சனி, 3 ஏப்ரல், 2021

திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்

 திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்



சைவத்தின் பொது நூல் வேதம், சிறப்பு நூல் ஆகமம் என்படும். முழுமுதற் கடவுள் சிவபெருமானார். திருமுறைகள் தமிழ் வேதம்என போற்றப்படுகின்றன. சிவனாரின் திருவருளை முழுமையாகப் பெற்ற திருவருட் செல்வர்களால்  சிவபெருமான் உள்நின்று உணர்த்தி பாடப்பெற்ற தெய்வத்திருநூல்களேதிருமுறைகளாக வகுக்கப் பட்டன, திருமுறைகள்  தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பிரபஞ்சம் , திருத்தொண்டத்தொகை என பனிரெண்டாகும்.

  ஆலயங்களிலும் வீடுகளிலும், சைவ திருச்சபைகளிலும் கடவுள் வழிபாட்டின் போது

பாடப்படுவது இத்திருமுறைப் பாடல்களே. இத்தோத்திரப்பாடல்கள் பிரணவமயமானவை இவற்றுடன்வேறு பாடல்களை சேர்த்து பாடக்கூடாது. அவ்வாறு சேர்த்து பாடினால் சிவநிந்தனையாகும். அவ் அருட்பாக்கள்மட்டுமே கடவுள் சன்னதியில் ஓதத் தகுந்தவையாகும்.இத்திருமுறைபாடல்கள்  பாடத் தொடங்கும் முன்னும் பாடி முடிந்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓத வேண்டும்.

  தேவாரம்,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தொண்டர் புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் முறையாகும்.

  இத்திருமுறை பாடல்களை இறைவனை நினைந்து, மனமுருகி, மனம் மொழி மெய்யால் கண்ணீர் மல்க கசிந்து ஓதுவார் நன்னெறக்கு இட்டுச் செல்லப்படுவார் என்பது  அருளாளர்களின் முடிபு.

  பரம் பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தி துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு பற்றி போற்றுதல் செய்பவன வாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும், பக்தியையும், தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும், மந்திரம், மருந்து, தந்திரம் எனமூன்றுமாய் விளங்கி தீரா நோய் தீர்த்தருளும் தன்மையனவாகும் இத்திருமுறை பாடல்கள்

  இறைவன் ஒருவனே அவனே சிவன் , அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றுமில்லை. அப்பெருமான் திருஅருள் சக்தியுடன்இணைந்து ஒரு பொருளாகவே  உள்ளான். உயிர்களிடத்தும் அளப்பெரும் கருணை கொண்டவன், உயிர்கள் ஈடேற்றின் பொருட்டுஐந்தொழிகள் செய்கிறான். அப்பெருமானின் மறைமொழி ( மந்திரம் ) திருவைந்தெழுத்தாகும். சிவ சின்னங்கள், திருநீறு, உத்திராட்சம், அப்பெருமானிடம்சேர்ப்பிக்கும் நால்வகை நன்னெறிகள் சரியை, கிரியை, யோகம் ஞானம்என்பனவாகும். இதனை தெளிவாக உணர்த்துவன திருமுறைகளே.

  இறைவன் அங்கெங்கெனதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும், ஆலயத்திலும், குருவினத்திலும், சிவனடியார்களிடத்திலும் தயிரில் நெய்போல வெளிப் பட்டு காணப்படுகிறான்.

  பக்தி இயக்கமானது ஆன்மீக அடிப்படையில் மனித வாழ்க்கையை தூய்மைப்படுத்தி வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வித்து, மனித பிறவி எடுத்ததன்  சீரிய நோக்கமாகிய 

கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கு உறுதுணையாக அமைகின்றது.பக்தி இயக்கத்தை வளர்க்கும் சாதனமாக திருமுறைகள் விளங்குகின்றன.

  திருமுறைகளை பாராயணம் செய்தல் நம் அன்றாட வாழ்க்கை பழக்கமாக கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக.

 திருசிற்றம்பலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக