புதன், 27 செப்டம்பர், 2023

நெஞ்சே திருக்கோவில்

 


இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு கோ + இல் என்று பெயர். இறைவனின் திருவருள் விளங்கித் தோன்றும் நிலையமாகத் திருக்கோயிகளைக் குறிப்பிடுவார்கள். திருக்கோயில்களில் உள்ள திருமேனிகளில் மந்திர வடிவில் இறைவனின் திருவருள் உருவேற்றப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. திருக்கோயில்களில் செய்யப்படும் பூசனைகளும் திருவிழாக்களும் இறை உணர்வைத் தூண்டுவனவாக உள்ளன. திருக்கோயில்களில் ஓதப்பெறும் திருமுறைகளும் தமிழ்ப் போற்றிகளும் இறைவனின் பெருமைகளையும் திருவருளையும் நினைவூட்டி இறைவனை நினைப்பிக்கின்றன. எனவேதான், “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” எனவும் “ ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றும் சொல்லிவைத்தார்கள். மூன்று வயதே நிரம்பிய பச்சிளம் குழந்தை திருஞானசம்பந்தர் எண்பத்தொரு வயது நிறைவுற்றிருந்த சிவப்பழமான திருநாவுக்கரசு அடிகளும் திருக்கோயில் திருக்கோயில்களாக நெடுந்தூரம் பயணித்து இறைவனை வழிபட்டார்கள். திருக்கூடலை ஆற்றூர் திருக்கோயிலுக்குச் செல்ல சுந்தர மூர்த்தி அடிகள் வழி தெரியாது தடுமாறியபோது பெருமான் வழிபோக்கனாக வந்து வழிகாட்டியதும் திருமழபாடி எனும் கோயிலுக்குச் சுந்தரர் அடிகள் செல்ல மறந்ததும் பெருமான், “மழபாடியுள் உள்ள என்னை மறந்தனையோ” என்று அவர் கனவில் திருக்கோவிலுக்கு வர அழைத்ததும் திருக்கோயில் வழிபாட்டின் முதன்மையையும் இறைவன் அங்கு உறைவதனையும் உணர்த்தும்.

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், திருக்கோயில்களில் உறையும் இறைவனை நம் உள்ளத்திலே வைத்து உணர்தல், இறைவனை அடைதற்கு மேலும் துணைநிற்கும் என்கின்றது. இதனைத் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கோயில் முழுதும் உயர்க்கோபுரம் முழுதும் இறைவனைத் தேடிக் காணாமல் இறைவன் தன் உள்ளத்திலே இருப்பதை உணர்ந்து கொண்டேன் என்கின்றார். திருநாவுக்கரசு அடிகளும், “தேடிக் கண்டுக்கொண்டேன் திருமாலொடு நான்முகனும், தேடி தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்” என்பார். எனவே திருக்கோயில்களில் உள்ள இறைவனை வழிபட்டு அவ்விறைவனை உள்ளத்தின் உள்ளே உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பது உணர்தற்பாலது. இதனைத்தான், “நாடும் நகரமும் நற்றிருக்கோயிலும், தேடித் திரிந்து சிவபெருமான் என்று, பாடுமின் பாடிப்பணிமின் பணிந்தபின், கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே” என்கிறார் திருமூலர்.

சித்தாந்த சைவத்தினை விளக்கும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் பதிநான்கில் தலைமணி நூலாக விளங்கும் சிவஞானபோதம், “ ஆலயம் தானும் அரனெனத் தொழுமே” என்கின்றது. ஆலயத்தில் உள்ள திருமேனியையும் ஆலயத்தையும் இறைவனாகவே தொழவேண்டும் என்கின்றது. அதன்படி திருமந்திரமும் சைவ நெறியில் நிற்போர் திருக்கோயில்கள் உள்ள திருநாட்டினையும் திருக்கோயில்கள் உள்ள திருநகரங்களையும் அவற்றில் உள்ள திருக்கோயில்களையும் தேடித்திரிந்து மிகுந்த உண்மையான அன்போடு பலனை எதிர்பார்த்து வழிபடும் வஞ்சக வழிபாட்டினை விடுத்து எப்பொழுதும் தவறாது வழிபடுவர் என்கிறது. சிவபெருமானே என்று திருக்கோயிலில் உள்ள திருமேனியைச் சிவபெருமானாகவே எண்ணியும் தங்கள் சிறுமையை எண்ணி வறுந்தியும் பெருமானின் பெருமையை எண்ணி போற்றிப் புகழ்ந்தும் பணிவர் என்கிறது. அவ்வாறு உளம் உருகி வழிபடுகின்ற அன்பர்களுக்குத் திருக்கோயில்களில் திருமேனியாக இருக்கின்ற பெருமான் அவ்வன்பர்களின் கூடிய நல்லுள்ளங்களைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருப்பான் என்கின்றது.

          புறத்திலே திருக்கோயில்களிலும் இல்லப் பூசனை அறைகளிலும் உள்ள இறைவனை உள்ளத்திலே இருக்கச் செய்வதே வழிபாட்டின் உயர்ந்த நோக்கம். புறத்திலே உள்ள இறைவனை உள்ளத்திலே அமர்த்த வேண்டும். இறைவனை உள்ளத்திலே இருத்துதற்குத் திருமூலர் குறிப்பிடும் கூடிய நெஞ்சம் அமைய என்ன செய்ய வேண்டும் என்பதனைத் திருநாவுக்கரசு அடிகள் தெளிவாக இயம்புகின்றார். “மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாம் களையை வாங்கி பொறையெனும் நீறைப் பாய்ச்சித், தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே” என்று தெளிவுறுத்துவார்.

         இறைவனை உள்ளைத்திலே இருத்த வேண்டுமானால் புறத்திலே செய்யக்கூடிய திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுக்கிடுதல், பல்லக்குச் சுமத்தல், மலர் பறித்துக் கொடுத்தல், திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்துக் கொடுத்தல் போன்ற சிவப்பணிகளையும் புறத்திலும் அகத்திலும் இறைவனை எண்ணிப் பூசனை செய்தல், ஆலய வழிபாடு செய்தல் போன்றவற்றைத் தொடர்ந்து இடைவிடாது செய்து, பெருமானை மனத்தில் வைத்து இடைவிடாது எண்ணுதல், சமய நூல்களைக் கற்றல், கேட்டல், கேட்டவற்றைச் சிந்த்தித்தல், சிந்தித்துத் தெளிந்தவற்றை வாழ்வில் பின்பற்றுதல் என்ற சீல, நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றால் மனதை ஆழமாக உழவேண்டும் என்கின்றார்.


இவ்வாறு தொடர்ந்து செய்வதனால் அப்பெருமானிடத்தில் அன்பு என்கின்ற விதையினை உள்ளத்தில் விதைக்க இயலும் என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள். பெருமானிடத்தில் உண்மையான அன்பு ஏற்படுதலினால் உள்ளத்தில் மண்டிக்கிடக்கின்ற களைகளை அகற்ற இயலும் என்கின்றார். உயிருக்கு நன்மை பயக்கக் கூடிய நற்சிந்தனைகளை உண்மை என்றும் உள்ளத்தில் உணர்ந்தவற்றையே வெளியே கூறுவது வாய்மை என்றும் உள்ளத்தில் உணர்ந்தவற்றையே வெளியே செய்தலை மெய்மை என்றும் குறிப்பிடுவர். உண்மை, வாய்மை, மெய்மை என்ற மூன்றனுக்கு மாறானவையே உள்ளத்தில் உள்ள களைகள். இறைவன் உள்ளத்தில் அமர இவற்றினைக் களைந்து எறிய வேண்டும் என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள்.

          சிவன் எனும் பயிர் உள்ளத்திலே நிலைத்து வளர வேண்டுமானால் பொறை எனும் நீரைப் பாய்ச்ச வேண்டும் என்கின்றார். பொறை என்றால் பொறுமை என்று பொருள். பொறுமையோடு அமைதியாய் மேற்கூறியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் நம்மை நாமே சரி செய்துகொள்ளும் செவ்வியாகிய தன்மையும் நோக்கிக் காண்டல் எனும் செவ்வியும் உண்டாகும் என்கின்றார். மேற்கூறியவற்றால் உயிர்களுக்கு கொல்லாமை, ஐம்புலன்களை அடக்கல், பொறுமை, இரக்கம், தவம், அன்பு, என்பன தோன்றும். புலால், மது போன்றவை மட்டுமல்லாது மனத்தால், வாக்கால், காயத்தால் பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே கொல்லாமை. கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன இழுத்த இழுப்பிற்குச் செல்லாமல் அவற்றைக் கட்டுப்படுத்தி நன்னெறிக்கு மடைமாற்றம் செய்தலே ஐம்புலனடக்கம். பணிவும் அடக்கமும் பொறுமை எனப்படும். துன்பத்தைக் கண்டு துவளாமை, பிறருக்குத் துன்பம் செய்யாமையே தவம் எனப்படுகிறது. அன்புடையோராய்த் திகழ்வது அன்பு. இவற்றினை உள் வாங்கிக் கொண்டு வாழ்தலே மனத்தில் மாசு நீங்கி வாழ்தல். இத்தகைய உள்ளத்திலேயே இறைவன் குடிகொள்கின்றான். இதுவே கூடிய நெஞ்சம் என்பார் திருநாவுக்கரசு அடிகள்.

தொடர்ந்து பெருமானை உள்ளத்திலே நிலை நிறுத்த சிவச்சின்னங்கள் அணிய வேண்டும் என்கின்றார். “நமசிவய” எனும் திருவைந்து எழுத்து, உருத்திராக்கம் எனும் திருஅடையாள மாலை அல்லது கண்டிகை, திருநீறு, சிவ வேடம் போன்றவை உள்ளத்தில் மாசு படிவதனைக் காக்குக் வேலியாகவும் உள்ளத்தில் வளர்கின்ற சிவப்பயிரினைப் பாதுகாக்கும் வேலியாகவும் அமையும் என்கின்றார். இவ்வாறு செம்பொருளைச் செம்மையாகப் பற்றி வாழ்வோமேயானால் சிவபெருமான் நம் உள்ளத்தில் வீற்றிருப்பான் என்கின்றார் திருநாவுக்கரசர். இத்தகைய நெஞ்சத்தினையே கூடிய நெஞ்சமென்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் புறத்தில் காண்பதோடு நின்றுவிடாமல் அவனை அகத்தில் குடியேற்றும் வழியினைப் பற்றியும் சிந்தித்தும் அதற்குறியனவற்றை நடைமுறைப் படுத்தி இறைவன் நம் உள்ளத்தில் வீற்றிருக்க வாழ்வாங்கு வாழ்வோமாக

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

ஒருமையுள் ஆமை போல்வர்

 ஒருமையுள் ஆமை போல்வர்

மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் தமது முதல் தந்திரத்தில் உபதேசம் எனும் அறிவுரை கூறும் பகுதியில் உயிர் முற்றப் பெற்றவர்களின் இயல்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். இவ்வுலகிலே மாந்த உடலோடு வாழும் காலத்திலே இறைவனின் திருவருள் கூடப்பெற்றவர்களை உயிர் முற்றப் பெற்றவர்கள் அல்லது சீவன் முத்தர்கள் என்கின்றோம். உயிர் முற்றப் பெற்ற இவ்வடியார்களின் அறிவு,விருப்பம்,செயல் ஆகியவை இறைவனின் திருவருளாலே செயல்படுவதனால் இவர்களைச் சாதாரண மாந்தர்களாக எண்ணுவது தவறு என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய அருளாளர்களின் சொல்லும் செயலும் இறைவனின் திருவாக்காயும் இறைவனின் திருவருட்செயலுமாகவே நடைபெறுகின்றன. இதனாலேயே, “எனது உரை தனது உரையாக” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். தாம் கூறும் சொற்கள் இறைவன் கூறும் சொற்கள் என்று திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


               தமிழ் மந்திரங்களான திருமுறைகள் உயிர் முற்றப் பெற்ற அருளாளர்களின் திருநாவில் இறைவன் நின்று உரைத்தவை ஆகும். அவை ஆற்றல் உடைய மந்திரங்கள் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர்களில் பெரும் பகுதியினர் அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கதுதான். இறைவன், உயிர் முற்றப் பெற்ற அடியார்களின் திருநாவில் நின்று அருளியதே திருமுறைகள் என்பதனை அவ்வடியார்களே குறிப்பிடுகின்றனர். “நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை” என்று மணிவாசகரும் “பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே” என்று திருநாவுக்கரசு அடிகளும் இறைவன் தங்கள் திருநாவில் நின்று தங்களைப் பாடுவித்தமையைக் குறிப்பிடுவர். தவிர இவ்வருளாளர் பெருமக்களின் திருவாய்களில் இருந்து வெளிப்பட்டத் தமிழ் மந்திரங்களான திருமுறைகளில் “திரு” இருந்தது. எனவேதான், “கல்துணைப்பூட்டி ஓர்கடலில் பாய்ச்சினும் நல்துணையாவது நமசிவாயவே” என்று திருநாவுக்கரசு அடிகள் கூறியவுடன் அவர் பிணிக்கப்பட்டிருந்த பாறை நடுக்கடலில் மிதந்தது. இறைவனின் திருவருள் அவர் சொல்லில் நின்றதனாலேயே அவ்வருள் நிகழ்ச்சி நிகழ்ந்தது.


               இறைவனின் திருவருள் சுந்தரமூர்த்தி அடிகளின் திருவாக்கிலே நின்று அருள்புரிந்தமையினால்தான், “கரைக்கால் முதலை பிள்ளையைத் தரச்சொல்லு காலனையே” என்று சுந்தரமூர்த்தி அடிகள் கூறியதும் அவிநாசியில், முதலை தாம் விழுங்கிய சிறுவனை மறுபடியும் கரையில் வந்து கக்கிச் உமிழ்ந்து சென்றது. திருஞானசம்பந்தர் அடிகள் ஆண் பனை மரங்களைப் பெண் பனை மரங்களாக்கியதும் திருமயிலையில் சாம்பலை மறுபடியும் பெண் ஆக்கியதும் திருவீழிமிழலையில் ஒவ்வொரு நாளும் ஒரு பொற்காசுப் பெற்று உணவு தட்டுப்பாட்டைப் போக்கியதும் போன்ற அருள் செயல்கள் இறைவனின் திருவருள் செயல்களாய் உயிர்முற்றப் பெற்ற அடியவர்கள் மூலம் நிறைவேற்றப் பட்டன. அருட்செயல்களை இறைவன் தங்கள் மூலம் செய்கின்றான் என்பதனை நன்கு உணர்ந்த உயிர்முற்றப் பெற்ற அருளாளர் பெருமக்கள் அவ்வருட்செயல்களை ஒருபோதும் தாங்கள் நிகழ்த்துவதாகச் சொல்லவோ, எண்ணவோ செய்யாது, அனைத்துச் செயலும் அவன் செயலாகவே செய்தனர்; உணர்ந்தனர். இதனையே உயிர் முற்றப் பெற்றத் தாயுமானவ அடிகள், “என் செயலாவது யாதும் ஒன்றும் இல்லை, தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்” என்று இறைவனை நைந்து இறைஞ்சுவார்.


               உயிர் முற்றப் பெற்ற அடியார்கள் அல்லது சீவன் முத்தர்கள் மறந்தும் பிறர் தங்களைக் கடவுளாகவோ ஆசானாகவோ கொண்டு வாழுங்கள் என்று குறிப்பிடுவதோ விரும்புவதோ கிடையாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தங்களிடம் உள்ள சிறு சிறு ஆற்றல்களைக் கொண்டு தங்களைத் தலைசிறந்த ஆசான்களாகவும் ஞானிகளாகவும் சித்தர்களாகவும் இன்னும் கடவுளின் மறுவடிவாகவும் எண்ணிக்கொள்கின்ற அறியாமை உடைய அன்பர்களுக்கு இறைவன் பெறுவதற்கு அரியவனாக இருப்பான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தங்களிடம் உள்ள சிறு சிறு ஆற்றல்களைக் கொண்டுச் சிறு சிறு பொருட்களை வரவழைப்பதனாலும் அவற்றை மறைப்பதனாலும் தாங்கள் ஒரு குட்டிக் கடவுள் என்று செருக்கித் திரிபவர்களுக்கு இறைவன் அடைய முடியாத அரிய பொருளாகிப் போவான் என்கின்றார் திருமூலர். பிறர் தங்களைக் கடவுள் என்றும் ஆசான் என்றும் அறியாமையினால் போற்றி வழிபடும்போது அதனைத் தடுக்காமல், நிறுத்தாமல் சுகங்காணுகின்றவர்களுக்கு இறைவன் அறிய முடியாத பொருளாய்ப் போய்விடுவான் என்கின்றார் திருமூலர். போற்றுதலுக்கும் வழிபாட்டிற்கும் உரியவன் இறைவனே என்பதனை உணர்ந்து, தம்மை வழிபடுவதனைத் தவிர்த்து, இறைவனை வழிபடுகின்ற நெறியினை நினைவுறுத்தாத அன்பர்களுக்கு இறைவன் அடைவதற்குக் கடினமாகிவிடுவான் என்கின்றார் திருமூலர்.


               உயிர்முற்றப் பெற்ற அருளாளர்கள் எப்பொழுதும் தங்கள் சிறுமையை எண்ணியே இறைவனிடத்தில் அழுது புலம்புவர் என்கின்றார் திருமூலர். இதனையே, “கடையவனேனைக் கருணையினால் ஆண்டு கொண்ட விடையவனே” என்றும் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்றும் தம்மை இழிவாகக் கூறிக்கொள்வார் மணிவாசகப் பெருமான். “நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்து உன்னை” என்று சுந்தரமூர்த்தி அடிகள் தன் சிறுமையைக் குறிப்பிடுகின்றார். உயிர் முற்றப் பெற்ற உண்மை அடியார்கள் தங்கள் சிறுமையை உணர்ந்து வருந்தும் இயல்பு உடையவர்கள் என்பதனாலே இறைவன் அவர்களுக்கு எளிதில் அவனது திருவடிகளை நல்குவான் என்பதனைப், “பெருமை சிறுமை அறிந்த எம்பிரான்போல், அருமை எளிமை அறிந்தவர் இல்லை” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பெயரும் புகழும் தற்பெருமையும் கொண்டு இறைவனின் பெருமையை உணரச் செய்யாது பிறரை மயங்கச் செய்யும் அன்பர்களை இறைவன் ஒருபோதும் நெருங்கமாட்டான்; அவர்கள் வாக்கிலும் திருவருள் நில்லாது என்கின்றார் திருமூலர். இத்தகையோரை ஆசானாகக் கொள்கின்றவரும் திருவருள் கூடப்பெறமாட்டார்கள் என்கின்றார் திருமூலர்.


               உயிர் முற்றப் பெற்ற ஆசான்கள் இவ்வுலகில் உடல் தாங்கி வாழும் காலத்தில் ஆமை தனது ஐந்து உறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்கிக் கொள்வதுபோல, ஐந்து புலன்களினால் ஏற்படும் அவாக்கள் ஐந்தினையும் தங்களுக்கும் அரணாய் உள்ள இறைவனது திருவருளிலும் வழிபாட்டிலும் அடக்கி, இவ்வுலக இன்பத்தினையும் மேலுலக இன்பத்தினையும் வேண்டாம் என்று விட்டு விலகிக் குற்றமற இருப்பார்கள் என்பதனை, “ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந்து அடக்கி, இருமையும் கெட்டு இருந்தார் புரை அற்றே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே, “கேடும் ஆக்கமும் கெட்டத் திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார், கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுவார். உலகியலில் இது தங்களுக்குப் புகழும் பெருமையும் கொடுப்பது, இது தங்களுக்குச் சிறுமையும் தாழ்வையும் கொடுப்பது என்று எண்ணாது இறைவனின் புகழ் ஒன்றினை மட்டும் முன்வைத்து, எல்லாவற்றயும் ஒருபடித்தாய் எண்ணி, விருப்பு வெறுப்பு அற்று இறைவனை வழிபட்டுக்கொண்டிருப்பதிலேயே முழு கருத்தையும் அவன் திருவருள் துணையால் நிலைநிறுத்தி, வீடுபேறு பெறவேண்டும் என்ற எண்ணம்கூட அற்று இருப்பவர்கள்தான் உண்மையான உயிர் முற்றப்பெற்றவர்கள் என்று தெய்வச்சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.


               இறைவனின் பெருமையையும் கருணையையும் எண்ணி, முனைப்பின்றி அவன்பால் அடங்கி நிற்பவர்களே உண்மை உயிர் முற்றப் பெற்றவர்கள். உயிர் முற்றப் பெற்றவர்கள் புலன் அடக்கம் உடையவர்கள் என்பதனை ஐயன் திருவள்ளுவரும், “ஒருமையுள் ஆமைபோல்ஐந்து அடக்கல் ஆற்றின், எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று குறிப்பிடுவார். அதாவது ஒரு பிறப்பில், ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வல்லவனானால், அ•து அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது என்கின்றார். உயிர் முற்றப் பெற்ற உன்மை அன்பர்களின் அறிவு, விருப்பம், செயல் என்பன ஐம்புலன்களின் வயப்பட்டு உலக முகமாக இருக்குமாயின் அவர்களின் சொல்லும் செயலும் அருள்வழி நில்லாது போய்விடும் என்கின்றார் திருமூலர். கண், காது, மூக்கு, வாய், மெய் என்பவற்றினால் உண்டாகும் உலகியல் இன்பங்களுக்கே முதன்மை கொடுக்கின்றவர்களிடத்து அன்பு நெறியான இறை நெறி வாழாது என்கின்றார் திருமூலர். உணவு, உடை, உறையுள், பொன், பொருள், பணம், பட்டம், பதவி, புகழ் போன்ற ஐம்புலன்களின் வேகத்திற்கு ஆளாய்க் கிடக்கும் அன்பர்கள் ஒருபோதும் உயிர் முற்றப்பெற்றவர் ஆகமாட்டார்கள். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் இறைவன் திருவருளே தமக்கு வழிகாட்டியாகவும் இறைவனின் திருவடியைப் பற்றி வணங்குவதையே தங்கள் மூச்சாகவும் கொண்டு வாழும் அன்பர்களே உயிர் முற்றப் பெற்றவர்கள். இவர்களே உண்மை ஞானிகள். இவர்களே உண்மை சித்தர்கள். இவர்களே உண்மை ஆசான்கள் . இவர்களே போற்றுதலுக்குறியவர்கள் என்கின்றார் திருமூலர்

திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 8 செப்டம்பர், 2023

நாள் என் செய்யும் கோள் என் செய்யும்

 

நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு

 

தற்காலத்தில் கிரகங்களும் நட்சத்திரங்களும் (நாளும் கோளும்) சரியில்லை என்று வருத்தப்பட்டு அலைந்து திரிந்து இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதனால் சிவன் கோவில்களில் நவக்கிரங்களின் வழிபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அனுதினமும் காணும் உண்மை. இது பற்றிக் கடவுளைக் கண்டவர்கள் கூறியுள்ள உண்மைகள் யாவை என்பதை காண்போம்.

 

"ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே

கோளு நாளவை போயறுங் குற்றமில்லார்களே" திரு ஞான சம்பந்தர் த.வே.2

 

தற்காலத்தில் மக்கள் கோள்கள் தான் தங்களுக்கு நன்மையைச் செய்யும் என்று நினைத்து அவற்றையே பெருந்தெய்வமாக கருதி (முழுமுதற் பொருளாக) வழிபட்டும் வருகிறார்கள். இது முற்றிலும் பொருந்தாத செயலாகும்.

கோள்கள் யாவும் தமக்குவமை இல்லாத சிவபெருமானாரை வணங்கியே கிரகப்பதங்கள் பெற்றுள்ளன. இவை யாவும் சிவபெருமானாருடைய ஆனையின்படி செயல்படக்கூடியவை என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்

 

" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை .............. திருமந்திரம் த,வே, 10

 

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை " திருமந்திரம்

 

பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாதவர் சிவபெருமானார் ஒருவரே ஆவார். இவரைத்தான் பெருந்தெய்வம் என்றும், முழுமுதற் பொருள் என்றும் கூறுகிறோம். இவரை வழிபட்டால் நவக்கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யா. மேலும் நமக்கு நன்மைகளைச் செய்யும் என்று சொல்கிறார் மூன்று வயதில் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தர்

 

" ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" ........... ஞானசம்பந்தர் கோளாரு பதிகம்

 

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி , இராகு,கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் சிவபெருமானாரை வணங்குபவர்கட்கு நன்மைகளைச் செய்யும் என்பது கடவுளை கண்ட சம்பந்த சுவாமிகள் திருவாக்கு ஆகும்.

போலிவேடதாரிகளை நம்பி வேண்டாப் பொருளற்ற சடங்குகளைச் செய்து காலத்தையும், செல்வத்தையும் வீண் செய்ய வேண்டாம். கடவுள் நிலையறிந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ளனவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

 

திருமுறைப் பாடல்கள் பாடியே இறைவரை நாம் வணங்க வேண்டும். நமக்கு பசி வந்தால் நாம் தான் சாப்பிட வேண்டும். நமக்கு நோய் வந்தால் நாம் தான் மருந்து உட்கொள்ள வேண்டும் நமக்கு தாகம் எடுத்தால் நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைப்போல நம்முடைய தீயவினைகள் நீங்கி நல்வினை பெருகி நலம் பெறுவதற்கு நாம்தான் பாடிப்பரவ (வணங்க ) வேண்டும்.

 

"பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்

ஓட்டினார் வினை ஓல்லையே" .............. ஞான சம்பந்தர் தி,முறை 1

 

உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிகள் உள்ளன. அவற்றுள் பேசும் திறம் பெற்றுள்ளவன் மனிதன் மட்டுமே. அதனால் வாயினால் பாடி வணங்குவதுதான் நலம் தருவதாகும்.

" நீரார் சடையானை நித்தல் ஏத்துவான்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே" .................... ஞான சம்பந்தர் தி.மு. 1

 

ஒன்பது கோள்களும் சிவபெருமானாரை வழிபட்ட தலங்கள் பற்றியும், அத்தலங்களுக்குரிய பதிகங்களையும் " தமிழ் மாலைகள் மண்ணிற்கும் விண்ணிற்கும் " எனும் நூலில் காணலாம்.

 

பொதுவாக மக்கள் துன்பங்கள் வரத் தொடங்கும் பொழுது கிரகங்கள் பற்றியும், தாங்கள் வாழுமிடங்கள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

" நோய்எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" எஎன்பது திருக்குறள்

 

பிற உயிர்கட்கு ஏற்கனவே நாம் செய்துள்ள துன்பங்கள்தான் இப்பொழுது நமக்கு வருகின்றன என்பதை தான் மறுக்க முடியாத உண்மை.

 

"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையினால் முடிந்தது" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திருமந்திரம்

 

எந்த வகையில் துன்பங்கள் வருகின்றனவோ அந்த வகையில் முற்பிறவிகளில் நாம் பிற உயிர்கட்குத் துன்பங்கள் செய்கின்றோம் என்று உணர வேண்டும், இப்பொழுது அவ்வகையில் புண்ணியங்களைச் செய்துவிட வேண்டும்.

 

நாம் ஏற்கனவே செய்துள்ள புண்ணியத்தால் இப்பொழுது இன்பங்களை அனுபவித்து வருகின்றோம். புண்ணியம் முடிந்து விட்ட பொழுது, துன்பங்கள் தொடர ஆரம்பிக்கின்றன.ஆதலால், அன்றாடம் புண்ணியங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும் ( வங்கியில் நம் கணக்கில் பணம் போட்டுக் கொண்டே இருப்பது போல)

விதைத்தைத் தான் அறுவடை செய்கிறோம். முள்ளை விதைத்தால் நெல்லை எதிர்பார்த்தால் கிடைக்காது தானே? புண்ணியத்தால் நற்செயல்களால் நலன்கள் பல பெறலாம் இதுவன்றி வெற்றுச் சடங்குகளால் பெற்றுவிட முடியாது.

 

எங்குச் சென்றாலும் நம்முடைய நிழல் நம்மைத் தொடர்வது போலு, நாம் செய்யும் நல்லனவும் தீயனவும் நம்மைத் தொடர்ந்து வரும். இதை உணர்ந்து விட்டால், போலித் துறவிகளிடம் சென்று ஏமாற மாட்டோம். ஏழைகட்கு உதவும் செல்வந்தர் நீண்ட நன்மையை தேடிக் கொள்கிறார். என்பதை மனதில் கெர்ள்ள வேண்டும், நாம் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்வதன் பொருட்டுப் பிற உயிர்கட்கு கனவிலும் தீமையை நினைக்க க் கூடாது. அனுதினமும் " சிவாயநம" எனும் திருஐந்தெழுத்து மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலி நலமாக வாழலாம் என்பது ஞானசம்பந்தர் சொல்வது போல் உண்மை. இவர்கள் வானில் அரசாழ்வார் என்பது சம்பந்தரின் கட்டளை,

 

திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 1 செப்டம்பர், 2023

ஆவணிமாத மகா சங்கட கரசதுர்த்தி பூசை

 ஆவணிமாத மகா சங்கட கரசதுர்த்தி  பூசை

சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அருள்மிகு இராஜகணபதி விநாயகருக்கு  ஆன்மாக்களின் சங்கடங்களை தீர்த்தருள மகா சங்கட கரசதுர்த்தி பூசை



நாள்  03.9.2023ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாகவும் சக்தி பீட உபாசகர்களின் துணையயோடும்  ஆவணி  மாத மகா சங்கட கரசதுர்த்தி  பூசை , ஔவையார் அருளிய விநாயகர் அகவல் தோத்திரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையும் அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெறவுள்ளது.. இங்கு நடைபெற உள்ள பூசைக்கு  அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து கொள்வார்கள். இறைவனுக்கு தங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்து வழிபட வுள்ளது. அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி சங்கடங்கள் தீர கணபதி அருள் பெற  அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் 

திருச்சிற்றம்பலம்