இறைவனின் வடிவமாகவும் இறைவனின் சொல்லாட்சியாகவும் போற்றப்படும்
பன்னிரு திருமுறைகள் சித்தாந்த சைவகளின் வேதம் ஆகும். இதனை
திருத்தோணிமிசை மேவினார்கள்
தங்கள் திருமுன்பு தாழ்ந்துஎழுந்து நின்று
தமிழ் வேதம்பாடினார் தாளம் பெற்றார் ... என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் வாக்கு
சைவர்களுக்கே உரித்தான திருநீற்றின் பெருமை,திருவைந்தெழுத்தின் அருமையை பன்னிரு திருமுறைகளில் காணலாம்.வினைப்பயன் ஆகிய விதியின் கோரப் பிடியிலிருந்தும் நலக்கோள்களின் தாக்கத்திலிருந்தும் எப்படி விடுபடுவது என்பதைத் திருமுறை தெளிவுறுத்துகிறது.
தகைமலி தண்டமிழ் கொண்டிவை ஏத்தச்
சாரகிலா வினை தானே, திமு,1,பதி, திருப்பாசிலாச்சிரம் சம்பந்தர் தேவாரம்
உடைய தமிழ் பத்தும்உணர்வார் அவர்கள்
தொல்வினைகள் ஓல்கும் உடனே 3ம் திருமுறை
தொழுது நமனும் தன் தூதுவர்க்கு சொல்லும்
.............. பழுதிலா பக்தர்களைக்கண்டால் , பணிந்து போமின்கள் " நக்கீர தேவர்
திருமுறை தமிழர்களின் தனிச் சொத்து, அதனைப் பேணி போற்றி பயன் கொள்ள வேண்டுவது நமது கடமை.
திருமுறை சைவர்களின் வேதம்
இறைவன் கல்லாலின் புடை அமர்ந்து அருளிச் செய்த வேதங்கள் " எழுதாக்கிளவி" எனப்படும், அவற்றின் நுண்பொருளை அருளாளர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றின் பொருளை சகல வர்க்கத்து ஆன்மாக்கள் ஆகிய நாமும் அறியும் பொருட்டு அருளாளர்களாகிய சமயக்குரவர்கள் இப்பூவிலகில் அவதரிக்கச் செய்து,அவர்கள் வாயிலாக அவற்றை "எழுதுமறை" களாக இறைவன் அருளிச் செய்துள்ளான்.
எனவே திருமுறைப்பாடல்கள் அனைத்தும் இறைவன் வாக்கே ஆகும். சிவபெருமான் திருமுறை ஆசிரியர்களை அதிட்டித்து நின்று அவற்றை அருளிச் செய்திருப்பதால் அவை அருள் வாக்கு எனப்பெறுகின்றன. இவ்வுண்மையை சம்பந்த பெருமான் தன் தேவாரப்பதிக பாடல்களில் " எனதுரை தனதுரை " என்று அருள் வாக்காக அவர் பதிவு செய்துள்ளார்.
வேதங்கள் அனைத்தும் பிரணவத்துள் அடங்கும் அவ்வாறே நமது பன்னிரு திருமுறையின் முதற் பாடல் " தோடு" என்னும் சொல்லுடன் தொடங்கி , இறுதிப்பாடலி்ல் உலகெலாம் என்னும் சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து "ஓ " ம், உலகெலாம் என்பதில் உள்ள ஈற்றெழுத்து "ம்" ஆகும் ஆக ஓம் என்னும் பிரணவ மந்திர தோற்றத்தில் பன்னிரு திருமுறைகளும் ஆரம்பமாகி சைவர்களின் வேதமாக பயன்படகிறது. இதனையே சம்பந்த பெருமான் " மந்திர நல் மாமறை" என்ற வாக்காக அவர் பதிகத்தில் பதிவு செய்துள்ளார்.
திருமுறை இறைவனின் வடிவம்
இறைவன் மந்திர வடிவமாகவும் உள்ளான். திருமுறையில் உள்ள ஒவ்வெ ாரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையை திருமுறை கண்ட புராணத்தில்
" மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார் என்கிறார் உமாபதி சிவம்
திருக்கோயில்களில் உள்ள கற்படிமங்களிலும், செப்புப்படிமங்களிலும், மந்திர நியாசத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான். திருமுறைகளை படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். எனவே திருமுறை பாடல்களால் இறந்தவர்களையும் உயர்ப்பிக்கும் தன்னமை கொண்டது என்று அருளாளர்கள் நிரூபித்துள்ளார்கள்
திருக்கோயில்களில் அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் முதலிய அருச்சனைகள் நடைபெறுகின்றன. இத்தகு அருச்சனைக்குரிய மந்திரங்கள் சிவாகமங்களில் இடம்பெறவில்லை என்பதும், அவை வடமொழி வேதங்களிலிருந்து தொகுப்பட்டவை என்பதும் சிவாகம பண்டிதர்களின் ஒப்ப முடித்த கருத்தாகும்.
சிவன் கோயில்களில் திருமுறைப் பாடல்களை விண்ணப்பிப்பதே அருச்சனை ஆகும். அருச்சனை என்ற வட சொல்க்கு பொருள் வழிபாடு என்பதே ஆகும்.
இதனையே இறைவன்சுந்தரரிடம் அருளிய வாக்காக சேக்கிழாரும் குறிப்பிடுகிறார்.
"அர்ச்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக" என்பதால் அறியலாம்.
திருமுறைகளின் பெருமைகள்
திருமுறைப்படாலில் உள்ள சொற்கள் சிவபெருமான் திருவாக்குகளே ஆகும்.எனவே அவை இறந்தாரையும் எழுப்பும் தகைமை வாய்ந்தன, ஊழ்வினையை மாற்றும் பெற்றிமை பெற்றுள்ளன,வீடுபேற்றை வழங்கும்திறன் திருமுறைகள் கொண்டவை.
சிவச் சின்னங்களான திருநீறு உத்திராட்சம் திருமந்திரம் மந்திரமாகவும் மருந்தாகவும் பயன்பாட்டில் உள்ளவனவாகும்
திருமுறைகளில் உள்ள சொற்கள் அடைத்த கதவை திறக்கவும், மூடவும், பின் ஏட்டினை ஆற்றில் எதிர்க்கும் சக்தியும் அனலி் எரியாத தன்மையினையும், அதன் மந்திிர சொற்கள் நோயினை விரட்ட மருந்தாகவும், வினை நீக்கத்திற்கு பரிகாரமாகவும், வீடுபேற்றுக்கு வழிகாட்டும் துணைவனாகவும் விளங்குகின்றன.கொடியவர்களும், கொலைகார்களும் கூடத் திருமுறை ஓதினால் நல்லவர்களாக மாறுவது திண்ணம். சிவ சம்பந்தத்தை தருவது திருமுறையின் அருமை பெருமைகளுக்கு அளவேஇல்லை.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக