வெள்ளி, 2 ஏப்ரல், 2021

இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்

 இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்



அன்பே சிவம் என்பது பலரும் அறிந்த ஒன்று. அன்புறு சிந்தையராகி அடியவர்கள் இறைவனுக்கு நண்புறுவர் என்பார் திருஞானசம்பந்தர். சீர்மிகு செந்தமிழர் இறைக்கொள்கையான  சித்தாந்த சைவம் விதிமுறைகளை வகுத்து வைத்துக் கொண்டுப் பெருமானை வழிபடுவதனைக் காட்டிலும் அன்பு வழி நின்று வழிபடுவதையே சிறந்தது என்று குறிப்பிடுகின்றது. ஒரே நேரத்தில் ஒரே வகையில் வழிபடும் ஒரு செயல்முறை என்று அல்லாமல் அவர் அவர் விரும்பும் அவர் அவருக்கு முடிந்த எளிய, சைவ சமயத்திற்கு ஏற்ற முறையில், இறைவனை வழிபடலாம் என்ற சுதந்திரத்தினைச் சித்தாந்த சைவம் சைவர்கட்கு வழங்கியுள்ளது. இறைவழிபாடு என்பது உயிர் இறைவனிடத்தில் ஓர் உறவினை ஏற்படுத்திக்கொள்ளச் செய்துகொள்கின்ற முயற்சி என்பதனைச் சித்தாந்த சைவம் தெளிவுறுத்துகின்றது. எனவே உயிர்களின் அகப்புற ஆற்றலுக்கு ஏற்ப தத்தம் வழிபாடுகளை அமைத்துக் கொள்வதனைச் சித்தாந்த சைவம் தடுப்பதில்லை. இப்பூவுலகில் அன்பு நெறியில் வாழ்ந்து, இறைவனை இவ்வுலகிலேயே கண்டு அவன் திருவடிக்கு ஆளான அருளாளர்களின் வாழ்வியல் நெறிகளை பரிந்துரையாகப் பின்பற்றுதற்குச் சித்தாந்த சைவம் முன் வைக்கின்றது. சைவ சமயத்தில் உள்ள நடைமுறை உண்மையை உணராதவர்களே சைவ சமயத்தில் ஒழுங்கு இல்லையென்றும் வழிபாடுகள் ஒருமுகப் படுத்தப்படவில்லை என்றும் அறியாமல் குறிப்பிடுவர்.


இறைவனின் திருவருளைப் பெற்ற, அன்பு நெறியான சிவநெறி என்னும் செந்நெறியில் வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்வியல் முறைமையைச் சித்தாந்த சைவம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று வகுத்துத் தெளிவுறுத்துகிறது. அடியார்கள் வாழ்ந்து காட்டிய இந்நான்கு நெறிகளில் எது நமக்குப் பின்பற்றுவதற்கு முடியுமோ அதனைத் தெரிவு செய்து கொண்டு இறைவனை வழிபட்டு அன்பு பாராட்டலாம் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. திருநாளைப் போவார் என்பார் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் திருக்குளத்தில் தங்களைத் தூய்மை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருவுள்ளத்தோடு திருக்குளம் வெட்டுவதையும் பெருமானுக்குப் பூசனையின் போது இசைக்கருவிகள் முழக்கத்திற்குத் தோற்கருவிகளைச் செய்து கொடுப்பதையும் தமது வழிபாடாகக் கொண்டார். அவர் சார்ந்திருந்த குமுகாயம் அவரைக் குலத்தில் தாழ்ந்தவர் என்று விலக்கி வைத்திருப்பினும் மேற்குலத்தார் என்போர் நலமுற அன்புவழியில் நின்று தமக்குத் தெரிந்த தொழிலையே வழிபாடாகக் கொண்டு சிவப் பணிகள் செய்தார். பெருமானின் திருவருளுக்கு ஆளானார். முருக நாயனார் என்பார் தாம் அறிந்த, தன்னால் இயன்ற, பெருமானுக்கு வழிபாட்டிற்கு மலர்பறித்துக் கொடுத்தல் எனும் திருச்செயலையே வழிபாடாகக் கொண்டு பெருமானிடத்தில் அன்பினை வளர்த்துப் பெருவாழ்வு பெற்றார்.


துணி வெளுக்கும் தொழிலைச் செய்த திருக்குறிப்புத் தொண்டர் என்பார் நடமாடும் இறைவனாகக் கருதிய அடியார்களுக்கு அன்போடு துணி வெளுத்துக் கொடுப்பதனைத் தன் சிவப்பணியாக எண்ணினார். அவரால் இயன்ற, தனக்கு நன்கு தெரிந்த அச்செயலையே தமது வழிபாடாக, தமது உயிர்க்கொள்கையாக எல்லா சூழலிலும் செய்து வந்தார். தம்முடைய அத்தொண்டிற்குத் தடை ஏற்பட்டபோது தமது உயிரையும் விடத்துணிந்தார். அவருக்குப் பெருமான் அவர் துணி வெளுக்கும் பாறையிலேயே வெளிபட்டு அருளினான்.


தங்களுக்குத் தெரிந்த, தங்களால் இயன்ற, அடியாருக்கு உடை, உணவு அளித்தல், திருக்கோயில் கூட்டுதல், கழுவுதல், திருமுறைகள் ஓதுதல், உழவாரப் பணி செய்தல், பெருமானின் திருமஞ்சனத்திற்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்தல், ஆலயத்தில் விளக்கேற்றுதல், குங்கிலியம் புகைத்தல், திருக்குளத்தில் தூர்வாறுதல், தீவத்தி ஏந்துதல், பல்லக்குச் சுமத்தல், உறைபாகச் சமய சின்னங்களை அணிதல், திருவைந்து எழுத்தினை மறவாது கூறுதல் போன்ற செயல்களைச் செய்து இறைவனின் அன்பிற்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டார்கள். சீலம் எனும் தொண்டு நெறிக்கு உட்பட்ட மேற்கூறிய செயல்களைத் தெரிவு செய்து கொண்டு அதிலே உறைப்பாய் நின்று இறைவனை அடைந்தார்கள்.


இறைவனுக்குரிய பூசனை முறைகளைக் கற்றுணர்ந்த திருநீலநக்கர் எனும் அடியார் இறைவனை அழகு செய்து பூசனை செய்து வழிபட்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம், திருவமுது திருமுறைப்பாடல்கள் தூபதீபம் என்று தமக்குத் தெரிந்த பூசனை முறையால் இறைவனுக்கு வழிபாடு இயற்றி அவ்விறைவனை அகத்தில் இருத்தியும் மகிழ்ந்தார். கண்ணப்பர் எனும் வேடர் தமக்குத் தெரிந்த முறையில் இறைவனுக்குத் திருமஞ்சனமும் திருவமுதும் மலரும் இட்டுத் தமது அன்பின் பெருக்கால் தமது கண்ணையும் பிடுங்கி அப்பி, நோன்பு எனும் நெறியால் பெருமானின் வலப்பக்கத்தில் நிற்கும் பேற்றினைப் பெற்றார். செறிவு முயற்சிகளில் சிறந்து விளங்கிய பெருமிழலைக் குறும்பர் என்பாரும் பூசலார் என்பாரும் அன்றாட வாழ்வில் விட வேண்டுவனவற்றை விடுத்தும் செய்ய வேண்டுவனவற்றைத் தவறாது செய்தும் ஒழுக்கச் சீலராகளாக ஐம்புலன்களையும் மனத்தையும் மூச்சுப் பயிற்சிகளின் வழியும் ஆசனங்கள் வழியும் அடக்கிப் பெருமானை உள்ளத்தில் கண்டும் உள்ளத்தில் கோயில் எழுப்பியும் தங்களால் இயன்ற செறிவு நெறியின் வழி இறைவனைச் சிக்கெனப் பிடித்தார்கள்.


கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிவுற்று அதில் அழுந்தி இருத்தல் என்பதில் கைத்தேர்ந்த கணநாதர் என்பார் திருமுறைகளை ஓதியும் பிறருக்கு ஓதுவித்தும் அதை உணர்ந்தும் பெருமானின் திருவருளில் அறிவு நெறி வழி திளைத்திருந்தார். அவர் அவர், அடியார் பெருமக்கள் நமக்குக் காட்டிய, நம்மால் இயன்ற ஒரு வழியைத் தெரிவு செய்து கொண்டு முயன்றால் அம்முறை வழியே இறைவன் வந்து அருளுவான் என்பதனை, “அப்பனை நந்தியை ஆரா அமுதினை, ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை, எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால், அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.


அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய நந்தி எனும் சிவபெருமானை, இறவா வாழ்வினை அளிக்கும் அமுதினைப் போன்றவனை, ஒப்பிலாத பிழைபொறுத்து அருளும் வள்ளலை, உலகம் அழிந்து ஒடுங்கும் காலத்து அழிவின்றி நின்று மீண்டும் உலகினைத் தோற்றுவிக்கும் முதல்வனை, அவன்பால் அன்புமேலிடச் செய்யும் நான்கு நெறிகளில் எந்நெறியினால் ஆயினும் தொழுங்கள். தொழுதால் அந்த வழியின் வகையாலேயே அச்சிவபெருமானும் வந்து அருள்புரிவான் என்கின்றார் திருமூல நாயனார்.


அவர் அதைச் செய்கிறார், இவர் இதைச் செய்கிறார் என்று எண்ணி மயங்கி வெறுமனே காலத்தைக் கழிக்காமல், நம்மால் இயன்ற, செயல்படுத்த முடிந்த, சைவ சித்தாந்த கொள்கைக்கு மாறுபடாத, எளிய முறைகளைத் தெரிவு செய்து கொண்டு அந்நெறியிலேயே உறைபாய் நின்று வழிபடுவோமாக! பெருமானின் திருவருளைப் பெறுவோமாக!


இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக