செவ்வாய், 11 அக்டோபர், 2022

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்







சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக!

 இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக