வெள்ளி, 30 ஜூலை, 2021

தமிழில் வழிபாடு

 தமிழில் வழிபாடு

தமிழர் வரிப்பணத்தாலும் தமிழ் வேந்தர் முயற்சியாலும் உண்டாக்கப்பட்ட கோவில்களே இத் தமிழ்நாட்டில் இருப்பவை. இவற்றில் சைவத் திருமுறைகள் ஓதியே வழிபாடு செய்யப்பட்டு வந்தது. சிறந்த சிவத்தலங்களான திருமறைக்காடு "வேதாரண்யம்" எனவும், திருவெண்காடு "சுவேதாரண்யம்" எனவும், திருமுது குன்றம் "விருத்தாசலம்" எனவும் மாறிய காலத்தில், தமிழில் இருந்த வழிபாடு வடமொழியில் மாறிவிட்டது போலும்! சுவாமி, அம்மன் பெயர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குப் புரியாத அபீத குஜாம்பாள் முதலிய வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. இந்த அலங்கோல நிலை, கோவிலுக்குச் செல்லும் பொதுமக்களின் உள்ளத்தில் அழுந்திய பக்தி ஏற்படாது செய்துவிட்டது,. வழிபட வரும் மக்களுக்குப் புரியாத மொழியில் அர்ச்சனை செய்யப்படுமாயின், அதனால் வழிபடுவோர் உள்ளம் எவ்வாறு குழையும்? சைவம் சீரழிவதற்கும், கோவில் வழிபாடு குறைந்து வருவதற்கும் இது மிகச்சிறந்த காரணமாகும். அறநிலையப் பாதுகாப்பாளர்களும், மடங்களின் தலைவர்களும், சைவப் பெருமக்களும் இத்துறையில் உடனே கவனம் செலுத்துதல் வேண்டும். அறிவும் ஆராய்ச்சியும் கேள்வி கேட்கும் திறனும் பெருகிவரும் இக்காலத்தில், அறிவுக்குப் பொருந்த நடப்பதே சமயவளர்ச்சிக்கு ஏற்றது.


 

*********

திருக்கோவையார்

ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவியைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே திருக்கோவையார் என்னும் நூலிற் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் பொருளாழமும் உடையவை.


 

*************

திருவாசகம் 

முதல் ஏழு திருமுறைகள் பண்ணோடும் தாளத்தோடும் பாடத்தக்கவை. ஆயின், திருவாசகப் பாடல்களுள் பெரும்பாலன அத்தகையவை அல்ல; முன்னவற்றுள் சமயப் பிரசாரம் காணப்படும்; திருவாசகத்தில் அது காணப்பெறாது; மாணிக்கவாசகர் எங்ஙனம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்றார் என்பதே இந்நூலிற் காணப்படுவது. இது படிப்பார் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. "உன் குறைகளை ஒப்புக் கொண்டு கடவுளுக்குமுன் அழு: அவனை அடையலாம்" என்பதே திருவாசகத்தின் உயிர்நாடிப் பகுதிகளில் ஒன்று. இங்ஙனம் தம் குறைகளை உள்ளவாறு உணர்ந்து வருந்திக் கடவுள் முன் அழுதல் என்பது எல்லோர்க்கும் எளிதில் இயல்வது அன்று; "கடவுளிடம் என்றும் இறவாத காதல் பெற விரும்பும் பக்தன், அன்பை அடிப் படையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து பழகவேண்டும்" என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் ஒன்று. இதனைச் சிவஞான போதம் 12-ஆம் சூத்திரம் நன்கு வற்புறுத்துகிறது. மாணிக்கவாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனை வேண்டுகிறார். இவ்விரண்டும் திருவாசகத்தின் உயர்நாடி என்று கூறலாம்.


 

****************

இம்மூவர் அறிவுரை  


இம்மூவரும் சைவசமயப் பொதுமக்களுக்குக் கூறிய அறிவுரைகள் யாவை? "சமண-பௌத்த நூல்கள் பொய்ந்நூல்கள்; அவற்றை நம்பாமல் சிவனை வழிபடுங்கள்; தீவினை அற்று நன்மை அடைவீர்கள்; திருப்பதிகங்களைப் பாடிப் பயன் பெறுங்கள்: எவரும் ஐந்தெழுத்தோதி மேன்மை பெறலாம்; ஐந்தெழுத்தே நல்ல துணை; ஐம்பொறிகளையும் அடக்குங்கள்; மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினையுங்கள்; சிவனைக் காண்பீர்கள்; புலனடக்கம் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்த வல்லவர் சிவப்பேறு பெறுவர்" என்பன இவர்தம் அறிவுரைகளாகும். சம்பந்தரது திருக்கோடிகா திருப்பதியமும், நெஞ்சுக்கு அறிவுறுத்தும் முறையில் பாடப்பட்ட அப்பரது ஆரூர்த்திருத்தாண்டகமும், மக்களுக்கு ஏற்ற சமய அறிவுரைகளாகக் கொளளற்பாலன. பல பதிகங்களில் கோவில் வழிபாடு, கோவில் தொண்டு செய்தல், தல யாத்திரை, அடியார் கூட்டுறவு, அடியார்க்கு உணவளித்தல் என்பனவும் வற்புறுத்தப்பட்டுள்ளன

*************

சிவ அத்வைதம்

ஆன்மா 'தான்' வேறு, 'அவன்' வேறு என்னும் எண்ணத்தில் இருக்கும் வரையில் 'த்வைதம்' அல்லது 'இருமை' இருக்கும். தனிப்பட்ட ஆன்மா அவனில் கலந்துவிடுமாயின், இருமை ஒழிந்து 'ஒருமை' ஏற்படும். இது 'சிவாத்வைதம்' எனப்படும்.

******************

தேவரடியார் 


கோவில்களிலிருந்து தொண்டாற்றிய மாதர்களுள் தேவரடியார் ஒரு வகையினர். இவர்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுக்கிடல், திருவமுதுக்குரிய அரிசியைத் தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர்; திருநீற்றுக் காப்புத்தட்டும் மலர்த்தட்டும் விழாக்களில் ஏந்தி வந்தனர்; விழாக் காலங்களில் அம்மனுக்குக் கவரிவீசினர்; அச்செயலால், 'கவரிப்பிணா' என்றும் அழைக்கப்பட்டனர். இங்ஙனம் தேவரடியார் நிலையை அடைந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட சாதியரல்லர்; எல்லா இனத்து மகளிரும் இச் சைவப்பிணியை மேற்கொண்டு சூல முத்திரை பொறிக்கப் பெற்றுத் 'தேவரடியார்' என்னும் தகுதியைப் பெற்றுவந்தனர். அழகிய பாண்டிய பல்லவரையன் என்ற படைத்தலைவனொருவன் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியார் ஆக்கினான் என்று திருவல்லம் கோவிற் கல்வெட்டுத் தெரிவித்தலை நோக்க, இவ்வுண்மை இனிது புலனாகின்றது.


******

திருமுறைகளை நன்கு படித்த பழக்கத்தால் அக்காலச் சைவ நன்மக்கள் நாயன்மார் பயன்படுத்திய சொற்றொடர்களை மக்களுக்கும் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் பெயர்களாக வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவற்றுள் சில கீழே காண்க: 


(1) சிவாய "நமவென்று நீறணிந்தேன்" என்பது அப்பர் தேவாரம். "நீறணிந்தான் சேதிராயன்" என்பது ஒரு சிற்றரசன் பெயர். (2) "நச்சுவார்க்கினியர் போலும் நாகையீச் சுவரனாரே" என்பது அப்பர் வாக்கு. "நச்சினார்க் கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான்" என்பது ஓர் அரசியல் அலுவலன் பெயர். (3) "மழபாடி வயிரத்தூணே என்றென்றே நான் அரற்றி" என்பது அப்பர்வாசகம். "ஆனைமங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்தூண்" என்பது ஒருவன் பெயர். (4) அரசாள்வர் "ஆணைநமதை" என்பது சம்பந்தர் வாக்கு. "ஆணைநமதெ"ன்ற பெருமான் என்பது ஒருவன் பெயர். (5) "பொன்னார் மேனியனை" என்பது சுத்தரர் சொற்றொடர். "பொன்னார் மேனி விளாகம்" என்பது ஓரிடத்தின் பெயர். (6) கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்) திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில், "பிச்சன் என்று பாடச் சொன்னான்" என்ற பெயர் கொண்ட ஊதுகொம்புகள் இரண்டு இருந்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக