அறியாமையாகிய ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்
ஒருவனுடைய உடம்பில் பாம்பு கடித்து ஏறிய நஞ்சு அப்பாம்புக்கு பகையாகிய கீரியே நேரே வந்து,பாம்பு கடித்தவனுடைய உடம்பின்மேல் விழுந்து புரண்டாலும் நீங்காது, ஆனால் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகன் தன்னை கீரியாக பாவித்து அந்த மந்திரவடிவமாகவே நின்று பார்க்கும் பார்வையினால் அந்த கொடி நஞ்சு நீங்கும்.
உயிரில் உள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்குவதும் இந்த முறைமையில் ஆகும். இறைவனே உயிர்குயிராய் உடன் நின்ற போதிலும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை, அவ்விறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தால் மட்டுமே அது நீங்குவதாகும்.
நூல்களில் கருட பாவனை என ஒன்று சொல்லப்படுகிறது. அதனை அறிந்து கொண்டால் இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள பாவகன் நிலை் எளிதாக விளங்கும்.உலகிலுள்ள நாம் காணும் பெளதிக பொருள் ஆன்மீக பொருளான மந்திரத்தை துணையாகக் கொண்டு பெளதிகப்பொருட்களின் மேல் பயன் படுத்தும் போது தைவிகப்பொருளான அதிதெய்வம் தோன்றும்,இதனையே கருட மந்திரத்தில் நாம் காணும் போது அதி தெய்வம் ஆகிய அதிதைவிக கருடன் தோன்றும் அதுவே சிவனது சக்தியாகும். அந்தசத்தியே மந்திரவடிவமாய் நின்று அந்த மந்திரத்தை கணிக்கும் மாந்திரிகனுக்கு தருகிறது. மாந்திரிகன் அந்த சக்தியை தியானிக்கிறான். அந்த சக்தியையே தானாக பாவிக்கிறான். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையினால் அம்மாந்திரிகனது ஆன்மா அந்த சத்தி மயமாய் ஆகிறது. அவன் கருடனாகவே நிற்கிறான். அவன் உடம்பு கருடனாகவில்லை. அவன் மந்திரக்கருடனை நாள்தோறும் தியானித்து பழகிய பயிற்சியினால் அவனுடைய ஆன்மா அக்கருடனே தானாய் நிற்கிறது. அவ்வாறு நின்று அவன் பாம்பினால் கடிபட்டவனைத் தன் மந்திரக் கண்கொண்டு பார்ப்பானாயின் அவ்விடம் நீங்கும். சிவசக்தியே மந்திர வடிவாய்நின்று விடத்தை நீக்கிறது.
இக்கருட பாவனை போல மாந்திரிகன் மந்திரத்தை தன்னை கீரியாக பாவிக்கிற பாவனை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாம்பின் விடம் ஏறியவனின் உடலில் கீரி விழுந்து புரண்டாலும் விடம் தீராது, அதுபோல சிவம் உயிரில் பொருந்ததி இருந்தும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்காததற்கு உவமையாகும். மந்திர வடிவாய்நிற்கும் பாவகன் அருள் மயமாய் நிற்கும் குருவிற்கு உவமையாவான். அப்பாவகன் பார்வையால் விடம் நீங்குதல், குருவின் அருள் நோக்கால் மலம்நீங்குவதற்கு உவமையாகும். இதனை விளக்கும் திருவருட் பயன் பாடல் எண். 47
விடம் நகுலம் மேவினும் ெமய்ப் பாவகனின் மீளும்
கடனில் இருள் போவது இவன்கண். பாடல் 47
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக