புதன், 27 செப்டம்பர், 2023

நெஞ்சே திருக்கோவில்

 


இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு கோ + இல் என்று பெயர். இறைவனின் திருவருள் விளங்கித் தோன்றும் நிலையமாகத் திருக்கோயிகளைக் குறிப்பிடுவார்கள். திருக்கோயில்களில் உள்ள திருமேனிகளில் மந்திர வடிவில் இறைவனின் திருவருள் உருவேற்றப்பட்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. திருக்கோயில்களில் செய்யப்படும் பூசனைகளும் திருவிழாக்களும் இறை உணர்வைத் தூண்டுவனவாக உள்ளன. திருக்கோயில்களில் ஓதப்பெறும் திருமுறைகளும் தமிழ்ப் போற்றிகளும் இறைவனின் பெருமைகளையும் திருவருளையும் நினைவூட்டி இறைவனை நினைப்பிக்கின்றன. எனவேதான், “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” எனவும் “ ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றும் சொல்லிவைத்தார்கள். மூன்று வயதே நிரம்பிய பச்சிளம் குழந்தை திருஞானசம்பந்தர் எண்பத்தொரு வயது நிறைவுற்றிருந்த சிவப்பழமான திருநாவுக்கரசு அடிகளும் திருக்கோயில் திருக்கோயில்களாக நெடுந்தூரம் பயணித்து இறைவனை வழிபட்டார்கள். திருக்கூடலை ஆற்றூர் திருக்கோயிலுக்குச் செல்ல சுந்தர மூர்த்தி அடிகள் வழி தெரியாது தடுமாறியபோது பெருமான் வழிபோக்கனாக வந்து வழிகாட்டியதும் திருமழபாடி எனும் கோயிலுக்குச் சுந்தரர் அடிகள் செல்ல மறந்ததும் பெருமான், “மழபாடியுள் உள்ள என்னை மறந்தனையோ” என்று அவர் கனவில் திருக்கோவிலுக்கு வர அழைத்ததும் திருக்கோயில் வழிபாட்டின் முதன்மையையும் இறைவன் அங்கு உறைவதனையும் உணர்த்தும்.

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், திருக்கோயில்களில் உறையும் இறைவனை நம் உள்ளத்திலே வைத்து உணர்தல், இறைவனை அடைதற்கு மேலும் துணைநிற்கும் என்கின்றது. இதனைத் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கோயில் முழுதும் உயர்க்கோபுரம் முழுதும் இறைவனைத் தேடிக் காணாமல் இறைவன் தன் உள்ளத்திலே இருப்பதை உணர்ந்து கொண்டேன் என்கின்றார். திருநாவுக்கரசு அடிகளும், “தேடிக் கண்டுக்கொண்டேன் திருமாலொடு நான்முகனும், தேடி தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்” என்பார். எனவே திருக்கோயில்களில் உள்ள இறைவனை வழிபட்டு அவ்விறைவனை உள்ளத்தின் உள்ளே உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பது உணர்தற்பாலது. இதனைத்தான், “நாடும் நகரமும் நற்றிருக்கோயிலும், தேடித் திரிந்து சிவபெருமான் என்று, பாடுமின் பாடிப்பணிமின் பணிந்தபின், கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே” என்கிறார் திருமூலர்.

சித்தாந்த சைவத்தினை விளக்கும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் பதிநான்கில் தலைமணி நூலாக விளங்கும் சிவஞானபோதம், “ ஆலயம் தானும் அரனெனத் தொழுமே” என்கின்றது. ஆலயத்தில் உள்ள திருமேனியையும் ஆலயத்தையும் இறைவனாகவே தொழவேண்டும் என்கின்றது. அதன்படி திருமந்திரமும் சைவ நெறியில் நிற்போர் திருக்கோயில்கள் உள்ள திருநாட்டினையும் திருக்கோயில்கள் உள்ள திருநகரங்களையும் அவற்றில் உள்ள திருக்கோயில்களையும் தேடித்திரிந்து மிகுந்த உண்மையான அன்போடு பலனை எதிர்பார்த்து வழிபடும் வஞ்சக வழிபாட்டினை விடுத்து எப்பொழுதும் தவறாது வழிபடுவர் என்கிறது. சிவபெருமானே என்று திருக்கோயிலில் உள்ள திருமேனியைச் சிவபெருமானாகவே எண்ணியும் தங்கள் சிறுமையை எண்ணி வறுந்தியும் பெருமானின் பெருமையை எண்ணி போற்றிப் புகழ்ந்தும் பணிவர் என்கிறது. அவ்வாறு உளம் உருகி வழிபடுகின்ற அன்பர்களுக்குத் திருக்கோயில்களில் திருமேனியாக இருக்கின்ற பெருமான் அவ்வன்பர்களின் கூடிய நல்லுள்ளங்களைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருப்பான் என்கின்றது.

          புறத்திலே திருக்கோயில்களிலும் இல்லப் பூசனை அறைகளிலும் உள்ள இறைவனை உள்ளத்திலே இருக்கச் செய்வதே வழிபாட்டின் உயர்ந்த நோக்கம். புறத்திலே உள்ள இறைவனை உள்ளத்திலே அமர்த்த வேண்டும். இறைவனை உள்ளத்திலே இருத்துதற்குத் திருமூலர் குறிப்பிடும் கூடிய நெஞ்சம் அமைய என்ன செய்ய வேண்டும் என்பதனைத் திருநாவுக்கரசு அடிகள் தெளிவாக இயம்புகின்றார். “மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாம் களையை வாங்கி பொறையெனும் நீறைப் பாய்ச்சித், தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே” என்று தெளிவுறுத்துவார்.

         இறைவனை உள்ளைத்திலே இருத்த வேண்டுமானால் புறத்திலே செய்யக்கூடிய திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுக்கிடுதல், பல்லக்குச் சுமத்தல், மலர் பறித்துக் கொடுத்தல், திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்துக் கொடுத்தல் போன்ற சிவப்பணிகளையும் புறத்திலும் அகத்திலும் இறைவனை எண்ணிப் பூசனை செய்தல், ஆலய வழிபாடு செய்தல் போன்றவற்றைத் தொடர்ந்து இடைவிடாது செய்து, பெருமானை மனத்தில் வைத்து இடைவிடாது எண்ணுதல், சமய நூல்களைக் கற்றல், கேட்டல், கேட்டவற்றைச் சிந்த்தித்தல், சிந்தித்துத் தெளிந்தவற்றை வாழ்வில் பின்பற்றுதல் என்ற சீல, நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றால் மனதை ஆழமாக உழவேண்டும் என்கின்றார்.


இவ்வாறு தொடர்ந்து செய்வதனால் அப்பெருமானிடத்தில் அன்பு என்கின்ற விதையினை உள்ளத்தில் விதைக்க இயலும் என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள். பெருமானிடத்தில் உண்மையான அன்பு ஏற்படுதலினால் உள்ளத்தில் மண்டிக்கிடக்கின்ற களைகளை அகற்ற இயலும் என்கின்றார். உயிருக்கு நன்மை பயக்கக் கூடிய நற்சிந்தனைகளை உண்மை என்றும் உள்ளத்தில் உணர்ந்தவற்றையே வெளியே கூறுவது வாய்மை என்றும் உள்ளத்தில் உணர்ந்தவற்றையே வெளியே செய்தலை மெய்மை என்றும் குறிப்பிடுவர். உண்மை, வாய்மை, மெய்மை என்ற மூன்றனுக்கு மாறானவையே உள்ளத்தில் உள்ள களைகள். இறைவன் உள்ளத்தில் அமர இவற்றினைக் களைந்து எறிய வேண்டும் என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள்.

          சிவன் எனும் பயிர் உள்ளத்திலே நிலைத்து வளர வேண்டுமானால் பொறை எனும் நீரைப் பாய்ச்ச வேண்டும் என்கின்றார். பொறை என்றால் பொறுமை என்று பொருள். பொறுமையோடு அமைதியாய் மேற்கூறியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் நம்மை நாமே சரி செய்துகொள்ளும் செவ்வியாகிய தன்மையும் நோக்கிக் காண்டல் எனும் செவ்வியும் உண்டாகும் என்கின்றார். மேற்கூறியவற்றால் உயிர்களுக்கு கொல்லாமை, ஐம்புலன்களை அடக்கல், பொறுமை, இரக்கம், தவம், அன்பு, என்பன தோன்றும். புலால், மது போன்றவை மட்டுமல்லாது மனத்தால், வாக்கால், காயத்தால் பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே கொல்லாமை. கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன இழுத்த இழுப்பிற்குச் செல்லாமல் அவற்றைக் கட்டுப்படுத்தி நன்னெறிக்கு மடைமாற்றம் செய்தலே ஐம்புலனடக்கம். பணிவும் அடக்கமும் பொறுமை எனப்படும். துன்பத்தைக் கண்டு துவளாமை, பிறருக்குத் துன்பம் செய்யாமையே தவம் எனப்படுகிறது. அன்புடையோராய்த் திகழ்வது அன்பு. இவற்றினை உள் வாங்கிக் கொண்டு வாழ்தலே மனத்தில் மாசு நீங்கி வாழ்தல். இத்தகைய உள்ளத்திலேயே இறைவன் குடிகொள்கின்றான். இதுவே கூடிய நெஞ்சம் என்பார் திருநாவுக்கரசு அடிகள்.

தொடர்ந்து பெருமானை உள்ளத்திலே நிலை நிறுத்த சிவச்சின்னங்கள் அணிய வேண்டும் என்கின்றார். “நமசிவய” எனும் திருவைந்து எழுத்து, உருத்திராக்கம் எனும் திருஅடையாள மாலை அல்லது கண்டிகை, திருநீறு, சிவ வேடம் போன்றவை உள்ளத்தில் மாசு படிவதனைக் காக்குக் வேலியாகவும் உள்ளத்தில் வளர்கின்ற சிவப்பயிரினைப் பாதுகாக்கும் வேலியாகவும் அமையும் என்கின்றார். இவ்வாறு செம்பொருளைச் செம்மையாகப் பற்றி வாழ்வோமேயானால் சிவபெருமான் நம் உள்ளத்தில் வீற்றிருப்பான் என்கின்றார் திருநாவுக்கரசர். இத்தகைய நெஞ்சத்தினையே கூடிய நெஞ்சமென்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் புறத்தில் காண்பதோடு நின்றுவிடாமல் அவனை அகத்தில் குடியேற்றும் வழியினைப் பற்றியும் சிந்தித்தும் அதற்குறியனவற்றை நடைமுறைப் படுத்தி இறைவன் நம் உள்ளத்தில் வீற்றிருக்க வாழ்வாங்கு வாழ்வோமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக