புதன், 31 மார்ச், 2021

" அஞ்சேலென் றருள்செய்வான் "

 

" அஞ்சேலென் றருள்செய்வான் "

மானிட வாழ்வில் தான் அனுபவிக்கும் துயரங்களில் மிகவும் கொடூராமானது. முதுமை அந்த முதுமையில் படும் கடும் துன்பம் மரண அவஸ்தை என்னும் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் படும் துயரமே. மானிடர் வாழ்வில் முடிவு பருவமான முதுமையில் இரண்டாவது குழந்தைப்பருவமாக உள்ள குந்தி நடந்து குனிந்து தட்டுத்தடுமாறி நடந்தும்  ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வாயில் நுரை தள்ளியும் குவழை வந்து மூச்சுவிடுவதை அடைத்தும் தடுமாறும் பருவத்தில் நம்மை கவனிக்க யாரும் இல்லையே என்று ஏங்கி தடுமாறும் சூழலில் வருந்துங்காலத்து அபயப் பிரதானம் செய்பவன் கோயில், நமக்காக இறங்கி அஞ்சேல் என்று அருள் செய்யும் இறைவன் தான் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள ஐயறப்பர், இவர் அமர்ந்து அருள் செய்யும் கோயில் எப்படி சீரும் செழிப்புமாக உள்ளது என்பதையும் தனது பத்து பாடல்கள் வாயிலாக நமக்கு காட்டுகிறார். அது மட்டுமல்லாது அப்பர் பெருமான் கைலாய மலையை நடந்தே சென்று மீண்டும் ஏறமுடியாமல் தவழ்ந்து சென்று எண்ணிய போது இறைவன் அவருக்கு அசீரியாக யான் திருவையாற்றில் தங்களுக்கு காட்சி தருவோம் என்று பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

அக்கோயில்  நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக் கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறிமேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்

மான் துள்ளித்திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

 மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.

இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

  

 இதனை தான் அனுபவிக்காமலே அடியார்கள் இப்பருவத்தில் அடையும்துயரினை தான் அனுபவித்து கண்டதுபோல் இப்பதிகம் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளார் இறைவியிடம் ஞானப்பால் உண்ட திரு ஞானசம்பந்த பெருமான், அப்பாடல்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.


ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.


வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக