வெள்ளி, 26 செப்டம்பர், 2025

VID 20250131 08482631.01.2025 அன்று திருக்கடையூரில் நடந்த அகோர சிவம் சிவ,வை,பூமாலை /பழனியம்மாள் தம்பதியரின் சதாபிசேக நிகழ்ச்சி

VID 20250131 09512031.01.2025 அன்று திருக்கடையூரில் நடந்த அகோர சிவம் சிவ,வை,பூமாலை /பழனியம்மாள் தம்பதியரின் சதாபிசேக நிகழ்ச்சி

VID 20250131 31.01.2025 அன்று திருக்கடையூரில் நடந்த அகோர சிவம் சிவ,வை,பூமாலை /பழனியம்மாள் தம்பதியரின் சதாபிசேக நிகழ்ச்சி122054

VID 20250131 122428

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

சைவ நாற்பாதங்கள்

 


சைவ நாற்பாதங்கள்
சிவபெருமான் திருவடியை அடைதற்குரிய நான்கு மார்க்கங்களைச் சைவ நாற்பாதங்கள் என்பர். சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன சைவ நாற்பாதங்களின் மறுபெயர்கள்
சைவ நாற்பாதங்களாவன சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. இவை முறையே தாச மார்க்கம் (அடிமை நெறி), / அப்பர் கண்ட நெறி)
சற்புத்திர மார்க்கம்,(தந்தை புத்திரன் உறவு நெறி) / ஞானசம்பந்தர் கண்ட நெறி)
சக மார்க்கம்,(ஒத்தநெறி) (சுந்தரர் அடைந்த நெறி)
சன்மார்க்கம் (குரு சிஷ்யன்) ( மாணிக்கவாசகர் கண்ட நெறி)எனவும் பெயர் பெறும்.
சரியை. முதலிய நான்கும் உபாயச் சரியை, கரியை, யோகம், ஞானம் எனவும், உண்மைச்சரியை, கிரியை, யோகம், ஞானம் எனவும் இருவகைப்படும். புகழ் முதலிய உலகப் பயனை நோக்கிச் செய்யும் புண்ணியங்கள் உபாயச் சரியை முதலியன. பத்தி காரணமாகச் செய்யும் சிவ புண்ணியங்கள் உண்மைச் சரியை முதலியன.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களுள், சரியை இன்றேல் கிரியையும், கிரியை இன்றேல் யோகமும், யோக மின்றேல் சிவஞானமும், சிவஞானமின்றேல் சிவன் திருவடிப் பேறும் கைகூடா. ஆதலால் இவை நான்கும் முறையே ஒன்றற்கொன்று தொடர்பாய்ப் படிபோல் ஏற்றம் பெற்றுச் செல்வன. அரும்பாய், மலராய், காயாய், கனியாகிப் பயன் தருவன.
சரியை
ஆன்மாக்கள். இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்குப் புறத்தே வணங்கிச் சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் திருத் தொண்டு செய்தல் சரியை வழிபாடு எனப்படும்.
இச் சரியை வழிபாடு சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நால் வகைத்து.
சிவாலயத்திலே சிவபெருமானுக்கும், அவர் அதிட்டித்து நின்றருளும் குரு சங்கமம் ஆகியோருக்கும், செய்யும் திருத்தொண்டுகள் சரியையிற் சரியையாம். திருவலகிடுதல், திருநந்தவனம் வைத்தல் முதலியன சிவபெருமானுக்குச் செய்யும் திருத்தொண்டுகள், குருசங்கமம் ஆகியோருக்குச் செய்யுந் திருத்தொண்டுகளாவன சிவாலயத்தலை அவரை உபசரித்தலும், அவர் ஏவிய பணிகளைச் செய்தலுமாம். (குரு-தீட்சாகுரு, போதக குரு, வித்தியாகுரு என மூவகை. சங்கமம்- சிவனடியார்.)
மூர்த்தி ஒருவரைத் தமக்குப் புறத்தே பூசித்தல், சரியையிற் கிரியை எனப்படும்.
உருத்திரமூர்த்தியைத் தம் மனத்திலே தியானித்தல் சரியையில் யோகம் ஆகும்.
சரியையில் யோகம் என்னும் நிலையிலே நிகழும் தியான பாவனையின் உறைப்பானதோர் அநுபவ உணர்வை அடைதல் சரியையில் ஞானமாகும்.
சரியை வழிபாட்டினாலே வரும் பயன் சிவசாலோக முத்தியடைதலாம். சிவசாலோக முத்தியாவது சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவலோகத்திலே இன்புற்று வாழ்தல். (சாூலோகம்-ஒரே உலகம்) இம்முத்தி அபர முத்தியெனவும், பதமுத்தியெனவும் பெயர் பெறும்.
கிரியை
இறைவனது அருவுருத் திருமேனியை (சதாசிவனை- சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும்.
இக் கிரியை வழிபாடு கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என நான்கு வகைத்து.
மலர், திருமஞ்சனம், தூபம், தீபம், சந்தனம், திருவமுது முதலிய பூசைக்கு வேண்டிய பொருட்களை அமைத்துக்கொள்ளுதல் கிரியையிற் சரியையாகும்.
ஐவகைச் சுத்திபண்ணி, புறத்திலே. உள்ள சிவலிங்கத்தில் சிவபெருமானைப் பாவனை செய்து வெளிப்படுத்திப் பூசை செய்தல் கிரியைபிற் கிரியை எனப்படும். (பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்து என்பன ஐவகைச் சுத்திகள்.)
கிரியையில் யோகம் எனப்படுவது பூசை, ஓமம், தியானம் என மூன்று இடம் வகுத்துக்கொண்டு அகத்திலே செய்யப்படும் அந்தரியாகமாம் (மனசிலே செய்யும் பூசை),
கிரியையில் யோகம் என்ற நிலையிலே நிகழும் அந்தரியாக உறைப்பிலே தோன்றுவதோர் அநுபவ உணர்வை அடைதல் கிரியையில் ஞானம் எனப்படும்.
கிரியை வழிபாட்டினாலே பெறும் பயன் சிவசாமீப மூத்தியாம். சிவசாமீப முத்தியாவது மைந்தற்குரிய உரிமை போலச் சிவபெருமானுக்குச் சமீபமாக இருந்து இன்பம் அநுபவித்து வாழ்தல். (சாமீபம்-சமீபம்-அண்மை) இம்முத்த அபரமுத்தியெனவும், பத மூத்தியெனவும் படும்.
யோகம்
சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாம். அது மனத்தை விடயங்களின் வழியிலே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தைத் தியானித்து, பின்பு தியானிப்போனாகய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்றுச் சமாதி நிலையடைதலாகும்.
யோக வழிபாடு யோகத்திற் சரியை, யோகத்திற் சரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் என நால்வகைத்து.
யோகத்திற் சரியை, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்னும் நான்கினையும் உடையது. இயமம் ஆவது கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, இரக்கம், ‘வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, கலங்காமை முதலிய தருமங்களாம். நியமம் ஆவது தவம், தேவபக்தி, பூசை, ஞானசாத்திரம் கேட்டல், செபம், விரதம் முதலியனவாம். ஆசனமாவது பத்மாசனம் முதலிய எட்டு வகை இருக்கைகளாம், பிராணாயாமம் ஆவது பிராணவாயுவைத் தடுத்து நிறுத்தும் பயிற்சயாம்.
பிரத்தியாகாரமும் தாரணையும் யோகத்திற் கிரியை எனப்படும்.
பிரத்தியாகாரம் ஆவது மனத்தை ஐம்புலன் வழிச்செல்லாமல் தடுத்தல். தாரணையாவது மனத்தை ஒரு தானத்தில் திறுத்துதல்.
யோகத்தில் யோகமாவது தியானமாம். யோகத்தில் ஞானமாவது மனத்தைப் பரம்பொருளோடு ஐக்கியப்படுத்தி நிறுத்துதலாம்.
யோகத்தினால் வரும் பயன் சிவசாரூம் முத்தியடைதல், சிவசாரூப மூத்தியாவது சிவபெருமானையொத்த வடிவமுடையோராய் இன்பம் அநுபவித்து வாழ்தல். இம் முத்தி அபரமுத்தியெனவும், பரமுத்தியெனவும் படும். (சாரூபம்-ஒத்த உருவம்)
ஞானம்
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும்.
ஞான வழிபாடும் ஞானத்திற் சரியை, ஞானத்துற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என நால்வகைத்தாம்.
ஞான நூல்களைக் கேட்டல் ஞானத்திற் சரியை.
கேட்டவற்றைச் சிந்தித்தல் ஞானத்தில் கிரியை,
சிந்தித்தவற்றைத் தெளிதல் ஞானத்தில் யோகம்.
நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞானம்.
அது உள்ளத்தில் இன்பொடுங்கத் தூங்குதலாம்.
ஞான வழிபாட்டின் பயன் சாயுச்சிய முத்தி பெறுதலாம். சாயுச்சிய முத்தியாவது சிவபெருமானோடு தாடலை போல வேறறக் கலந்திருந்து பேரின்பம் அநுபவித்தலாம். இது பரமுத்தியௌவும், அத்துவித முத்தியெனவும், சாயுச்சிய முத்தியெனவும்படும்.
திருச்சிற்றம்பலம்

வன்றொண்டப் பெருமானாரை ( சுந்தரர் ) முன்னைஆசிரியராவார் திருஞானசம்பந்தரும்,திருநாவுக்கரசரும்

 வன்றொண்டப் பெருமானாரை ( சுந்தரர் ) முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமொழி வழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது இறைவனாரே.அஃது எங்ஙனம் எனின், பித்தா பிறைசூடீ என்னும் தொடர், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப் பாடலிடத்து முன்பு தோன்றி விளங்குதலின் என்க. அத்தொடர் அமைந்த அவரது திருப்பாடல்: விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே (தி.1 ப.89 பா.3) வன்றொண்டப் பெருமானாரை இங்ஙனம் முன்னை ஆசிரியர் திருமொழிவழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது, இவரை, முன்னை ஆசிரியர்களது பெருமையையும், அவர்களது திருமொழிப் பெருமையையும் இனிது விளக்கி அடியார்க்கு அடியாராம் வழிநிலை ஆசிரியராகுமாறு செய்யும் குறிப்பினைப் புலப்படுத்தவாறாம். முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும். அதனை இவர், நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை (தி.7 ப.67 பா.5) என்று குறித்தருளுவார். அத் திருப்பாடலிற்றானே, தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை என்று, தம்மை இறைவன் வழிநிலை ஆசிரியராக்கினமையையும் குறிப்பால் அருளிச்செய்வர். அங்ஙனம் இவர் அருளிச்செய்வதற்கு ஏற்ப, இவரைத் திருவாரூரில் இறைவன் தன் அடியார்க்கு அடியராகச் செய்து, திருத்தொண்டத் தொகை பாடுவித்தமையையும், அது பற்றிப் பின்னரும் இவர், நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன் (தி.7 ப.78 பா.10) எனத் தம்மைக் குறித்தருளினமையையுங் காண்க. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் ஆகிய அவ்விருவர்க்கு முன்னரும் ஆசிரியர் உளராயினும், ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று திருப்பதிகம் அருளிச்செய்து திருவருள் நெறியைப் பரப்பும் தொண்டினை அவ்விருவர் வாயிலாகவே நிகழச் செய்தமையால், பேராசிரியப் பெருந்தன்மையை அவ்விருவரிடத்தே இறைவன் வைத்தானாவன். அதனைத் திட்பமுற உணர்ந்தே சேக்கிழார் நாயனார், அவ் விருவரையே, பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் ணிரண்டு (தி.12 பெ.புரா.திருநாவு. 185) என வரையறுத்து அருளிச் செய்தார். அவ்வாசிரியர்வழி நிற்பிக்கப்பட்ட இச்சுவாமிகளை இறைவன் முதற்கண், மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றும், பின்னரும், இன்னும் பல்லாறுலகினில் நம்புகழ் பாடு என்றும், (தி.12 பெ. புரா. தடுத். 70,76) ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று பாடப் பணித்தமையால், ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பேராசிரியராயது எவ்வாறு என்பது இனிது விளங்கும். இனி, செல்லும் இடங்களில் எல்லாம் ஞானசம்பந்தரைச் சிவிகை, சின்னம் முதலியவைகளுடன் செல்லச் செய்தமையால், அவ்விருவருள்ளும் தலைமைத் தன்மையை இறைவன் ஞானசம்பந்தரிடத்து வைத்தமை புலனாகும். இவற்றானே, நால்வர் ஆசிரியருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் முதற்கண் வேறு வைத்து, மூவர் முதலிகள் என வழங்குமாறும் இனிது என்பது பெறப்பட்டது. இனி, பலவிடத்தன்றிச் சிலவிடத்துச் சென்று இறைவன் பொருள்சேர் புகழை மிகப்பாடிய அருளாசிரியர் திருவாதவூரடிகளே யாதலின், அவர் நான்காம் ஆசிரியர் ஆயினார் என்க. அன்றியும், மூவர் தமிழும் இசைத் தமிழாயும், அடிகள் தமிழ் இயற்றமிழாயும் இருத்தல் கருதத்தக்கது. உளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து பாடி அன்பு மீதூர்ந்து இன்புறும் அன்புப் பாடல்களுக்கு இயற்றமிழினும், இசைத்தமிழே சிறந்து நிற்பது என்பது, கோழைமிட றாககவி கோளும்இல வாகஇசை கூடும்வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன் (தி.3 ப.71 பா.1) எனவும், கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால் ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே (தி.3 ப.52 பா.7) எனவும், அளப்பில கீதம்சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே (தி.4 ப.77 பா.3) எனவும் போந்த ஆசிரியத் திருமொழிகளால் பெறப்படும்.இதனால் சுந்தரரின் மானசீக குருவானர்கள் ஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் என்பதாகும்

திருச்சிற்றம்பலம்

பஞ்ச சபைகள்

 பஞ்ச சபைகள்


ஐந்து சபைகள் என்பவை இறைவனான சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களாகும். இச்சபைகள் பஞ்ச சபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பொற்சபை, இரஜித சபை (வெள்ளி சபை), இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன. இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமையப் பெற்றுள்ளன.


1) பொற்சபை – திருமூலட்டநாதர் திருக்கோயில், சிதம்பரம்


இவ்விடம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் நடனத்தின் நாயகனாக நடராஜனாக தனது திருநடனத்தை உமையம்மையுடன் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவர் மற்றும் உலக மக்களுக்கு காட்டியருளினார்.நடராஜர் நடனமாடிய இவ்விடம் பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

    இங்கு இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் நடனமாடுகிறார். இவ்விடத்தில் இறைவனின் திருநடனமானது ஆனந்த தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் பொன்னால் ஆன கூரையின் கீழ் தனது திருநடனத்தைக் காட்டியருளுகிறார்.இத்தலத்தில் இறைவன் பொன்னம்பலவாணன், நடராஜன், கனக சபாபதி, அம்பலவாணன், ஞானக்கூத்தன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.இறைவனின் திருநடனத்தைப் போற்றும் வகையில் இங்கு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.இவ்விடத்தில் மூலவர் திருமூலட்டநாதர் என்ற பெயரிலும், அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.


1) இரஜித சபை (வெள்ளி சபை) – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை


இவ்விடம் மதுரை மாவட்டம் மதுரையில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் தனது பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி கால் மாறி நடனம் புரிகின்றார்.இவ்விடம் வெள்ளியம்பலம், வெள்ளி சபை, வெள்ளி மன்றம் என்றழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் மாணிக்க மேடையில் தனது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார்.முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில் காட்டியருளினார்.பின் ராஜசேகரப் பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாறி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுகிறது.இங்கு இறைவன் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களிலும், அம்மை மீனாட்சி, அங்கையற்கண்ணி என்ற பெயர்களிலும் அருள்புரிகின்றனர்


3) இரத்தின சபை – வடராண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு


இவ்விடம் திருவள்ளுர் மாவட்டத்தில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவபெருமான் ஆலங்காட்டின் தலைவியான காளியை நடனத்தில் வெற்றி பெற்றார்.  இவ்விடம் இரத்தின அம்பலம், இரத்தின சபை, மணி மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன் வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.

காளியுடனான நடனப்போட்டியில் காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார்.

இறைவன் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, இரத்தின சபாபதி என்றும் அவரின் தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம், அனுக்கிரக தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து ஊர்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடியில் அமர்ந்து இறைவனின் திருநடனத்தை கண்டுகளித்த இடம் இது.இங்கு இறைவன் வடராண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை வண்டார்குழலி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.


4), தாமிர சபை – நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி


       இவ்விடம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் தாமிரத்தினால் ஆன அம்பலத்தில் நான்கு கரங்களுடன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார்.இச்சபையில் இறைவனின் திருத்தாண்டவம் முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம் என்றழைக்கப்படுகிறது.

இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு மூலவர் நெல்லையப்பர் என்ற பெயரிலும், அம்மை காந்திமதி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.


5). சித்திர சபை – குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்

      இவ்விடம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் யமனை வென்று, சிவகாமி அம்மையை இடத்தில் கொண்டு மார்க்கண்டேயனுக்கு அருளிய மூர்த்தியாக சித்திர வடிவில் காட்சியருளுகிறார். இச்சபையில் இறைவனின் திருநடனம் திரிபுரதாண்டவம் என்றழைக்கப்படுகிறது.

இத்தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மன் தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாகக் கருதப்படுகிறது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

சித்திர சபையின் கூரையானது செப்புத்தகடுகளால் ஆனது. இங்கு மூலவர் குற்றாலநாதர் எனவும், அம்மை குழல்வாய்மொழி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

உலக உயிர்கள் உய்யும் பொருட்டு தனது திருநடனத்தினை காட்டியருளும் ஆடல்நாயகனின் நடனங்களை ஐந்து சபைகளிலும் கண்டு பெரும் பேற்றினைப் பெறுவோம்

திருச்சிற்றம்பலம்