வெள்ளி, 30 ஜூலை, 2021

தமிழில் வழிபாடு

 தமிழில் வழிபாடு

தமிழர் வரிப்பணத்தாலும் தமிழ் வேந்தர் முயற்சியாலும் உண்டாக்கப்பட்ட கோவில்களே இத் தமிழ்நாட்டில் இருப்பவை. இவற்றில் சைவத் திருமுறைகள் ஓதியே வழிபாடு செய்யப்பட்டு வந்தது. சிறந்த சிவத்தலங்களான திருமறைக்காடு "வேதாரண்யம்" எனவும், திருவெண்காடு "சுவேதாரண்யம்" எனவும், திருமுது குன்றம் "விருத்தாசலம்" எனவும் மாறிய காலத்தில், தமிழில் இருந்த வழிபாடு வடமொழியில் மாறிவிட்டது போலும்! சுவாமி, அம்மன் பெயர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குப் புரியாத அபீத குஜாம்பாள் முதலிய வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. இந்த அலங்கோல நிலை, கோவிலுக்குச் செல்லும் பொதுமக்களின் உள்ளத்தில் அழுந்திய பக்தி ஏற்படாது செய்துவிட்டது,. வழிபட வரும் மக்களுக்குப் புரியாத மொழியில் அர்ச்சனை செய்யப்படுமாயின், அதனால் வழிபடுவோர் உள்ளம் எவ்வாறு குழையும்? சைவம் சீரழிவதற்கும், கோவில் வழிபாடு குறைந்து வருவதற்கும் இது மிகச்சிறந்த காரணமாகும். அறநிலையப் பாதுகாப்பாளர்களும், மடங்களின் தலைவர்களும், சைவப் பெருமக்களும் இத்துறையில் உடனே கவனம் செலுத்துதல் வேண்டும். அறிவும் ஆராய்ச்சியும் கேள்வி கேட்கும் திறனும் பெருகிவரும் இக்காலத்தில், அறிவுக்குப் பொருந்த நடப்பதே சமயவளர்ச்சிக்கு ஏற்றது.


 

*********

திருக்கோவையார்

ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவியைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே திருக்கோவையார் என்னும் நூலிற் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் பொருளாழமும் உடையவை.


 

*************

திருவாசகம் 

முதல் ஏழு திருமுறைகள் பண்ணோடும் தாளத்தோடும் பாடத்தக்கவை. ஆயின், திருவாசகப் பாடல்களுள் பெரும்பாலன அத்தகையவை அல்ல; முன்னவற்றுள் சமயப் பிரசாரம் காணப்படும்; திருவாசகத்தில் அது காணப்பெறாது; மாணிக்கவாசகர் எங்ஙனம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்றார் என்பதே இந்நூலிற் காணப்படுவது. இது படிப்பார் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. "உன் குறைகளை ஒப்புக் கொண்டு கடவுளுக்குமுன் அழு: அவனை அடையலாம்" என்பதே திருவாசகத்தின் உயிர்நாடிப் பகுதிகளில் ஒன்று. இங்ஙனம் தம் குறைகளை உள்ளவாறு உணர்ந்து வருந்திக் கடவுள் முன் அழுதல் என்பது எல்லோர்க்கும் எளிதில் இயல்வது அன்று; "கடவுளிடம் என்றும் இறவாத காதல் பெற விரும்பும் பக்தன், அன்பை அடிப் படையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து பழகவேண்டும்" என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் ஒன்று. இதனைச் சிவஞான போதம் 12-ஆம் சூத்திரம் நன்கு வற்புறுத்துகிறது. மாணிக்கவாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனை வேண்டுகிறார். இவ்விரண்டும் திருவாசகத்தின் உயர்நாடி என்று கூறலாம்.


 

****************

இம்மூவர் அறிவுரை  


இம்மூவரும் சைவசமயப் பொதுமக்களுக்குக் கூறிய அறிவுரைகள் யாவை? "சமண-பௌத்த நூல்கள் பொய்ந்நூல்கள்; அவற்றை நம்பாமல் சிவனை வழிபடுங்கள்; தீவினை அற்று நன்மை அடைவீர்கள்; திருப்பதிகங்களைப் பாடிப் பயன் பெறுங்கள்: எவரும் ஐந்தெழுத்தோதி மேன்மை பெறலாம்; ஐந்தெழுத்தே நல்ல துணை; ஐம்பொறிகளையும் அடக்குங்கள்; மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினையுங்கள்; சிவனைக் காண்பீர்கள்; புலனடக்கம் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்த வல்லவர் சிவப்பேறு பெறுவர்" என்பன இவர்தம் அறிவுரைகளாகும். சம்பந்தரது திருக்கோடிகா திருப்பதியமும், நெஞ்சுக்கு அறிவுறுத்தும் முறையில் பாடப்பட்ட அப்பரது ஆரூர்த்திருத்தாண்டகமும், மக்களுக்கு ஏற்ற சமய அறிவுரைகளாகக் கொளளற்பாலன. பல பதிகங்களில் கோவில் வழிபாடு, கோவில் தொண்டு செய்தல், தல யாத்திரை, அடியார் கூட்டுறவு, அடியார்க்கு உணவளித்தல் என்பனவும் வற்புறுத்தப்பட்டுள்ளன

*************

சிவ அத்வைதம்

ஆன்மா 'தான்' வேறு, 'அவன்' வேறு என்னும் எண்ணத்தில் இருக்கும் வரையில் 'த்வைதம்' அல்லது 'இருமை' இருக்கும். தனிப்பட்ட ஆன்மா அவனில் கலந்துவிடுமாயின், இருமை ஒழிந்து 'ஒருமை' ஏற்படும். இது 'சிவாத்வைதம்' எனப்படும்.

******************

தேவரடியார் 


கோவில்களிலிருந்து தொண்டாற்றிய மாதர்களுள் தேவரடியார் ஒரு வகையினர். இவர்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுக்கிடல், திருவமுதுக்குரிய அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர்; திருநீற்றுக் காப்புத்தட்டும் மலர்த்தட்டும் விழாக்களில் ஏந்தி வந்தனர்; விழாக் காலங்களில் அம்மனுக்குக் கவரிவீசினர்; அச்செயலால், 'கவரிப்பிணா' என்றும் அழைக்கப்பட்டனர். இங்ஙனம் தேவரடியார் நிலையை அடைந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட சாதியரல்லர்; எல்லா இனத்து மகளிரும் இச் சைவப்பிணியை மேற்கொண்டு சூல முத்திரை பொறிக்கப் பெற்றுத் 'தேவரடியார்' என்னும் தகுதியைப் பெற்றுவந்தனர். அழகிய பாண்டிய பல்லவரையன் என்ற படைத்தலைவனொருவன் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியார் ஆக்கினான் என்று திருவல்லம் கோவிற் கல்வெட்டுத் தெரிவித்தலை நோக்க, இவ்வுண்மை இனிது புலனாகின்றது.


******

திருமுறைகளை நன்கு படித்த பழக்கத்தால் அக்காலச் சைவ நன்மக்கள் நாயன்மார் பயன்படுத்திய சொற்றொடர்களை மக்களுக்கும் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் பெயர்களாக வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவற்றுள் சில கீழே காண்க: 


(1) சிவாய "நமவென்று நீறணிந்தேன்" என்பது அப்பர் தேவாரம். "நீறணிந்தான் சேதிராயன்" என்பது ஒரு சிற்றரசன் பெயர். (2) "நச்சுவார்க்கினியர் போலும் நாகையீச் சுவரனாரே" என்பது அப்பர் வாக்கு. "நச்சினார்க் கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான்" என்பது ஓர் அரசியல் அலுவலன் பெயர். (3) "மழபாடி வயிரத்தூணே என்றென்றே நான் அரற்றி" என்பது அப்பர்வாசகம். "ஆனைமங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்தூண்" என்பது ஒருவன் பெயர். (4) அரசாள்வர் "ஆணைநமதை" என்பது சம்பந்தர் வாக்கு. "ஆணைநமதெ"ன்ற பெருமான் என்பது ஒருவன் பெயர். (5) "பொன்னார் மேனியனை" என்பது சுத்தரர் சொற்றொடர். "பொன்னார் மேனி விளாகம்" என்பது ஓரிடத்தின் பெயர். (6) கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்) திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில், "பிச்சன் என்று பாடச் சொன்னான்" என்ற பெயர் கொண்ட ஊதுகொம்புகள் இரண்டு இருந்தன.


சாலியர் குரல்: திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

சாலியர் குரல்: திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...: மலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை  திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக வி...

திருமுறைகளை பாராயணம்செய்வோம்

 திருமுறைகளை பாராயணம்செய்வோம்

சைவத்திற்கு பொது நூல் வேதம் எனவும் சிறப்பு நூல் ஆகமம் எனவும் கொள்ளப்படுகிறது. இவை இறைவனால் அருளப்பட்டது. சைவத்தின் முழுமுதல் கடவுள் சிவபெருமான். திருமுறைகள் தமிழ் வேதம்என்று போற்றப்படுகின்றன. சிவபொருமானின் திருவருளை முழுமையாக பெற திருவருட் செல்வர்களால் சிவபெருமான் உள்நின்று உணர்த்திய தெய்வத் திருநூல்களே திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
ஆலயங்களிலும் வீடுகளிலும் மற்றைய இடங்களிலும் கடவுள் வழிபாட்டின் போது திருமுறைகள் பாடி பரவுவது சைவ மாகும். பன்னிரு திருமுறைகளிலும் அடங்கும் தோத்திரப்பாடல்கள் பிரமணவ மயமானவை, இத்திருமுறைபாடல்களுடன் வேறு பாடல்கள் சேர்த்து பாடக்கூடாது. அதனை ஏற்ற நடக்க வேண்டியது நமது கடமை. திருமுறை பாடல்கள் அருட் பாக்கள். இது மட்டுமே இறைவன் சந்நதியில் ஓதத்தகுதி வாய்ந்தவை. ஏனைய பாடல்கள் மருட் பாக்கள்.
இத்திருமுறை பாடல்களை பாட தொடங்கும் முன்னும் பாடிய பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மநதிரம் சொல்ல வேண்டும். தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் என்ற ஒழுங்குமுறையில் பஞ்ச புராணம் ஓதப்படுதல் முறையாகும்.
இத்திருமுறை பாடல்களை இறைவனை நினைந்து மனமுருகி, காதலாகி கசிந்து, கண்ணீர் மல்க ஓதுவார் நன்னெறிக்கு இட்டு செல்லப்படுவர் என்பது அனுபூதி வல்லவர்களின் முடிவு.
பரம் பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தி துதிப்பவனவாகவும்.அப் பெருமானின் பெருமை சிறப்புஎன்பவற்றை போற்றுதல் செய்பவனவாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவன. பக்தியையும், ெதெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும், ஓதி யுணர்பவர்களின் உய்விப்பனவாயும் , மந்திரம், தந்திரம், மருந்து என மூன்று மாக விளங்கி தீரா நோய் தீர்த்தருளும் தன்மை யனவாகவும், தெய்வத்தன்மை வாய்ந்த தாகவும் விளங்கும் அருள் நூல்கள்திருமுறைகள்.
இறைவன் ஒருவனே , அந்த ஒருவன் சிவனே அவனோடு ஒக்கும் தெய்வம் வேறு இல்லை சிவபெருமானே முழு முதல் கடவுள், அப்பெருமானே திருவருட் சக்தியுடன் இணைந்து ஒரு பொருளாக உள்ளான்.
அன்பு, நீதி, உண்மை, செம்மை அருள், ஞானம், என்பவற்றை அதிட்டித் நிற்கும் சிவம். அவற்றிலிருந்து பிரிவிலா ஒரு பொருள் ஆக உள்ளது. கருணை கொண்ட சிவபெருமான் அவைகளை ஈடேற்றுவதன் பொருட்டு ஐந்தொழில் கள் செய்கிறான். அப்பெருமானின் மறைமொழி திருவைந்தெழுத்து. சிவ சின்னங்கள், திருநீறும் ரூத்திராட்சமும். மற்றும் ஐளந்தெழுத்து சிவ மந்திரம் .அப்பெருமானிடம் சேர்ப்பிக்கும் நான்வகை நன்னெறிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
அங்கிங்கெனாதபடி நீர்க்கமற நிறைந்திருப்பவன் எங்கள் மனம் வாக்கு, காயங்களுக்கு எட்டாதாவனாய் இறைவன் உள்ளான். ஆலயத்திலும், குருவினிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் தயிர் போல வெளிப்பட்டு காணப்படுவான். அடியார்களின் தூயமனங்களிலும், அன்பு உள்ளங்களிலும், எழுந்தருளி இருக்கிறான். எனவே அவர்கள் உடம்பும் ஆலயமாக திகழ்கிறது.,
பக்தி இயக்கம் ஆனது, ஆன்மீக அடிப்படையில் மனித வாழ்க்கையை தூய்மைப்படுத்தி வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வித்து மனிதப்பிறவி எடுத்ததன் சீரிய நோக்கமாகிய கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கு உறுதுணையாக அமைகிறது. பக்தி இயக்கத்தை போசித்து வளர்க்கும் சாதனமாக திருமுறைகள் விளங்குகின்றன.
திருமுறைகளை பாராயணம் செய்தல் நமது அன்றாடம் வாழ்க்கைப் பழக்கமாக கொண்டு இறைவன் முன் பாடி அருள் பெற்று நல்வாழ்வு பெற்று வாழ்வோமாக!
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : பூமாலை சுந்தரபாண்டியம்

ஞாயிறு, 18 ஜூலை, 2021

விளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

 விளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம”என்று போற்றுகிறார்.


மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே”என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே” என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.


   விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன.

திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல் விரிவாகப் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ‘தொல் கார்த்திகை நாள்... தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்பது அவர் வாக்கு.

1. வீடுகளில் விளக்கு வழிபாடு 2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல், 3. கோவில்களில் விளக்கு இடுதல், 4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்-என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.


1. வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர்.


2. கூட்டு வழிபாட்டைப் பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய்து வழிபடலாம். ‘விளக்குப் போற்றி’ என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பிந்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.


3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்த்து. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.


     “நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்

      கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

      நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்

      குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே”


என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.


நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர்கள் கோவிலில் விளக்கு எரித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.


பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,


     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்

      ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்

      ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்

      ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”


என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.


பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.


பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.


உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.


“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;


     “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்

      விளக்கினின் முன்னை வேதனை மாறும்

      விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

      விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”


என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.


பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.


நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.


ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.


ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.


1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.


கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.



தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.


தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.


     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட

      சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”


என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.


     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்

      பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 

      ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை

      நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ?” (தாயுமானவர்). 


--திருச்சிற்றம்பலம்--


செவ்வாய், 6 ஜூலை, 2021

வீட்டில் முறையாக பூஜை செய்வது எப்படி?

 வீட்டில் முறையாக பூஜை செய்வது எப்படி?



கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் வழிபாட்டுக்கென அமைக்கப்படும் அறை பூசையறை எனப்படுகிறது. 

இங்கு தெய்வங்களின் படங்களும், சிறு சிலைகளும் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூசையறையில் தினந்தோறும் குடும்பத்தலைவி விளக்கேற்றி வழிபடுகிறார். 

குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வதுண்டு. மேலும் யக்ஞம் எனும் பூசையும் இந்து மதத்தில் இருந்து வருகிறது.

வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நமக்கான கடமைகள் ஏராளம். காலையில் எழுந்தவுடன் அதற்கான பணிகளும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம்  இறைவனுக்கு பூஜை செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தாலும், நம்மை படைத்த இறைவனுக்காக ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி எளிய முறையில் பூஜை செய்வதும் நம் கடமை தான். இறைவனை நம் வீட்டில் முறையாக வணங்குவது எப்படி என்பதைப் பற்றி  இந்த பதிவில் காணாலாம்



பூஜை அறையை சுத்தம் செய்வது முதலில் நாம் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதல் நாள் நாம் இறைவனுக்கு பூஜை செய்திருப்போம் அல்லவா? அந்த பழைய பூக்கள், பழைய ஊதுவத்தி சாம்பல் ஆகியவற்றை முதலில் சுத்தம் செய்து புதிய தோற்றத்தை உண்டாக்க வேண்டும்.

முதலில் திருவிளக்கு ஏற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றும் போது அப்பர் அடிகள்  பாடிய " இல்லக விளக்கது இருள் கெடுப்பது" என்ற பாடலை பாடி திருவிளக்கு ஏற்ற வேண்டும்.

அபிஷேகம் கோவிலில் செய்வது போன்ற அபிஷேகம் நம் வீட்டில் தினசரி இறைவனுக்கு செய்வது என்பது சாத்தியமில்லை. ஆகவே நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை பூவால் எடுத்து இறைவனின் பாதத்தில் இரண்டு சொட்டு சமர்ப்பிக்கலாம். நாம் அப்படி செய்யும் பொழுது “சமர்ப்பயாமி” என்று கூறவேண்டும். உங்கள் வீட்டில் சுவாமி படங்கள் அதிகமாக உள்ளது என்றால் பொதுவாக இரண்டு சொட்டு நீரை மட்டும் பூமியில் விட்டு சமர்ப்பயாமி என்று கூறிவிட்டு அபிஷேகத்தை முடித்து விடலாம். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் நீரானது தூய்மையாக இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால் உபயோகிக்கலாம்.


பூக்கள் இறைவனுக்கு பூஜை செய்யும் பொருட்களில் முக்கியமான ஒன்று பூக்கள் தான். அந்ததந்த இறைவனுக்கு என்று சிறப்புகள் கொண்ட பூக்கள் உண்டு. ஆனால் அந்த பூக்களை எல்லாம் நம்மால் தினசரி வாங்க முடியாது. நமக்கு தினசரி என்ன மலர் கிடைக்கின்றதோ அதனை வைத்து இறைவனை பூஜிக்கலாம். ஆனால் அந்த மலர்களை நாம் இறைவனுக்கு வைக்கும் பொழுது அந்த இறைவனின் நாமத்தை நம் வாயால் கூறி வைப்பது சிறந்தது. ஒருவேளை உங்கள் ஊரில் பூக்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். குறைந்தபட்சமாக அந்த தெய்வத்தின் மந்திரங்களை கூறி நாம் இறைவனை வழிபடலாம். மந்திரம் என்றால் கடினமானது அல்ல. ஓம் நமச்சிவாய ேபாற்றி , நீங்கள் விநாயகரை வழிபட வேண்டும் என்றால், “ஓம் விநாயகா போற்றி” முருகனை வழிபட வேண்டும் என்றால் “ஓம் முருகா போற்றி” துர்கை அம்மனை வழிபட வேண்டும் என்றால் “துர்க்கை அம்மனே போற்றி” என்று கூறினால் போதும். உங்களுக்கான பலன் கிடைக்கும்.


தூபம் காட்டுவது சாம்பிராணி புகை போடுவது தான் தூபம் என்பார்கள்.  இந்த தூபத்திலிருந்து வரும் புகையை நாம் வீடு முழுவதும் காட்டலாம். உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்கான வசதி இல்லையென்றால், நல்ல வாசனை உள்ள ஊதுவத்தியை பயன்படுத்தி பூஜை செய்யலாம். பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, தூபமாக இருந்தாலும் சரி அதை வலமாகத்தான் சுற்றி பூஜை செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக குல தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்


தீபம் காட்டுதல் நெய் தீபம் ஏற்றி அதனை நம் கைகளால் எடுத்து இறைவனை நோக்கி மூன்று முறை வலப்புறமாக சுற்ற வேண்டும். இப்படி நாம் செய்யும் பொழுது இறைவனை மனதார நினைத்து கொள்ள வேண்டும். தூபம் காட்டிய பிறகு தீபம் கட்டாயமாக காட்டப்பட வேண்டும். நைய்வேத்தியம் நைய்வேதியம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றுள் உங்களால் எது முடியுமோ அதனை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம். நாம் இறைவனுக்கு நைய்வேதியத்தை படைக்கும் பொழுது, பூவினால் ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து அந்த நைய்வேதியத்தை மூன்று முறை சுற்றி அதனை இறைவனுக்கு  சமர்ப்பிக்க வேண்டும்.


ஆராதனை கற்பூர ஆரத்தியை தான் ஆராதனை என்பார்கள். நாம் செய்யும் பூஜையின் இறுதி கட்டத்தில்தான் கற்பூர ஆராதனை காட்டவேண்டும். சிலர் வீடுகளில் கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இருக்காது.  கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இல்லாதவர்கள் நெய்தீப ஆரத்தி காட்டுவதுடன் பூஜையை முடித்துக் கொள்ளலாம். 

இப்போது தேவாரப்பாடல்கள் பாடவேண்டும், அல்லது பஞ்சபுராணம் பாடலாம்


கற்பூர ஆராதனை காட்டும் பழக்கம் உள்ளவர்கள், தூபகலில் கற்பூரத்தை ஏற்றி இறைவனை நோக்கி வலமாக மூன்று முறை சுற்றி ஆராதனையை முடிக்கவேண்டும். பூஜை முடியும் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை நீங்கள் இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம். தீப ஆராதனையை நம் கைகளால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். கற்பூர தீபம் முழுமையாக எறிந்து முடியும் வரை நாம் அதனைப் பூர்த்தி செய்யக் கூடாது. அது தானாகவே தான் குளிர வேண்டும். இந்த பூஜையின் கடைசி கட்டமாக நாம் இறைவனை நினைத்துக் கொண்டு கண்களை மூடி “நான் எனக்குத் தெரிந்த எளிய முறைகளை பின்பற்றி, இறைவனான உனக்கு பூஜை செய்துள்ளேன். இதில் ஏதேனும் சிறு தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்.” என்று இறைவனிடம் கேட்டுக் கொள்ளவேண்டும். 

இதற்கு பட்டிணத்தடிகள் பாடிய பாடல் 

கல்லாப்பிழையும் கருதாப் பிழையும் என்ற பாடலைப் பாடி மன்னிக்க வேண்டலாம்

இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.

இதற்கு மணிவாசகர் அருளிய " ேவண்டித்தக்கது அறிவோம் நீ " என்ற பாடலை பாடி வேண்டியது கேட்டு விண்ணப்பிக்கலாம்

நாம் இந்த பூஜையைச் செய்வது மட்டுமல்லாமல், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் தெய்வீக வழிபாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் நம் வீட்டு பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை தான்.

திருச்சிற்றம்பலம்

*ஓம் நமச்சிவாய வாழ்க*

வியாழன், 1 ஜூலை, 2021

எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !

 எவ்வெவ் தெய்வம் வழிபடினும அருள் செய்பவர் சிவனே !




" யாதெரு தெய்வங் கொண்டீர்அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்பிறக்குமேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ,,,,...... சிவஞான சித்தியார்
" ஈறிலாதவன் ஈசன் ஒருவனே " என்கிறார் திருநாவுக்கரசர்
நல்வினையுள்ளுஞ் சிறந்தது தெய்வ வழிபாடு, அது எவ்வாறு எனில் ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையவராய் , தத்தம் மதத்திற் கேற்றவாறு, எவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு, எவ்வெவ் தெய்வத்தை வழிபடினும் அவ்வெவ் வடிவாய், எவ்வெவ் வண்ணமாய் , எவவெவ் பெயர் கொண்டு , அவ்வெவ் தெய்வத்தை தமது சக்தியால்( இறைவி) அதிட்டி நின்று அவ்வெவ் வழிபாடு கண்டு, அதனை ஏற்று அனுகிரகிப்பவர், முன்னைப்பழம் பொருட்டு,முன்னைப் பொருளாகிய சிவபெருமான்ஒருவரே,
எவ்விடத்து யாதொரு தெய்வத்தை பொருளாகக் கொள்ளினும், அவ்விடத்து அவ் வழிபாட்டை அறிந்து உயிர்களுக்கு பலனை கூட்டுபவர். அச் சிவபெருமானர் ஒருவரே,ஏனைய தெய்வங்கள் சுதந்திர அறிவின்மையால் தாமே பலன் கொடுக்க மாடடா. எத்தெய்வத்தை வழிபடினும் அவ் வழிபாட்டிற்கு சிவபெருமானே பலன் தருவார்.
அவ்வாறாயின், பிற தெய்வ வழிபட்டவர்க்கு அவ்வத் தெய்வமே எதர் தோன்றி நின்று பலன் கொடுத்ததே என நூல்களிற் கூறப்படுகின்றதே யெனின் அன்றுஅரசன் ஆணையே மந்திரி முதலாயினோர் மாட்டு நின்று பிறர்க்கு பலன் கொடுக்குமாறு போல சிவபெருமானே தமது ஆணையை தம்ஏவர் வழி நிற்கும். அவ்வவ் கடவுள் மாட்டு , அவரோடு நின்று பலன் கொடுப்பார். அங்ஙன மின்றி அக்கடவுள் பிறருக்கு பலன் கொடுத்தல் ஒருபோதும் பொருந்தாது. அது அரசர் ஆணையை மீறியது போன்றே.
பிற தெய்ங்கள் அனைத்தும் பிறப்பு இறப்புக்குஉட்பட்டவை யாதலால் அது பசுவர்க்கமாகும். எனவே அவ் வழிபாட்டால் கிடைப்பது பசு (உயிர்) புண்ணியமே, பதி புண்ணியமன்று, பதியாகிய சிவனை நோக்கி வழிபாடே பதி புண்ணியம். எனவே ஏணைத் தெய்வங்களை யே முழுமுதற் கடவுள் என்று எண்ணி செய்யும் பசு புண்ணியம் சிவ புண்ணியமாகாது. எனவே ஏனை சிறு தெய்வ வழிபாடுகளையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டு பலன் தருவார். என்பதால் நேரிடையாக சிவபெருமான் திருவடியை வழிபடுதலே நல்ல அறமாம்.மற்றவை வீண் செயலாகும்.
தொகுப்பு : சிவ, பூமாலை, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்
திருச்சிற்றம்பலம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்


 பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.


முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.


இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்.