வியாழன், 27 அக்டோபர், 2022

மானிட வாழ்வின் முக்கியத்துவம்

 மானிட வாழ்வின் முக்கியத்துவத்தை ரிஷபதேவர் தனது புதல்வர்களுக்கு எடுத்துரைத்தல்.

மாமுனிவரான ரிஷபதேவர் தனது புத்திரர்களுக்கு அறிவுறுத்தினார்: “அன்பார்ந்த மகன்களே! இப்பிறவியில் நீங்கள் பெற்றுள்ள அற்புதமான சரீரத்தை நாய்களையும் பன்றிகளையும் போன்று இன்பம் காண பயன்படுத்தாமல், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்காக பயன்படுத்த வேண்டும். கழிவுப் பொருட்களை உட்கொள்ளும் பன்றிகளே புலனின்பத்திற்காக வாழ வேண்டும், உயர்நிலையில் வாழும் மனிதன் தாழ்ந்த உயிரினங்களின் வழி நடக்கக் கூடாது.”

    அனைத்து ஜீவன்களும் மூவகை பௌதிகத் துன்பங்களுக்கு உட்பட்டவை; இதில் சரீரம் மற்றும் மனதினால் ஏற்படும் துன்பங்களும் அடங்கும். தாங்கள் துன்பப்படுவதை மிருகங்களால் அறிய முடியாது. ஆனால், மனிதர்களால் அறிய முடியும். தான் துன்பப்படுவதை உணராதவன் மிருகமாகவே கருதப்பட வேண்டும். வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் தாங்கள் கொல்லப்பட இருப்பதை மிருகங்கள் உணர்வதில்லை. ஆனால், மனிதர்களாகிய நாம் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களால் அவதியுறுகிறோம் என்பதை உணர வேண்டும். இத்துன்பங்களை போக்கும் வழியை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.


 நமது பிறப்பு முதலே நாம் துன்பப்படுகிறோம். சிசுவாக தாயின் கருப்பையில் ஒன்பது மாதங்கள் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் குழந்தை துன்பப்பட்டது. தாய் குழந்தையின் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றபோதும், குழந்தை ஏன் அழுகிறது? துன்பப்படுவதால்தான். மூட்டைப்பூச்சி கடிக்கலாம், வயிற்றுவலி போன்ற வியாதிகளால் அவதிப்படலாம். எவ்விதத்திலும் துன்பம் இருக்கவே செய்கிறது. பின்னர், பள்ளிக்குச் செல்லும்போது கட்டாயத்தின் பேரில், குழந்தை விருப்பமில்லாத கல்வியைக் கற்க நேரிடுகிறது. நமது வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்தால், நமது வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் தொடர்வதைக் காணலாம். பொதுப்படையாகப் பார்க்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்கள் புத்தி மிகுந்தவையல்ல. ஆகையால், ஏன் இவ்வாறு துன்பத்திற்குள்ளாகிறோம் என்பதை அறியாமலேயே அவை தொடர்ந்து துன்பப்படுகின்றன. எப்படியிருப்பினும் நாம் துன்பப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அதற்கான தீர்வினை அறிந்து மேன்மையடைய வேண்டும்.

தகாத உடலுறவு, புலால் உண்ணுதல், போதை பழக்கம், சூதாட்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது வாழ்வதற்கான அடிப்படை விதிகளாகும்; இவ்வாறாக நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டால், படிப்படியாக ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்படுவோம். ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், “வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்” என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.ஆன்மீக உலகம் வறட்சியானதோ அறிந்துகொள்ள முடியாததோ அல்ல. முன்னரே தெரிவித்தவாறு அங்கே பலவகையான மகிழ்ச்சிகள் உண்டு. நாம ஸங்கீர்த்தனத்தில் நடனமாடுவதால் நாம் பெறும் ஆனந்தம் சொர்க்கத்தில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தின் ஒரு பகுதியே. அங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் இளமை மிகுந்தவர்கள்; உண்மையில் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற துன்பங்கள் அங்கு இல்லை. ஆன்மீக உலகிலுள்ள நமது உண்மையான தன்மைகளான அளவற்ற ஆனந்தம், அறிவு, மற்றும் நிரந்தர வாழ்க்கையைப் பெற விரும்பினால், புலனின்பங்களிலும் பன்றித் தொழுகைகளிலும் நாம் நமது நேரத்தை விரயமாக்கக் கூடாது. ஞான உணர்வை பெருக்கிக் கொள்வதற்கான வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள வேண்டும். 

திருச்சிற்றம்பலம


புதன், 19 அக்டோபர், 2022

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

  திருவருட் பயன் பாடல் எண் 54

ஊன் உயிரால் வாழும் ஒருமைந்தே,ஊனொடு உயிர்

தான் உணர்வோடு ஒன்றாம் தாம்


     உடம்போடு உயிர் சேர்ந்து ஒன்றாகி இருக்கிறது.உடம்பும் உயிரும் பொருளால் இரண்டு ஆயினும் இரண்டு என்ற தன்மை தோன்றாதபடி உயிர் உடம்போடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது.  உடம்போடு கூடிய உயிர்.  அறிவு வடிவான திருவருளோடு ஒன்ற பட்டு நிற்கிறது. இவ்வாறு திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போல் என்றால் உடம்பும் உயிரும் காெண்டுள்ள ஒற்றுமையைப் போல் போன்றதாகும்.

  உடம்பில் கலந்துள்ள உயிர்  தன் இருப்பை சிறிதும் புலப்படுத்தாது,உடம்பு ஒன்றே உள்ளது என்பது போல் அதனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அது போலவே திருவருள் உயிராேடு நீக்கமின்றி எப்போதும் கலந்திருப்பினும், தன் இருப்பை புலப்படுத்தாது உயிர் ஒன்றே உள்ளது என்னும் படியாக ஒற்றுமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இரு பொருள்களுக்கிடையே இரண்டன் தன்மை தெரியாதவாறு அவை இயைந்து நிற்கும் ஒற்றுமைத் தொடர்பு அத்துவிதம் என்றும் அத்துவித சம்பந்தம் என்றும் சொல்லப்படும்

  அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று (துவிதம் (2)) என்றால் அத்துவிதம் 2 அன்று என்று பொருள்படும், என ேவற்றுமை படாமையை குறித்து நிற்கும்

ேவற்றுமை படாமையாவது இது சிவப்பகுதி, இது ஆன்மா பகுதி என பிரித்தறிய வாராத நிலை எனவே ஒற்றிற்று நிற்றல் எனப்பெறப்படும்

  தன்மையால் இரண்டாதல், வேற்றுமையால் / கலப்பால் ஒன்றாதல் ஒற்றமை.இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும், தன்மையால் வேறாயும் நிற்றல். 

  உயிர் செலுத்தவே உடம்பு செயல்படுகிறதே தவிர, உடம்புக்கு என்று தனியே ெசயல் இல்ைல ஏனெனில் உடம்பு சடப்பொருள். அது போல திிருவருள் செலுத்தவே உயிர் செயல்படுகிறதேயன்றி, திருவருள் துணை இன்றி உயிருக்கு தனிச் செயல் சுதந்திரம் இல்லை. 

  திருவருள் தன்னுடன் எப்போதும் பிரிப்பின்றி கலந்திருக்கிறது என்பதையும், அதனுடைய துணை தன் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாதது என்பதையும் உயிர் உணர வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். 

மொத்தத்தில் உடலை உயிர் இயக்குகிறது, 

உயிரை திருவருள் இயக்குகிறது, திருவருள் துணையினால் தான் உயிர்களுக்கு கட்டு நிலையில் ( கேவல நிலை / பிறப்பு நிலையில்)  பொது இயல்பும், முத்தி நிலையில் தன் இயல்பும் விளங்குகின்றது. 

உயிர் அறிவதற்கு திருவருள் துணை வேண்டு்ம்

 கண்ணானது காணும் தன்மை உண்டு இருப்பினும் கண் காண ஒளி (ெவளிச்சம்) வேண்டும் அவ்வாறு ஒளி இல்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.

  உயிர் உடன் நின்று செலுத்துவதால் தான் கண் ஒரு பொருளைக் காண முடிகிறது. ஆனாலும் கண்ணுக்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவினால் தான் கண் காணமுடியும். ஒளி இல்லையென்றால் உயிர் உடனின்றும் கண் காண இயலாது/ முடியாது.

 கண் போல் உயிர். உயிர் உடன் நின்று செலுத்துவே கண் காணுமே அன்றி தானாக காணாது. உயிரின் அறிவு விளங்குவதற்காக திருவருள் கருவி கரணங்களை கூட்டு விக்கிறது. அதோடு மட்டுமன்றி கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே நின்று திருவருள் ஒளி செலுத்துகிறது. அவ்வாறு திருவருள் ஒளி செலுத்தாவிட்டால் உயிர் அறிய இயலாது. 

திருச்சிற்றம்பலம்

சனி, 15 அக்டோபர், 2022

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


செவ்வாய், 11 அக்டோபர், 2022

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்







சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக!

 இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

திருச்சிற்றம்பலம்