செவ்வாய், 26 டிசம்பர், 2017

சிவ பூசை பலன்கள்

சிவ பூசை பலன்கள்


இச்சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர்
சிவனுடைய வழிபாட்டால் மோக்ஷம் கிடைக்கும். போகத்தை விரும்புகிறவர்களுக்கு பெரும் சுகமும் கிடைக்கும். சிவபூஜையினுடைய விசேஷத்தால் அவனுக்கு பெரிய அரண்மனையும், பெரும் யானைகளும், வாயுவேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளும், சந்திரன் போன்ற முகம் அமைந்த சுந்திரகளும் பெரும் செல்வமும் அவனுக்குக் கிடைக்கும் என்பது புராண வசனம், மேலும் சிவன்தான் சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம்.
1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.

2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.

3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.

4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.

5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.

6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.

7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.

8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.

9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.

10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.

11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.

12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.

13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன, விரிவஞ்சி இத்துடன் விடுத்தனம்.

மேலும் சிவனே உயர்வு என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறி முடிப்போம். மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார். எனவே சைவர்களுக்கு சிவனைத் தவிர எந்த தெய்வமும் உரித்தது அல்ல, உயர்ந்தது அல்ல என்னும் எண்ணம் ஏற்பட இது போன்ற சிவஞான பூஜா மலர்கள் மிக மிக அவசியமானதாகும்.
சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல. அவரவருடைய இயல்புக்குத் தக்கவாறு பூஜா சாமன்களை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அதில் பஞ்சாயதன பூஜை என்பது மிகச்சிறந்தது.

சிவபிரானுடைய உயர்வைத் தெளிவுற உலகமக்களுக்கு வெளியிட அமைந்துள்ள ஹிந்து மத சங்கர மடங்களும் தமது ஶ்ரீமுகத்தில் ஶ்ரீ நாராயண ஸ்ம்ருதி என்றே குறிப்பிடுகின்றன.

திருச்சிற்றம்பலம்
நன்றி சைவம் டாட் காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக