வெள்ளி, 30 ஜூலை, 2021

திருமுறைகளை பாராயணம்செய்வோம்

 திருமுறைகளை பாராயணம்செய்வோம்

சைவத்திற்கு பொது நூல் வேதம் எனவும் சிறப்பு நூல் ஆகமம் எனவும் கொள்ளப்படுகிறது. இவை இறைவனால் அருளப்பட்டது. சைவத்தின் முழுமுதல் கடவுள் சிவபெருமான். திருமுறைகள் தமிழ் வேதம்என்று போற்றப்படுகின்றன. சிவபொருமானின் திருவருளை முழுமையாக பெற திருவருட் செல்வர்களால் சிவபெருமான் உள்நின்று உணர்த்திய தெய்வத் திருநூல்களே திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
ஆலயங்களிலும் வீடுகளிலும் மற்றைய இடங்களிலும் கடவுள் வழிபாட்டின் போது திருமுறைகள் பாடி பரவுவது சைவ மாகும். பன்னிரு திருமுறைகளிலும் அடங்கும் தோத்திரப்பாடல்கள் பிரமணவ மயமானவை, இத்திருமுறைபாடல்களுடன் வேறு பாடல்கள் சேர்த்து பாடக்கூடாது. அதனை ஏற்ற நடக்க வேண்டியது நமது கடமை. திருமுறை பாடல்கள் அருட் பாக்கள். இது மட்டுமே இறைவன் சந்நதியில் ஓதத்தகுதி வாய்ந்தவை. ஏனைய பாடல்கள் மருட் பாக்கள்.
இத்திருமுறை பாடல்களை பாட தொடங்கும் முன்னும் பாடிய பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மநதிரம் சொல்ல வேண்டும். தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் என்ற ஒழுங்குமுறையில் பஞ்ச புராணம் ஓதப்படுதல் முறையாகும்.
இத்திருமுறை பாடல்களை இறைவனை நினைந்து மனமுருகி, காதலாகி கசிந்து, கண்ணீர் மல்க ஓதுவார் நன்னெறிக்கு இட்டு செல்லப்படுவர் என்பது அனுபூதி வல்லவர்களின் முடிவு.
பரம் பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தி துதிப்பவனவாகவும்.அப் பெருமானின் பெருமை சிறப்புஎன்பவற்றை போற்றுதல் செய்பவனவாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவன. பக்தியையும், ெதெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும், ஓதி யுணர்பவர்களின் உய்விப்பனவாயும் , மந்திரம், தந்திரம், மருந்து என மூன்று மாக விளங்கி தீரா நோய் தீர்த்தருளும் தன்மை யனவாகவும், தெய்வத்தன்மை வாய்ந்த தாகவும் விளங்கும் அருள் நூல்கள்திருமுறைகள்.
இறைவன் ஒருவனே , அந்த ஒருவன் சிவனே அவனோடு ஒக்கும் தெய்வம் வேறு இல்லை சிவபெருமானே முழு முதல் கடவுள், அப்பெருமானே திருவருட் சக்தியுடன் இணைந்து ஒரு பொருளாக உள்ளான்.
அன்பு, நீதி, உண்மை, செம்மை அருள், ஞானம், என்பவற்றை அதிட்டித் நிற்கும் சிவம். அவற்றிலிருந்து பிரிவிலா ஒரு பொருள் ஆக உள்ளது. கருணை கொண்ட சிவபெருமான் அவைகளை ஈடேற்றுவதன் பொருட்டு ஐந்தொழில் கள் செய்கிறான். அப்பெருமானின் மறைமொழி திருவைந்தெழுத்து. சிவ சின்னங்கள், திருநீறும் ரூத்திராட்சமும். மற்றும் ஐளந்தெழுத்து சிவ மந்திரம் .அப்பெருமானிடம் சேர்ப்பிக்கும் நான்வகை நன்னெறிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
அங்கிங்கெனாதபடி நீர்க்கமற நிறைந்திருப்பவன் எங்கள் மனம் வாக்கு, காயங்களுக்கு எட்டாதாவனாய் இறைவன் உள்ளான். ஆலயத்திலும், குருவினிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் தயிர் போல வெளிப்பட்டு காணப்படுவான். அடியார்களின் தூயமனங்களிலும், அன்பு உள்ளங்களிலும், எழுந்தருளி இருக்கிறான். எனவே அவர்கள் உடம்பும் ஆலயமாக திகழ்கிறது.,
பக்தி இயக்கம் ஆனது, ஆன்மீக அடிப்படையில் மனித வாழ்க்கையை தூய்மைப்படுத்தி வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வித்து மனிதப்பிறவி எடுத்ததன் சீரிய நோக்கமாகிய கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கு உறுதுணையாக அமைகிறது. பக்தி இயக்கத்தை போசித்து வளர்க்கும் சாதனமாக திருமுறைகள் விளங்குகின்றன.
திருமுறைகளை பாராயணம் செய்தல் நமது அன்றாடம் வாழ்க்கைப் பழக்கமாக கொண்டு இறைவன் முன் பாடி அருள் பெற்று நல்வாழ்வு பெற்று வாழ்வோமாக!
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : பூமாலை சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக