாடல் 4- 10


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக