சனி, 15 அக்டோபர், 2022

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக