ஞாயிறு, 24 மார்ச், 2013


திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர். திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார். “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்) கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வரவும்।

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக