திருவண்ணாமலை கிரிவலம்... அது தருமே உயிர்பலம்!
முக்தி தரும் சிவத்தலங்கள்
காசியில் இறக்க முக்தி
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
திரு அண்ணாமலையில் நினைக்க முக்தி
இவைகளி்ல் எளியவழியில் முக்தி பெற வழிகொடுக்கும் தலம் அண்ணாமலை
திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம். இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர். இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,
‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை,’
எனக்கூறினார்.
திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வாடிக்கை. முழு நிலவொளியில் ஈசனை மனதில் நிறுத்தி, 'அருணாச்சலேஸ்வரா' என்று முணுமுணுத்தவாறே வருவதில் உள்ள சுகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். கிரிவலம் செல்லும்போது வழியில், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கும்.
சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்துப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இறுதியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலம்தான் திருவண்ணாமலை.
கிருதயுகத்தில் அக்னிமலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,துவாபர யுகத்தில்தங்க மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகின்றது.
திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன. அங்கு பக்தர்கள் அவரவரது தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம்.
மலை முழுவதுமே அருணாச்சலேஸ்வரரே வியாபித்திருக்கிறார் என்பதால், ,கிரிவலம் முடித்ததும் சுவாமி தரிசனம் செய்யத் தேவையில்லை. இதனால், பலர் முதல் நாளே அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வருவார்கள். கிரிவலப்பாதை முழுவதும் 400 ரூபாயிலிருந்து குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன.
கிரிவலம் செல்லும்போது கால்களில் செருப்பு இல்லாமல், செல்வது நல்லது. மலை முழுவதும் ஒவ்வொரு அடியிலும் பல நூறு லிங்கங்கள் பதிந்து இருப்பதாக ஒரு நம்பிக்கை உலவுகிறது. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்.
கிரிவலம் வரும்போது நண்பர்களுடனோ குழுவாகவோ வந்தாலும் தேவையற்ற வீண் பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் ஆகியவற்றை தவிர்த்து சிவாய நமவென ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறே நம் பயணத்தைப் பூர்த்திசெய்வது நல்லது.
கிரிவலப் பாதையில் நடக்கும்போதே நமக்கும் இறைவனுக்குமான (ஆத்ம நிவேதனம்) உரையாடல் தொடங்கிவிடும். மனம் ஒடுங்குதலாகி, ‘நாம் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப்போகின்றோம்?’ என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழத் தொடங்கிவிடும். அந்த சிந்தனைகள் நம் மனத்தை சுத்தம் செய்து நமக்கான வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக்கி விடும்.
கிரிவலம் உடல், மனம் இரண்டுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும். தேக பலமும் தெய்வ பலமும் ஒன்றாகி நமக்கு உயிர் பலம் தந்திடும்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு ° வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக