சித்திரை மாத சதய நட்சத்திரம் அன்று திருநாவுக்கரசரின் குரு பூஜை தினமாகும்.
இன்நாளில் நாவுக்கரசருக்கு பூஜை ஆராதணைகள் செய்யப்படுவது இன்றுவரை சில ஆலயங்களில் வழக்கமாக உள்ளது. அவர் பாடிய தேவாரங்கள் இன்றும் எம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. உழவாரப்படையாளி என்று கூறப்படும் திருநாவுக்கரசர் எமக்கு நல்ல தொண்டு செய்யும் ஆர்வத்தையும், அன்பு கொள்ளும் ஆசையையும் எமக்கு ஊட்டியவர். அவரது வாழ்க்கையில் சமயநெறியை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த காலங்களே அதிகம். அவர் சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து சமயத்தையும் தமிழையும் கற்றுணர்ந்ததால் அவர் ஆன்மீக வாழ்வில் ஈடுபடத்தொடங்கினார். அந்நேரத்தில் புறச்சமயங்களையும் கற்று அதன் நுனுக்கங்களையும், போதனைகளையும் ஓதி உணர்ந்து அவற்றைத்தழுவலானார்.
சமணசமயத்தின் ஈடுபாடு காரணமாக இந்து சமயத்தை மறந்து தன்போக்கிற்கு செல்லலானார். இதனால் கவலைஅடைந்த தமக்கையாரான திலகவதியார் ஏக்கமுடன் சிவனை நினைந்து தம்பியார் சமணமதத்தை விட்டு சைவத்திற்கு திரும்ப வேண்டும் என வீராட்டாணம் திருக்கோவிலுக்குச் சென்று அழுது தொழுது முறையிட்டார்.
திலகவதியாரின் துன்பத்தை போக்கவேண்டி இறைவனும் தம்பிக்கு பேரின்பத்தினை அறியவைக்கும் நோக்கோடு துன்பத்தினைக் கொடுத்து அவரை தடுத்தாட் கொள்ள நினைக்கிறார். வராத துன்பம் வந்தது நாவுக்கரசருக்கு; என்ன நடந்தது வயிற்றுவலி வந்து வாட்டி வதைத்தது. தீராத வலி சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவினர், ஏதோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர். எதற்கும் நிற்கவில்லை. அப்போதுதான் தமக்கையின் நினைவு வர அவரிடம் சென்றார். திலகவதியாரும் நாவுக்கரசரை அழைத்துக் கொண்டு வீராட்டாணம் திருக்கோவிலுக்கு சென்றார். அங்கு குடிகொண்ட சிவனை நினைந்து வணங்கி திருநீற்றை வயிறெங்கும் பூசி இறையை வேண்டுகின்றனர். நாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர் " என்று தொடங்கும் பதிகம் பாடி சூலைநோய் நீங்கப் பெறுகிறார்.
அவர் தனது வாழ்நாளில் எங்கு சென்றாலும் உழவாரம் எனும் புல்பூண்டைச்சுத்தம் செய்துகொள்ளும் ஆயுதத்தை கையில் கூடவே எடுத்துச் சென்றார். அவர் மண்ணைச்சுத்தம் செய்து இப்பூமி எங்கும் உயிர்களைச்சுமந்த உடல்கள் வளமாக வாழ வழிசெய்தார். அதோடு உடல்களைச் சுமந்த உயிர்கள் நலமாக, புனிதமாக, இறைபக்திகொண்டு வாழ்வதற்கு பண்ணை மீட்டி இராகத்தோடு தேவாரப்பண்களை பாடி எங்கும் சென்று ஆன்மீகத் தொண்டுகள் செய்து கொண்டே இருந்தார்.
செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள் தோறும் உழவாரத்தால் புல்செடிகொடி ஆகியவற்றை சுத்தம் செய்வார். ஆலய திருவீதிகள் எங்கும் இவரது சரியைத்தொண்டுகளால் சுத்தமாகக் காட்சியளித்தன. அவர் பாடிய திருவதிகை வீரட்டானப் பதிகத்தில் அவர் பாடியவை மனதை உருக்குபவையாக உள்ளன.
"போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரிதோல்
புறங்காடு அரங்கா நடமாட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என்
வேதனையான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானெ"
தாங்க முடியாத சூலை நோயால் அவதியுற்ற மருள்நீக்கியார் அவ்வேளையில் மெய்யுருகிப் பாடியபதிகங்கள் இறைவனையே மெய்யுருகச் செய்தது. அதனால் வீராட்டானப்பதியில் வீற்றிருந்த சிவபெருமான் மருள்நீக்கியாருக்கு "நாவுக்கரசு" எனும் பட்டத்தை அளித்து நாவுக்கு இதம் தரும் அழகிய தமிழ் பாக்களால் இந்துசமயத்தை நலிவடையாது காத்திடுக என்று வாழ்த்திப் பணிகிறார். தித்திக்கும் கருணை பொழியும் அப்பெருமானை அகங்குளிர முகம்மலர திருவங்கமாலையால் சாற்றுகிறார்; தலையே நீவணங்காய் என்று தொடங்கி கண்கள் , செவிகள், மூக்கு, வாய், நெஞ்சு, கைகள், உடல், கால்கள், உயிர் இவற்றால் எல்லாம் ஈசனை வாழ்த்திக்கொண்டு இன்புற வேண்டும். இவற்றினால் எல்லாம் வணங்கவேண்டும் என்று கூறி அவர் தேடித்தேடொணாத்தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று நம்பிக்கைஊட்டி பக்தியை வளர்த்தார்.
இந்து மதத்தை தழுவிக்கொண்டு சிவபிரானின் அற்புதங்களை தேனின் இனிய குரலால் பாடிக்கொண்டும், உழவாரத்தால் சரியைத்தொண்டும் செய்து கொண்டு ஒவ்வொரு ஆலயங்களுக்கும் செல்லலானார்.
அவர் இப்படி சமயத்தை பரப்பிக்கொண்டு சென்றதை பிடிக்காத சமணர்கள் அவரை எங்கும் செல்ல விடாது பல்லவமன்னன் மூலம் பல தண்டனைகளை வழங்கினார். அவரை சுண்ணாம்பு அறையில் அடைத்தனர். அதன் வெப்பம் தாளமாட்டாது நாவுக்கரசரும், சிவபெருமானை நினைந்து "தனித்திருக் குறுந்தொகை"
மாசில் வீணையும் மாலை மதியமும்;
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் ;
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தொடங்கி பாடுகிறார்.
ஆட்டிவைப்பதும், அதனால் பாடவைப்பதும் எல்லாம் வல்ல ஈசனின் விளையாடல் அன்றோ, சுண்ணாம்பு அறைக்குள் அடைபட்டதும் நாவுக்கரசர் இறைவனை நினைந்து மனதை அவர் பால் செலுத்தி பாடுகிறார், அப்போது அவருக்கு மாசில்லாத தூய்மையான வீணை ஒலியாய் அந்தி நேரத்து பூரண சந்திரனின் ஒளியாய், மெல்லிய காற்றாய், குளிர்சியாய், குளத்தில் உள்ளிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியதாம். அவர் உடலிருந்தது சுண்ணாம்பு அறையில்; ஆனால் உள்ளம் இருந்தது, இறைவனின் இணையடி நிழலில், அன்றோ அவருக்கு வெப்பம் கூட குளிர்ச்சியாக மாறிவிட்டது. சமணர்கள் இதனால் ஆத்திரம் அடைந்து அவரை யானை கொண்டு மிதிக்க வைத்தும் நஞ்சை ஊட்டியும் கொல்லப்பார்த்தனர். ஆனால் எங்கும் நிறைந்த இறைவன் கருணை அவரை ஒன்றும் செய்யவில்லை. சமணர்கள் நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தனர். அவர் சிவனை நினைந்து நமச்சிவாயப்பதிகம், சொற்றுணைவேதியன் என்று பாடி கல் தெப்பமாக மிதக்க கரையேறுகிறார்.
இந்து மதத்தை வளர்க்க அவர் இன்னல்களை அனுபவித்தாலும், இறைபக்தியில் பற்று மிக வைத்து ஊர்கள் தோறும் சென்று ஆலயத்திற்கு வெளியே தன் கையில் உள்ள உழவாரத்தால் செதுக்கி புற்களையும் செடிகொடிகளையும் அகற்றி எங்கும் சுத்தமாக, ஆண்டவன் சந்நிதிகளை, வீதிகளை புனிதமாக்கினார். உள்ளே ஆண்டவன் திருவுருவங்களைக் கண்ணாராக் கண்டு மகிழ்ந்து உளமார வாழ்த்தி வணங்கி என்னையும் இவ்வுயிர்களையும் இப்பூமியில் தொண்டுகள் செய்து சுத்தமான உள்ளத்துடன் தூய்மையான வாழ்வு வாழ அருள் காட்டு, எனப் பாடிப்பரவுகிறார். அவர் பாடிய கணக்கற்ற தேவாரங்கள் எம்மை மெய்யுருகச் செய்து விடும். அதில் திருத்தாண்டகம் அறுபத்து நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அத்தனையும் தேவ ஆரங்கள் சிவனுக்கு சூட்டி மகிழ்ந்து எமக்களித்துள்ளார்.
"அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலை திகழொளியை தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே"
இப்படி இறைவனை பாடாத பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே என்று எமக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு. அவராலே இம்மண்ணில் பிறந்து வாழும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால் அருமையானவன், அந்தணர் சிந்தையில் உள்ளவன், நால்வேதங்களிலும் உள்ளிருப்பவன், அணுவுக்குள் அணுவானவன், யாருக்கும் தெரியாத தத்துவன், தேனினும் இனியன், பால்போல் தித்திப்பவன், திகழும் ஒளியானவன், தேவர்களுக்கு அரசன், ஹரி ,நான்முகன், நெருப்பாக, காற்றாக, ஆர்பரிக்கும் கடலாக, எங்கும் கலந்து நிக்கும் குணமிக்க பெரியான், அப்படிப்பட்ட நம் இறையை நாம் என்நாளும் பேசவெண்டும். பாடிதுதிக்கவேண்டும். ஆலயம் தோறும் சென்று வணங்க வேண்டும். இல்லையெனில் நாம் பிறந்ததற்கு எப்பயனும் இல்லை. இப்படி அவர் மக்களை சமயத்தின் பால் ஈடுபடவைத்தார். அகச் சுத்தத்தையும், துப்பரவு பணியினால் சுத்திகரித்து புறச் சுத்தத்தையும் ஏற்படுத்தி உயிர்களை தூயவர்களாக்கி அமைதி வழிசெல்ல வைத்தார்.
இப்படி சமய நன்னெறியில் நின்ற நாவுக்கரசர் தனது உழவாரத்தை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார். வழக்கம் போல் இறைவனைத்துதித்து விட்டு உழவாரப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இறைவனும் அவர்மீது பற்றுக்கொண்டு பொன்னையும், மணிகளையும் மண்ணில் அவர்கண்ணுக்கு தெரியும் படிபோட்டு வைத்திருந்தார், ஆனால் அந்த உழவாரப்படையாளி பற்றற்று நின்றவர். அவரின் கண்களுக்கு பொன்னும் மணியும் எதுவும் வெறும் கற்களாக பூண்டாக செடியாகத் தெரிந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. பரம் பொருளின் பெரும் புகழைப் பாடுவதிலும், அடுத்தவர் குறைகளை தீர்ப்பதிலுமே கண்ணாக இருந்தார்.
இவர் வாழ்ந்த காலத்திலேயே திருஞானசம்பந்தரும் வாழ்ந்திருந்தார். அவருக்கு வயதில் மூத்தவரான நாவுக்கரசர்; இறைவனால் வழங்கப்பட்ட முத்து சிவிகையில் திருஞானசம்பந்தர் பவனி வரும் போது அங்கு சென்று அச்சிவிகையைத் தன் தோள்மீது தூக்கிவைத்து சம்பந்தரை சுமந்து கொண்டு வந்தார். வரும் வழியில் நாவுக்கரசர் சுமந்து வருவது தெரிந்து ஞானசம்பந்தரும், அவரைப் பார்த்து 'அப்பரே' என அழைத்து அவரை வணங்கி அவருடன் சென்று தலங்கள் தோறும் பாடி இறைவனை தோத்திரம் செய்தார்கள். இருவரும் ஒன்றாக பலதலயாத்திரை சென்ற போது திருமறைக்காடு எனும் ஊரில் பூட்டியே கிடந்த கடம்பூர்க் கரக்கோயிலை அப்பர் தேவாரம் பாடி கதவு திறக்கப்பாடி அவ்வூர் மக்கள் தரிசனம் செய்ய உதவினார். பின்னர் கதவு அடைக்க சம்பந்தர் பாடி அருளினார். இப்படி திறந்து, சாத்தி வழிபட இந்து மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை திறந்து வைத்தனர்.
இங்கனமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று குறையின்று நிறைவோடு வாழச் செய்தனர். திருவீழிமிழலையில் இறைவன் அருளால் படிக்காசு பெற்று அங்குள்ள மக்கள் மத்தியில் நிலவிய பசிபஞ்சத்தை போக்க உதவினர். பழையாறையில் திருக்கோவிலை மீட்டெடுப்பதற்காக நாவுக்கரசர் உண்ணாவிரதம் கூட இருந்து உடலை வருத்தி உள்ளார். அவர் இறைவன் வைத்த சோதனைகளில் எல்லாம் வெற்றி அடைந்தார்.
திருக்கைலாயக் காட்சியைக் கண்ணாரக் காணவேண்டும், என்பதற்காக தனது தள்ளாத வயதில் நடந்தும், பின் தவழ்ந்தும், உருண்டும், விழுந்தும், பின் எழுந்தும் திருவையாற்றில் இறைவன் கருணையினால் திருக்கைலாயக் காட்சியைக் கண்டு இறைவனையும் இறைவியையும் கண்ணாரக் கண்டு களித்து மனமுருகிப் பாடிப்பரவி முத்தியின்பம் அடைந்தார்.
இந்து சமயம் அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலப்பகுதியான ஏழாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி அடைந்தது. அதற்கு அவர்கள் இறைவன் மீது வைத்த அளவு கடந்த பக்தியும், மனவைராக்கியமும் ஒரு காரணம். அதுமட்டுமல்லாது தெய்வங்களோடு அவர்கள் உறவாடி அளவு கடந்த அன்பும் தியானமும் தெய்வசக்திகளோடு வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் இன்னொரு காரணமாக அமைந்தது. புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் திருநாவுக்கரசரின் வாழ்க்கை வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் நாம் அனைவரும் அறிந்திருக்கக்கூடியதே. அதை மீண்டும் இவ்வாறு மீட்டெடுத்து பார்த்தோமானால் இறை சக்தியை உணரக்கூடியதாக அமையும். ஆக நாம் எல்லாம் அவன் செயல், இறைவா எல்லாம் நீ தந்தது, நீயே எனக்கு வழிகாட்டு என்று சரணம் அடைந்தால் சஞ்சலமும் இல்லை. சங்கடமும் இல்லை. எமக்கு வரும் சோதனைகளை வெற்றி கண்டு சாதனைகள வெற்றிப் படிக்கட்டாக்குவோம்.
சுபம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக