புதன், 31 மார்ச், 2021

" அஞ்சேலென் றருள்செய்வான் "

 

" அஞ்சேலென் றருள்செய்வான் "

மானிட வாழ்வில் தான் அனுபவிக்கும் துயரங்களில் மிகவும் கொடூராமானது. முதுமை அந்த முதுமையில் படும் கடும் துன்பம் மரண அவஸ்தை என்னும் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் படும் துயரமே. மானிடர் வாழ்வில் முடிவு பருவமான முதுமையில் இரண்டாவது குழந்தைப்பருவமாக உள்ள குந்தி நடந்து குனிந்து தட்டுத்தடுமாறி நடந்தும்  ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வாயில் நுரை தள்ளியும் குவழை வந்து மூச்சுவிடுவதை அடைத்தும் தடுமாறும் பருவத்தில் நம்மை கவனிக்க யாரும் இல்லையே என்று ஏங்கி தடுமாறும் சூழலில் வருந்துங்காலத்து அபயப் பிரதானம் செய்பவன் கோயில், நமக்காக இறங்கி அஞ்சேல் என்று அருள் செய்யும் இறைவன் தான் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள ஐயறப்பர், இவர் அமர்ந்து அருள் செய்யும் கோயில் எப்படி சீரும் செழிப்புமாக உள்ளது என்பதையும் தனது பத்து பாடல்கள் வாயிலாக நமக்கு காட்டுகிறார். அது மட்டுமல்லாது அப்பர் பெருமான் கைலாய மலையை நடந்தே சென்று மீண்டும் ஏறமுடியாமல் தவழ்ந்து சென்று எண்ணிய போது இறைவன் அவருக்கு அசீரியாக யான் திருவையாற்றில் தங்களுக்கு காட்சி தருவோம் என்று பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

அக்கோயில்  நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக் கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறிமேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்

மான் துள்ளித்திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

 மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.

இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

  

 இதனை தான் அனுபவிக்காமலே அடியார்கள் இப்பருவத்தில் அடையும்துயரினை தான் அனுபவித்து கண்டதுபோல் இப்பதிகம் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளார் இறைவியிடம் ஞானப்பால் உண்ட திரு ஞானசம்பந்த பெருமான், அப்பாடல்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.


ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.


வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

 

திங்கள், 29 மார்ச், 2021

பொற் பாதமே துணை

 பொற் பாதமே துணை        



     நாம் யாரைச் சார்ந்து வாழ்கிறோமோ அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை வந்தடைகின்றன. உலகில் நல்லவர்களாக வாழ, நல்லவர்களின் துணையும் வழிகாட்டுதல்களும் தேவைப் படுகின்றன. குடும்பத்திலுள்ள நற்பண்புகளிலிருந்து துவங்கி வெளியில் பழகும் வரை நல்ல பழக்கம் ஏற்பட இது வகை செய்கிறது. அது இல்லாதவனைப் “பழக்க தோஷம்” உள்ளவனாக அடையாளப்  படுத்துகிறோம். ஆணவம்.கன்மம்,மாயை ஆகியவற்றின் வசப்படும் உயிர்கள் தாமே உயர்கதி அடைய சக்தியற்ற தன்மையால் இறைவனது கருணையால் மட்டுமே உய்யப்பெறுகின்றன. பாசத்தோடு கட்டுண்ட பசுக்களாகிய உயிர்கள் பதியின் துணையினால் உய்யப்பெறுவதை சித்தாந்த நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.


உலகைப் படைக்கும்போதே உயிர்களின் பக்குவத்திற்கேற்றபடி கருணை பாலிப்பதால் தனிப் பெருந்துணையாக இறைவன் விளங்குவதை ,              “ எனக்கு ஆர் துணை நீ அலதே “ என்ற திருமுறை வாக்கால் அறிகிறோம். உயிர்களுக்கு உருவத்தைத் தந்த ஈசனே அவற்றின் அங்கங்கள் யாவும் அவனை வணங்கிப் போற்றுவதற்காக அமைத்து,  உய்யும் வழியைக் காட்டியுள்ளான். தானும் ஓர் உருவெடுத்து முன்வந்தருளி சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்துகிறான். சீவன் சிவனை அடையாளம் கண்டவுடன் சிவ சம்பந்தமாகி, பழக்கமும் அவ்வுயிர்க்கு  ஏற்பட்டுவிடுகிறது. சிவ புண்ணியத்தை ஈட்டிய உயிர்களுக்கு இப்பழக்கம் பணி செய்வதன் மூலம் சித்திக்கிறது. சித்த மலம் அறுபட்டுச்  சிவமாகிறது. இதற்கு எதுவாக அமையும் முதற்கட்ட வழிபாடே உருவ வழிபாடு.


உருவ வழிபாட்டில் முதலிடம் பெறுவது, அவ்வுருவத்தின் பாதமே கதி என்று பணி செய்வதாகும். “ திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் “ என்பது திருவாசகம். பாதாதி கேசமாகத் திருவுவைப் பெரியோர் வணங்குவர். திருவடிகளைக் காண்பதை  ருத்ர பாத தரிசனம் என்று திருவாரூரில் அழைப்பார்கள். “ எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் “மனித்தப் பிறவியும் வேண்டுவதே “ என்பார் அப்பர் சுவாமிகள். ஆலயங்களில் அர்ச்சனைகளும் அப்பொன்னடிக்கே செய்யப்படுகின்றன. பிரார்த்தனையும் பொன்னடிக்குச் செய்யப்படுவதை, “ பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் “ என்ற அப்பர் வாக்கால் அறிகிறோம்.


தீக்ஷா கிரமங்களில் திருவடி தீக்ஷை முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே குருவாக எழுந்தருளித் திருவடியைச் சிரத்தின் மீது வைத்தருளுவது அருளாளர்களுக்கே வாய்க்கும். சுந்தரர் துயின்று கொண்டு இருந்தபோது இறைவன் அவரது முடியில்  திருப்பாதத்தைச் சூட்டி அருளியதும், நல்லூரில் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டியதும், பெரிய புராணம் நமக்கு அறிவிக்கும் செய்திகளாகும்.  “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் “ என்ற அப்பரது தேவார வாக்கு இதற்கு அகச் சான்றாக அமைகிறது. வைணவக் கோயில்களில் சடாரி சார்த்தப்படுவது போலவே நல்லூரிலும் சேவார்த்திகளின் சிரத்தில் திருப் பாதம் சார்த்தப்படுகிறது. 


இன்னம்பர்,திருவையாறு ஆகிய தலங்களில் அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள் பலவற்றுள் திருவடியைப் பாடல் தோறும்  போற்றுவதாக அமைந்துள்ளன. திருவதிகை வீரட்டத்துப் பதிகங்களில் ஒன்று திருவடித் திருத்தாண்டகம் என்பதாகும். அதில் ஒவ்வொரு வரியிலும் அப்பரடிகள்  சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுவதாக உள்ளது அறிந்து இன்புறத்தக்கது. அதில் ஒரு பாடலை இங்குக் காணலாம்:


“அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி


அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி


சரவணத்தான் கை தொழுது சாரும் அடி


சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி


பரவுவார் பாவம் பறைக்கும் அடி


பதினெண் கணங்களும் பாடும் அடி


திரைவிரவு தென் கெடில நாடன் அடி


திரு வீரட்டானத்து எஞ் செல்வன் அடி. “


{ அரவணையான்- பாம்பணையில் துயிலும் திருமால்; அருமறையான்- பிரமன்; சென்னி-சிரம்; சரவணத்தான்-முருகன்; சார்ந்தார்கட்கு – தன்னைச் சரண் என்று சார்ந்தவர்களை; பரவுவார்-துதிப்பவர்கள்; கெடில நாடன் – கெடில நதி அருகே கோயில் கொண்டுள்ள திருவதிகைப் பதி }


இப்பதிகத்தில் இறைவனது திருவடி, காலனைக் காய்ந்தது, அரக்கனான இராவணனின் ஆற்றலை அழித்தது, கணக்கு வழக்கைக் கடந்தது, அழகு எழுத முடியாத அருட் சேவடி, உரு என்று உணரப்படாத அடி, உரையால் உணரப்படாத அடி, மந்திரமும் தந்திரமும் ஆய அடி, மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி என்றெல்லாம் திருவடியைப் பலவாறு போற்றுகின்றார் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமான்.  


திருவடிகளே ஆதியும் அந்தமும் ஆவன.அவையே பல்லுயிர்களின் தோற்றத்திற்கும், போகத்திற்கும், மறைவுக்கும் கார்ணமாவன. திருமாலும் பிரமனும் காணாத அத்  திருவடிகளே நம்மை ஆட்கொண்டு அருளுவன. இவை அனைத்தையும் ஒரே பாடலில் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்க வழங்குகிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல். அப்பாடலின் மற்றுமோர் அழகாவது அத்திருவடிகளின்  வருணனையே. அதனைப் , பாதமலர், செந்தளிர்கள்,பொற்பாதம், பூங்கழல்கள், இணை அடிகள், புண்டரீகம் ஆகிய சொற்களால் சொற்பதம் கடந்த தொல்லோனுக்குச்  சொன்மாலை அணிவித்து அகமகிழ்கிறார் மாணிக்கவாசகர்:


“போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்


போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்


போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்


போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்


போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்


போற்றி யாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். “


“ கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் “ என்ற அப்பர் வாக்கும்  " எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம் மானித்தே " என்ற வாக்கும் இங்கு சிந்தித்தற்குரியது.

திருச்சிற்றம்பலம்

நன்றி  தெய்வத்தமிழ்


சனி, 27 மார்ச், 2021

Engal oor kaval deivangal


எங்கள் ஊர் காவல் தெய்வங்கள் 
எங்கள் ஊர் காவல் தெய்வங்கள்
எங்கள் ஊர் சுந்தரபாண்டியத்தி்ல் ஊர் காவல் தெய்வமாக முதலி்ல் கொண்டாடுவது ஊரின் வடக்கே உள்ள பெரிய கோவில் எனப்படும் அருள்மிகு ஸ்ரீவைகுண்ட°முர்த்தி சுவாமி கோவில் என்னும் ஐயனார் சுவாமியாகும்.

மானிடர் வாழ்வில்..... முதுமையும் ... திருமுறை வழிகாட்டலும்

 மானிடர் வாழ்வில்.....

          முதுமையும் ... திருமுறை வழிகாட்டலும்




அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்த காலை தவம் செய் வழியில் பிறந்தலும், ஊனமற்று பிறப்பதும், முன்னே பிறப்பின் தவச்செயலே. இவ்வாறு பிறந்த நாம் நம் பிறப்பின் பயன் அறியாது இறையை மறந்து தான், நான் என்ற ஆணவ மலத்தாலும், ஞான அறிவு இழந்து லெளவீக வாழ்வில் பொன், பொருள் எவ்வழியிலாவது சம்பாதிப்பது என்றே வாழ்ந்து நிலையில்லாத பொய் இன்பம் அனுபவித்து பின் வரும் வாழ்வில் நாம் அடைய வேண்டிய மெய் இன்பத்தை (வீடுபேறு) மறந்து வாழ்வை வீணே போக்கிவிட்டு இந்த பொய்யான உடல் வலுவிலந்து தடுமாறும் போதுதான் சற்று இறை சிந்தனை சற்று உற்று நோக்குகின்றோம்,இம் மானிட உடல் முதுமை அடையும்போது ஆங்கிலக் கவிஞர் சேக்பியர் அவர்கள் கூறியது போல முதுமை பருவம் இரண்டாம் (படி நிலை) குழுந்தை பருவம் என்றார்  (செக்கண்ட் சைல்டு ) இப்பருவம் மானிடர் வளர்ச்சியில் பின்சூழல் சூழற்சி பருவம் , எவ்வாறு குழந்தை படுக்கையில் கிடந்து,தவழ்ந்து, நடந்து தன் பயணத்தை தொடர்ந்தது போல் இதுவே எதிர் வளர்ச்சி யாக முதுமையில் அடைகிறோம். இந்த பருவமான உட்கார்ந்து ,தவழ்ந்து, படுக்கையில் கிடக்கும் பருவத்தில் யார் இந்த உடலுக்கு துணை? இல்லத்தரசியும்நம் வயதினாராக இருந்தால் இருவருமே ஒத்த நிலையில்தானே இருப்பார்கள்.

  நாம் ஈன்றெடுத்த தவச் செல்வங்களும் நம்மை போன்றே லெளவீக வாழ்க்கையில் தன் சுய உணர்வில் தன் வாழ°க்கையை தன் குடும்பம், தன்வாழ்வு என்று முதியோரை பேணும்நிலையிலிருந்து ஓதுங்கி விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் எங்கள் வயதும் முதுமையை நெருங்கி விட்டது (அப்போது அவர்கள் வயது50/60 என்ற நிலையில் .) நாங்கள் எங்களை பேணுவதே சிரமமாக உள்ளது என பின்னடைகின்றனர். எனவே இப்பருவத்தில் முதுமையில் உள்ளவர்கள் படும் துயர் இறைவனிடம் சரணாகதி அடையும்நிலையில் உள்ளது. இதனை சிந்தனையில் கொண்டு நம் இளம்வயது வாழ்வு பருவத்தில் இறைவன் அளித்த இந்த பொய்யான மெய் உடலை நிலையற்ற செல்வம் சம்பாதிக்க்வே பயன்படுத்திவிட்டோம் அவன் அளித்த திரி கரனங்களான மனம், மாெழி (வாய்) மெய்யை இறைவனின் நாமத்தை மனதில் கொண்டு எண்ணாமலும், வாயால்அவன் புகழ் பாடி போற்றுதலும். இந்த உடல், கை, கால்களை கொண்டு அவனை சென்று அடைந்து அவனுக்கு பணிவிடைகள் (உழவாரப்பணி) செய்யாமலும், இலை, மலர் காெண்டு அவன் திருவடிக்கு சமர்பிக்காமலும்இருந்து வீணே கழித்து விட்டதை உணரும் பருவம் தான் இந்த முதுமை பருவம் எனவே இம்முதுமை பருவத்தில் தான் படும் துன்பத்திலிருந்து விடுபட ஒரு அருளாளர் வேண்டிய பாடல் 

" பாயில் கிடக்காமல்  பாழும் மனம் நோகமல்

 நோயில் படுக்காமல்  நொந்து மனம்வாடாமல்

 உற்றார் சாடாமல் ஊண் உடல் நோகாமல்

 உன் நினைவில் என் உயிர் பிரிந்து

 உன் பாதம்அடையஅருள் வாய் "  என்று நொந்து நொக்குஉருகி வேண்டுகிறார்.

   திருமுறைகளில் கண்ட நாயன் மார்களும்இதற்கு விலக்கல்ல. ஏன் நாவுக்கரசர் பெருமானே தனது கடைசி வாழ்வில் கைலாயமலை செல்ல அவர்தன் உடம்பால் நொந்து இறைவனிடம் அடைந்தது அவரின் முதுமையில் அவர் அனுபவித்த துன்பம் தானே. மற்ற அடியார்கள் முதுமையின் கொடுமையில் அகப்படாத நிலையில் அப்பர்  அடிகள்மட்டும்தான் முதுமையில் உடல் துன்பம் கொண்டார் என்பது அவர் வரலாறு உணர்த்தும். அவர் மட்டும் அல்லர்.   நான் யார்? என்ற கேள்விக்கு விடை கண்ட ஸ்ரீ ரமணே மகிரிஷியும் தன் மூப்பு பருவத்தில் தன் துன்பத்தை அனுபவித்தே கழித்தார் என்பது அவர் வாழ்வு உணர்த்தும்.இது போன்றே எத்தனையோ சித்தர்களும் துன்பம் பெற்றுதான் இறைவழிபாட்டின் தொடர்ச்சியால் துன்பம் நீங்கி இறைவனை அடைந்து சிவமுக்தி பெற்றுஉய்வு பெற்றுள்ளார்கள்.

 திருமுறைகளில் காணும் வழி காட்டுதல்கள் ° 11ம் திருமுறை காடவர்கோன் நாயனார்

  இவருடைய வெண்பாக்கள் யாவும்யாக்கை நிலையாமையை உணர்ந்து நம் உடல் இளமை பருவத்தில் இருக்கும் போதே இன்றே இப்போதே  இளமை பருவத்திலே இருக்கும் போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும் என்றும் மூப்பு பருவத்தில் உடல் செயல் இழந்த நிலையில் நாம் எல்லாேரும்போய் சேரும் இடம் அம்பலமே (மயானமே) என்றும் அந்த மயானமே திருச்சிற்றம்பலம் என்றும் கூறி முதுமையில் அடையும் வழி சிவவழிபாடு ஒன்றே என்கிறார்.

 அவருடைய 3வது பாடலில் முதுமையில் ஒரு உடல் அடையும் துயரத்தையும் அதன் பொருட்டு அதனைவிட்டு நீங்க வழிமுறையினையும் கீழ் கண்ட வாறு பாடியுள்ளார்


பாடல் எண் : 3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,

நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை .


வயது மூப்பு அடையும் போது நெடுக நடந்து போக இயலாமல் இடைஇடையே குந்திக் குந்தி எழுந்து நடக்கும் போதும் தட்டுத்தடுமாறு நடக்கும் பாேது துணையாக ஒரு கைத்தடி யை ஊன்றிக் கொண்டு நடக்கும் போது வாயில் குவழை நீர் உள்ளேயும் செல்லாமல், வெளியேயும் வராமல் இருமி, நொந்து ஏங்கி  கஷ்டப்படும் காலத்தில் நெஞ்சே ஐயாறு ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள ஐயராப்பனை அழை என்கின்றார்.அப்போது தான் உன் முதுமை கஷ்டங்கள் நீங்கி விரைவில் இறைவனை அடைவாய் என்கிறார்.

  மூப்பு வந்தவுடன் உற்றார், சுற்றத்தார் மனைவி மக்கள் எல்லோரும்மனம் மாறி விடுவர். மூப்பு என்னும் நொய் வருவது கண்டு அஞ்சிய நமக்கு வந்து விட்டது கண்டு அஞ்சாது இருக்க இறைவனுக்கு நம் திருகரணங்களால் பணி செய்வதே என்கிறார்.

 பழுவை தாங்கும் வண்டியின் அச்சு போல இருந்த இந்த உடம்பு செயலற்று விட்டது, இனி சேரும் இடம் அம்பலமே என்கிறார் இதில் அமபலம் என்றது மாயானத்தையும், நன்நெஞ்சே தில்லை சிற்றம்பலமே சேர் என்பது தில்லைவானனையே சேர் என்பதும் விளங்கும்்

 "உய்யும் மருந்த தனை உண்மின்

   ............ பைய எழுந்திரு ........

  .......நெஞ்சே செழுந்திரு மயானமே சேர் "

 

இப்படி இருக்க காரைக்கால் அம்மையார் மட்டும் தன் இளமை பருவத்திலேயே முதுமையை வேண்டி பெற்றார். தன் தலையாலேயே கைலாய மலை சென்றார் மேலும் இறைவா எனக்கு மறுபிறப்பு அளித்தால் உன்னை என்றும் நான் மறவாதிருக்க மனம் தர வேண்டும்  என்றும் நீ ஆடும் போது உன் காலடியில் இருக்க அருள் தருள் வாயாக என்று வேணடினார்.


பட்டினத்தார் வாயிலாக நாம் அறிவது

மூப்பு பருவத்தில் நமக்கு யாரும் துணை வர மாட்டார்கள் அப்போது நமக்கு துணை கச்சி ஏகம்பன் ஒருவனே என்கிறார்.


ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற

பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்

சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே

யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.


எனவே மானிட வாழ்வில் மூப்பு என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும் அவரரவர் வினைப் பயனை கொண்டு இறைவன் நமக்கு வினையின் பயனாக பாவம் புண்ணியங்களை  அவ்வப்போது ஊட்டுவார் எனவே நாம் மூப்பு பருவத்தில் மரண அவஸ்தை எனும் கொடிய விலங்கிலிருந்து தப்பிக்க நம் இளமை பருவம் தொட்டே இறைவழிபாடு செய்து மனம் மொழி மெய்யால் அவனுக்கு பணிவிடை செய்தும் போற்றி பாடி ஆடி அவன் மனம் குளிர அவன் தாள் சேர வேண்டும் எனவே வந்த பின் வழிபாடு என்பது கண் போனபின் சூரிய நமஸ்காரம் என்பது போன்றதாகும். எனவே எப்போதும் இறைவழிபாடு கட்டாயம் அவனுக்கேன்று சற்று நேரம் ஒது்க்கி பொன் பொருள் ஈட்டு வது போன்றே இறைவழிபாட்டுக்கும் நேரம் அளித்து அவனை எப்போதும் நெஞ்சில் இறுத்தி அவன் தாள் பணிவோம். மரண அவஸ்தையிலிருந்து விடுபடுவோம்

திருச்சிற்றம்பலம்