வியாழன், 27 அக்டோபர், 2022

மானிட வாழ்வின் முக்கியத்துவம்

 மானிட வாழ்வின் முக்கியத்துவத்தை ரிஷபதேவர் தனது புதல்வர்களுக்கு எடுத்துரைத்தல்.

மாமுனிவரான ரிஷபதேவர் தனது புத்திரர்களுக்கு அறிவுறுத்தினார்: “அன்பார்ந்த மகன்களே! இப்பிறவியில் நீங்கள் பெற்றுள்ள அற்புதமான சரீரத்தை நாய்களையும் பன்றிகளையும் போன்று இன்பம் காண பயன்படுத்தாமல், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்காக பயன்படுத்த வேண்டும். கழிவுப் பொருட்களை உட்கொள்ளும் பன்றிகளே புலனின்பத்திற்காக வாழ வேண்டும், உயர்நிலையில் வாழும் மனிதன் தாழ்ந்த உயிரினங்களின் வழி நடக்கக் கூடாது.”

    அனைத்து ஜீவன்களும் மூவகை பௌதிகத் துன்பங்களுக்கு உட்பட்டவை; இதில் சரீரம் மற்றும் மனதினால் ஏற்படும் துன்பங்களும் அடங்கும். தாங்கள் துன்பப்படுவதை மிருகங்களால் அறிய முடியாது. ஆனால், மனிதர்களால் அறிய முடியும். தான் துன்பப்படுவதை உணராதவன் மிருகமாகவே கருதப்பட வேண்டும். வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் தாங்கள் கொல்லப்பட இருப்பதை மிருகங்கள் உணர்வதில்லை. ஆனால், மனிதர்களாகிய நாம் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களால் அவதியுறுகிறோம் என்பதை உணர வேண்டும். இத்துன்பங்களை போக்கும் வழியை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.


 நமது பிறப்பு முதலே நாம் துன்பப்படுகிறோம். சிசுவாக தாயின் கருப்பையில் ஒன்பது மாதங்கள் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் குழந்தை துன்பப்பட்டது. தாய் குழந்தையின் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றபோதும், குழந்தை ஏன் அழுகிறது? துன்பப்படுவதால்தான். மூட்டைப்பூச்சி கடிக்கலாம், வயிற்றுவலி போன்ற வியாதிகளால் அவதிப்படலாம். எவ்விதத்திலும் துன்பம் இருக்கவே செய்கிறது. பின்னர், பள்ளிக்குச் செல்லும்போது கட்டாயத்தின் பேரில், குழந்தை விருப்பமில்லாத கல்வியைக் கற்க நேரிடுகிறது. நமது வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்தால், நமது வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் தொடர்வதைக் காணலாம். பொதுப்படையாகப் பார்க்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்கள் புத்தி மிகுந்தவையல்ல. ஆகையால், ஏன் இவ்வாறு துன்பத்திற்குள்ளாகிறோம் என்பதை அறியாமலேயே அவை தொடர்ந்து துன்பப்படுகின்றன. எப்படியிருப்பினும் நாம் துன்பப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அதற்கான தீர்வினை அறிந்து மேன்மையடைய வேண்டும்.

தகாத உடலுறவு, புலால் உண்ணுதல், போதை பழக்கம், சூதாட்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது வாழ்வதற்கான அடிப்படை விதிகளாகும்; இவ்வாறாக நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டால், படிப்படியாக ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்படுவோம். ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், “வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்” என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.ஆன்மீக உலகம் வறட்சியானதோ அறிந்துகொள்ள முடியாததோ அல்ல. முன்னரே தெரிவித்தவாறு அங்கே பலவகையான மகிழ்ச்சிகள் உண்டு. நாம ஸங்கீர்த்தனத்தில் நடனமாடுவதால் நாம் பெறும் ஆனந்தம் சொர்க்கத்தில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தின் ஒரு பகுதியே. அங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் இளமை மிகுந்தவர்கள்; உண்மையில் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற துன்பங்கள் அங்கு இல்லை. ஆன்மீக உலகிலுள்ள நமது உண்மையான தன்மைகளான அளவற்ற ஆனந்தம், அறிவு, மற்றும் நிரந்தர வாழ்க்கையைப் பெற விரும்பினால், புலனின்பங்களிலும் பன்றித் தொழுகைகளிலும் நாம் நமது நேரத்தை விரயமாக்கக் கூடாது. ஞான உணர்வை பெருக்கிக் கொள்வதற்கான வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள வேண்டும். 

திருச்சிற்றம்பலம


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக